Language Selection

புதிய ஜனநாயகம் 2010

மேற்கு வங்கத்தில், லால்கார் வட்டாரத்தின் காடுகளையும் கனிம வளங்களையும் சூறையாடக் கிளம்பியுள்ள தரகுப் பெருமுதலாளித்துவ ஜிந்தால் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றுக்கு அடிக்கல் நாட்ட, கடந்த 2008 நவம்பரில் மத்திய அமைச்சர் பாஸ்வான், மே.வங்க முதல்வர் புத்ததேவ் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது, லால்கார் பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இத்தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், உடனடியாக மே.வங்க போலீசின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. லால்கார் வட்டாரத்தின் காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரைப் பிடித்து மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி, சித்திரவதை செய்யத் தொடங்கியது மே.வங்க போலீசு. போலீசு அடக்குமுறைக்கு எதிராக லால்கார் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடி, ‘இடதுசாரி’ அரசின் யோக்கியதையை நாடறியச் செய்தனர். இப்போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் தலையிட்டு, அதைப் போர்க்குணமிக்கப் போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர்.

அதன் பிறகு, மாநில அரசுப் படைகளும் மத்திய படைகளும் கூட்டுச் சேர்ந்து லால்காரில் பயங்கரவாத அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. அங்குள்ள பழங்குடியினரின் வீடுகளையும் உடைமைகளையும் தாக்கி, அவர்கள் மீது பல்வேறு பொய்வழக்குகளைப் போட்டு மே.வங்க அரசு வதைக்கத் தொடங்கியது. மாவோயிஸ்டுகள் அப்பகுதியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினர். லால்கார் மக்களின் போராட்டத்தைத் தலைமை தாங்கி வழிநடத்திய போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் தலைவர்களுள் ஒருவரான சத்ரதார் மஹடோ, மாவோயிஸ்டு பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். மற்றொரு தலைவரான லால்மோகன் டுடூ போலீசாரால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். போராட்டக் கமிட்டியின் முன்னணியாளர்களும் பழங்குடியின ஆண்களும் காடுகளில் தலைமறைவாகினர்.

தற்போது காட்டு வேட்டை எனும் பெயரில் நக்சல்பாரிப் புரட்சியாளர்களுக்கெதிராக நரவேட்டை ஆரம்பமானதைத் தொடர்ந்து, போலீசின் அடக்குமுறை மேலும் தீவிரமாகியுள்ளது. லால்கார் போன்ற காட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள், சுள்ளி பொறுக்கவும், தேனெடுக்கவும் காட்டுக்குள் செல்லும்போது, பாதுகாப்பிற்காக எடுத்துச் செல்லும் வில், அம்பு, கோடரி போன்ற கருவிகளைக் கைப்பற்றி, அவர்கள் ‘பயங்கரமான’ ஆயுதங்களை வைத்திருந்ததாகச் சொல்லி போலீசு சிறைப்படுத்துகிறது. அவர்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டு எந்நேரமும் சோதனைக்கு ஆளாகின்றனர்; கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினால், தங்களது ஆத்திரத்தை அப்பகுதி மக்கள் மீதுதான் காட்டுகிறது, போலீசு. இதனால் குண்டு வெடித்த இடத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். சாதாரண மக்களை ஏன் இவ்வாறு கொடுமைப்படுத்துகிறீர்கள் எனக் கேட்டால், "பார்த்தவுடன் கண்டுபிடிக்க மாவோயிஸ்டுகள் தலையில் கொம்பா இருக்கிறது? அதனால் சந்தேகப்படும் எல்லோரையும் சோதிக்கத்தான் வேண்டி இருக்கிறது" என்று திமிரோடு இந்த அடக்குமுறையை நியாயப்படுத்துகிறார், லால்கார் பகுதியின் போலீசு அதிகாரி.

கடந்த ஆண்டு டிசம்பரில், பிரகதா எனும் இடத்தில் போலீசு வாகனமொன்று மாவோயிஸ்டுகளால் தகர்க்கப்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தினருகே வசித்து வந்த சுனில் மஹதோ, போலீசு அடக்குமுறைக்குப் பயந்து காட்டுக்குள் ஓடி ஒளிந்தார். ஆனால் போலீசோ, தலைமறைவாகிய சுனில்தான் முக்கிய குற்றவாளி என முத்திரை குத்தியது. சுனிலைச் சரணடையச் செய்ய, அவரது மனைவியையும் குழந்தைகளையும் போலீசார் பிடித்துச் சென்றனர். தற்போது போலீசில் சரணடைந்துள்ள சுனிலோ, "நான் நிச்சயமாக மாவோயிஸ்டு இல்லை" என்று போலீசின் சித்திரவதைக் கொடுமைக்கு நடுவே விம்முகிறார்.

முதல் தகவல் அறிக்கையில் சுனிலோடு சேர்க்கப்பட்ட அவரது மனைவி தீபாலியுடன் சேர்த்து, அவருடைய நான்கு குழந்தைகளும் சிறைச்சாலைக்குச் சேன்றன. மூத்த குழந்தைக்கு எட்டு வயது என்றால், கடைக்குட்டிக்கோ ஒரு வயதுதான். சுனில் பிடிபட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள தீபாலி, "இந்த நாலு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு நான் எப்படி மாவோயிஸ்டு போராளியாக மாறமுடியும்?" என்கிறார்.

"யாரும் உதவமாட்டீர்களா? ஏனென்று கேட்க எங்களுக்கு யாரும் இல்லையா?" எனக் கையறு நிலையில் சிறைக்கொட்டடியில் அழுது புலம்பும் சுனில் மஹதோ மீது, அரசுக்கு எதிராகச் சதி செய்தல், வெடி பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கையாளுதல் முதலான 7 பொய்வழக்குகளை போலீசு போட்டிருக்கிறது. அப்பகுதியில் கிட்டத்தட்ட அனைவருமே சுனிலைப் போலவே குற்றம் சாட்டப்பட்டு, போலீசின் அடி- உதைக்குப் பயந்து காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர்.

சுனில் வசித்து வந்த கிராமத்தில் தேநீர்க் கடை வைத்திருந்த சச்சின் மஹதோ, இப்போது இருப்பதோ சிறைக் கம்பிகளுக்குப் பின்னால். நோஞ்சானாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்த அவரின் முடியைக் கொத்தாகப் பிடித்துலுக்கி, தரதரவென இழுத்துச் சென்று தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்து நொறுக்கி மாவோயிஸ்டு என அவரை போலீசு ஒத்துக் கொள்ள வைத்துள்ளது. மாவோயிஸ்டுத் தலைவர் கிசன்ஜியைத் தெரியுமா எனக் கேட்டு நாள் முழுக்க அவர் தொடர்ந்து வதைக்கப்படுகிறார்.

சுனில் மஹதோவைப் போன்று குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கூட, இதுவரை நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறு ‘மாவோயிஸ்டு’ அடையாளமிடப்பட்டு மேற்கு மித்னாபூர் சிறையில் மட்டும் பெண்கள் உட்பட 141 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெல்பஹாரி எனும் இடத்தை சேர்ந்த பாரோ சிங் எனும் ஏழைப் பழங்குடியினப் பெண்ணிற்கும் மாவோயிஸ்டுக்கும் எந்த விதமான நேரடித் தொடர்பும் இல்லை. இருப்பினும், அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவரது கணவரைத் தேடி, அடிக்கடி இரவில் அவரது வீட்டைப் போலீசார் சோதனை செய்தனர். போலீசு வேட்டையிலிருந்து தப்பிக்க அவரது கணவர் காட்டுக்குள் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பற்றி பாரோவிடம் போலீசு தொடர்ந்து விசாரித்து, சித்திரவதை செய்து கொண்டே இருந்தது. ஒரு நாள் இரவில் அடக்குமுறைக்கு அஞ்சி வீட்டிலிருந்து ஓட முயன்ற பாரோவின் காலில் போலீசார் பலமாகத் தாக்கினர். மயக்கம் அடைந்து விழுந்த அவர், சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மாவோயிஸ்டு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டு விட்டார்.

இவை எல்லாம் மே.வங்கப் போலீசின் தேடுதல் வேட்டையில் மெதுவாகக் கசிந்துள்ள சில செய்திகள் மட்டும்தான். இன்னும் வெளிவராத போலீசு அட்டூழியங்கள் ஏராளம். சட்டிஸ்கரிலாவது தனியாக கிரிமினல்களைக் கொண்டு சல்வாஜுடும் எனும் பயங்கரவாத குண்டர் படையைக் கட்ட வேண்டி இருந்தது. ஆனால் மே.வங்கத்திலோ, சி.பி.எம். கட்சி ஊழியர்களே இப்பகுதியில் போலீசின் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்படுகின்றனர். ஏகாதிபத்திய நிறுவனங்களின் நலனுக்காக சொந்த நாட்டு மக்களையே வதைக்கும் சமூக பாசிஸ்டுகளாக சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகமயத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதிலும், அதனை எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்குவதிலும் போலி கம்யூனிஸ்டு அரசுக்கும், பிற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது என்பதையே மே.வங்கத்தில் தொடரும் போலீசு பயங்கரவாதம் நிரூபித்துக் காட்டுகிறது.
*கதிர்