10032023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

புலிப் பாசிட்டுகள் போதிய அரசியல் விழிப்புணர்வுடன் இருந்தனராம் - தனது மீளாய்வை மறுக்கும் "மே 18" இன் மக்கள் விரோத பாசிச அரசியல்

புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தங்கள் வலதுசாரி அரசியலுடன், போராட்டத்தை அழித்து நாசமாக்கிய கதை ஒருபுறம். மறுபக்கத்தில் இதை எதிர்கொள்ள வேண்டிய இடதுசாரிகள், மக்களின் முதுகில் குத்திய துரோகம் மறுபுறம். இதுதான் மாபெரும் துரோகம். இது இன்றும் தன்னை தொடர்ந்து மூடிமறைக்கின்றது. இதைத்தான் ரகுமான் ஜான் "ஈழவிடுதலைப் போராட்டம் : ஒரு மீளாய்வை நோக்கி…" என்று கூறிக்கொண்டு, அதை மூடிமறைக்கும் முதன்மையான சந்தர்ப்பவாதியாக புலிப் பாசிட்டாகவே கொள்கை விளக்கம் கொடுத்து செயல்படுகின்றார். அவரின் அரசியல் நேர்மை என்ன என்பதை, அவரைச் சுற்றி நடந்த துரோகத்தை மூடிமறைப்பதில் இருந்துதான், நாம் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

புலிகள், புளாட், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி, மே 18 என்று 30 வருடத்தில் தொடர்ச்சியாக ஒடியவர். அங்கெல்லாம் தன் தலைமையை வழங்கியவர். இவர் எதைத் தான், தன் அரசியல் மீளாய்வாக செய்தவர். தொடர்ச்சியாக தவறானதை முன்னெடுத்தவர். கும்பலோடு கும்பலாக தீப்பொறிக்கு சென்றவர், தீப்பொறியின் சரியான அரசியல் கூறை நிராகரித்ததன் மூலம், தமிழீழ மக்கள் கட்சியாக்கினார். இப்படி அரசியல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும், தன் அரசியல் மூலம் புலிகளின் எடுபிடி அமைப்பாக்கினார். இடதுசாரிய அரசியலை சிதைக்கும் வண்ணம் புலியின் அரசியலை முன்னெடுத்த தமிழீழ மக்கள் கட்சி, அதை நிறைவு செய்தவுடன் தன்னையும் அரசியலில் இல்லாததாக்கியது. இந்த பின்னணியில் தான், ரகுமான் ஜான் இயங்கினார். புலிகளின் அழிவை அடுத்து, புலிப்புற்றில் இருந்து வெளிவந்து படமெடுத்தாடுகின்றார். "மீளாய்வு" என்கின்றார். புலிக்குள் போதிய அரசியல் விழிப்புணர்வுடன் பாசிட்டுகள் இருந்ததாக கூறுகின்றார். இப்படி பல. தங்கள் கடந்தகால துரோகத்தை மூடிமறைத்துக் கொண்டு, மீளாய்வு பற்றிப் பேசுகின்றார்.

மக்களுக்கு எதிரான தங்கள் கடந்தகாலத்தை விமர்சனம் சுயவிமர்சனம் செய்ய மறுப்பவர்கள், "மீளாய்வு" பற்றி கூறி உலகத்தை மறுபடியும் ஏமாற்ற முனைகின்றனர்.    

இப்படி மே 18 இயக்கம் சார்பாக ரகுமான் ஜான், தன்னைச் சுற்றிய தன் கடந்த காலத்தை மூடிமறைத்தபடி, புலிக்கு லாடம் அடிக்க முனைகின்றார். மக்கள் விரோத அரசியலை கடந்தகாலத்தில் முன்னெடுத்த அவர், தன்னைச் சுற்றி கடந்தகாலத்தில் நடந்த எதிர்ப்புரட்சி பற்றிய அவரின் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனத்தைத்தான் சமூகம் மீது அக்கறையுள்ள அனைவரும் எதிர்பார்ப்பதாக இருக்கின்றது. மீண்டும் திடீரென அரசியல், அமைப்பு என்று வெளிக்கிட்டுள்ள அவரின் கடந்தகாலம் எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைக்கப்படுவதன் மூலம், அவர் உருவாக்கும் புதிய எதிர்ப்புரட்சி அரசியல் என்பவை அம்பலமாக்க வேண்டியுள்ளது. அவரின் திடீர் மீள் அரசியல் வருகையின் பின்னான, புலியின் அரசியல் லேபலாக "மே 18" என்று பெயரிலான அவரின் தோற்றமே சர்ச்சைக்குரிய அரசியலாக உள்ளது. 

புலிகள் முன்னிறுத்தும் மே 18யை மையமாக வைத்து, ஒரு இயக்கத்தை உருவாக்குகின்றார். புலிகள் முன்னிறுத்தும் அதே நாளை முன்வைத்த, ரகுமான் ஜான் கனடாவில் ஒரு புலி நிகழ்வை நடத்துகின்றார். அதில் வைத்து அவர் கூறுகின்றார் "ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் இருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதுவுமே, கடந்தகாலம் பற்றிய மீளாய்வுடனேயே தொடங்கப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகிறது." என்கின்றார். புலிகள் மக்களை ஒடுக்கி போராட்டத்தை அழித்து வந்த போது, அது அவருக்கு என்றும் நெருக்கடியாக தெரியவில்லை. அங்கு அவர்கள் "போதிய அரசியல் விழிப்புணர்வுடன்", போராடும் ஓரே சக்தி" என்று கூறி பாசிசத்தை தொழுததையே சரியான அரசியல் என்கின்றார். மக்கள் புலிப் பாசிசத்தில் இருந்து மீள்வதற்கான ஒரு மாற்று அமைப்பைக் கட்ட இவர்கள் முன்வரவில்லை. மாறாக இப்படிக் கட்ட முனைந்தவர்களுக்குள் புகுந்து, புலிக்காக மாமா வேலை பார்த்தனர். அவர்களை அரசியல் ரீதியாக சிதைத்ததன் மூலம், புலியையும் இந்த நெருக்கடியையும் உருவாக்கியவர்கள் நீங்கள் தான். புலிக்கு மாற்றாக ஒரு மாற்றுத் தலைமை உருவாகாமலும், உருவாகவிடாமலும் அதை சிதைத்தவர்கள் நீங்கள். இதுதான் உங்களைச் சுற்றிய கடந்த அரசியல் வரலாறு.   

இன்று இந்த நெருக்கடியில் இருந்து மீளத்தான் "மீளாய்வு" என்கின்றார். ஒரு புலியின் மீட்சிக்கான கோரிக்கையைத்தான், இது கோடிட்டுக் காட்டுகின்றது. இவர் மீளாய்வு என்று கூறுவது, புலியைச் சரிசெய்தல் தான். விமர்சனம் சுயவிமர்சனம் தான் அவசிமானதே ஒழிய மீளாய்வல்ல. மீளாய்வு செய்ய, ஒரு ஆய்வை முன் கூட்டியே அது கொண்டிருந்தது கிடையாது. இதைச் சரி செய்ய, அதில் மக்கள் சார்ந்த அரசியல் எதுவும் கிடையாது. இது மக்கள் விரோத அரசியலைக் கொண்டது. அது வலதுசாரி அரசியல் அடிப்படையைக் கொண்டது. இதை அம்பலப்படுத்தல் தான், இன்று மையமான அரசியல். இதில் மீளாய்வுக்கு மக்கள் நலன் சார்ந்து எதுவுமில்லை. 

சரி அவர் சொல்லும் எல்லையில் "கடந்த காலம் பற்றிய மீளாய்வுடனேயே தொடங்கப்பட வேண்டும்" என்கின்றீர்கள். சரி, உங்களைச் சுற்றிய உங்கள் மீளாய்வு எங்கே? 1980க்கு முன் புலியிலும் பின், கொலைகார புளாட்டிலும், பின் தீப்பொறியிலும், பின் தமிழீழ மக்கள் கட்சியிலும், தொடர்ச்சியில் ஆழ்ந்த அரசியல் உறக்கத்திற்கும் போன நீங்கள், மே 18 மூலம் மீள வந்துள்ளீர்கள். இதில் விமர்சனம், சுயவிமர்சனத்தை செய்ய மறுக்கும் நீங்கள், இதில் கூட எங்கே உங்களை மீளாய்வு செய்துள்ளீர்கள். இங்கு பல சர்ச்சைகளும், சந்தேகங்களும், காட்டிக் கொடுப்புகளும், துரோகங்களும் உங்களைச் சுற்றி உங்களுடன் பின்னிப்பிணைந்தாக உள்ளது. அதை எங்கே மீளாய்வு செய்துள்ளீர்கள். புலிகளின் துரோகத்துடன் கூடிய பாசிச  வரலாற்றுப் போக்குக்கு சமாந்தரமாக சென்ற நீங்கள், அதை ஒரு கட்டத்தில் நியாயப்படுத்தி மக்களை முதுகில் குத்தினீர்கள். ஒரு மாற்று மக்கள் திரள் அமைப்பைக் கட்டும் அரசியல் முன்முயற்சியை மறுத்து, அதைச் செய்ய முனைந்தவர்களை எதிர்த்தும், புலிக்கு ஏற்ற அரசியல் செய்தீர்கள். இது கடந்த உங்களைச் சுற்றிய எதிர்ப்புரட்சி துரோக வரலாறு.

புலிகள் பின் மே 18 என்ற அமைப்பைக் கட்ட முன், எம்மையும் பல நண்பர்களையும் சந்தித்தீர்கள். நாங்களும், அவர்களும் உங்களிடம் கேட்டது, விமர்சனத்தையும், சுயவிமர்சனத்தையும் தான். அதை செய்ய, நீங்கள் இன்று வரை தயாராகவில்லை. கடந்த துரோகத்தை மூடிமறைத்து, அரசியல் ரீதியாக புலியை மீளக் கட்ட முனையும் உங்களால், விமர்சனத்தையும், சுயவிமர்சனத்ததையும் செய்ய முடியாது என்ற உண்மையே, இங்கு உங்கள் அரசியலாக உள்ளது.

நாங்கள் உங்களைச் சந்தித்த போது, தோழமையுடன் அரசியல் ரீதியாக அணுகினோம். அதன் போது நாம் சுட்டிக் காட்டியதை இங்கு கூறுவது மீள பொருத்தமாக இருக்கும். போராட்டம் தவறாக போகின்றது என்று கூறி, அதற்கு எதிராக போராடிய அரசியலையும் அதற்காக மடிந்த தோழர்களின் தியாகத்தையும் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கக் கோரினோம். அதேபோல் தொடர்ந்து அதற்காக போராடிய அரசியல் வரலாற்றையும், அந்த அரசியலையும் அங்கீகரிக்கக் கோரினோம். இந்த அரசியலை தொடர்ந்து முன்வைக்கக் கோரினோம். அன்று மௌனமாக கேட்டுக்கொண்டு இருந்த நீங்கள், இதன் பின் இதை நிராகரித்தே, "மே 18" புலி அரசியல் மூலம் வெளிவந்தீர்கள். இந்த போராட்டத்தையும், தியாகத்தையும் மறுத்து கொச்சைப்படுத்தி உங்கள் கடந்தகால வலதுசாரியத்தை, இடதுசாரியம் மூலம் மீள தள்ளுவதே உங்கள் அரசியலாக இன்று வெளிப்படையாகிவிட்டது.
 
புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் போராட்டம் தவறாக செல்வதாக சொல்லி நடந்த போராட்டத்தையும் அந்த தியாகத்தையும் கூட வியூகம் மூலம் இழிவாடி மறுத்தனர். "சிவப்புக் கோசங்களைக் கடந்து முறையாக தீர்வுகளை கண்டிருக்கவில்லை" என்று கூறியதன் மூலம், புலிகள் தீர்வு கண்ட அதே வழியே சரியென்று கூறி அதை நாடுகின்றனர். அந்த கடுமையான போராட்டங்களையும் அரசியல் வழிகளையும் வெறும் கோசமாகத்தான் வலதுசாரிய மே 18 காட்ட முனைகின்றது.  1980 களில் இந்த வலதுசாரியத்துக்கு எதிராக போராடியவர்களை, எவ்வளவுக்கு கீழ்த்தரமாக இழிவாட முடிகின்றதோ, அந்தளவுக்கு வியூகம் இழிவாடுகின்றது. இப்படித்தான் கேசவன் உட்பட, அனைவரையும் அரசியல் ரீதியாகவே மறுத்து ஒதுக்கியதுடன், அரசியல் ரீதியாகவே காட்டிக்கொடுக்கப்பட்டனர். இந்த வலதுசாரிய மே 18 தன் இனவாத அரசியல் மூலம் மார்க்சியத்தையும், ஜனநாயகத்தையும் சேறடிக்கின்றது. இவை "நவீன யுத்தத்தில் எதற்கும் பயன்படாதவையாக இருந்தமை தெரிகிறது" என்று வெட்டவெளியாக, தன்னை மூடிமறைத்துக் கொண்டு வியூகம் மூலம் சொன்னீர்கள். இதே நேரம் மார்க்சியத்துக்கும், வலதுசாரிய புலிப் பாசிசத்துக்கும் இடையில் பாலம் கட்ட முனைந்தீர்கள். இப்படி மற்றொரு புலியாக "மே18" பெயரில் அவர்கள் வெளிவந்ததை அடுத்தே, வெளிப்படையான விமர்சனத்தை நாம் தொடங்கினோம்.

மூடிமறைத்த தங்கள் சந்தர்ப்பவாதத்துக்கு மார்க்சியத்தை பயன்படுத்துவதன் மூலம், மற்றொரு புலியை பூச்சூட்டுவது தான் மே 18 இயக்கத்தின் இனவாத கனவு. இதற்காக அது, கடந்தகாலத்தில் தோற்றுப் போன வலதுசாரிய போராட்டத்துக்கு எதிரான போராட்டத்தையும், அது கொண்டிருந்த அரசியலையும் மறுக்கின்றது. இப்படி அரசியல் ரீதியாக மறுத்தபடி, இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளை கொண்டு வலதுசாரிய புலியை மீள கட்ட முனைகின்றனர்.

இதற்காக அது அனைத்தையும் திரிக்கின்றது. அந்தவகையில் "தமிழ் சமூகத்தின் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இழைத்த தவறுகள் என்ன என்பதாகும். நான் நினைக்கிறேன் சுயவிமர்சனம்தான் மிகச் சிறந்த விமர்சனம் என்று. அதனால் நாம் முற்போக்கு, ஜனநாயக சக்திகளது பாத்திரம் பற்றிய சுயவிமர்சனத்தில் இருந்துதான் எமது எதிர்கால திட்டமிடல்களை ஆரம்பித்தாக வேண்டியுள்ளது." என்கின்றார். வேடிக்கையாக இருக்கின்றது. இதை தான் செய்ய முன்வராத, ஒரு குதர்க்கமான வாதம். இதைச் கோர முன், தானே இதைச் செய்திருந்தால், இதைச் சொல்வதில் கூட குறைந்தபட்சம் அடிப்படை அரசியல் நேர்மையாவது இருந்திருக்கும். இங்கு "முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இழைத்த தவறுகள்" என்று இவர் கூறுவது, இனவாத தமிழ் அரசியலை சரியாக ஆதரிக்கவில்லை என்பதுதான். தான் அதை சரியாக செய்ததால், தனக்கு சுயவிமர்சனம் அவசியமில்லை என்றாகிவிட்டது.

"முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இழைத்த தவறுகள் என்ன" என்கின்றார். எது சரி என்று சொல்லாமல், தவறு என்பதை இனம் காணமுடியாது. தவறையும் சரியையும் தீர்மானிக்க முன், உங்கள் அரசியல் தான் என்ன? கடந்த போராட்டத்தில் வர்க்க அடிப்படைதான் என்ன? அதன் தவறு இல்லையா, அதன் தோல்வி? முற்போக்கின் தவறுக்கு முன், வலதுசாரிய போராட்டத்தில் தவறுக்கான வர்க்க அடிப்படைதான் என்ன? இந்த போராட்டத்தை வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்ய மறுக்கும் நீங்கள், வர்க்கத்தை "பொருளாதார" அரசியலாக திரிப்பதே கேடுகெட்ட வலதுசாரி அரசியல்தான். முற்போக்கின் தவறு என்பது, உங்கள் வலதுசாரி கண்ணோட்டத்தில், அது கொண்டிருந்த "சிவப்பு" அரசியலும், "நவீன காலத்துக்கு" பொருந்தாத "மார்க்சியமா"க காண்பதே, உங்கள் அரசியலாகின்றது. அவர்களிடம் இருந்த சரியாக நீங்கள் பார்ப்பது, "தேசியத்தை"த்தான். அதை வலதுசாரியத்தின்  அரசியல் கூறாக சிதைப்பது தான், "மே 18" இன் மூடிமறைத்த இன்றைய அரசியல் சதியாகும்.

இது எங்கிருந்து எதை மீளாய்வு என்ற பெயரில், மே 18 படம் காட்ட முனைகின்றது? "இன்று போராட்டத்தை மீள்மதிப்பீடு செய்யும் எவருமே புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட உண்மையான தேசபக்த சக்திகளை ஒரு போதும் நிராகரித்துவிட முடியாது. இந்த தேசபக்த சக்திகள் புலிகளது தவறான அரசியல் பற்றிய போதிய விழிப்புணர்வுடனேயே இருந்தார்கள். ஆயினும் களத்தில் நின்று போராடிய ஒரே சக்தி என்ற வகையில் அவர்களை நிபந்தனையின்றி ஆதரிக்குமாறு நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தார்கள்."  பாசிட்டுக்கள் மட்டும் தான், இப்படி விளக்கம் சொல்ல முடியும். தீப்பொறி அரசியலை மறுத்து, தமிழீழ மக்கள்கட்சி இப்படியேதான் தன்னை புலிக்கு காட்டிக்கொடுக்கும் எடுபிடி வேலை செய்தது. இதை முன்னின்று வழிநடத்தியவர் தான், இந்த ரகுமான் ஜான். புலியின் பாசிசத்தை மறுக்கும், புலிதான் ரகுமான் ஜான். அவர் ஒரு பாசிட். பாசிட் மட்டும்தான், இதை இப்படி விளக்கம் கொடுக்க முடியும்.   

புலிப் பாசிசத்தின் எடுபிடிகள் பின்தான் மே 18, தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது. "புலிகளது தவறான அரசியல் பற்றிய போதிய விழிப்புணர்வுடனேயே இருந்தார்கள்" என்றால், அந்த விழிப்புணர்வு சார்ந்த அந்த அரசியல்தான் என்ன? ரகுமான் ஜானுக்கு மட்டும் தெரிந்த அந்த அரசியல் என்ன? போதிய விழிப்புணர்வு எப்படி எங்கே எப்போது வெளிப்பட்டது? 

புலிகளின் தேவையை பூர்த்திசெய்த தமிழீழ மக்கள்கட்சி பிதாமகன் இவர். இதன் மூலம் இடதுசாரிய அரசியலை அழித்த பின், அந்த அமைப்பே திடீரென காணாமல் போனது. ரகுமான் ஜான் புற்றுக்குள் சென்று படுத்துக்கொண்டர். இப்படிப்பட்ட இவர் கூறுகின்றார் "போதிய விழிப்புணர்வுடனேயே" இருந்தனர் என்று. அந்த "விழிப்புணர்வு" கொண்ட, இரகசிய சதி எப்படி இவருக்கு தெரியும்? சரி என்ன, குறிச் சாத்திரமா பார்த்தவர்? இப்படி இவர் சொல்ல, என்ன அரசியல் அடிப்படையைக் கொண்டிருகின்றார்? இடதுசாரியத்தை அழித்த பின், புலிப் புற்றில் படுத்திருந்து, புலியுடன் கும்மி அடித்ததால் தெரிந்ததோ!? 

போராட்டத்தின் அழிவில் அந்த "போதிய விழிப்புணர்வுடனேயே' இருந்தது எங்கும் வெளிப்படவில்லை. புலிப் பாசிசத்தை அம்பலமாக்கி, மக்களை அரசியல் ரீதியாக விழிப்புற வைக்கும் எந்த அரசியல் பணியையும் யாரும் செய்யவில்லை. மக்களுக்கு எதிராக புலிப் பாசிசத்தை நக்கும், தொழிலைத்தான் இந்த மாமாக்கள் செய்தனர். இதை நியாயப்படுத்த "களத்தில் நின்று போராடிய ஒரே சக்தி என்ற வகையில்" ஆதரிப்பதாக கூறி, தங்கள் பாசிசத்துக்கே சுயவிளக்கம் கொடுத்தனர். புலிப்பாசிசம் மக்களை வேட்டையாடிக் கொண்டிருந்த இந்த வரலாற்றுப் போக்கில், மக்களை சார்ந்து நின்று போராடுவதை மறுத்த பாசிட்டுகள் இவர்கள்.

இந்த நிலையில் புலி பாசிசத்தை "தவறான அரசியல் பற்றிய போதிய விழிப்புணர்வுடனேயே"  ஆதரித்தனர் என்று சொல்பவன் எவனும், மாபெரும் பாசிட்டு தான். அதை "மே 18" என்ற மற்றொரு புலி, இன்று தன்னை மூடிமறைத்துக் கொண்டு கூறுவது பாசிச வரலாற்றில் தற்செயலானதல்ல. பாசிசத்தை தொழுது வாழ்ந்த கூட்டத்தின் அரசியல் தான் இது.   

பி.இரயாகரன்  
08.06.2009

 


பி.இரயாகரன் - சமர்