சில நாட்களாக பதிவுலகம், இரண்டாகப் பிளவுண்டு கிடக்கின்றது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். எதிரிகள் நண்பர்களாகின்றனர். எதிரிக்கு எதிராக புதிய கூட்டுகள். ஆம் ஆணாதிக்கம், பார்ப்பனியம், சாதியம் முதல் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் கூட்டமெல்லாம் ஒன்றாக பதிவுலகில் காட்சியளிக்கின்றது.

இப்படி சமூகத்தின் நேரெதிரான இரண்டு போக்குக்குள் உட்பட்டு,  பதிவுலகம் புதிதாக தன்னை மீள் கட்டமைக்கின்றது. புதிய அரசியல் அணிச்சேர்க்கைகள் உருவாகின்றது. இந்தளவுக்கும் அடிப்படையாக இருந்தது பதிவுத்தளத்தில் இயங்கிய பெண்கள் மேல் ஏவிய, ஆணாதிக்கத்தை வினவுதளம் அம்பலம் செய்ததுதான் காரணமாக இருந்தது.

பெண்கள் மேலான பாலியல் ஆணாதிக்க இழிவாடல்கள் மூலம், பெண்ணின் எழுத்தையும் அவளின் செயல்பாட்டையும் தடுக்க முனைந்த போக்கை வினவு தளம் அம்பலமாக்கியது. இதை முன்னின்று செய்தவர்கள் பார்ப்பனிய சாதி வெறியர்களாக இருந்தும், சமூக மேலாதிக்க பொதுக் கண்ணோட்டத்துடன் இணைந்து வெளிப்பட்டு கொண்டதும், இதை மேலும் அணிசேர்த்தது. இதனுடன் வினவின் அனைத்து எதிரிகளும் ஒன்றாகக் கூடினர். "மார்க்சியம்" பேசும் அரை லும்பன்களும், லும்பன்கூட்டாக கூடியுள்ள முழு லும்பன்களும் கூட களத்தில் கசமுச பேசியபடி அவசரமாக இறங்கினர்.

இப்படி வர்க்கப் போராட்டம் பதிவுலகில் சூடுபிடித்தது. ஆணாதிக்கத்துக்கும் பெண்ணியத்துக்குமான போராட்டமாக அது நடக்கின்றது. பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் எதிரான போராட்டமாக அது நடக்கின்றது.

இதில் லீனா சார்பு லும்பன்கள் வினவுக்கு எதிராக இறங்கி கும்மியடிக்கின்றனர். லீனா ஒரு பெண் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, அதை பெண்ணியம் என்கின்றது. இப்படி அரசியல் அணி சேர்கின்றது. ஆணாதிக்கத்துக்கு எதிரான லீனாவின் பெண்ணியம் , எப்படி பெண் விடுதலைக்காக வழிகாட்டுகின்றது என்பதை இவர்கள் முன்வைப்பதில்லை. பெண் ஆகவே பெண்ணியம். இது ஆணாதிக்க லும்பன் தனத்தை, பெண்ணியத்தின் பெயரில் முன்வைத்து, இது தன்னை முனைப்பாக்குவதையே பெண்ணியமாக கூறும் அரைகுறைகளும்,  கன்னை பிரித்துக்கொண்டு வினவுக்கு எதிராக அலை மோதுகின்றனர். வினவுவை தாக்க காத்திருந்த எதிரிகள் எல்லாம், பந்தி போட்டுக்கொண்டு அம்மணமாக உட்கார்ந்து மேய்கின்றனர்.

இந்தளவுக்கும் வினவு தளம் செய்தது என்ன?

1.பெண் எழுத்தாளர்களை இழிவாடிய ஆணாதிக்க எழுத்தாளர்களை அம்பலமாக்கியது தான். இதுதான் அவர்கள் செய்த ”குற்றமாக” இருந்தது. இதை செய்யக் கூடாத அறமாக முன்னிறுத்தி, ஆணாதிக்க கூட்டமே அலைபாய்கின்றது.

2.இதன் மேல் இந்தக் கட்டுரைக்காக மற்றொருவரிடம் பெற்ற தரவுகளில் இருந்து அதை வெளியிட்டதை குற்றமாக்குகின்றது. தரவைத் தந்தவரின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி, ஆணாதிக்கத்துக்கு எதிரான விவாதத்தை பார்ப்பனிய குள்ளநரித்தனத்துடன் களத்தில் எதிர்த்து வசைபாடுகின்றனர்.

ஆணாதிக்கத்தை பாதுகாக்க, மற்றவர் தந்த தரவு பற்றிய உரிமை குறிப்பிடவில்லை என்கின்றனர். வேடிக்கை என்ன வென்றால் குறிப்பைக் கொடுத்தவர், அது வினவுவின் கட்டுரையாக கூறுவதுடன், தன் உரிமை பற்றி எந்த ஆட்சேபனையையும் வினவுக்கு எதிராக எழுப்பவில்லை என்பதுதான். இப்படியிருக்க ஆணாதிக்க அணி, அதற்கு கொள்கை விளக்கம் வழங்கி, அதில் கும்மியடிப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான விடையத்தை திசைதிருப்புகின்றனர்.

தரவுகளை கட்டுரைக்காக வழங்கியவர், வினவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வினவு மதிக்கின்றது. இதில் யாரின் அறிவையும், வினவு திருடவில்லை. வினவுக்கு எழுதும்   ஆற்றல் இல்லை என்று சொல்லும் மக்குகள் வரை, பதிவுகளில் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. வினவு தன்னை ஒரு குழுவாகத்தான் அறிமுகம் செய்கின்றது. கூட்டு உழைப்புத் தான், வினவுவின் ஆதாரமாகும். இதில் தரவுகளை கொடுத்தவரும் பங்காற்றுகின்றார். இதைக் குறிப்பிட வேண்டும் என்பது கேலிக்குரியது.

தரவுகளைக் கொடுத்தவர் தன் பதிவுலக நண்பனுடன் கூட்டாக சேர்ந்து இயங்கியதுடன், தனது மின்னஞ்சலை பார்க்கும் உரிமையை வழங்கியிருந்தார். இதைப் பயன்படுத்தி, வினவுடன் இருந்த தொடர்பை ஆணாதிக்க கொசுறுகள் திருடி அதை வைத்து கும்மியடிக்கின்றனர். இங்கு திருடிய  நட்புத் தான் அம்மணமாகின்றது. கருத்துச் சுதந்திரம், விமர்சன சுதந்திரம் நட்பைக் கடந்தது. இது கட்டுரைத் தகவலாரின் நிலை. இப்படிக் கட்டுரைக்கான தகவல் கொடுத்த விடையம் நட்பின் மூலம் திருடப்பட, மறுபக்கத்தில் வினவு தளம் தகவல் கொடுத்தவருடன் கொண்ட நேர்மையான உடன்பாட்டில் அதை சொல்ல மறுத்தது. இது மிகச் சரியானது.

ஆளும் வர்க்கங்கள் தங்களுக்கு எதிரான பத்திரிகையாளரிடம் அல்லது மற்றொருவரிடம் யார் தகவல் தந்தது என்று விசாரணைகளையும், சித்திரவதைகளையம் செய்வது, உலகளவில் நிகழ்கின்றது. அதைச் சொல்ல மறுப்பதும், அவரின் கடமை. இதுதான் அவரின் (அரசியல்) நேர்மை. இதை வினவு செய்தது என்பது, அதன் நேர்மையையும் அதன் போர்க்குணாம்சத்தையும் காட்டுகின்றது.

அடுத்து சிலர் யாரிடம் பெற்றும், இதை இதை எழுத முடியுமா? என்கின்றனர். ஆம் முடியும். சிங்கள அரசின் இனப்படுகொலைகள் ஆவணத்தை அரசுடன் இருக்கும் எந்த (முரண்பட்ட) பிரிவு தந்தாலும், நிச்சயமாக நாம் அவற்றை வழங்கியோரை வெளிக்காட்டது அதை பகிரங்கமாக கொண்டு வருவோம். இதுபோன்றது தான் இதுவும்.

சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு எதிராக போராடுவது என்பது பலரால் முடிவதில்லை. இப்படி எண்ணினாலும், அதற்கு வசதியிருப்பதில்லை. சிலர் சமரசமின்றி மக்களுக்காக போராடுபவர்களை அணுகுகின்றனர். இந்த வகையில் வினவுவை தெரிவு செய்தது, ஆணாதிக்கத்துக்கு எதிராக தகவல் கொடுத்தவரின் சரியான ஒரு தெரிவாக இருந்தது. இதற்கு வெளியில், வினவுக்கு எதிராக ஆணாதிக்க கும்மியடிக்கும் கூட்டமா இதை எதிர்த்துப் போராடியிருக்கும்!? சொல்லுங்கள்!. இல்லை.

இதனால் தான் தகவல் கொடுத்தவர் பெரிய தன் பதிவுலக நட்புவட்டத்தைக் கடந்து, வினவுவை தெரிவு செய்தார். பதிவுலக பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க, தகவல் வழங்கியவர் வினவை தேர்ந்தெடுத்தார். அதற்கான தகவல்களைக் கொடுத்து, தன்னை வெளிப்படுத்தாது இருக்கும் அவரின் உரிமையை கோரினார். இதைத் தந்தவரை சொல்லாது இருக்கும் தார்மீக உரிமை, வினவுக்கு இருந்தது. இதுதான் இதில் அறம்;. தந்தவரை குறிப்பிடு என்று கோருவது அல்ல விவாதம்.

உதாரணமாக இலங்கை பேரினவாத அரசு செய்த படுகொலைகளைப் பற்றி வீடியோ காட்சியை யார் தந்தவர் என்று கோரும், மகிந்த பாசிசம் போன்றதுதான் இதுவும். பேரினவாதம் அதை புலன் விசாரணை செய்கின்றது. போர்க்குற்றத்தை அம்பலமாக்கிய அந்தத் ”துரோகி” யார் என்று தேடுகின்றது. இங்கு யார் இந்த ஆணாதிக்கத்தை அம்பலமாக்கிய ”துரோகி” என்று, ஆணாதிக்கக் கழிசடைகள் தேடிப்பிடித்து, அதற்குள் கும்மியடிக்கின்றது. இப்படி ஆணாதிக்க கூட்டமும், வினவுவின் எதிரிகளும் ஒன்றாக கூடி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அணி திரண்டு நிற்கின்றது. பதிவுலகில் வினவுக்கு எதிரான ஆணாதிக்கமாக பிளவுற்று நிற்கின்றது. ஆணாதிக்கத்தை எதிர்க்கும் போராட்டத்தில், வினவு தளம் தன்னை சமரசமின்றி வெளிப்படுத்தி நிற்கின்றது.

பி.இரயாகரன்
03.06.2010