கொன்றவனை மறுபடியும் கொல்லும் குரூரம், மகிந்த சிந்தனையில் தான் எழுகின்றது. பாரிய மனிதப் படுகொலைகள் மூலம் போர்க்குற்றத்தைச் செய்த கூட்டம், செய்யாத கொலையைச் செய்ததாக மற்றவன் மேல் பழி சுமத்துகின்றது. முறைகேடான சமூக விரோத பேரினவாத அரசியல், இப்படித்தான் புலத்தில் அரங்கேறுகின்றது. பேரினவாத பாசிசம் உண்மைகளை புதைப்பதும், பொய் புரட்டுகளில் அரசியல் செய்வதைத் தவிர, அதற்கு வேறு எந்த அரசியல்  வழியுமிருப்பதில்லை. தமிழ்மக்களின் உரிமைகளை வழங்கி, புலியை எதிர்கொள்ள அரசியல்  அதற்கில்லை.

கொல்லாதவனை கொன்றதாக  பிரச்சாரம் செய்கின்றது. புலியெதிர்ப்பு புலத்து தேனீ முதல் இலங்கை சண்டே ஒப்சேவர் வரை இந்த இட்டுக்கட்டிய பொய்ப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. 

சம்பவங்களை இட்டுக் கட்டுகின்றது. போதையில் நடந்த தனிப்பட்ட மோதல்களையும், மரணங்களையும் அரசியல் சாயம் ப+சி பிரச்சாரம் செய்கின்றது.

றமேஸ் சிவரூபன் கொலை வட்டுக்கோட்டை புலிக்கும், நாடுகடந்த தமிழீழக்காரருக்கும் இடையில் நடந்த மேதலால் ஏற்பட்ட மரணம் என்று, கதைகட்டி பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இப்படி மகிந்த பாசிசம் சர்வதேச அளவில் தொடங்கியுள்ள பொய்ப் பிரச்சாரத்தில், இது இன்று அரங்கேறுகின்றது. கடந்த 10 நாட்களுக்கு முன் நாடுகடந்த தமிழீழக்காரரின் பத்திரிகையான தாய்நிலத்தை எரித்த வட்டுக்கோட்டைக்காரர்களின் வன்முறையை, இதற்குள் செருகி ஒரு புதுக் கதையை பேரினவாதம் அவிழ்த்துவிட்டுள்ளது.

புலிகளுக்குள்ளான முரண்பாடுகள் முற்றி போட்டிப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதல் இன்று அதன் மேலான வன்முறையாக மாறிவருகின்றது. இதற்குள் பேரினவாத பாசிசம் தனக்கான, பொய்யான புரட்டான பிரச்சாரங்களை உள் நுழைக்கின்றது.

புலியெதிர்ப்பு அரசியலை முன்வைத்த புலத்துப் புலியெதிர்ப்பு ஊடகங்கள், இணையங்கள் இன்று இதற்காக பேரினவாதம் பயன்படுத்துகின்றது.

றமேஸ் சிவரூபன் கொலை என்பது போதையில், நண்பர்களுக்கு இடையில் நடந்ததுதான். வழமையான வகையில் றமேஸ் சிவரூபன் போதையில் கையாளும் வாக்குவாதங்கள், சண்டைகள் அடிக்கடி நடப்பதுதான். இதுதான் வழமை. இதுவும் அந்த வகையில் நடந்ததுதான். அன்று போதையில் அடிக்குமளவுக்கு, அவருக்கு நன்கு தெரிந்தவருக்கு இடையில் நடந்ததுதான்.

றமேஸ் சிவரூபன் அரசியல் புலியெதிர்ப்பு அரசியல் அடிப்படையைக் கொண்டது. இடதுசாரிய அடிப்படையைக் கொண்டது கூட. இவரின் சில எழுத்துக்கள் இனியொரு இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. அரசியல் கூட போதையில் நடப்பதுண்டு. இப்படி அடிக்கடி போதையில் வன்முறை உச்சம் வரை செல்வதும், அவரை நன்கு தெரிந்தவர்கள் இதை புரிந்து கொண்டு விலகிச்செல்வதும் தெரிந்த ஒன்று.

மற்றும் கேஸ் எழுதும் தொழில் சார்ந்தும் முரண்பாடுகள் என்பது அவரைச்சுற்றி இருந்து வந்தது. அண்மையில் இவர் தான் செய்த தொழில் சார்ந்த சில சட்டவிரோத செயலுக்காக  பிரஞ்சுப் பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டதும், அவரின் தொழில் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டது. இதனால் அவரைச் சுற்றிய முரண்பாடுகள் கூட கூர்iமானது.

இப்படி பல சிக்கல் நிறைந்த நிலையில், நண்பர்கள் ஒன்றாக குடித்த பின் தாங்கள் போதையில் நடந்த வாக்குவாதத்தின் பின் றமேஸ் சிவரூபன் தாக்கப்பட்டார். தாக்கியவர்களிடம் கொல்லும் நோக்கம் இருந்திருக்கவில்லை. தாக்கியவர்கள் வழமைபோல்  அவரை வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டே சென்றனர். இப்படி உண்மைகள் இருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் உட்பட, புலியெதிர்ப்பு அரச எடுபிடிகள் செய்யும் பொய்ப் பித்தலாட்டம் என்பது, திட்டமிட்டு வன்முறைகளை திணிக்கும் சொந்த சதியை அடிப்படையாகக் கொண்டது.  இன்று இவை இனம் காணப்பட்டு, அவை தனிமைப்படுத்த வேண்டிய ஒன்றாக இன்று மாறிவருகின்றது. பேரினவாதம் தன்னை புலியெதிர்ப்பு கும்பல் ஊடாக, கொன்றவனை மறுபடியும் கொல்லும் வன்முறை மூலம் தன் சுயரூபத்தை புலத்தில் வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளது.  

பி.இரயாகரன்
06.06.2010