01212022வெ
Last updateஞா, 16 ஜன 2022 1pm

வினவுவை எதிர்ப்பவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்ன?

வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையே எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்பு என்பது பொதுவானது. குறிப்பாக இந்த விடையத்தில் ஆணாதிக்கம் அம்பலமாவதைத் தடுத்து, ஆணாதிக்கத்துக்குள்ளேயே தீர்வைக் காட்ட முனைகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை, தமது வலைக்குள் கட்டி வைக்க முனைகின்றனர். இந்த வகையில் வினவுவை நோண்டி, இந்தா இதைப் பார் என்று தங்கள் ஆணாதிக்க வக்கிரத்தை மூடி மறைத்துக்கொண்டு காட்ட முனைகின்றனர். வினவு தளத்தைக் கடந்து, அதன் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். இந்த வகையில் வினவு தளம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்பதால், ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலமானதாக உள்ளது. இதனால் வினவுக்கான எதிர்ப்பு, பலமாக பல முனையில் வெளிப்படுகின்றது.
 
வினவின் அரசியல் என்ன? சாதியை எதிர்க்கின்றது. பார்ப்பனியத்தை எதிர்க்கின்றது. ஆணாதிக்கத்தை எதிர்க்கின்றது. சுரண்டலை எதிர்க்கின்றது. இனவெறியை எதிர்க்கின்றது. மதவாதத்தை எதிர்க்கின்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்றது. இதன் அடிப்படையில் ஒரு சமூக மாற்றத்தைக் கோருகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் குரலாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக வினவுவின் அரசியல் இருக்கின்றது. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான, எம் அனைவரினதும் குரலாகவும் அது இருக்கின்றது. அதுதான் எமது அரசியல்.

நீங்கள் யார்? சாதியை பாதுகாக்கின்றீர்கள்! மதவாதத்தை பாதுகாக்கின்றீர்கள்! பார்ப்பனியத்தை பாதுகாக்கின்றீர்கள்! சுரண்டலை பாதுகாக்கின்றீர்கள். ஆணாதிக்கத்தை பாதுகாக்கின்றீர்கள். இனவெறியைப் பாதுகாக்கின்றீர்கள். இதைக் களையக் கோரும் சமூக மாற்றத்தை மறுக்கின்றீர்கள். இதனால் நீங்கள் வினவு அரசியலை எதிர்த்து நிற்கின்றீர்கள். இதனால் நீங்கள் அனைவரும், ஓரே குரலில் ஒப்பாரி வைக்கின்றீர்கள். ஆளும் வர்க்கத்திற்கு நடந்த துயரம் கண்டு துடிக்கின்றனர்.

இந்த வகையில் சமூகத்தை பிளந்து ஒடுக்கும், சமூக ஆதிக்கம் பெற்ற ஆளும் கூட்டத்தின் எதிர்ப்பு பலமுனையில் இருந்து தன்னியல்பாக எழுகின்றது. இது தான் இன்று தமிழ்மணத்தில் பிரதிபலிக்கின்றது. சாதியின் பெயரால், பார்ப்பனியத்தின் பெயரால், மதவெறியின் பெயரால், இனவெறியின் பெயரால், ஆணாதிக்கத்தின் பெயரால், சுரண்டலின் பெயரால் மனிதகுலத்தை பிளந்து, அவர்களை ஒடுக்கி ஆளுகின்ற சிந்தனை முறையின் பிரதிநிதிகள் தமிழ்மணத்தில் கொய்யோ முறையோ என்று புலம்புகின்றனர். ஒடுக்கப்பட்ட குரல்கள் கருத்தில் மற்றும் போராட்டத்தளத்தில், பலமாவது என்பது இவர்களை; கிலிகொண்டு உதறலெடுத்து புலம்பவைக்கின்றது. ஆளும் வர்க்கத்தின் சிந்தனைமுறை தகர்கின்றபோது, அந்த ஆளும் வர்க்க சிந்தனையிடம் சொல்ல எதுவுமிருப்பதில்லை. இந்த அச்சம் தான், பலமான எதிர்ப்பாக பிரதிபலிக்கின்றது.

தங்கள் ஆதிக்க சிந்தனையும், தங்கள் ஆளுமையும் தொடர்ந்து அம்பலமாவது கண்டு கொதித்துப் போகின்றனர். அவர்களின் கவலை தங்கள் சித்தாந்தம் அம்பலமாவதுடன், தாங்கள் கட்டிவைத்திருக்கின்ற பிரமை தகர்வது கண்டு புலம்புகின்றனர். பொது சமூகத் தளத்தில், இருக்கின்ற சமூகப் போக்கில், எந்த சமூக உணர்வுமின்றி ஒடிமேய்ந்த மந்தைகள் விலகுவது கண்டு கொதித்துக் குமுறுகின்றனர். போயும் போய் வினவிடமா என்று, அங்கலாய்க்கின்றனர்.
நாங்கள் தீர்க்கமாட்டோமா என்பதே அவர்களின் தர்க்கம். இதுபோன்ற விடையங்கள் நீண்ட காலமாக நிலவும் போது, காணாமல் போனவர்கள் தான் இவர்கள். தொடர்ந்து நிலவப்போகும் இந்த விடையத்தில், எந்த மாற்றமுமின்றி அதையே செய்வார்கள் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் பலமுறை நிறுவும்.

இவர்கள் வைக்கும் தீர்வு என்ன? பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டால், அவளை அவனுக்கே கட்டிவைக்கும் ஆணாதிக்க மாமா வேலையைத்;தான், இங்கு மத்தியஸ்தத்தின் பெயரில் இவர்கள் முன்வைக்கின்றனர். நாங்கள் விதம் விதமான அரசியல் மாமாக்கள் இருக்க, வினவிடமா செல்ல வேண்டும் என்று கேட்கின்றனர். அரசியல் விபச்சாரத்துக்கு தரகுத்தொழில் செய்யும் இந்த மாமாக் கூட்டம் தான், தமிழ்மணத்தில் எதிர்ப்பதிவு போட்டு புலம்புகின்றனர்.

சமூகத்தை மாற்ற முனைபவர்கள், எப்படி எமது விடையங்களில் தலையிட முடியும் என்பது இந்தக் கூட்டம் முன்வைக்கும் தர்க்கமாக உள்ளது.

உங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உங்களுக்கு அடங்கியொடுக்கி, உங்கள் மாமாத்தனமான தீர்வுகளை மறுத்து, தம்மை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களுடன் இனம் காட்டியது என்பது, தாமும் போராடும் எதிர்க்குணாம்சம் கொண்டவர்கள் தான் என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி விடுகின்றனர்.
இந்தவகையில் ஆணாதிக்க வெறியர்களால் பாதிக்கப்பட்ட சந்தனமுல்லை (பார்க்க "பூக்காரி"களுக்கும் சுயமரியாதை உண்டு" என்ற பதிவை) மிகத்தெளிவாக, தன் நிலையை வெளிப்படுத்தியுள்ளார். இதில் அவர் அதை தான் எதிர்கொண்ட விதத்தைக் கூட போர்க்குணாம்சத்துடன் முன்வைக்கின்றார். அனைவரும் படிக்கவேண்டியதும், உணர்வுபூர்வமாக அதைப் புரிந்துகொள்ளவேண்டியதுமானதாகும்.
இந்தப் பதிவு ஆணாதிக்கத்தின் பசப்புத்தனத்தையும், ஆளும் வர்க்கத்தின் நரித்தனத்தையும் துல்லியமாக தோலுரிக்கின்றது. தாங்கள் நிர்வாணமாக நடத்துகின்ற கூத்தை அம்பலமாக்குவதுடன், நடிக்கின்ற கூட்டத்தின் நாடகங்கள் அனைத்ததையும் தவிடு பொடியாக்குகின்றது.

இதைக் "கண்டிக்கின்றோம்" என்று கூறிக் கொண்டு, மாமாக்கள் நடத்துகின்ற சினிமாக்களின் போலித்தனத்தை எள்ளி நகையாடுகின்றது. சமூகத்தில் ஒடுக்குகின்ற கூட்டத்தின், கதாநாயகராக தன்னை முன்னிறுத்த முனைகின்ற போலிக் கண்டிப்பை கேலி செய்கின்றது. சினிமாவில் நடிக்கின்ற கதாநாயகத்தனம் தான் வாழ்க்கையிலும் என்பதே, இந்த ஆளும் வர்க்கத்தின் அகராதியாகும். ஆகவே தான் சமூக மாற்றத்தை கோரும், வினவு அரசியலை எதிர்த்து நிற்கின்றனர். இங்கு வினவு எதிர்க்கப்படவில்லை. வினவின் அரசியல் தான் எதிர்க்கப்படுகின்றது. இதை யார் முன்வைத்;தாலும் அதை எதிர்ப்பதுதான், இந்த ஆளும் வர்க்கத்தின் நிலையாகும்.
இந்த வகையில் தான், ஒடுக்கும் கூட்டத்தை எதிர்த்து ஒடுக்குமுறைக்கு எதிரான எமது போராட்டம் அமைகின்றது. சந்தனமுல்லைக்கு நடந்த இந்த விடையத்தை, ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக மாற்றத்தைக் கோரும் வினவுவின் அரசியல் மட்டும் தான், உணர்வுபூர்வமாக எதிர்க்கின்றது.

மற்றவர்கள் சமூகமாற்றத்தை மறுப்பவர்கள். இந்த ஆணாதிக்க சமூக அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். அதைப் பாதுகாக்க சமரசத்தையும், ஆணாதிக்கத்துக்குள் தீர்வையும் காண முனைகின்றனர். இந்த வகையில் இந்த விடையம் இரண்டு போக்கில் பிளவுபட்டு காணப்படுகின்றது. இதற்கு இடையில் எதுவுமிருப்பதில்லை.
பி.இரயாகரன்
05.06.2010

மேலதிகமாக இதைப் புரிந்துகொள்ள
1.ஆணாதிக்கமும் பெண்ணியமும்

பி.இரயாகரன் - சமர்