அண்மையில், உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சித்திரவதை தடுப்பு மசோதா (2008)-ஐ அறிமுகப்படுத்தினார். போலீசாரால் நடத்தப்படும் சித்திரவதைகளுக்குத் தண்டனை அளிக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக அமைச்சர் ஆரவாரமாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதியன்று சித்திரவதை தடுப்பு முன்வரைவு மசோதாவுக்கான பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதலும் அளித்துள்ளது.
சித்திரவதை, கொடூரமான மற்றும் மனிதத்தன்மையற்ற வதைகளுக்கு எதிராக ஐ.நா.மன்ற மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்று இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. சித்திரவதைகளைத் தடுக்க 146 உறுதியேற்புகள் ஐ.நா.மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை ஏற்று இந்திய அரசு இன்னமும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், இப்படியொரு மசோதாவைக் கொண்டுவருவதன் நோக்கமே, அனைத்துலக அரங்கில் இந்திய அரசு தனது மதிப்பை உயர்த்திக் கொள்ளவும், தனது மக்களைச் சித்திரவதைக் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதாக வீண்பெருமை பேசி செயற்கையாக ஒப்பனை செய்து கொள்வதற்கும்தான்.
இந்த மசோதாவின் 3-வது பிரிவு, "சித்திரவதை என்பது திட்டமிட்டு செய்யும் உள்நோக்கம் கொண்ட செயல்" என்றும், "கடுமையான பாதிப்பை அல்லது அபாயத்தை உயிருக்கோ உடலுறுப்புகளுக்கோ உடல்நலத்துக்கோ ஏற்படுத்துவதாகும்" என்றும் வரையறுக்கிறது. ஆனால், இம்மசோதாவின் 3-வது விதியின் உட்பிரிவோ, "உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ அபாயகரமாகப் பாதிக்கப்படுவது" என்பதை மருத்துவரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாதிப்பாக இருக்க வேண்டும் என்கிறது.
அதாவது, உடல் ரீதியாக கடுமையான வலியை ஏற்படுத்துவதாக இருந்தால்தான், அது அபாயகரமான பாதிப்பு. மற்றபடி உடல் நலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், மனரீதியாக எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அது "பாதிப்பு" அல்ல, அதற்குப் பெயர் "சித்திரவதை" அல்ல என்கிறது, இந்த மசோதா.
அதாவது, தண்ணீர் தொட்டியில் தலையை அழுத்தி மூழ்க வைத்து மூச்சுத் திணறவைப்பது, பாலியல் வன்முறையை ஏவுவது, சோறு-தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு வதைப்பது, தூங்கவிடாமல் வதைப்பது, சவுக்கால் அடிப்பது, பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியைத் திணித்து தேய்ப்பது, கணுக்காலில் நாள் முழுக்க "கிளிப்" போடுவது, தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவது - முதலான இதர காட்டுமிராண்டித்தனமான போலீசு சித்திரவதைகள் அனைத்தும் இம்மசோதாவின்படி, "சித்திரவதை" கிடையாது. ஏனென்றால், "இதர கொடூரமான, மனிதத்தன்மையற்ற, கண்ணியமற்ற செயல்பாடுகள்" பற்றி இந்த மசோதா மவுனம் சாதிக்கிறது. ஆனால், இந்த அம்சம்தான் ஐ.நா. மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ள மிக அடிப்படையான அம்சமாகும்.
இந்த மசோதாவின் 4-வது விதியானது, உண்மையை வரவழைக்க அல்லது வாக்குமூலம் அளிக்க வைக்க, ஒரு போலீசுக்காரன் சித்திரவதை செய்தால் மட்டுமே அது தண்டனைக்குரிய குற்றம். மிரட்டி அச்சுறுத்துவது, பணம் பறிப்பதற்காக வதைப்பது, பாடம் புகட்டுவதற்காக அடித்து நொறுக்குவது அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக வதைப்பது முதலானவையெல்லாம் தண்டனைக்குரிய சித்திரவதைகள் அல்ல. பொய்க்குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பணம் கறப்பதற்காக இத்தகைய சித்திரவதைகளை மேற்கொண்டால், அந்தப் போலீசுக்காரனை இந்த மசோதாவின்படி தண்டிக்க முடியாது.
உண்மையை வரவழைப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ‘சிகிச்சை’(ட்ரீட்மெண்ட்) அளிப்பது தவிர்க்க முடியாதது என்று அப்பட்டமாகவே போலீசார் நியாயப்படுத்துகின்றனர். சிறு திருட்டு போன்ற சாதாரண விவகாரங்கள் மட்டுமல்ல; தனக்கு எதிராக உள்ளவருடன் கணக்குத் தீர்த்துக் கொள்ள விரும்பும் எவரும் போலீசுக்கு லஞ்சம் கொடுத்தால் போதும். அவர்களுக்குச் ‘சிகிச்சை’ அளிக்க போலீசு தயாராகவே உள்ளது. போலீசின் அக்கிரமங்களைத் தட்டிக்கேட்கும் எவரையும், கை அரிப்பெடுத்தால் சாதாரண வழக்குகளுக்காகப் பிடித்து வரப்படும் எவரையும் தாக்குவது போலீசின் வக்கிர குணமாகிவிட்டது. இருப்பினும், இவையெல்லாம் இம்மசோதாவின் படி சித்திரவதையோ, தண்டனைக்குரிய குற்றமோ அல்ல.
இந்தியாவில், சர்வசாதாரணமாகவே தாழ்த்தப்பட்டோரும், முஸ்லிம்களும், பழங்குடியினரும் போலீசாரால் இழிவாக நடத்தப்பட்டு வதைக்கப்பட்டு வருகின்றனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஐ.நா. மாநாட்டுத் தீர்மானமோ, "எந்தவொரு காரணத்துக்காகவும் எந்தவகையிலும் இழிவுபடுத்தப்பட்டாலும் அது சித்திரவதை" என்றும் "குற்றம்" என்றும் வரையறுக்கிறது. இந்தியாவின் மசோதாவோ, இவ்வாறு இழிவுபடுத்துவதைக் குற்றமாகக் கருதுவதில்லை. "உண்மையை வரவழைப்பதற்காக அல்லது வாக்குமூலம் பெறுவதற்காக ஒருவரை இழிவுபடுத்தி, கடுமையாக காயங்கள் ஏற்படுத்தி வதைத்தால்தான், அதிலும் சித்திரவதைக்குள்ளானவர் தன்னை இழிவுபடுத்தியதாக நிரூபித்துக் காட்டினால்தான், அது தண்டனைக்குரிய சித்திரவதைக் குற்றமாகும்" என்கிறது.
இந்த முன்வரைவு மசோதாவின் 5-வது பிரிவின்படி, சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர் ஆறு மாதங்களுக்குள் புகார் கொடுத்தால் மட்டுமே அதை நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும். சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மீண்டு வந்து, தனக்கு ஆதரவைத் தேடிக்கொள்ளவும், வழக்கு தொடுக்க ஆதாரங்களையும் நிதியையும் திரட்டவும், எல்லாவற்றுக்கும் மேலாக போலீசை எதிர்த்து வழக்குத் தொடுக்குமளவுக்கு மன உறுதியைப் பெறவும் ஆறுமாத காலம் என்பது போதுமானதல்ல. இந்தியக் கிரிமினல் சட்டங்களின் பொதுவிதிகள், இத்தகைய காலவரம்பைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் முன்வரைவு மசோதாவோ, ஆறு மாத கால வரம்பை முன்வைத்துப் புகார்கள் பதிவாகாதபடி தடுக்கிறது.
இறுதியாக பிரிவு 6-இன்படி, போலீசு சித்திரவதை பற்றிய புகாரை நீதிமன்றம் வெளிப்படையாக அறிவிக்கக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதன் மூலம், சித்திரவதை செய்த போலீசுக்காரனைக் கைது செய்யவோ, தண்டிக்கவோ அல்லது இந்த விவகாரத்தைப் பகிரங்கமாக்கவோ கூடாது என்கிறது, இந்த மசோதா.
டெல்லியைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் என்ற அமைப்பு கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஐந்தாண்டுகளில் 7,468 கொட்டடிக் கொலைகள் இந்தியாவில் நடந்துள்ளன. அதாவது, ஏறத்தாழ ஒருநாளைக்கு 4 பேர் வீதம் போலீசு கொட்டடியில் கொல்லப்படுகின்றனர். கடந்த ஆறாண்டுகளில் போலீசு கொட்டடிகளில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 41.66 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் போலீசு-இராணுவ வதையின் கதை வரலாற்று ரீதியானது. காலனிய ஆட்சியாளர்களிடமிருந்த ஒடுக்குமுறைக் கருவியான போலீசு-இராணுவத் துறையை, அதே கட்டுக்கோப்பு-சட்டதிட்டங்களுடன் இந்திய ஆட்சியாளர்கள் வரித்துக் கொண்டனர். காலனிய காலத்தைவிட இன்னும் கொடியதாகவும் பூதாகரமாகவும் போலீசு-இராணுத்துறை வளர்ந்திருப்பதைப் போலவே, அதன் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதை முறைகளும் பெருத்துள்ளன. சித்திரவதைக் கொடூரங்களை நடத்திவரும் மிருகவெறிபிடித்த இந்தியப் போலீசு-இராணுவ அதிகாரிகள் பதவி உயர்வும் பதக்கங்களும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.
இந்திய அரசு தன் மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொண்டு, மனித உரிமைகளை மதித்து நடக்கும் மாபெரும் ஜனநாயக நாடாகச் சித்தரித்துக் கொள்ளும் முயற்சியாகவே இம்மசோதாவை கொண்டுவந்துள்ளது. இந்த பித்தலாட்ட மசோதா மூலம், நாட்டு மக்களைக் கண்ணியமாக நடத்துவதைப் பற்றி அனைத்துலகச் சட்டங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச நடைமுறையைக் கூட அது காற்றில் பறக்க விட்டுள்ளது.
*மணி