Sun01262020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயக மக்கள் முன்னணி புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

  • PDF

விடுதலைப் புலிகள் அமைப்பினுள் ஜன‍‍நாயகம் ஏற்பட வேண்டும் என்பதில் மிகுந்த‌ அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயற்பட்டவர்களில் மனோமாஸ்டர், அழகன், நந்தன், மாத்தையா,சுந்தரம் ஆகியோரைக் கோடிட்டுக் காட்டலாம் . இவர்கள் புலிகளின் உள்ளே ஜனனாயக வெளி ஒன்றை ஏற்படுத்துவதே முதலாவதும் முக்கியமானதுமான தேவை என்பதைக் குறித்துக் காட்டியவர்கள். மனோமாஸ்டர் ஓரளவு தெளிவான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஏனைய உறுப்பினர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதிலும், ஆர்வத்தை உருவாகுவதிலும் இவரின் பங்கு அளப்பரியயதாக அமைந்திருந்தது. மனோமாஸ்டர், புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பதாகவே இடதுசாரி அரசியலுடன் பரீட்சயமானவர்.

manomaster.jpg

தனி நபர் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் மாற்றாக குறைந்தபட்ச அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைப்பதே போராட்டத்தின் வெற்றிக்கான திசை என்பதை உறுதியாக முன்வைத்தார்.

 

மனோமாஸ்ரரின் கருத்துக்களோடு பொதுவாக மாத்தையா உடன்பாடுடையவராகக் காணப்பட்டார். வறிய குடும்பத்திலிருந்து புலிகளில் இணைந்துகொண்ட மகேந்திரராஜா என்ற மாத்தையா இந்தக் காலப்பகுதியில் மிகுந்த தேடல் ஆர்வம் மிக்கவராகக் குறிப்பிடத்தக்கவர்.

 

மனோமாஸ்டருக்கும் நந்தனுக்கும் இடையே அடிக்கடி விவாதங்கள், கருத்து மோதல்கள் ஏற்படுவது வழமை. தெரிவு செய்கின்ற அரசியல் வழிமுறை குறித்தே அந்த முரண்கள் அமைந்திருக்கும்.

 

மனோ மாஸ்டர் ரொஸ்கியக் கருத்துக்களின் ஆளுமைக்கு உட்பட்டிருந்தார். அகில இலங்கைப் புரட்சியின் ஒருபகுதியாகவே தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மனோமாஸ்டரின் பிரதான கருத்தாக அமைந்திருந்தது.

 

நந்தனைப் பொறுத்தவரை தமிழீழத்திற்கான புதிய ஜனநாயகப் புரட்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தார். இவ்வகையிலேயே இருவருக்கும் இடையேயான விவாதம் அமைந்திருக்கும்.
நந்தன், மனோமாஸ்டர் ஆகியோரிடையேயான முரண்பாடென்பது பல தடவைகள் தீவிர விவாதப் போராக முடிவதுண்டு.

 

உள் முரண்பாடுகளிடையே மனோமாஸ்டர், மாத்தையா, குமணன் போன்றோர் இயக்க வேலைகளில் அர்ப்பண உணர்வுடனேயே ஈடுபட்டுவந்தனர். நந்தன் ஆரம்பத்திலிருந்தே பண்ணை நடைமுறைகளிலும், இயக்கத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபாடற்றவராகவே காணப்பட்டார்.

 

எண்பதுகளின் பின்னர் தமிழீழ தேசிய விடுத்லை முன்னணியில்(NLFT) இணைந்து செயற்பட்ட நந்தன், அம்முன்னணியின் செயலாளராகவிருந்த விசுவானந்ததேவனின் பிரிவிற்குப் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தார்.

 

இவ்வேளையில் பிரபாகரனை வெளியேற்றுவதே இயக்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒரே வழி என்பதையும், பிரபாகரன் அற்ற புலிகளை உருவாக்குவதே நோக்கம் என்பதையும் சுந்தரம் பிரச்சாரப்படுத்தினார். சுந்தரத்தின் இந்தக் கருத்தோடு நந்தன் மிகுந்த உடன்பாடுடையவராகக் காணப்பட்டார். பிரபாகரன் என்ற தனிநபரை முதன்மைப்படுத்திய அரசியலில் சுந்தரமும் நந்தனும் இணைந்து கொண்டனர்.

 

நான் முன்வைத்த "மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதிலிருந்தே அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டும்" என்ற கருத்தோடு மனோமாஸ்டர் முழுமையாக ஒத்துழைத்தது மட்டுமன்றி நூல்களை வாசித்து தர்க்கரீதியான முடிபிற்கு வருவதற்கு ஏனைய போராளிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

 

அன்றிருந்த சமூகப் புறச்சூழலில், பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக மட்டுமே புலிகள் என்ற அமைப்பை நோக்கி இணைந்திருந்தோம்.


இந்நிலையில், அழிவுகளை ஏற்படுத்த வல்ல தூய இராணுவ வழிமுறைக்கு மாற்றாக புதிய சிந்தனைப் போக்கு இயக்கத்தில் உருவாகியிருந்தது. நாம் வரித்துக்கொண்ட நோக்கத்தின் வெற்றிக்கான திசை என்பது குறித்தே எம் அனைவரினதும் கவனம் குவிந்திருந்தது.

 

பலரின் அர்ப்பணங்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் உருவாகிக்கொண்டிருந்த எமது இயக்கத்தை தவறான வழி முறைகளூடான அழிவுப் பாதையிலிருந்து மீட்ட்டெடுப்பதே எமது அனைவரதும் நோக்கமாக அமைந்திருந்தது.

 

இவ்வேளையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்பதை விட புலிகளின் தலைமையை மாற்றியமைத்தால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வை எட்டலாம suntharam1.jpgஎன்பது சுந்தரத்தின் கருத்தாக அமைந்திருந்தது. அவரோடு நந்தன் போன்ற பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கில் அதிர்ப்தியடைந்திருந்த பலரும் உடன்பட்டிருந்தனர்.

 

என்னைப் பொறுத்த வரையில் நாம் பயணிக்கும் திசை தவறானது என்ற முடிபிற்கு வந்த பின்னர், புதிய அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன். பிரபாகரன் ஈறான அனைவரையும் புதிய அரசியல் வழிமுறைக்குள் இணைத்துக் கொள்வதனூடாக முன் நோக்கிச் செல்லலாம் என்ற கருத்தை இயக்க உறுப்பினர்கள் மத்தியில் முன்வைக்கிறேன்.

 

அவ்வாறான குறித்த வழிமுறை என்பது மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதிலிருந்தே ஆரம்பிக்கப்படலாம் என்ற கருத்தையும் முன்மொழிகிறேன்.

 

பதினேழு வயதில் போராட்டத்திற்காக அனைத்தையும் துறந்த போராளியான பிரபாகரன் அன்றிலிருந்து எந்த முற்போக்கு அரசியல் அணியாலும் அணுகப்படவில்லை. அப்போதிருந்த தூய இராணுவம் சார்ந்த சிந்தனை வட்டத்தினுள்ளேயே பிரபாகரன் முழுமையாக அமிழ்ந்து போயிருந்தார்.

 

தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அரசியல் ஆளுமைக்குள்ளேயே நாங்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரானவர்கள் எம்மளவில் துரோகிகளாகவே கருதப்பட்டனர். அவர்களின் பாராளுமன்ற அரசியலின் வன்முறை வடிவமாகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருந்தோம். கூட்டணியின் நேரடியான அரசியல் கட்டுப்பாடு இல்லாதிருந்தாலும் எமது சிந்தனைப் போக்கு அவ்வாறுதான் அமைந்திருந்தது.

 

பாரம்பரிய இடதுசாரிகள் என்று கூறிக்கொண்ட எவருமே எம்மை அணுகியதோ, நியாயமான போராட்டத்தை சரியான திசைவழி நோக்கி நகர்த்த வேண்டும் என்று எண்ணியதோ கிடையாது. தேசியப் போராட்டம் என்பது அவர்கள் மத்தியில் ‘தீண்டத்தகாத' ஒன்றாகவே அமைந்திருந்தது.

 

மார்க்சிய நூல்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே நியாயமான வழிமுறைகள் குறித்த ஆரம்ப அறிவைப் பெற்றுக்கொண்டோம். ஒரு அரசியல் இயக்கத்தை வழி நடத்தும் தத்துவார்த்தக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் சிந்தித்தது கிடையாது. கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் அரசியல் வழிமுறைகள் குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே பிரதான நோக்கங்களாகக் கொண்டிருந்தோம்.

 

நாம் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்கின்ற சிறிய அணியாக உருவாகியிருந்தோம்.

Praba-mahendrarajah-300x193.jpg

என்றுமில்லாதவாறு, குமரப்பா, மாத்தையா, ராகவன் சாந்தன், சுந்தரம், குமணன் போன்ற இன்னும் பல போராளிகள் அரசியல் தேடல்களிலும் விவாதங்களிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பண்ணைகளில் தற்செயலாக சந்தித்த, சிந்திக்கத் தொடங்கிவிட்ட பலர் மார்க்சிய நூல்களும் கையுமாகத் தான் காணப்பட்டனர். அது ஒரு அலையாக ஆரம்பித்து இயக்கத்தின் குறித்த மட்டத்தில் வியாபித்திருந்தது. மக்கள் போராட்டம், ஜனனாயகம், மத்தியத்துவம், உட்கச்சிப் போராட்டம் என்று பல்வேறு தளங்களிலும் பரந்த அறிவுத் தேடலில் கணிக்கத்தக்க அளவானோர் ஈடுபட்டோம்.

 

எல்லாமே ஒரு சில மாத இடைவெளிக்குள் நடந்தவை தான். அரசியல் திட்டம் போன்றவற்றை முன்வைப்பதற்கு எம்மிடம் போதிய தெளிவு இருந்திருக்கவில்லை.

 

இவ்வேளைகளில் ஒரு இடதுசாரிக் கட்சியின் பின்பலம் இருந்திருக்குமானால், அவர்கள் எம்மை அணுகியிருப்பார்களானால் இன்று தெற்காசியாவின் தென்மூலையில் நிகழ்ந்த வெற்றிபெற்ற போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருந்திருப்போம்.

 

சுந்தரம் போன்றோர் முவைத்த தலைமைத்துவம் குறித்த முரண்பாடும், அரசியலை விட பிரபாகரன் என்ற தனி நபரின் நடவடிக்கைகள் குறித்த முதன்மைப்படுத்தலும் பல போராளிகளைக் கவர்ந்திருந்தது.

 

இப்போது முன்று வேறுபட்ட போக்குகள் உருவாகியிருந்தன.

 

1. சுந்தரம் சார்ந்தோர் முன்வைத்த கருத்தைக்கொண்ட பிரபாகரனுக்கு எதிரான குழுவினர்.

 

2. மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்று நான் முன்வைத்த கருத்து.

 

3. பிரபாகரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய உறுபினர்கள் பலரைக் கொண்ட குழு.

 

மனோமாஸ்டர், மாத்தையா, குமரப்பா போன்ற பலர் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்தாலும், மக்கள் வேலைகளை முன்னெடுப்பதிலிருந்தே புலிகளில் உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தையே முன்வைத்தனர். இவை குறித்து பிரபாகரன் இலங்கைக்கு வருவதற்கு முன்பதாக நாம் விவாதிக்கிறோம்.

 

இறுதியாக நான் ஒரு சமரச முன்மொழிவை முன்வைக்கிறேன்.

 

1. இப்போதுள்ள மத்திய குழுவிற்குப் பதிலாக செயற்குழு ஒன்றைத் தெரிவு செய்தல்
(செயற்குழுவில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் அரச படைகளால் தேடப்படாத வெளிப்படையான மக்கள் வேலைகளை முன்னெடுக்கும் தகமையுடையவர்களாக அமைய வேண்டும் என்று கோரப்பட்டது.)

 

2. மக்களமைப்புக்களை உருவாக்கும் வேலைமுறைகளை ஆரம்பித்தல்.

 

3. அரசியல் தத்துவார்த்தப் பத்திரிகை ஒன்றை வெளியிடுதல்.

 

4. அப்பத்திரிகைக்கான பெயர் ஒன்றைத் தெரிவுசெய்தல்.

 

5. தனிநபர் படுகொலைகளையும் இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளையும் மக்கள் அமைப்புப் பலம் பெறும் வரையில் தற்காலிகமாக நிறுத்திவைத்தல்.

 

6. பொலீசாரால் தேடப்படுகின்ற அனைவரும் இந்தியா சென்று அங்கு மார்க்சிய கல்விகளில் ஈடுபடுதலும் முற்போக்கு அமைப்புகளோடு தொடர்புகளைப் பேணிகொள்ளலும்.

 

இந்த முன்மொழிவு எமது இயக்கத்திலிருந்த மூன்று வேறுபட்ட போக்குகளுக்கு இடையேயான சமரசமாகவும் அமைந்திருந்தது.

 

இங்கு பற்குணம், மைக்கல் கொலைகள் குறித்த விவாதங்களையும், பிரபாகரன் என்ற தனி நபர் குறித்த பிரச்சனைகளையும் இரண்டாவது பட்சமானதாகவும் மேற்குறித்த ஆறு அம்சங்களையும் முதன்மையானதாகவும் கொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது உறுப்பினர்களை நோக்கிய எனது கோரிக்கையாக அமைந்தது.

 

சுந்தரம் முதலில் இதற்கு உடன்படவில்லை. தலைமையை மாற்ற வேண்டும் என்பதே பிரதானமானது என வாதிக்கிறார். பெரும்பாலானவர்கள் எனது திட்டத்தை ஏற்றுக்கொள்ள சுந்தரமும் அவர் சார்ந்த கருத்தை உடையவர்களும் தவிர்க்கவியலாதவாறு திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

 

இதே வேளை உமாமகேஸ்வரன் குறித்த பிரச்சனைகளுக்குப் பின்னர் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்குகள் அதிகரிக்கின்றன. பிரபகரன் யாரையும் நம்புவதில்லை. தனது கட்டுப்பாடுகளை உறுப்பினர்களை நோக்கி இறுக்கப்படுத்துகிறார். அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேலுடன் லண்டன் திரும்பிச் சென்றுவிடுகிறார். பிரபாகரனுடன் தங்கியிருந்த ரவி பாலா போன்றோர் அவரது சர்வாதிகாரப் போக்கால் அதிர்ப்தி அடைகின்றனர். தலைமைக்கு எதிராகக் கேள்வி கேட்கக் கூடாது என ரவி சில தடவைகள் தம்பியால் எச்சரிக்கப்படுகிறார்.

 

r2.jpg

நான் இயக்கத்தில் உருவான பிரச்சனைகள், எனது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஏனைய போராளிகளின் உணர்வலைகள் ஆகியவற்றைக் குறித்து விபரிக்கிறேன். பிரபாகரனை நூல்களை வாசித்துத் தர்க்கரீதியாகச் சிந்திக்குமாறு கோருகிறேன். நாங்கள் வரித்துக்கொண்ட வழிமுறை தவறானது நீண்டகால நோக்கில் அழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பது பற்றியும் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறேன். இறுதியாக எனது முன்மொழிவுகளையும் விபரிக்கிறேன். பிரபாகரன் எதுவும் பேசவில்லை. ஆனால் மறுக்கவும் இல்லை. இந்த உரையாடல்கள் நடைபெற்ற குமணன் வீட்டில் எங்களோடு ராகவனும் இருந்தார்.

 

புத்தகங்களை வாசிப்பதும் அரசியல் பிரச்சனைகள் குறித்த அறிவுத்தேடல் அவசியமானதாகவும் காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில் நாம் மார்க்சிய நூல்களை வாசிப்பது வழமை. நாம் பேசிக்கொண்டிருக்கும் போது ராகவன் ஒரு மார்க்சிய நூலை வாசித்துக்கொண்டிருந்தார். பிரபாகரன் திடீரென எழுந்து அந்தப் புத்தகத்தை ராகவனின் கைகளிலிருந்து பறித்து தூரே வீசிவிட்டு "இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆயுதங்களைக் களட்டிப் பூட்டக் கற்றுக்கொள்ளுங்கள் " என்று சொல்கிறார்.

01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

 

08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)

 

09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து

 

11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

 

12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

 

13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

 

14.பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

 

15.உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

 

16.கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16)

 

17.நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 17)

 

http://inioru.com

Last Updated on Sunday, 06 June 2010 19:12