Language Selection

புதிய ஜனநாயகம் 2010

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்குப் போதிய அதிகாரம் தனக்குத் தரப்படவில்லை என்று அங்கலாத்துக் கொண்டிருக்கிறார், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். மாவோயிஸ்டுகளை ஒடுக்காததற்கு மைய அரசுதான் பொறுப்பு என்று பாரதிய ஜனதாவும், சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால், சட்டிஸ்கர் மாநில பா.ஜ.க அரசுதான் பொறுப்பு என்று காங்கிரசும் லாவணி பாடிக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் பொறுப்பை நேரடியாகத் தன் கையில் எடுத்துக் கொண்டு, மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு மறைமுகமாக ஆணை பிறப்பித்திருக்கிறது, இந்தியத் தரகு முதலாளிகள் சங்கம் (Federation of Indian Chamber of Commerce and Industry) ‘தேசியப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு’க் குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையினையும் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது, அச்சங்கம்.

தனியார்மய - தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம், மற்றெல்லா வர்க்கங்களுடைய உரிமைகளையும் பறித்திருப்பதுடன், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற அறுதி அதிகாரத்தை தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஒப்படைத்திருக்கிறது. எந்த ஒரு பிரச்சினையிலும் எஃப்.ஐ.சி.சி.ஐ.; சி.ஐ.ஐ.; அசோசெம் போன்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்கள் போடும் தீர்மானங்கள்தான், அமைச்சரவை முடிவுகளாக நிறைவேறும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டதால், முதலாளிகள் சங்கம் முக்காட்டை எடுத்துவிட்டு, முழு நிர்வாணமாகக் களத்தில் இறங்கிவிட்டது.

முதலாளிகளின் அறிக்கை என்றால் அது மூர்க்கத்தனமாகத்தான் இருக்குமென்று நாம் எண்ணிவிடக் கூடாது. மாவோயிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுக்க முடியாத அரசாங்கம் மற்றும் போலீசின் திறமையின்மை, நக்சலைட்டுகள் பெற்றிருக்கின்ற விரிவான மக்கள் ஆதரவு, அந்நிய சக்திகளிடமிருந்து இந்தியா எதிர்கொள்ளும் அபாயத்தைக் காட்டிலும், இந்த ‘உள்நாட்டு அபாயம்’ மிகவும் சிக்கலானதாகவும், கையாள்வதற்குக் கடினமானதாகவும் இருப்பது ஆகியவை பற்றி யெல்லாம் விளக்கி விட்டு, இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதையும் முதலாளிகள் சங்கத்தின் அறிக்கை விவரிக்கிறது.

"பழங்குடி மக்கள் பகுதிகளில் வளர்ச்சியைக் கொண்டுவராமல் நீண்டகாலமாக நாம் புறக்கணித்து விட்டோம். கிராமப் பொருளாதாரத்தைப் புறக்கணித்து விவசாயத்தை அழிய விட்டுவிட்டோம். வேலையின்மை, வறுமை, ஏழைகளின் மீதான கொடூரச் சுரண்டல், நிலப்பிரபுக்கள்-கந்துவட்டிக்காரர்களின் சுரண்டல்- ஆதிக்கம், அதிகாரிகளின் ஊழல்.. எல்லாம் சேர்ந்து மக்களை மாவோயிஸ்டுகள் பக்கம் தள்ளிவிட்டது. நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் அப்பாவி கிராம மக்கள் மீது அரசுப் படைகள் செலுத்திய வன்முறை மக்களை மேலும் அந்நியப்படுத்தி விட்டது’’.... என்று கூறுகிறது அறிக்கை.

வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் தாங்கள் வெளியேற்றப்படுவதையும், இயற்கை வளங்களை வெகு சிலரே அபகரித்துக் கொள்வதையும் கண்டு கிராமப்புற விவசாயிகள் கொண்டிருக்கும் கோபம், சுரங்கக் கம்பெனிகளால் சூழல் அழிக்கப்படுவது கண்டு பழங்குடி மக்களுக்கு ஏற்படும் அச்சம் ஆகியவை குறித்தெல்லாம் இந்த அறிக்கை பேசுகிறது. காந்தி கனவு கண்ட ‘தர்மகர்த்தா முதலாளிகள்’ உண்மையிலேயே தோன்றிவிட்டார்களோ, இதுதான் முதலாளி வர்க்கத்தின் மனம் திறந்த சுயவிமரிசனமோ என்று படிப்பவர்களை மயக்குகிறது அறிக்கை. ஆனால், அடுத்து வரும் வரிகளே படிப்பவர்களின் மயக்கத்தைத் தெளிவித்து விடுகின்றன.

மாவோயிஸ்டுகளுடனான போரை "இந்தியாவின் இதயத்தில் நடைபெறும் போர்" என்று வருணிக்கிறது இந்த அறிக்கை. எங்கேயோ கேட்ட சொற்றொடர் போல இல்லை? சிதம்பரத்தின் ‘காட்டு வேட்டை’ நடவடிக்கையை, "இந்தியாவின் இதயத்தின் மீதான போர்" என்று குறிப்பிட்டு, போரை நிறுத்த வேண்டும் என்று எழுதினார், அருந்ததி ராய். ‘போரை முடுக்கி விட வேண்டும்’ என்கிறது முதலாளிகள் சங்கத்தின் அறிக்கை - அவ்வளவுதான் வித்தியாசம்.

"நக்சலைட் நடவடிக்கைகளின் மையமான சட்டிஸ்கரில் இந்தியாவின் இரும்புத் தாதுவளத்தில் 23% உள்ளது. ஏராளமான நிலக்கரி உள்ளது... தனது தொழில்துறை உற்பத்தியை முடுக்கி விட்டு, வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போடவேண்டிய தருணத்தில், வெளிநாட்டு நிறுவனங்களும் விருந்துக்கு வந்திருக்கும் தருணத்தில், இந்தியாவின் நீண்டகால வெற்றிக்கு அத்தியாவசியமானவையான கனிம நிறுவனங்கள் மற்றும் இரும்பு ஆலைகளை நக்சலைட்டுகள் எதிர்க்கிறார்கள்" என்று கூறிவிட்டு, இந்த விருந்தில் பங்கேற்கும் நிறுவனங்களையும் அறிக்கை பட்டியலிடுகிறது.

டாடா ஸ்டீல், ஆர்செலார் மித்தல், டி பியர்ஸ், பி.எச்.பி பில்லிடன், ரியோ டின்டோ ஆகிய நிறுவனங்கள் சட்டிஸ்கர் அரசுடன் பல்லாயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் போட்டிருக்கின்றன என்றும், இவர்களுக்குச் சுரங்கம் தோண்டும் எந்திரங்களை விற்பதற்கு அமெரிக்காவின் கார்ட்டர் பில்லர் போன்ற நிறுவனங்கள் காத்திருக்கின்றன என்றும் கூறிக் குமுறுகிறது.

காடுகள், விளைநிலங்கள், சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைபேசி வலைப்பின்னல்கள், ஆறுவழிச் சாலைகள், ஆறுகள், ஏரிகள், எண்ணெக் கிணறுகள் முதலான பொதுச் சொத்துகள் அனைத்தும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்படுவதையும், மலிவான கச்சாப்பொருள், உழைப்பு, மின்சாரம், வரி விலக்குகள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், கடன்கள் என வாரி வழங்கப்படுவதையும், சுற்றுச்சூழல் விதிகள் முதல் தொழிலாளர் சட்டங்கள் வரையிலான அனைத்தும் தளர்த்தப்படுவதையும், இவற்றின் விளைவாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியத் தரகுமுதலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சாத்தியமாக்கியிருக்கின்ற இந்த ‘வளர்ச்சி’ என்பது, தங்களுக்கான விருந்துதான் என்பதைத் தரகு முதலாளிகள் சங்கத்தின் அறிக்கை வெளிப்படையாகவே சொல்லிவிட்டது!

தங்களுடைய இந்த வளர்ச்சியுடன் இந்தியாவின் ‘தேசிய நலன்’ எங்ஙனம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதையும் அறிக்கை விளக்குகிறது. "இந்தியாவின் நகர்ப்புறங்களைச் சேர்ந்த வசதி படைத்த நுகர்வோர் கார்கள், வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கத் தொடங்கிவிட்டனர். சாலைகளும் பாலங்களும் ரயில் பாதைகளும் தரமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். உற்பத்தியைப் பெருக்கி நுகர்வோரின் தாகத்தைத் தணிப்பதற்கு, மிகப்பெரிய அளவில் சிமெண்டு, இரும்பு, மின்சாரம் போன்றவை நமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றன. இந்தத் தேசிய சவாலைச் சமாளிப்பதற்கு ஏற்ற வகையில் சமூகப் பொருளாதாரச் சூழலை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது"

ஆடம்பரக் கார்களுக்கும் ஆறுவழிச் சாலைகளுக்கும் ஏற்ப சமூகப் பொருளாதாரச் சூழலை மாற்றியமைக்கும் இந்தத் திட்டம் சட்டிஸ்கரில் எப்படி நிறைவேறிக் கொண்டிருக்கிறது?

"640 கிராமங்கள் காலியாகி விட்டன. டன் கணக்கிலான இரும்புத் தாதுவின் மீது அமர்ந்திருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அவை ஏலம் விடப்படுவதற்குக் காத்திருக்கின்றன. எஸ்ஸார் ஸ்டீல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் இங்கே சுரங்கம் தோண்ட இருப்பதாக செய்திகள் உலவுகின்றன... கொலம்பஸ் நடத்திய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, பழங்குடி மக்களின் நிலத்தின் மீது நடத்தப்படும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பு இதுவாகத்தான் இருக்கும்." - இவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை நியமித்த ஆய்வுக்குழு அக்டோபர் 2009-இல் வெளியிட்ட அறிக்கையில் காணப்படும் வாசகங்கள். கிராமங்களுக்குத் தீவைத்து, பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி, இளைஞர்களைக் கொன்று, தண்டேவாடா மாவட்டத்தின் மக்கட்தொகையில் பாதிப்பேரை (3.5 இலட்சம் பழங்குடி மக்கள்) அடித்து விரட்டி, கனிம வளம் செறிந்த 640 கிராமங்களை டாடா, மித்தலின் விருந்து மேசையில் பரிமாறியிருக்கிறது, சல்வாஜுடும் என்ற அரசாங்கத்தின் கூலிப்படை.

"சுரங்கம் தோண்டாவிட்டால் அரசாங்கத்துக்கு பணம் கிடைக்காது. பணம் இல்லாவிட்டால், உங்களுக்குப் பள்ளிக்கூடமும் கல்வியும் எப்படிக் கிடைக்கும்? டெல்லியைப் பாருங்கள். தெருக்களையும் கட்டிடங்களையும் பாருங்கள். நீங்கள் இப்படி வாழ விரும்பவில்லையா? உங்கள் பிள்ளைகளை டாக்டராக்கவும் வக்கீலாக்கவும் விரும்பவில்லையா?" என்று சமீபத்தில் சட்டிஸ்கர் பழங்குடி மக்களிடம் விசாரணை நடத்திய ‘இண்டிபென்டெட் பீப்பிள்ஸ் டிரிப்யூனல்’ என்ற அமைப்பு கேள்வி எழுப்பியது. "தேசிய கனிம வளக் கழகம் 30 ஆண்டுகளாக பைலதில்லா சுரங்கத்தில் இரும்பு எடுத்துக் கொண்டிருக்கிறது. முதலில் சுரங்கம் வரட்டும். அடுத்தடுத்து உங்களுக்கு எல்லா வசதிகளும் வரும் என்றுதான் அப்போதும் சொன்னார்கள். இதுவரை எங்களுக்கு எதுவும் வரவில்லை. அரசாங்கமே எங்களுக்கு எதுவும் செய்யாதபோது, முதலாளிகள் செய்வார்கள் என்று எப்படி நம்பமுடியும்?" என்று திருப்பிக் கேட்டார்கள், பழங்குடி மக்களின் பிரதிநிதிகள்.

பழங்குடி மக்களிடம் நிலவும் அதிருப்தியும் கோபமும் ‘தர்மகர்த்தா’ தரகு முதலாளிகளுக்குப் புரியாமல் இல்லை. பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதைக் காட்டிலும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சியைத் தீவிரப்படுத்துதல், நிர்வாகத்திலும் வளர்ச்சித் திட்டங்களிலும் மக்களை ஈடுபடுத்துதல், பாதுகாப்பு, ஊடகக் கொள்கைகள் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகள் உடனே கவனம் செலுத்துதல்; வேலைவாய்ப்பு, நிலச்சீர்திருத்தம் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, பழங்குடி மக்கள் பகுதிகளை அதிரடியாக முன்னேற்றுதல் - இவைதான் தரகுமுதலாளிகள் சங்கத்தின் அறிக்கை பரிந்துரைக்கும் தீர்வுகள்.

‘வெட்டு, குத்து, கொலை, சிறை, இரத்தம்’ போன்ற எந்த விதமான கெட்ட வார்த்தைகளோ, கவுச்சி வாடையோ இல்லாமல், நல்ல வார்த்தைகளால் நிரம்பியிருக்கும் இந்த ஆலோசனைகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் இதுதான்: ‘பொருளாதார வளர்ச்சியை தீவிரப்படுத்துதல்’ - மொத்த மாநிலத்தையும் குடைந்து பள்ளமாக்க தரகு முதலாளிகளுடன் ஒப்பந்தம் போடுதல்; ‘நிர்வாகத்திலும் வளர்ச்சித்திட்டங்களிலும் மக்களை ஈடுபடுத்துதல்’ - சல்வா ஜுடும் போன்ற கூலிப்படைகளையும் பிழைப்புவாதிகளையும் உருவாக்குதல்; ‘பாதுகாப்பு’ - அரசுப்படைகளை அதிகரிப்பதுடன் தனியார் படைகளுக்கும் அனுமதி தருதல்; ‘ஊடகக் கொள்கைகள் - உண்மையை வெளியுலகுக்கு கூறும் ஊடகவியலாளர்களைத் தடுத்து நிறுத்துதல்; ‘நிலச்சீர்திருத்தம்’ - கனிமவளம் நிறைந்த கிராமங்களைத் தரகு முதலாளிகளுக்கு உரிமையாக்குதல்; ‘சாலைகள் அமைத்தல்’ - கொள்ளையிட்ட கனிம வளத்தைக் கஷ்டமில்லாமல் கொண்டு செல்ல பாதை அமைத்துத் தருதல்; ‘வேலைவாய்ப்பு’ - போலீசு வேலை, செக்யூரிட்டி வேலை, மரம் வெட்டும் வேலை, ரோடு போடும் வேலை ஆகிய வேலைவாய்ப்புகளைப் பழங்குடி மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் தலையில் அவர்களே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்தல் - இவை அனைத்தும் அதிரடியாகச் செய்யப்பட வேண்டும் என்பதுதான் தரகு முதலாளிகள் சங்கத்தின் ஆலோசனை அல்லது ஆணை.

"முதலில் நான் நக்சலைட்டுகளை ஒழித்துக்கட்டுகிறேன். பிறகு வளர்ச்சியைக் கொண்டு வருகிறேன்" என்று ஒரே வரியில் இதனைச் சொன்னார், உள்துறை அமைச்சர் சிதம்பரம். முதலில் காட்டு வேட்டை, பின்னர் வளர்ச்சித் திட்டம் என்று இரண்டாகப் பிரித்தால் விருந்து மேலும் தாமதமாகும் என்பதால், ‘வளர்ச்சி வேட்டையாக’ (Development on a Crash basis) சேர்த்து நடத்தச் சொல்கிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். வளர்ச்சி, வேட்டை இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையா என்ன?
* மருதையன்