மே18 இயக்க பிரமுகர் ரகுமான் ஜான் அவர்கள் ஏதோ ஒரு நல்ல விடயம் எழுதி இருப்பார் என நேரம் மினக்கெட்டு, அவரின் நட்பு இணையங்களில் வெளிவந்துள்ள அவரது உரையை வாசித்தால், "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" எண்ட  கதை தான் நினைவுக்கு வருகுது. நான் சொல்லவருவது ஜான்மாஸ்டர் அவர்கள் ஆற்றிய புலிகள் மாண்டு போன ஒருவருட நினைவுப்பேருரையைப் பற்றித்தான். மாஸ்டர் அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டம்: ஒரு மீளாய்வை நோக்கி… என்ற தலைப்பில் ரொறொன்ரோ நகரில் மே 18 இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நினைவுப்பேருரையை ஆற்றினார்.

தமிழின காவலன் கலைஞர் கருணாநிதி உரையாற்றுவது போல, கல்தோன்றி புல்தோன்றா    காலத்தில்; பொல்லோடு முன் தோன்றிய முதல் குடியாம் தமிழ்குடியின் வரலாறெல்லாம் சொன்ன பின்பு "ஆதலால் மே 18 ஒரு முற்றுப் புள்ளியாக கருதாமல், தரிப்புக் குறியாக மாற்றுவோம்" என வேண்டுகோள் விடுத்து, தனது உரையை முடித்து கொள்கிறார்.

 

அவரது உரையை வாசிக்க முன் மூன்று நிலைகளில் அவர் தனது கருத்தை முன் வைப்பார் என எனது எதிர்பார்ப்பு இருந்தது. அவையாவன


1. அவரது சுயவிமர்சனம்
2. அவர் இயங்கிய, இயக்கிய இயக்கங்கள் மீதான நேர்மையான விமர்சனம்
3. தற்போது அவர் தலைமை தாங்கும் மே18 இயக்கத்தின் அரசியல் பிரகடனம்

ஆனால் அவர் அப்படியான ஒரு தவறையும் செய்யவில்லை. அவரது தற்போதைய நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ற வண்ணம், தந்திரோபாயத்தனத்தை காட்டியபடி, தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

 

அவர் தமிழ் அரசியல்கட்சிகள்; இயக்கங்கள் பற்றி விமர்சித்தாலும் அவை அனைத்தும் மேலோட்டமானதே. அவர் சொல்லும் பழைய வரலாற்றுப் பகுதியை விட்டுவிட்டு, பின்னான விடுதலை  இயக்கங்கள் பற்றி சொல்லுவதை மூன்றாக பிரிக்கலாம்.    
 
1. புலிகள்:

"விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்த விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதி அறவே அற்றதாக இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி போராட்ட சக்திகளை ஜக்கியப்படுத்தி எதிரியை தனிமைப் படுத்துவதற்குப் பதிலாக, தன்னை தனிமைப்படுத்தி எதிரிகளை ஜக்கியப்படுத்தும் வேலையை செய்து முடித்தது. அமைப்பினுள் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்வு காண்பதற்கு கடைசி வரையில் வழிமுறைகளை அறியாதவர்களாகவே இருந்தனர். இறுதியில் உண்மையான போராட்ட சக்திகளை புறம் தள்ளி, வியாபாரிகளும், வஞ்சகப் புகழ்ச்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்தார்கள். அமைப்பானது ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் தனது ஆன்மாவை ஏற்கனவே கொன்று போட்டிருந்தது. அமைப்பின் தலைமை உற்பட அனைத்து மட்டங்களுமே போர்க்குணாம்சத்தை படிப்படியாக இழந்து போயினர். இதற்கு மேல் அவர்களது அழிவு தானாகவே வந்தது. உள்ளூர கோரையாய் போயிருந்து ஒரு செத்துப் போன அமைப்பை தள்ளி விழுத்தவே ஒரு சக்தி தேவைப்பட்டது . அது கடைசி யுத்தமாக அமைந்திருந்தது."

என்று கூறுவதுடன் தனது விமர்சனத்தை நிறுத்திக் கொள்ளும் மாஸ்டர் அவர்கள், புலிகள் முப்பது வருடத்திற்கும் மேலாக நடத்திய அரசியல் அடாவடித்தனங்கள், கொலைகள், தரகுபார்த்தல், மக்கள் மீதான குரூர ஒடுக்குமுறைகள், சிறுவர்கள், பெண்கள் மீதான வன்முறைகள், போன்றவற்றை முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போல், அதுவும் ஒரு கவளம் சோற்றில் புதைப்பது போல்; லாவகமாக தனது நழுவல் தொழிலை பார்க்கிறார்.

 

மாஸ்டர் அவர்களின் சந்தர்ப்பவாதமானது, புலிகளை பாசிஸ்டுக்கள் என வரையறுக்கக் கூட அவருக்கு தடையாக உள்ளது. ஏனெனில் அவரும்; அவரது மே 18 இயக்கமும், இன்று பழைய புலிகளையே நம்பி உள்ளனர். அதனால் தன் உரையில் புலிகளின் எச்சசொச்சங்களை தேசபக்தசக்திகள் என வரையறுக்கும் மாஸ்டர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்    ".. இந்த தேசபக்தசக்திகள் ஒரு காத்திரமான கூறாக திகழ்வது தவிர்க்க முடியாததாகிறது. ஏனெனில் கடந்த இருபது வருடங்களாக புலிகள் அமைப்பினர் மாத்திரமே தொடர்ச்சியான ஒரு சக்தியாக இயங்கியிருக்கிறார்கள். ....... எதிர்காலத்தில் அமையப்போகும் எந்தவொரு மாற்றம் பற்றிய பிரச்சனையிலும் இவர்கள் ஒரு தவிர்க்க முடியாத, ஊக்கமான கூறாக அமையவிருப்பதால் எமது உரையாடல்கள் அவர்களுடனும் நடைபெற்றாக வேண்டியுள்ளது."

 

இவ்வாறு போராட்டத்தை மீள்மதிப்பீடு செய்வதாக சொல்லும் மாஸ்டர் அவர்கள்,   "எவருமே புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட உண்மையான தேசபக்த சக்திகளை ஒரு போதும் நிராகரித்துவிட முடியாது."........ என்று முத்தாய்ப்பு வைத்தபடி,  எச்சசொச்சபுலியின் முதுகில் சவாரி செய்து தேசிய பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்று கனவு காண்கிறார் என்பது தெரிகிறது.

 

மேலும்  "இன்று புலிகளது புலம்பெயர் தலைமையானது உண்மையில் ஒரு வியாபாரக் கூட்டத்திடம் சிக்கியுள்ளது. ."  என கூறும் மாஸ்டர் அவர்கள்; புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு தேசியப்பரிவட்டம் கட்டுகிறார்.

 

இன்று புலிகளே இரண்டுபட்டு, நெடியவன் அணி, உருத்திரகுமார் அணி என பிரிந்து நிற்கின்றார்கள். இவர்களின் இழுபறி தங்களின் இருப்பை தக்கவைப்பதும், ஜந்து பில்லியன் டொலருக்கும் அதிகமான புலிகளின் சொத்துகளை அபகரிப்பதுமே. இதன் அடிப்படையிலேயே காட்டிக்கொடுப்புகள், உள் குத்தாக புலம் பெயர் பினாமிகளுக்குள் நடைபெறுகிறது. கே.பி காட்டிக்கொடுக்கப்பட்டதிலிருந்து, இன்று யேர்மனியில் நடக்கும் காட்டிக்கொடுப்புகள் இதற்கு நல்ல உதாரணம்.

 

அப்படியல்லாமல் இவர் சொல்வதுபோல் பரிசுத்தமான முற்போக்குத்தேசியம் சார்ந்த  "புலிகளது புலம்பெயர் தலைமை" ஒன்று இருக்குமானால் அதை மாஸ்டர் அவர்கள்,  அவர்கள் யாரென மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.  

 

2. ஏனைய இயக்கங்கள்

 

அடுத்ததாக மாஸ்டர் அவர்கள் ஏனைய இயக்கங்களை பற்றி சிலாகிக்கிறார். அப்போதும்; புலிகளையே  ஏனைய இயக்கங்களை விட புனிதமானதாக காட்ட முயல்கின்றார். அதை இவ்வாறு நியாயப்படுத்துகிறார் .

"ஈபிஆர்எல்எப் அமைப்பு நடத்திய அடாவடித்தனங்களும், பிள்ளை பிடிப்பதை முதன்முதலாக எமது போராட்டத்தில் ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் தான். இந்த உண்மைகளது அடுத்த இருபது வருட வளர்ச்சியை கற்பனை செய்து பார்த்தால், அதுவொன்றும் முள்ளிவாய்க்கால் அவலங்களைவிட வேறுபட்ட விதமாக அமைந்திராது என்பது தெளிவானது." 

 

இவ்வாறு அவர் கூறுவதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லாவிடினும், மாஸ்டர் அவர்கள் புலிகளின் தவறுகளை மூடிமறைப்பதற்கும், மலினப்படுத்துவதற்கும் எந்தவகையான திருகுதாளங்களை பயன்படுத்துகிறார் என்பதற்கு மேற்கண்ட வசனங்களைப் பாவிக்கும் முறை ஓர் உதாரணம். மாஸ்டர் அவர்கள் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட வரலாறு காணாத அழிவை இந்தியக் கைக்கூலிகள் நடத்திய  அடாவடித்தனங்களுடன் ஒப்பிடுவதன் மூலம், புலிகளின் தவறுகளை இங்கு மலினப்படுத்துகிறார். இவர் புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களுடன் சேர்த்திருந்தால், கிட்லரின் பிரசாரப்பீரங்கி கோயோபல்சை விட அரசியல் உலகில் புகழ் பெற்றிருப்பார்.

 

தொடரந்;து தன் உரையில்  "கழகத்தினுள் நடந்த வதைமுகாமும், முற்போக்கு, ஜனநாயக சக்திகளை திட்டமிட்ட முறையில் அழித்து ஒழித்தமையும்" என்று ஒற்றைவரியில் புளொட் சம்பந்தமான தன் விமர்சனத்தை வைப்பதன் மூலம், மாஸ்டர் அவர்கள் முன்னாள்  புளொட் உறுப்பினர் என்ற அளவில் காரசாரமான, புளொட் பற்றிய நியாயமான விமர்சனத்தை அவரிடம் எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளார். சிலமாதங்களாக மே18 உறுப்பினர்கள் இலங்கையில் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டுடன் உறவாடுவதாக கதைகள் உலாவுகின்றன. மேற்படி, ஜான் மாஸ்டரின் புளொட் மீதான ஒற்றைவரி விமர்சனத்தை பார்க்கும் போது வதந்திகள் உண்மைதானோ எண்ணத் தோன்றுகிறது.

 

3. இடதுசாரி இயங்குசக்திகள் 

 

இவ்வாறு, மீளாய்வு செய்கிறேன் என்று சந்தர்ப்பவாத நுனிப்புல் மேயும் ஜான் அவர்கள்; இடதுசாரி இயங்கு சக்திகளை பற்றி பேசும் போது மட்டும், காரசாரமாக சொற்களைத் தொடுக்கிறார்.

 

"இன்று மாற்று பற்றி பேச முனையும் சக்திகளைப் பார்த்து சில குழுக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஒன்றில் இவர்கள் புலிகளது உளவாளிகளாக இருக்க வேண்டும் அல்லது இவர்கள் புலிகளது எதிரிகளாக இருக்க வேண்டும். இது ஜோர்ஜ் புஷ் முன்வைத்த ‘‘Either you are with us or aginst us. "எங்களுடன் சேர்ந்திரு இல்லையேல் நீ எமக்கு எதிர்"  என்ற அதே பல்லவிதான். இதைத்தான் ஏகப்பிரதிநிதித்துவம் பேசிய புலிகளும் முன்வைத்தார்கள். இப்போது ஒரு கூட்டம் புலிகளை வாய்நிறைய திட்டிக் கொண்டே அதே கூற்றை முன்மொழிகிறார்கள். அதிலும் வேடிக்கையானது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரே குழுவைப் பார்த்து இந்த இரண்டு விதமான விமர்சனங்களையும் வௌ;வேறு குழுக்கள் ஒரே சமயத்தில் முன்வைப்பதுதான்! விடுதலைப் புலிகள் என்பது வரலாற்றில் முடிந்த போன ஒரு அத்தியாயம். யார் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அதுதான் உண்மையானது. இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால் இன்றுள்ள இடர்களில் இருந்து ஒரு தேசம் எவ்வாறு தன்னை மீட்டுக் கொள்ளப் போகிறது என்பதுதான். அந்த நிலையில் தேவைப்படுவது திறந்த, வெளிப்படையான, விஞ்ஞானபூர்வமான விவாதங்கள், மீள்மதிப்பீடுகள், கருத்தாடல்கள் மட்டுமே. இதனை முகம் கொடுக்க முடியாத அல்லது விரும்பாத சக்திகள் தாம் இப்படிப்பட்ட அற்பத்தனமான விடயங்களாக இதனை சுருக்கிவிட முனைகிறார்கள். இவர்கள் புலிகளை திட்டினால் மாத்திரம் போதாது. அவர்களது ஏகபோக அரசியலில் இருந்து முறித்துக் கொள்ளவும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் தேசத்திற்கு இப்போது அவசரமாக தேவைப்படுவது. அப்படிச் செய்யாத விமர்சனங்கள் எல்லாம் விரும்பியோ விரும்பாமலோ, அல்லது தெரிந்தோ தெரியாமலோ புலிகளை மீளக்கட்டமைக்கும் பணியைத்தான் செய்வதாக அர்த்தப்படும்." 

 

அதாவது கொலைகார புளொட் பற்றி ஒரு வரி விமர்சனம், புலிகளை நியாயப்படுத்துதல் என தமது நினைவுரையை நிகழ்த்திய ஜான்மாஸ்டர் இடதுசாரி இயங்குசக்திகளை மட்டும், வெகு சொகுசாக  "விஞ்ஞானபூர்வமான விவாதங்கள், மீள்மதிப்பீடுகள், கருத்தாடல்கள்" போன்ற சொல்லாடல்களை அள்ளிவீசி அங்கலாய்க்கிறார். புலிகளின் தொடர்ச்சிதான் மே18 எனப் பிரகடனம் செய்யும் மாஸ்டர் அவர்கள்,   "தெரிந்தோ தெரியாமலோ புலிகளை மீளக்கட்டமைக்கும் பணியை செய்வதாக"  இடதுசாரி இயங்குசக்திகள் மீது குற்றம் சுமத்துகிறார்.  இதுவரை இடதுசாரி இயங்குசக்திகள் முன்வைத்த எந்த விமர்சனத்துக்கும் பதிலளிக்காத ஜான்மாஸ்டர் அவர்கள், இங்கு முக்கி, முனகி, நசுக்கி, நழுவி அவதூறுகளை அள்ளிவாரி இறைக்கிறார். காய்க்கிறமரம் தான் கல்லெறிபடும் என்பது போல, ஜானின் இந்த சலசலப்புகெல்லாம், இடதுசாரி இயங்குசக்திகள் மசியப் போகிறவர்களல்ல.

 

என்னைப்பொறுத்தளவில் இவ் உரை மூலம் மாஸ்டர் அவர்கள்; "அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது  போல அவர் மக்களை நம்பியோ அல்லது முற்போக்கு இடதுசக்திகளை நம்பியோ தானும் தன் இயக்கமும் இல்லை என்ற உண்மையை வெளியிட்டு தன்னை தானே அம்பலப்படுத்துகிறார்.

 

நான் ஆரம்பத்தில் இதனால் தான் "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" என்று கூறினேன். தனது கடந்தகால அரசியல் நடத்தைகள் பற்றி நேர்மையாக சுயவிமர்சனம் செய்யத் துணிவில்லாத ஒருவரிடம் எப்படி ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய சரியான, நேர்மையான மீளாய்வு சார்ந்த விமர்சனத்தை எதிர்பார்க்க முடியும்?!!!!!!