நான்காவது அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு அங்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட கழகம் மார்க்சிய முன்நோக்கு இதழ் 2 ஊடாக சமர் வைத்த மூன்றாவது பாதைக்கான திட்டத்தை விமர்சிக்க முற்பட்டுள்ளனர். சர்வதேச தொழிலாள வர்க்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரொக்சிய சஞ்சிகை என பெருமையாக அறிவிக்கும் இவர்கள் தாமாகவே ஒத்துக்கொள்கின்றனர் மார்க்சியத்திலிருந்து வேறுபட்டதே ரொக்சியம் என்பதை.

ரொக்சியம் என்பது லெனினியம் அல்ல. லெனினியம் மார்க்சியம். மார்க்ஸ், ஏங்கல்ஸ் எடுத்தியம்பிய மார்க்சிய கோட்பாடுகளை லெனின் ஏற்றுக்கொண்டு அதை விரிவுபடுத்தினார்  ஆனால் ரொக்சியம் எப்போதும் லெனினியத்தை ஏற்றது கிடையாது. மாறாக லெனினுடன் தம்மை சமப்படுத்தி இரண்டு தனியான தத்துவங்கள் என இனம் காட்டிவருகின்றனர். சமர் முன்வைத்த மூன்றாவது பாதைக்கான திட்டத்தை விமர்சித்த ரொக்சியவாதிகள் மார்க்ஸ், ஏங்கல்ஸ் முன்வைத்த தேசிய சுயநிர்ணய கோட்பாட்டை நிராகரித்துமுள்ளனர். அதற்கு மாறாக ரொக்ஸ்சியின் சுயநிர்ணய உரிமை பற்றிய கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துள்ளனர். 

 

1908-1909களில் ரோசா லக்சம்பேர்க் முன்வைத்த சுயநிர்ணயஉரிமை பற்றிய விளக்கத்தை ரொஸ்கி ஏற்றுக்கொண்டு அதற்காகவே லெனினிசத்துக்கு (போல்சுவிக்கு) எதிராக போராடினார். அதே கருத்தையே இன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்து மார்க்சியத்துக்கு எதிராக ரொக்சியத்தை உயர்த்திப் பிடித்துள்ளனர்.  எமது திட்டம் முதலாளித்துவ திட்டமெனவும், மென்ஸிவிக்குகளின் திட்டம் எனவும் கட்டுரையில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். மென்சுவிக்குகளின் அழிவுக்கு சற்று முன்புவரை கூட ரொஸ்கி மென்சிவிக்குகளுடன் இருந்ததுடன், கட்சி மென்சுவிக்குகள், போல்சுவிக்குகள் என பிரிந்தபோது ரொஸ்கி மென்சிவிக்குகள் பக்கம் உறுதியாக ஆதரித்து நின்றார்.

 

எமது மூன்றாவது பாதைக்கான திட்டம் முதலாளித்துவ நோக்கை பிரதிபலிக்கின்றதா என நாம் திட்டத்தின் மேல் ஆராய்வோம். இனி இவைகளை நாம் கட்டுரைகள் மீது பார்ப்போம். நாம் இக் கட்டுரையில் லெனினின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கட்டுரையில் இருந்து பல விளக்கங்களை இக்கட்டுரையில் எடுத்து கையாள்கிறோம். தேசிய இனங்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீரிப்பது முதலாளித்துவ கோரிக்கையே என ரோசா லக்சம்பேர்க், ரொஸ்கி..... போன்றோர் விமர்சித்த போது லெனின் இவர்களின் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்தியதே இப்புத்தகம்.  

 

ஓரு தேசிய இனம் பெரும் தேசிய இனத்தால் அடக்கப்பட்டு மீளமுடியாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் போது ஒரு பாட்டாளியின் கடமை என்ன? ஒடுக்கப்படும் தேசியம் பிரிந்துபோவதை ஒடுக்கும் தேசியஇனப் பாட்டாளிகள் அங்கீகரித்து அதற்கான பிரச்சாரம் செய்ய தயாரற்ற எந்த சக்தியும் ஒடுக்கும் அரசுக்கும் துணைபோகின்றனர். ஒடுக்கும் இன பாட்டாளிகள் ஒடுக்கப்படும் இனம் தேசிய இனம் பிரிந்து போவதை பிரச்சாரம் செய்யின் ஒடுக்கப்படும் பாட்டாளிகள் ஜக்கியத்துக்கான பிரச்சாரம் செய்யவேண்டும். பிரிவினையை ஏற்காதபோது ஜக்கியத்தைக் கோரமுடியாது. பிரிவினையை ஏற்கின்றபோது தான் ஜக்கியம் அதிக வலிமையானது. ஒரு குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஜக்கியம் உண்மையாக இருக்கவேண்டுமாயின் பிரினையை ஏற்கவேண்டும். பிரிவினையை ஏற்காத ஜக்கியம் ஜனநாயகம் அற்றது. அக்குடும்பத்தில் பிரிவு எப்பொழுது சாத்தியமாகிறது என்றால் தன்னால் அக்குடும்பத்தில் வாழமுடியாதென்றபோதே. இங்கு நல்லநோக்கிலும் இருக்கலாம். கூடாத நோக்கிலும் இருக்கலாம். ஆனால் இது எதுவாயிருந்தாலும் கட்டாயப்படுத்திய ஜக்கியம் போலியானது. இங்கு பிரிந்த பின்பு ஜக்கியப்படலாம். இதை வாழ்வில் யதார்த்தமாக காண்கிறோம். இது ரொஸ்க்கிகளுக்கு புரிய நியாயம் இல்லைத்தான்.

 

இரண்டாவது மகா யுத்தத்துக்குப் பினனர் உருவான அனைத்து விடுதலை இயக்கங்களும் சர்வதேசரீதியாக இன்று ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கைக்கூலியாக மாறியிருக்கும் நிகழ்வுப்போக்கின் ஒரு பகுதியாகும் என ரொக்சியவாதிகள் கூறுகின்றனர். இரண்டாவது மகாயுத்தத்தின் பின் தேசிய இன ஒடுக்டுமுறை எந்த வடிவிலும் இல்லாமல் போய்விடவில்லை மாறாக தீவிரப்பட்டுள்ளது. இரண்டாம் மகா யுத்தத்தின் முன் எப்படி தேசிய இன முரண்பாடு காணப்பட்டதோ அதே போன்றே இன்றும் உள்ளது. சர்வதேசரீதியில் ஏகாதிபத்தியத்தின் நேரடி கைக்கூலித்தனத்தில் தேசியம் இன்று உள்ளதாம். அதனால் தேசிய விடுதலைப்போராட்டம் என்பதை பிற்போக்காக வரைவிலக்கணம் செய்கின்றனர் ரொக்சியவாதிகள். உண்மையில் இரண்டாம் உலகயுத்தத்தின் முடிவு ஏகாதிபத்தியம் சோவியத் தவிர்ந்த எல்லாத்தேசத்திலும் ஆதிக்கத்தை கொண்டிருந்தனர். பல தேசிய விடுதலைப்போராட்டத்தை தமது நலனுக்கு பயன்படுத்தினர். இங்கு தேசவிடுதலைப்போராட்டம் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்கின்றது எனின் அவர்களின் அரசியல் திட்டமே காரணம். திட்டம் காரணமாக இருக்க தேசியவிடுதலையை கைக்கூலித்தனமாது என கூறவருவது தேசங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதே.

 

இப்படியும் பார்க்கலாமே. பல கம்யூனிஸ்ட் கட்சி, ரொக்சியக் கட்சிகள்; கூட ஏகாதிபத்தியத்துக்கு சேவைசெய்கின்றனவே. அதற்காக வர்க்கப்போராட்டத்தை ஏகாதிபத்தியத்தை கைக்கூலித்தனமானது எனச் சொல்லமுடியுமா? ஒன்றை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கையாளப்படும் வாதம் அவர்களின் வர்க்கப் போராட்டத்தை சிதைத்துவிடுகின்றது. ஒரு தேசவிடுதலைப்போராட்டம் துரோகம் இழைத்தால் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்ககோருவதை என்னவென்பது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி துரோகம் இழைத்தால் வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கக் கோருவதை என்ன என்பது? இது போன்று ரொக்சியவாதிகள் மற்றும் பல தரப்பினரும் விவாதிக்க முற்படுகின்றனர் ஏன்? அவர்களின ;குட்டிபூர்சுவா நோக்கமே காரணம். தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஏகாதிபத்திய ஆதிக்கம் உளளது எனக் கூறி நிராகரிக்க முற்படும் ரொக்சிகள் பற்றி லெனின் என்ன சொல்லுகிறார் எனப் பார்ப்போம்.

 

சிறிய அரசுகள் பொருளாதார ரீதியாக பெரிய அரசுகளைச் சார்ந்திருக்கின்றன. மற்றத் தேசிய இனங்களைக் கொள்ளையிட்டு அடக்கியாளுவதற்காக பூர்சுவா அரசுகளுக்கிடையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய காலனிகளும் இருக்கின்றன வென்று அந்த தோரணையில் ரோசா லக்சம்போர்க் காவுஸ்கிதிக்குப் பாடம் சொல்லுவது தனது புத்திசாலித்தனத்தை காட்டிக்கொள்வதற்கான நகைக்கத்தக்க சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும் ஏனென்றால் இவைகளுக்கும் எடுத்துக்கொண்ட பொருளுக்கும் சிறு தொடர்பு கூட இல்லை. பணக்கார பூர்சுவா நாடுகளின் ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதனத்தின் பலத்தையே சிறு அரசுகள் மட்டுமல்லாது, உதாரணமாக ரஸ்சியாவும் கூட பொருளாதார ரீதியில் முழுக்க முழுக்க சார்ந்திருக்கின்றது. மூலதனத்தில் மார்க்;ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி சின்னஞ்சிறு பல்கன் அரசுகள் மட்டுமின்றி 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவும் கூட பொருளாதாரத் துறையில் ஜரோப்பாவின் காலனியாகத்தான் இருந்தது. எல்லா மார்க்சிசவாதிகளுக்கும் காவுஸ்கிக்கும் இது நன்கு தெரியும். ஆனால் இதற்கு தேசிய இயக்கங்கள், தேசிய அரசு ஆகிய பிரச்சனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பூர்சுவா சமுதாயத்தில் தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணயம் அவைகள் சுயேட்சையான அரசுகளாக வாழ்தல் ஆகிய பிரச்சனைக்கு பதிலாக அவைகளின் பொருளாதார சுயேச்சையும் கட்டின்மையும் பற்றிய பிரச்சனையை ரோசா லக்சம்போர்க் எடுத்துக்கொள்கிறார். லெனின். (தே.இ.சு.உ)

லெனினின் மேல் கூறிய வாதம் ரொக்சியவாதத்தை தவுடுபொடியாக்கி விடுகின்றது. அது தான் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் என ஒரு வாசகத்தை இணைத்துவிடுகின்றனர். இதன் ஊடாக லெனினிசம் மரணமடைந்து விட்டது என ஒரு பக்கம் காட்ட முனைகின்றனர். அன்றும் இன்றும் ஏகாதிபத்திய பிடிக்குள் உலக முழுவதுமே ஏதோ ஒரு வகையில் இறுக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் தேசவிடுதலை இயக்கங்களை மட்டுமன்றி கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கைக்கூலியாகப் பயன்படுத்துகின்றனர். அதற்காக தேசியவிடுதலைப்போராட்டத்தையே, வர்க்கப் போராட்டத்தையே ஒருவர் கொச்சைப்படுத்த நினைப்பின் அது ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய முனைவதே. லெனின் ஏகாதிபத்தியம் பற்றிக் கூறும் மற்றைய கூற்றைப் பார்ப்போம்.

 

ஒரு ஏகாதிபத்திய நாட்டிற்கு எதிரான தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்னொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்னும் காரணம்  கூட சமூகஜனநாயகவாதிகள் தேசங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகாரத்தை மறுக்கும்படி கட்டாயப்படுத்தாது. ஏனெனின் இதே போல் அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக்கொள்ளைக்காகவும் பல தடவை முதலாளித்துவ வர்க்கத்தினர் குடியரசு முழக்கங்களை பயன்படுத்துகிறார்கள்.
(லெனினின் நூற்திரட்டு 1)

 

ரொக்சியவாதிகள் லெனினின் மேற்கூறியவைகளை ஈழப்போராட்டத்தில் மறந்துவிடுகின்றனர். ரொக்சியம் என்பது லெனினிசத்திலிருந்து வேறுபட்டதென்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இறுதி ஆய்வுகளில் இந்தக் குணாம்சங்கள் இந்த இயக்கங்களின் அரசியலை தீர்மானிக்கவில்லை. உலக முதலாளித்துவ நெருக்கடியின் நேரடி விழைவுதான். இந்த இயக்கங்களின் தலைவிதியை தீர்மானிக்கிறன என ரொக்சிய வாதிகள் குறிப்பிடுகின்றனர். இதனூடாக சமர் வைத்தது அரசியல் வழிப்பட்ட திட்டமே என்பதை ஏற்காமல் ஏற்றுக்கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்தை அரசியல் தீர்மானிக்கவில்லையென மார்க்சியத்துக்கு எதிராக வாதிட்டுள்ளனர். ஏன் உங்கள் வாதப்படி இது தேசிய விடுதலை இயக்கத்துக்கு மட்டும் பொருந்தும். ஏன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இவை பொருந்தும் தானே. எல்லாம் அரசியலே தீர்மானிக்கின்றன. தேசிய விடுதலை இயக்கமெனினும், வர்க்கப் போராட்டமெனினும், பெண்விடுதலையெனினும் அது அரசியல் சார்ந்ததே. அரசியல் தீர்மானிப்பதில்லையென மறுக்க முனைவது மறைமுகமாக இச்சமூக அமைப்பை நிலைநிறுத்த தொழிலாளர் வர்க்கமென கோசமிட்டபடி செய்யும் ஒரு மோசடியே. உலகப் பொருளாதார நெருக்கடி தேச விடுதலைப் போராட்டங்களையும் வர்க்கப் போராட்டங்களையும் தீவிரப்படுத்தும். அதாவது உலகினை பங்குபோட்டுக் கொள்ளும் போட்டியில் சந்தைகளைக் கைப்பற்ற தீவிரமாக முனைகின்றனர். இவை ஒரு தேசத்தின் சுய உற்பத்திகளை முற்றாக அழிக்க முயல்கிறது. இவ்வழிப்பு மக்களை சுயஉற்பத்தியில் ஒன்றுதிரட்டலாக தேசியத்தை முதன்மைப்படுத்துகின்றது. இம் முதன்மைப்படுத்தலும் அதனால் எழும் போராட்டமும் சுயாதீனமாக நிலைக்கமுடியுமா? என்ற கேள்வியில் தொழிலாளர் வர்க்கம் தன்னை ஸ்தாபனப்படுத்தி ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிரான தேசிய சுய உற்பத்திக்கு சார்பான போராட்டத்தை தனதாக்க வேண்டும். இதனூடான தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்து அது ஏகாதிபத்திய கைக்கூலித்தனமானது எனக் கூறின் ஏகாதிபத்தியத்துக்கே சேவைசெய்வதாகும். 

 

அண்மைக்காலமாக பிரான்ஸ் விவசாயிகள் அமெரிக்க இறக்குமதிக்கு போராடிவருகின்றனர். இதில் பிரஞ்சு மக்களின் தேசிய உணர்வு மதிக்கப்படவேண்டும். அவர்களின் போராட்டம் ஆதரிக்கப்படவேண்டும். பிரஞ்சு விவசாயிகள் தனிச்சலுகையை கோராதவரை அது முற்போக்கானது. இவ்விவசாய இயக்கங்களின் அரசியலே பிற்போக்கு, முற்போக்கைத் தீர்மானிக்கின்றன. இவ்விவசாய இயக்கங்களின் அரசியல் தொழிலாளர் வர்க்கம் சார்ந்திருப்பின்  அத்தேசிய உணர்வு வர்க்கப்புரட்சியாக மாறுகின்றது. அமெரிக்காவின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக பிரஞ்சு மக்களின் தேசிய உணர்வு வர்க்கப்போராட்டமாக பரிணமிக்கின்றது. இந்த இயக்கங்களினை அரசியல் தீர்மானிக்கவில்லை எனக் கூறியவர்கள் பின் இதற்கு முரணாக ரொக்சியவாதிகள் இப்படி கூறுகின்றனர். பிரபாகரன் கூறும் இந்தச்சாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பலவீனமான தன்மையை மட்டுமின்றி குட்டிமுதலாளித்துவ தேசியவாதத்தின் அரசியல் மலட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்துகின்றது என்றதில் புலிகளின் குட்டிமுதலாளித்துவ தேசியவாதத்தின் அரசியலே தீர்மானிக்கிறது எனக் கூறுகின்றனர். (நாம் புலிகளை தரகு முதலாளித்துவ பிரிவாக காண்கிறோம்) ஆனால் கட்டுரையின் ஆரம்பத்தில் அரசியல் தீர்மானிக்கவில்லை எனக் கூறி ஒன்றுக்கொன்று முரணாக முரண்படுகின்றனர். இந்தச்சாட்டு என்பது இந்தியா உடன் பிரபா பேச்சுவார்த்தைக்கு போனதும். அதில் இந்தியா ஏமாற்றியது என பிரபா கூறுவதையே குறிக்கின்றது. சுயநிர்ணய உரிமையில் பிரிந்துபோகும் உரிமையை மறுக்க, தேசிய விடுதலை இயக்கங்களை தீர்மானிப்பது அரசியல் அல்ல என்று கூறி ரொக்சிய வாதிகள் மார்க்சியத்தை வசதியாக மாற்ற முனைகின்றனர். ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முதலாளிவர்க்கம் தனது சொந்த தேசிய சிறப்புரிமையை அடையவும் சுதந்திரநாட்டிலுள்ள தொழிலாளர் விவசாயிகளைச் சுரண்டுவதற்கான சிறந்த நிலைமைகளை நிலைநாட்டும் நிலைப்பாட்டின் அடிப்படையிலே சுயநிர்ணயத்தின் கருக் கொள்கிறது. என்ற லெனினின் மேற்கோளை  ரொக்சியவாதிகள் முன்வைத்துள்ளனர்.

 

 

லெனினின் இக்கூற்று மிகச் சரியானதே. ஒரு முதலாளித்துவ வர்க்கம் எப்போதும் சுரண்டலையே பிரதான ஆதாரமாக கொண்டது. அந்த வகையில் லெனினின் வாதம் மிகச் சரியானதே. தேசிய விடுதலைப் போரை முதலாளித்துவ வர்க்கம் முன்னெடுக்கும் போது மட்டுமே லெனினின் வாதம் சரியானது. பாட்டாளிவர்க்கம் ஒரு தேசிய விடுதலைப்போராட்டத்தை  முன்னெடுப்பின் அது சுரண்டலை ஒழிக்கும் வகையில் ஒரு குடியரசையே அமைக்கும். சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்த போது லெனின் இதை எப்படி ஆதரிக்கின்றார் எனப் பார்ப்போம். நோர்வேக்கு மிக விரிவான சுயநிர்ணய உரிமை கொடுக்கப்பட்டிருந்த போதிலும் (அது தனக்கே சொந்தமான ஒரு பாராளுமன்றம் முதலியவற்றைப் பெற்றிருந்தும்) கூட்டு சேர்ந்த பிறகு பல ஆண்டுகள் நோர்வேக்கும் சுவீடனுக்குமிடையில் தகராறுகள், மோதல்கள் இருந்து வந்தன. சுவீடன் உயர்குடியினரின் ஆட்சியை உதறி எறிவதற்கு நோர்வே மக்கள் தீவிரமாக முயன்றார்கள். கடைசியில் 1905இல் அவர்கள் வெற்றிபெற்றனர். நவீனப் பொருளாதார அரசியல் உறவுகளின் கீழ் எந்த அடிப்படையில் தேசிய இனங்கள் பிரிந்து போதல் நடைமுறைச் சாத்தியமாகிறது, உண்மையில் ஏற்படுகிறது என்பதையும் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்கின்ற நிலைமைகளில் சில சமயங்களில் பிரிவினை எந்த வடிவத்தைக் கொள்கிறது என்பதையும் இந்த உதாரணம் நமக்கு காண்பிக்கிறது. (லெனின் தே.இ.சு.உ)

 

நோர்வேக்கும் சுவீடனுக்கும் இடையில் 1905இல் அது தீர்க்கப்பட்டதே அதேமுறையில் தீர்ப்பதற்குப் முறையாக பிரச்சாரம் செய்வதும், மக்களைத் தயார் செய்வதும் வர்க்க உணர்வுகொண்ட தொழிலாளர்களின் கட்டாய கடமை என்பதை இந்த உதாரணமானது அதன் சாராம்சத்தை நிரூபிக்கின்றது என்பதை எந்த சமூக- ஜனநாயகமும் மறுக்க முடியாது.  இதை மறுக்கும் ஒரு சமூக ஜனநாயகவாதியும் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய பிரச்சனை பற்றி அக்கறையில்லாதவராக இருக்க வேண்டும். (அப்படியானால் அவர் அப்போது சமூக -ஜனநாயகவாதியும் இல்லை) தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செயல் திட்டம் கோருவதன் உண்மையான பொருள் இதுதான்(லெனின் தே.இ.சு.உ)

 

மற்றப் பிரச்சனைகளைப் போலவே தேசிய இனங்களின் சுயநிர்ணய பிரச்சனையிலும் முதன் முதலாக நாம் அக்கறை காட்டுவது ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்துக்குள் இருக்கும் பாட்டாளிவர்க்கத்தின் சுயநிர்ணயம் பற்றிதான். பிரிதல் பிரச்சனை பற்றி எழுந்த மோதலில் நோர்வே சுவீடன் ஆகிய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் என்ன நிலையை மேற்கொண்டது? என்ன நிலையை மேற்கொள்ள வேண்டியிருந்தது? நோர்வே பிரிந்தபிறகு, நோர்வேயின் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் குடியரசு அமைக்க வேண்டுமென்றுதான் வாக்களித்திருப்பாhர்கள். (லெனின் தே.இ.சு.உ)

 


நோர்வே தேசிய இனமக்களில் பெரும்பான்மையினர் முடியாட்சியை விரும்பினர். ஆனால் பாட்டாளிகளோ ஒரு குடியரசை விரும்பினர். எனவே நோர்வேயின் பாட்டாளி வர்க்கம் இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டியிருந்தது. நிலைமைகள் சாதகமாகயிருந்தால் புரட்சி அல்லது பெரும்பான்மை விருப்பத்துக்கு இணங்கி நின்று தொடர்ந்து பிரச்சாரமும் கிளர்ச்சியும் நடத்துவது. (லெனின் தே.இ.சு.உ)


லெனினின் மேற்கூறிய வாதங்கள் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளிகளினதும், ஒடுக்கும் இனப்பாட்டாளிகளினதும் கடமையை தெளிவுபடுத்தி விடுகிறது. லெனினிசத்திலிருந்து மாறுபட்ட ரொக்சியம் சுயநிர்ணய உரிமைக்கு வேறுவிளக்கம் கொடுக்க முனைந்து ஒடுக்கும் அரசுக்கு துணை போகின்றனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி (ரொக்சிய வாதிகள்) தமிழ்த்தேசியஇனம் பிரிந்து போக லெனின் கூறியபடி பிரச்சாரம் செய்கின்றார்களா? ஒடுக்கப்படும் இனம், ஒடுக்கும் இனத்தின் ஒடுக்குமறை சகிக்க முடியாதபோது பிரிந்து போவதை அங்கீகரிக்கின்றார்களா? சிங்கள் ஒடுக்கும் இனம் தமிழ் ஒடுக்கப்படும் இனத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடடுள்ளது. இந்த நிலையில் தமிழ் இனம் பிரிந்து போவதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லாதபோது உங்கள் சுயநிர்ணய உரிமை என்பது கபடம் நிறைந்தது. ஏகாதிபத்தியத்துக்கு துணைபோவதே. தமிழ்தேசியம் பிரிந்து போவது சரியானதே என சிங்களப் பாட்டாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடியுமா? ஒடுக்குமுறையின் வடிவைக் கூறுவதுஅல்ல. மாறாக தமிழ்தேசிய இனம் பிரிந்துபோக உரிமையுண்டு எனப்பிரச்சாரம் செய்ய வேண்டும். இதை இக்கட்டுரையில் மேலும் விளக்குகின்றோம்.

 

தமிழீழத்தின் சுயநிர்ணயத்தினை அடைவதில் அதன் முழுக் கொள்கையும் இந்திய முதலாளித்துவத்தின் உதவியை வேண்டுவதின் அடிப்படையில் கட்டியெழுப்பட்டிருந்ததனால் ஆகும் என்கின்றனர் ரொக்சியவாதிகள். எமது விடுதலை இயக்கங்கள் இந்திய முதலாளித்துவ பிரிவையல்ல மாறாக இந்திய தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ பிரிவையே சார்ந்திருந்தனர். இவர்களின் அரசியல் வழியே அதை நோக்கி நகர்ந்திருக்கிறது. இப்படி இருக்க இந்த இயக்கங்களின் அரசியலை தீர்மானிக்கவில்லை என்பது எவ்வளவு போலித்தனமானதும் உண்மைக்கும் மாறானதுமாகும். ஏன் அரசியல் தீர்மானிக்கவில்லை எனக்கூற வருகின்றனர்.

 

மூன்றாவது பாதைக்கான அரசியல் திட்டத்தை நிராகரிக்கவே. ஒரு இயக்கத்தின் வழியைத் தீர்மானிப்பது அரசியல் திட்டமே. இதை மறுக்க முனையும் ரொக்சிய வாதிகள் அரசியல் நோக்கம் கபடத்தனமானது. தொடர்ச்சியாக புலிகள் போன்ற பெரிதும் தீவிரமான போக்குகள் உட்பட கொள்கைகளை வழிநடத்துவதோடு அவற்றின் அரசியல் உடல் அமைப்பையும் நிர்ணயம் செய்கிறது என ரொக்சிய வாதிகள் குறிப்பிட்டு தாம் முதல் கூறிய இந்த இயக்கங்களின் அரசியலைத் தீமானிக்கவில்லையென்பதை மறுக்கின்றனர். இதில் எது உங்கள் கருத்து? இந்த நிலைமைகளில் தனிமனித தவறுகளை நீக்கி சுயவிமர்சனங்களை மேற்கொண்டு இதே முதலாளித்துவ வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு புதிய புனிதமான இயக்கத்தின் மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்று விடலாம் என நினைப்பது ஒரு பிற்போக்குக் கனவு என குறிப்பிட்டு பின் இதை இப்படி கூறுகின்றனர். பழைய கொள்கை விளக்கப் புத்தகத்திலிருந்து சமர் மிகவும் விசுவாசமாக பின்வருமாறு எழுதுகின்றது. தமிழ் தேசிய இனத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இணைந்து அவற்றுக்கிடையான முரண்பாட்டை தேசிய முரண்பாட்டுக்குக் கீழ்ப்படுத்தி சிநேகபூர்வமான வழிகளில் கையாளுதல் என எமது திட்டத்தில் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளனர். P  ஒரு இயக்கத்தின் அரசியல் வழியைத் தீர்மானிப்பது அரசியலே. இதை மறுக்கும் ரொக்சியவாதிகள் எம்மைப்பார்த்து தனிமனித தவறுகளை நீக்கி சுயவிமர்சனம் செய்து முதலாளித்துவ திட்டத்தை கொண்ட ஒரு புனித இயக்கத்தை உருவாக்க முனைகின்றனராம்- அரசியல் வழி தீர்மானிக்க முடியாது என்கின்றபோது எப்படி அது முதலாளித்துவ திட்டமாக இருக்கும்.

 

எமது திட்டம் முதலாளித்துவம் என வைத்துக்கொள்வோம். அப்படிப் பார்த்தாலும் லெனின் மேல் குறிப்பிட்டது போல் தேசிய இனம் பிரிந்து போவதை அங்கீகரித்து பிரச்சாரம் செய்வதை எக்காரணம் கொண்டும் மறுக்கும் உரிமை வெறும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு துணை போவதே. இதை மறுப்பவர்கள் சமூக ஜனநாயகவாதிகளுமல்ல. எமது திட்டம் முதலாளித்துவ தேசியவாத திட்டமா? அவர்கள் இதை நிறுவ குறிப்பிடும் காரணமாக முஸ்லீம், மலையக மக்கள் பிரிந்து போவதை அங்கீகரித்தும், அவர்களின் இணைவு (அதாவது கூட்டாட்சி) அவர்களின் விருப்புக்குட்பட்டது எனக் குறிப்பிட்டதும் அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கோரிக்கையை தேசிய இன முரண்பாட்டுக்கு உட்படுத்தி சிநேகபூர்வமான வழிகளில் கையாள வேண்டும் எனக் கோரியதையும் ஆதாரமாக முன்வைத்துள்ளார். நாம் திட்டத்தில் மேலதிகமாக வைத்த ஒரு வர்க்கப் போராட்டத்துக்கான அடிப்படைகளை கவனியாது போல் விட்டும் உள்ளனர். எமது திட்டம் ஒரு முதலாளித்துவ திட்டம் ஒரு முதலாளித்துவ திட்டம் எனின் அதை சரியான முறையில் கோட்பாட்டுடன் விமர்சித்து, தேசிய சுயநிர்ணய உரிமையில் பிரிந்து போகும் கோரிக்கை  அடிப்படையில் திட்டத்தை திருத்தி இருக்க வேண்டும். இவர்களோ இப்படிக் கூறியபடி தேசத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையை மறுக்கின்றனர்.

 

1914களில் தேசிய சுயநிர்ணய உரிமை எந்த உள்ளடக்கமும் அற்றது. எனவே கட்சிதிட்டத்தில் இருந்து அகற்றவேண்டும் எனப் போலிஷ் மார்க்சியவாதிகள் கருதினார் என ரொக்சி கூறி அதை அகற்றக் கோரினார். இன்று ரொக்சியவாதிகளோ அதே கருத்தையே கொண்டு உள்ளனர். பெயரளவில் சுயநிர்ணய உரிமையை உச்சரித்தபடி ரொக்சி அன்று எதைக் கருத்தாக கொண்டு இருந்தாரோ அதற்காக இன்று வக்காலத்து வாங்குகின்றனர். அன்று ரொக்சி சொன்னதை லெனின் எபபடி விமர்சிக்கிறார் எனப்பார்ப்போம். 9வது பாராவைத்(9வது பாரா சுயநிர்ணய உரிமை தொடபானது-இது நாம் ) திருத்த வேண்டுமென்ற பிரச்சனையைப் போலிஷ் மார்க்சிய வாதிகளின் அதிகாரபூர்வமான ஸ்தாபனங்களில் ஒன்று கூடக் கிளப்பியது கிடையாது. எனவே போர்பா பத்திரிகையில் 2வது இதழில்(1914மார்ச்) அதன் ஆசிரியர்களின் சார்பில் ரொஸ்கி கீழ்வருமாறு எழுதியது ரோசா லுக்சம்போர்க்கைப் போற்றும் சிலருக்கு இழைத்த தீங்காகும். தேசிய சுயநிர்ணய உரிமையானது அரசியல் உள்ளடக்கம் சிறிதுமில்லாதது என்றும் அதைச் செயல் திட்டத்திலிருந்து அகற்றி விடவேண்டுமென்றும் போலிஷ் மார்க்சியவாதிகள் கருதுகிறார்கள் உதவிப்பணியாற்றும் ரொஸ்கிய விரோதியை விடவும் ஆபத்தானவர். பொதுவாகப் போலிஷ் மார்க்சியவாதிகள் ரோசா லுக்சம்போர்க் எழுதும் ஒவ்வொரு கட்டுரையையும் ஆதரிப்பவர்கள் வகைப்படுத்துவதற்குத் ரொஸ்கியாய் தரமுடிகிற நிருபணம் தனிப்பட்ட பேச்சுவார்த்தை தான்(அதாவது வெறும் வம்பு பேச்சுத்தான்-இதை கொண்டுதான் தானே ரொக்சி எப்போதும் உயிர் வாழ்கிறார். வேறு ஒன்றுமில்லை. போலிஷ் மார்க்சியவாதிகள் கௌரவமும் மனச்சான்றும் இல்லாதவர்கள் என்றும் 1903இல் சுயநிர்ணய உரிமை விசயத்தைப்பற்றி இரண்டாவது காங்கிரசில் இருந்த போலிஷ் மார்க்சியவாதிகளின் பிரதிநிதிகள் வெளியேறிய போது இவ்வுரிமையானது உள்ளடக்கப் பொருள் சிறிதும் இல்லாதது என்றும் அவர்கள் கருதினார்கள். அந்த சமயத்தில் ரொக்சி சொல்லியிருக்கலாம். ஆனால் அதற்கு பிறகு இத்திட்டத்தையுடைய கட்சியில் போலிஷ் மார்க்சியவாதிகள் சேர்ந்தனர். அதைத் திருத்துவதற்கு அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கூட கொண்டு வரவில்லை. தமது சஞ்சிகையின் வாசகர்களுக்கு இந்த உண்மைகளை ஏன் ரொக்சி சொல்லவில்லை? ஏனென்றால் கலைப்புவாதத்தை எதிர்க்கும் போலிஷ்காரர்களுக்கும் ருஸ்சியர்களுக்கும் இடையில் வேற்றுமைகளை விதைத்து வளர்ப்பதன் வாயிலாக ஊக வணிகம் செய்வதும், செயல் திட்டம் பற்றிய பிரச்சனை விடயத்தில் ருஸ்சியத் தொழிலாளிகளை ஏமாற்றுவதும் ரொக்சிக்கு லாபகரமானவை. மார்க்சிசம் சம்மந்தமான எந்த முக்கியமான எந்த விசயத்திலும் ரொக்சி ஒரு திடமான கருத்தை இதுவரை ஒரு பொழுதுமே கொண்டிருந்ததில்லை. குறிப்பிட்ட கருத்து வேறுபாடுகள் இருக்குமிடத்தில் அவற்றின் விரிசலுக்கிடையில் நுழைந்துவிட வழியை எப்பாதுமே கண்டுபிடிப்பார். ஒரு சாரியைக் கைவிட்டு விட்டு இன்னொரு சாரிக்குத் தாவுவார். தற்போது அவர் பூந்தகாரர்களுடன் கலைப்புவாதிகளுடனும் இருக்கிறார். பூந்தக்காரன் லீப்மன் கூறுவதை கேளுங்கள். ஒவ்வொரு சிறு தேசிய இனத்துக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ருஸ்சிய சோசல்டெமொக்கிரட்டுக்கள் தங்களது செயல்திட்டத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்துக்கொண்டார்கள். அப்பொழுது ஒவ்வொரு மனிதரும் மனிதரும்(!!) தன்னைத்தானே கேட்டுக் கொண்டார்கள். இந்த நவநாகரிகமான(!!) வார்த்தையின் உண்மைப்பொருள் என்ன? பதில் ஒன்றையும் காணோம்(!!) மூடுபனியில் மறைந்து கிடந்த இந்த வார்த்தை இன்றும் அப்படியே தான் இருந்தது(!!) கட்சியின் செயல் திட்டத்தை இந்தக் கந்தலான்டி கேலி செய்யும் விதம் பிரமாதம் இல்லையா? லெனின் (தே.இ.சு.உ)

 

தேசிய இன சுயநிர்ணய உரிமை பற்றிய ரொக்சிய நிலைப்பாட்டை மிகத் தெளிவாவே லெனின் இனம் காட்டியுள்ளார். இன்று நான்காம் அகிலத்தின் ரொஸ்சிகள் மீண்டும் அதே ரொக்சிய நிலையை உயர்த்துகின்றனர். அதுவே நாம் முஸ்லீம் மலையக மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களின் இணைவு அவர்களின் விருப்புடன் சம்மந்தப்பட்டது எனக் குறிப்பிட்டதை முதலாளித்துவ வாதம் எனக் கூறி லெனினை படுகுழிக்குள் தள்ளுகின்றனர். ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதே. அதை வேறுவிதத்தில் விளக்கமுடியாது. இதை லெனின் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதற்கு அரசியல் சுயநிர்ணயம், அரசின் சுயேட்சைத் தன்மை ஒரு தேசிய அரசு அமைத்தல் என்கின்ற பொருள் தான் உண்டு வேறு பொருள் இருக்க முடியாது. லெனின்

 

ஒரு நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ள போது பெரும் தேசிய இனம் சிறு தேசிய இனத்தை ஒடுக்குவதை எதிர்த்துப் போராடுவது மடடுமின்றி பிரிவினையை அங்கீகரிக்க வேண்டும். தமிழீழப் போராட்டம் 1983களில் மிகத்தீவிரம் அடைந்து இருந்தபோது இதே ரொக்சியக் கட்சியை நாம் அறிவோம். அன்று எதைச் சொன்னார்களோ அதையே இன்றும் சொல்கிறார்கள். ஆனால் எதுவும் நடந்துவிடவில்லை. பெருந்தேசிய இனம் சிறுபான்மையினத்தை அழித்து வருகின்றனர். இந்த வகையில் தீவிரமடைந்த 10வருடமும் அதற்கு முன்பு ரொக்சியவாதிகள் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அதற்காக போராடத்தவறி பெரும்தேசிய இனத்தின் நோக்குக்கு துணைபோகின்றனர். இதை லெனின் நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமை பற்றிய கோசத்தை முன்வைத்து ஆதரித்து பேசத்தவறினால் நாம் பூர்சுவாக்களின் நோக்கத்துக்கே உதவுவோம் என்பது மட்டுமல்ல ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் நிலப்பிரபுக்களின், அதன் வரம்பில்லா ஆட்சியின் நோக்கத்துக்கே கூட உதவுவோம்.... போலந்தில் தேசியவாத பூர்சுவாக்களுக்கு உதவக்கூடாதே என்ற கவலையில் ரோசா லுக்சம்போர்க் ருஸ்சியாவில் மார்க்சியவாதிகளின் செயல்திட்டத்தில் காணப்படும் பிரிந்து போகும் உரிமையை நிராகரிக்கின்றனர். அப்படிச் செய்கையில் பெரிய ருஸ்சியக் கறுப்பு நூற்றுவர்களுக்கு உண்மையில் அவர் உதவுகின்றார்.

 லெனின் (தே.இ.சு.உ)    

இன்று ரொக்சியவாதிகள் என்ன செய்கின்றனர். தமிழ் தேசியத்தின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை மறுத்தும், தமிழ் தேசியத்தில் உள்ள முஸ்லீம், மலையக மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை மறுத்தும் சிங்கள இனவாதிகளுக்கும் தமிழ் இனவாதிகளுக்கும் (புலிக்கும்)உதவுகின்றனர். சிங்கள தமிழ் தரகு முதலாளிகளினதும் நிலப்பிரபுக்களினதும் விசேட சலுகைகளை நிலைநிறுத்த உதவுகின்றனர். மாறாக இவ்விசேட சலுகைகளை எதிர்த்தும், தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்கவும் வேண்டும். இதை லெனின் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பூர்சுவா வர்க்கம் எந்த அளவுக்குத் தனது சொந்த பூர்சுவா தேசியவாதத்துக்காகப் போராடுகிறதோ அந்த அளவுக்கு நாம் அதை எதிர்க்கிறோம். ஒடுக்கும் தேசிய இனத்தின் விசேஷ உரிமைகளுக்கும் பலாத்காரத்திற்கும் எதிராக நாம் போராடுகிறோம். ஒடுக்கப்பட்ட தேசிய இனம் தனக்கு விசேஷ உரிமைகள் வேண்டுமென்று முயல்வதையும் எவ்விதத்திலும் அனுமதிக்க மாட்டோம். லெனின் (தே.இ.சு.உ)

இன்று நாம் தமிழ் தேசிய இனத்தின் (புலிகளின்) அனைத்து விசேஷ சலுகைகளையும் எதிர்க்கிறோம். அதே நேரம் எமக்குள் உள்ள சிறுபான்மைத் தேசிய இனத்தின் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களின் விசேட சலுகைகளையும் எதிர்க்கிறோம். ஆனால் ரொக்சியவாதிகளோ முற்றாக பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை எதிர்த்து பெரும் தேசிய அடக்குமுறைக்கு துணைபோகின்றனர். அத்துடன் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை பெயரளவில் அங்கீகரிக்கும் ரொக்சிகள் தமிழ் தேசியத்தில் உள்ள தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ பிரிவின் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இதை லெனின் தனது கோரிக்கைகள் செயல் பூர்வமானவை என்று காரணம் கூறி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை உண்டு என்று சொல்லுவதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போவதற்குச் சரி என்று தெளிவாகச் சொல்லுவது தான் மிகவும் செயல்பூர்வமான நடவடிக்கை. லெனின் (தே.இ.சு.உ)

லெனின் குறிப்பிட்டது போல் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை பெயரளவில் அங்கீகரித்து, தமிழ்த் தேசியத்தில் உள்ள முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமையை நிராகரித்து தமிழ் தேசிய இன தரகு நிலப்பிரபுத்துவ பிரிவினருக்கு துணை போகின்றனர். இன்று இலங்கை ஒரு நாடாக உள்ளதா? ஒரு கட்சி கட்ட முடியுமா? இது தொடர்பாக சமர் 9 இல் நாம் விவாதித்தோம். இன்று இலங்கைக்குள் இரு நாடுகள் உள்ளன. ஒன்று ஸ்ரீலங்கா, மற்றது தமிழீழம். இதை யாரும் மறுக்க முடியாது. 1977க்கு முன்பு சிங்கள இனவெறியர்கள் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்கிய காலகட்டத்தில் ஒரு கட்சியைக் கட்டக்கூடியதாக இருந்தது. 1977 இனக்கலவரமும் அதைத் தொடர்ந்து 1980கள் வரை கூட ஒரு கட்சி கட்டக் கூடிய நெருக்கடியான நிலைமை இருந்தது. 1980களின் 1983கலவரத்துடன் இருதேசிய இனமாக தமிழ் சிங்களம் என இரு நாடுகளாக பிரிந்துள்ளது. தேசிய சுயநிர்ணய உரிமையை பிரிந்து போகும் உரிமையை மக்கள் முன் வாக்கு எடுப்புக்கு 1977க்கு பின் வைத்து இருப்பின் இருநாடுகளாக மாறியிருக்கும். ஆனால் யுத்தம் தொடர்ந்தபடி உள்ளது. இன்று இரு நாடுகளாக இரு ஆட்சிகள் நடைபெறுகின்றன. இங்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை ஏகாதிபத்தியம் வழங்கின் அது இரு நாடுகளாகவே இருக்கும். இதை மறுப்பவர்கள் ஏகாதிபத்திய நோக்கை பூர்த்தி செய்பவர்களே. மார்க்சியவாதிகளைப் பொறுத்தவரையில் ஏகாதிபத்தியத்தின் அங்கீகாரத்தை எதிர்ப்பதை விட வரலாற்று ரீதியாக ஆராயவேண்டும்.  இதை லெனின் சட்டத்தின் எல்லா வகையான பொதுக்கருத்திலிருந்தும் பெறப்படும் சட்டரீதியான வரையறைகளில் இதற்கு விடை தேடுவதா? அல்லது தேசிய இயக்கங்களை வரலாற்று பொருளாதார ரீதியில் ஆராய்ந்து அதைக் கண்டுபிடிக்க வேண்டுமா? (லெனின் தே.இ.சு.உ)

 

விஷயத்தின் சாராம்சம் சட்டரீதியான வரையறைகள் வகுப்பதில் இருக்கிறதா அல்லது உலக முழுவதிலும் நடக்கும் தேசிய இயக்கங்களின் அநுபவத்தில் இருக்கிறதா? என்ற கேளிவியைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் எங்குமே கேட்டுக் கொள்ளாமலே அவர்(அவர் ரோசா லுக்சம்போர்க்) அவ்வாறு கூறுகின்றார்.(லெனின் தே.இ.சு.உ)

அந்த வகையில் தமிழ் தேசிய இனம் கடந்த 50வருடத்துக்கு மேற்பட்ட தேசிய இன அடக்குமுறைக்கு எதிராகப் போராடியுள்ளது. இவ்வினம் வரலாற்று ரீதியாக சிறுசிறு எதிர்ப்பில் ஆரம்பித்து இன்று ஆயுத்ப் போராட்டம்வரை வளர்ந்து நிற்கிறது.  ஆனால் தமிழ் தேசிய இனம் தனது பாரம்பரிய பிரதேசங்கள் திட்டமிட்ட குடியேற்றம் மூலம் இன்று ஆக்கிரமிக்கப்பட்டும் இழந்தும் உள்ளது. தனது மொழி இரண்டாம் மொழியாகவே கருதுகின்றது. அந்த மொழிக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்நிலையில் தமிழ் தேசிய இனம் மீது திட்டமிட்டு நடத்திய இனக்கலவரங்கள் முற்றாக ஒரு தனிநாடாக மாறியுள்ளதை இனம் காட்டிவிடுகிறது. வடக்கு, கிழக்குக்கு அற்ப சலுகைகளைக் கூட வழங்க மறுக்கும் சிங்கள இனவெறிக்குள் தமிழ் தேசிய இனம் தனியான ஒரு நாடாக மாறியுள்ளது. இருவேறு வேறான அரசுகள் ஆக இன்று மாறியுள்ளது. இங்கு ஏகாதிபத்தியத்தின் சட்டபூர்வ அங்கீகாரம் இருப்பின் இரு வேறு நாடுகளே. ஆனாலும் யதார்த்தத்தில் இரு நாடுகள் ஆகவே உள்ளது. அந்த வகையில் இரு நாட்டுக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளே உருவாக்க முடியும். இவர்களின் ஒன்றிணைந்த ஆட்சி என்பது இரு பகுதியிலுமுள்ள கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டமும், மக்களின் விருப்புமே தீர்மானிக்கும். இதை விடுத்து ஒன்றுபட்ட நாடாக காட்ட முனையும் யாரும் ஒரு கட்சிக்கோட்பாட்டை முன் வைப்பின் ஏகாதிபத்திய நோக்கத்திற்கு துணைபோபவர்களாகவே இருப்பர். இன்று தமிழ் மக்கள் மீதான அடக்கு முறையில் இருந்து தமிழ் மக்கள் மீள முடியாத எந்த சந்தர்ப்பத்திலும் ஒன்றுபட்ட கட்சி சாத்தியமில்லை. மாறாக தமிழ் கம்யூனிஸ்டுகள் தமிழீழக் கோரிக்கையை தமதாக்க வேண்டும். அப்போதே மீண்டும் ஜக்கியத்துக்கான சாத்தியம் உண்டு. அதுபோல் பெரும் தேசிய இனப்பாட்டாளிகள் தமது தனித்துவமான கட்சி மூலமே தமிழ் மக்களின் பிரிவினையை ஏற்றுப் பிரச்சாரம் செய்து கட்சியைக் கட்டும் போது மட்டுமே இதன் வளர்ச்சியில் ஒன்று இணைவு ஏற்படும். இல்லாது ஒரு கட்சியைக் கோரின் தமிழ் தேசிய இனம் தன் மீதான அடக்கு முறைக்கு எதிராக பிரிவினையை எதிர்க்கும் யாருடனும் இணையப்போவதில்லை. அப்படி இணையகோருபவர்கள் சிங்கள இனவெறிக்கு துணை போவதையே செய்யக் கோருவர். ரொக்சியவாதிகள் கட்டுரையின் இறுதியில் தமிழீழ ஸ்ரீலங்கா சோசலிசக் குடியரசு நிறுவுவதே எமது பணி என்கின்றனர். ஆனால் அதே புத்தகத்தில் இன்னொரு கட்டுரையில் ஜக்கிய சோசலிச தமிழீழ ஸ்ரீலங்கா குடியரசு அமைக்கவேண்டும் என்கின்றனர்.  இதில் ஜக்கியம் என்பது கட்டாயப்படுத்தியது அல்ல. மாறாக ஒவ்வொரு தேசிய இனத்தின் விருப்புடன் சம்மந்தப்பட்டது. இப்படிக் கூறுவதன் ஊடாக இருநாடுகள் உள்ளன என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றனர். 

 

இனி நாம் தமிழீழம் ஸ்ரீலங்கா என்ற நாட்டுக்குள் உள்ள முஸ்லீம் மலையக மக்களைப் பார்ப்போம். நாம் அவர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றதை குட்டிபூர்சுவா வேலைத்திட்டம் எனவும் இனப் பிரிவினையை ஏற்படுத்துவது எனவும், தொழிலாளர்களின் ஜக்கியத்துக்கு வேட்டு வைப்பது எனவும் இதற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் சம்மந்தம் கிடையாது எனவும் ரொக்சிகள் கூறுகின்றனர். மலையக, முஸ்லீம் மக்கள்(ஒருபகுதியினர்) தமிழ் மொழியைப் பேசுவதால் அவர்கள் தமிழ் தேசிய இனமாக மாறிவிடுவார்களா? ஒரே மொழியைப் பேசுவதால் ஒரு இனமாக மாறிவிடமாட்டார்கள். ஒரே மொழியைப் பேசினாலும் அவர்களின் மொழியில் வேறுபாட்டைக் கொண்டும் உள்ளனர்.  அவர்களின் (பழக்க வழக்கங்கள்) கலாச்சாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அவர்கள் வாழும் பிரதேசம்(சில கலந்து உள்ளபோதும்) வேறுபட்டே உள்ளது. இதில் முஸ்லீம் மக்களை ரொக்சியவாதிகள் இனம் காட்டும் போது மதம் சார்ந்தது என இனம் காட்டுகின்றனர். முஸ்லீம்கள் மதம் என்ற வரையறை மட்டும் தமிழ் மக்களுடன் ஒன்று இணைத்துவிடுமா? மதத்தை விட்டு முஸ்லீங்களை தமிழ் சமுதாயத்தின் பிரிக்க முடியாத வேறுபாடு அற்றதாக காட்டிவிட முடியுமா?  ஒரு இனத்தின் கலாச்சாரம் மதம் சார்ந்தே உள்ளது. இது தமிழ் மக்கள் எனின் இந்து சமயமும், சிங்கள மக்கள் எனின் புத்த சமயமும் கலாச்சார ரீதியில் வேறுபடுத்துகிறது. முஸ்லீம்களுக்கும் இது பொருந்தும். மதம் எல்லா இனத்திலும் சுரண்டும் சமுதாயம் சார்பாக கலாச்சாரத்தை ஆழமாகவே புகுத்தியுள்ளது. முஸ்லீம் மக்களை மட்டும் இப்படிக் கூறுவது முஸ்லீம் தேசிய இனத்தை தமிழ் தேசிய இனம் அடக்கி ஒடுக்கும் அதே காரணமே.  முஸ்லீம் மக்கள் தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டுள்ளதுடன் மொழிரீதியாகவும் மாறுபட்ட தமிழ் கதைப்பதுடன், அவர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தையும் கொண்டு உள்ளனர்.

 

தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கிடையில்  பொருளாதார மோதல் காலம் காலமாக இருந்துள்ளது. இவர்கள் மீதான தாக்குதல் மதம் சார்ந்தது அல்ல. மாறாக பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் அடிப்படையானது. அவர்கள் தமிழ் தேசியத்திலிருந்து அந்நியப்பட்ட நிலையில் இன்று உள்ளனர். தமிழ் தேசிய இனம் தனக்கான தனியான சட்டபூர்வமற்ற ஒரு அரசைக் கொணடு உள்ள  நிலையில் தனக்கான விசேஷ சலுகைகளை கோரும்  புலிகள் முஸ்லீம் மக்களின் தேசிய உணர்வுகள் மீது அடக்குமுறையைக் கையாளுகின்றனர். இது இன்று வளர்ந்து ஒரு எதிர்ப்பு உணர்வாக மாறியுள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியம் முஸ்லீம் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்க முனைவது புலிகளின் அதே கோரிக்கையே. இது ரொக்சிகளுக்கும் பொருந்தும்.

 

இலங்கையில் ஒரு புரட்சி நடைபெறின் நான்கு தேசிய இனங்களும் தமது தனித்துவமான போராட்டங்களை முன்னெடுத்தபடியே ஒரு ஜக்கிய குடியரசாக மாறமுடியும். இதை மறுத்து ஒரு குடியரசு கோட்பாட்டை முன்வைத்து, அவர்களின் தனித்துவத்தை, அவர்கள் மீதான இன அடக்குமுறைக்கு எதிரான அவர்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பின் அது பேரினவாதத்துக்கு துணைபோவதே. தேசிய இன முரண்பாட்டுக்கு  உட்பட சுரண்டப்படும் அனைத்து வர்க்கங்களையும் ஒன்று இணைக்க வேண்டும் எனக் கோரியிருந்தோம். இதைக் குட்டிபூர்சுவா திட்டம் எனவும் மென்சிவிக்குகளின் திட்டமெனவும் ரொக்சியவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். முதலில் நீங்கள் ஒரு போராட்டத்தில் ஜக்கிய முன்னணி ஏற்படும் என்பதை ஏற்கிறீர்களா? அபபடி ஏற்பின் எப்படி எமது கோரிக்கை தவறானது? இதுவே நீங்கள் விவாதித்திருக்க வேண்டும். ஜக்கிய முன்னணி என்பது ஏன் தேவைப்படுகின்றது?

 

நாம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும்போது ஒரு பலமான எதிரியைச் சந்திக்கிறோம். அந்த எதிரியை நாம் எதிர்கொள்ள அவ் எதிரிக்கு எதிரான அனைத்துசக்திகளையும் கவனத்தில் எடுக்கிறோம். அந்த வகையில் உருவாகுவதே ஜக்கிய முன்னணி. அதுவே எமது திட்டத்தில் குறிப்பிடப்பட்டதும். இதை நாம் விபரமாகப் பார்ப்போம். இலங்கை அரசுக்கு எதிரான எமது போராட்டத்தை எந்தவகையில் வரையறுப்பது. இலங்கையரசு முதலாளித்துவ அரசு என ரொக்சிகள் கருதுவதுபோல் அல்லாது அது  தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாகவே  உள்ளது  இலங்கை அரசு அரைக்காலனி அரைநிலப்பிரபுத்துவ நாடாக உள்ள அதேநேரம் நவகாலனியாகவும் உள்ளது. இலங்கை ஒரு முதலாளித்துவ நாடும் அல்ல. ஏன் எனில் இலங்கையில் ஒரு பூர்சுவா ஜனநாயகப் புரட்சி நடைபெறவில்லை.

 

ஆனால் ரொக்சிகளோ இலங்கையில் ஒரு பூர்சுவா ஜனநாயகப் புரட்சி முடிந்து வி;ட்டது எனக் கற்பனை பண்ணி முதலாளித்துவத்துக்கு எதிராக கோசம் வைக்கின்றனர். இது பூர்சுவா ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் பாட்டாளிகள் பாட்டாளிவர்க்கப் புரட்சியை நடத்த முனைகின்றது யாருக்கு எதிராக? ஆட்சியில் உள்ள அரசுக்கு எதிராக. அந்த ஆட்சியைப் பிரதிபலிப்பவர்கள் யார்? தரகு முதலாளிகளும், நிலப் பிரபுக்களுமே.  இதை ரொக்சிகள் ஏற்றது கிடையாது. அதிலிருதே எமது திட்டத்தை குட்டிபூர்சுவா திட்டம் என்கின்றனர். எமது திட்டம் ஒரு கட்சித் திட்டம் அல்ல. இது ஒரு முன்னணிக்கான திட்டம். பூர்சுவா ஜனநாயகப் புரட்சி நடைபெறாத மூன்றாம் உலக நாடுகளில் ஒரு புரட்சியை பாட்டாளிகள் நடத்தும் போது அரசுக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் ஒன்று இணைப்பதா அல்லது அவர்களையும் எதிர்த்து போராடுவதா? இதுவே ரொக்சிகளுக்கும் எங்களுக்கும் உள்ள பிரச்சனை. 

 

எம்மண்ணில் ஒரு தேசிய முதலாளி கூட உயிர்வாழ முடிகிறதா? யானை மார்க் முதலாளி கொக்கோகோலா உடன் போட்டி போடமுடியுமா?. மில்க்வைற் முதலாளி வொண்டலைட் சோப்புடன் போட்டிபோடமுடியுமா? பனையில் உற்பத்தியாகும் சீனி உலகத்துடன் போட்டி போடமுடியுமா? எந்த சுய உற்பத்தியும் போட்டிபோடமுடியாத வகையில் தரகு முதலாளித்துவத்தால் அழிக்கப்படுகிறது. இங்கு தேசிய முதலாளிகளின் கனவுகள்(கொள்ளையடிக்க) தகரும் போது தரகுகளை எதிர்க்கின்றனர். சுய உற்பத்திக்கு இடைவிடாது போராட முனைகின்றனர். இப்படி பூர்சுவா கனவுகள் போராட முனைகிறது.  இதில் பாட்டாளிகள் என்ன செய்ய வேண்டும், இவர்களை எப்படி அணிதிரட்டுவது என்பதே பிரச்சனை. பாட்டாளிகளின் சோசலிச நோக்குக்கு பங்கம் இழைக்கா வண்ணம் இவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து முதலில் எதிரிக்கு எதிராக போராட முனைய வேண்டும். அதுவும் தேசிய விடுதலைப் போராட்டமாக இன்று மாறி உள்ள நிலையில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க எப்படி அதற்கு எதிரானவர்களை அணிதிரட்டுவது என்பதே பிரச்சனை. இதுவே எமது முன்னணித் திட்டமாகும்.

 

1921களில் சோவியத்தில் இடைக்காலப் பொருளாதாரம் எப்படி பல வர்க்கத்துடன் ஒரு முன்னணியை அமைத்ததோ அதுபோல் தான் இதுவும். 1933களில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி(இதில் நாம் முரண்படுகிறோம்) கிட்லரை தோற்கடிக்க சமூக ஜனநாயகக் கட்சியுடன் கூட்டுக்குப் போயிருக்க வேண்டும் என ரொக்சிகள் கோரினர். இதுபோல் தான் எமது கூட்டும். எமது போராட்டத்தின் பிரதான எதிரிக்கு எதிராக மற்றவர்களை ஜக்கியப்படுத்தத் தவறின் புரட்சி நடைபெறாது. திருத்தப்பட்ட திட்டம் (இது சஞ்சீவியில் வெளிவந்தது சமர் 9 இலும் இதை அறிவித்தோம்) ஒரு பாட்டாளியின் தலைமையில் ஒரு முன்னணியை எப்படி நகர்த்துவது என்பதை மிகத்தெளிவாக வரையறுத்துள்ளது. தொழிலாளர், விவசாயிகளின் தலைமை, தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தல், ஏகாதிபத்திய எதிர்ப்பு, இலங்கை அரைகாலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ நாடு, தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்பன ஒரு முன்னணித் திட்டத்தில் பாட்டாளிகளின் சார்பாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளும் மற்றைய வர்க்கங்கள் மட்டுமே இத் திட்டத்தில் ஒன்றிணைய முடியும். இல்லாதபோது நடைமுறையில் இருவேறுபட்ட அமைப்புக்கள் ஒரு நெருக்கடியான நிலையில் சில நிபந்தனையில் ஜக்கியப்படுவர். எமது திட்டம் குட்டிபூர்சுவா திட்டம் அல்ல. மாறாக பாட்டாளிகளால் தலைமை தாங்கப்படும் ஒரு முன்னணித் திட்டம். கட்சி இதற்கு அப்பால் தனியான ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கும். அது முன்னணிக்குள் இயங்கும். சோவியத்தில் புரட்சி நடைபெற்ற சில காலத்தில் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அப்போது அது தவறானதாக இருந்தது. ஏனெனில் புரட்சியும் அதன் செயற்பாட்டுடன் ஆராயப்படுகிறது. இது போல் தான் இன்றைய புரட்சிக் காலகட்டம் என்ன? எந்த சக்திகளை அணிதிரட்டுவது என ஆராயப்படவேண்டும். இதில் இருந்தே ஒரு திட்டம் தயாரிக்க முடியும். இதை விடுத்து மாறாநிலைத்திட்டத்தை கொண்ட ரொக்சிகள் எதையும் சாதிக்க முடியாது.

 

1903களில் ரொக்சி பிரஞ்சு அரசாங்கத்தில் மந்திரிப் பதவியை பெற்றிருந்தார். மார்க்சியத்தை  உச்சரித்தபடி மார்க்சியத்துக்கு எதிரான அரசாங்கத்தில் பதவி ஏற்றார். இவரின் அந்நடவடிக்கை பாட்டாளி வர்க்கத்துக்கு எந்தவிதத்திலும் உதவாது. ஆனால் ஒரு முன்னணிக்கான அரசியல் திட்டம் பாட்டாளிகள் சார்பாக  உள்ளபோது பாட்டாளிகள் அதை தமது நலனுக்கு இசைவாக கையாள முடியும். அடுத்து தமிழீழ ஸ்ரீலங்கா குடியரசுகளை அமைக்க கோரும் ரொக்சிகளின்  இத்திட்டம் மட்டும் எப்படி தேசியவாதம் அற்றது ஆகிவிடாது. அது ஒரு எல்லையை வரையறுக்கிறது. தேசியவாதம் என்பது எப்போதும் பிற்போக்காக இருப்பதில்லை. மாறாக முற்போக்காகவும் இருக்கும். இதை லெனின் வர்க்க உணர்வு கொண்ட பெரிய ருஸ்சிய பாட்டாளிகளான நமக்கு தேசிய பெருமிதம் அப்பாற்பட்டதா? இல்லை நிச்சயமாக இல்லை. நாம் நமது மொழியையும் தாய்நாட்டையும் நேசிக்கின்றோம்.

 

லெனின் தேசிய கொள்கையும் பாட்டாளி வர்க்க சர்வதேச வாதமும்.

 

தேசியவாதம் எப்போதும் தவறானதாக இருப்பதில்லை. மாறாக தேசிய உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அது மற்றைய தேசியஇனத்துக்கு எதிராக இருக்கக் கூடாது. இது தமிழ்த் தேசிய இனத்தின் மீதான சிங்கள இனவெறி அடக்குமுறைக்கு எதிரான தமிழ்த் தேசிய உணர்வு வளர்த்து எடுக்கவேண்டும். அதற்க்காக போராடவேண்டும். இதை லெனின் தொழிலாளி வர்க்கம் தன்னையும் தேசத்துக்குள்  ஒரு பகுதியாகக் கொள்ளாமல் தானும் தேசியத் தன்மை பெறாமல்(இந்தச் சொல்லில் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல) அது பலம் பெறமுடியவில்லை, பக்குவம் பெறமுடியவில்லை. உருவாக முடியவில்லை.

 

லெனின் மார்க்ஸ் அவரது போதனையும் 

 

தேசியப் பிரச்சனையில் செயல்பூர்வமானதும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்ததும் ஜனநாயகம், சுதந்திரம், பாட்டாளி வர்க்க ஜக்கியம் ஆகியவற்றை உண்மையில் பேணுகின்றதுமான கொள்கை இதுதான். எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகின்ற பிரச்சனை எழுகின்றபோது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லத் தனித்துவபோக்கையும் நீக்கும் நோக்குடன் அதை அரசியல் சீர்தூக்கிப் பார்ப்பது.

 

லெனின் தேசிய கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வதேசவாதமும்.

 

ரொக்சிகளே நீங்கள் கூறுவது போல் தமிழ், சிங்கள், முஸ்லீம் மலையக மக்களின் பிரிவினை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க தயாராக உள்ளீர்களா? அதன் தனித்துவமான சலுகைகளை இனங்காட்ட முடியுமா? பிரிந்து சென்றால் பிரிவினையை  ஏற்கத் தயாராக உள்ளீர்களா? ஏனெனின் ஒரு சிறுபான்மை இனத்தின் அதிகூடிய சுதந்திரம் என்ன? இதை லெனின் பிரிந்து போகும் சுதந்திரம் சுயேச்சையான தேசிய அரசு ஒன்றை அமைத்துக் கொள்ளும் சுதந்திரம் ஆகியவற்றை விட ஒரு சிறு தேசிய இனத்துக்கு பெரிய சுதந்திரம் வேறு என்ன இருக்க முடியும்.

 

லெனின் தேசிய கொள்கையும் பாட்டாளி வர்கக சாவதேசவாதமும்.

உலகம் முழுவதிலும் தேசிய அரசு என்பது பொதுவாக விதியாக உள்ளது அதே நேரத்தில் பல் தேசிய இன அரசு என்பது விதிவிலக்காக இருக்கிறது.

லெனின்

 

ஒரு தேசிய இனம் எப்போதும் வேறு ஒரு தேசிய இனத்தின் அடக்குமுறையை விரும்பவில்லையோ அப்போதே அதற்கு எதிராக போராடுகின்றனர். இந்தவகையில் சிங்கள தேசிய இனத்துக்கு எதிராக மலையக முஸ்லீம் தேசிய இனம் எப்போது பிரிவினையை நாடுகிறது. இதை லெனின் எப்பொழுது தேசிய ஒடுக்கு முறையும் தேசியத் தகராறும் ஒன்றிணைந்தும் வாழும் வாழ்க்கையை சகிக்க முடியாதாக்குகிறதோ எந்தவித பொருளாதார தொடர்புகளையும் தடை செய்கின்றனவோ அப்பொழுது மட்டுமே பிரிவினையைக் கையாள்வார்கள். அப்போது பிரிவதானால் முதலாளித்துவ வளர்ச்சியின் நலன்களும் வர்க்கப் போராட்டச் சுதந்திரத்தின் நலன்களும் சிறந்த பயன்பெறுகின்றன.
லெனின் தே.இ.சு.உ

 

ரொக்சிய வாதிகளே உங்கள் சுயநிர்ணய உரிமைக்கான விளக்கம் என்ன? எப்போது பிரிவினையை ஏற்றுக் கொள்வீர்கள். பிரிவினை என்பது பிற்போக்கானது நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனின் சுயநிர்ணய உரிமை என்பது உங்களுக்குப் பெயரவில் தமிழ்மக்களையும், முஸ்லீம், மலையக மக்களையும் ஏமாற்றும் ஒரு தந்திரமே. அதேநேரம் ஒடுக்கும் அரசுக்கு துணைபோகிற செயற்பாடே. ஒரு பாட்டாளி தேசிய விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாள வேண்டும் இதை லெனின் சோசல் டெமாகிராட்டுக்கள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அதாவது  ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் தனியே பிரிந்து செல்லும் உரிமையை மறுப்பார்களானால் அல்லது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பூர்சுவாக்களின் தேசியக் கோரிக்கைகள் அனைத்தையும் ஆதரிப்பார்களானால் அவர்கள் பாட்டாளிவர்க்கக் கொள்கையிலிருந்து வழுவியவர்கள் ஆவார்கள.; பூர்சுவாக்களின் கொள்கைப் போக்குக்குத் தொழிலாளிகளைக் கீழ்ப்படுத்தியவர்கள் ஆவார்கள். (லெனின் தே.இ.சு.உ).

தமிழ் பாட்டாளிகள் ஆகிய நாம் தமிழ்  மக்களின் எல்லாக் கோரிக்கையையும் ஏற்றது கிடையாது. அந்தவகையில் புலிகள் முதல் அனைத்தையும் தெளிவாக விமர்சிக்கிறோம். அதேநேரம் தமிழ் மக்களின் பிரிவினையை ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனின் ஒடுக்கும் அரசின் சகிக்க முடியாத அடக்குமுறையும் இன்று அவர்கள் அதிலிருந்து மீள்வது ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன் நிபந்தனையாகவும் உள்ளது. அப்படி பிரியும் ஒரு தேசியத்தை ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சியாக மாற்றுவது தமிழ்ப் பாட்டாளிகளின் கடமை. இதை நிராகரிக்கும் ரொக்சியவாதிகளுக்கு லெனின் கீழ் குறிப்பிடுவது போல் கோட்டைவிடவோ முடியும். நாங்கள் பின்லாந்து தேசமெதையும் அங்கீரிக்கப்போவதில்லை. தொழிலாளி வர்க்கப் பின்லாந்து தேசம் தவிர என பிரகடனப்படுத்தினார். அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. உண்மையில் நிலவுவதை நாம் அங்கீகரிக்க மறுத்தால் அது நம்மை அங்கீகரிக்கும்படி நிர்பந்திக்கும். (லெனின் தொகுதி)

 

தமிழீழப் போராட்டத்தை நாம் இன்று ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியாக மாற்றவேண்டிய கடமையை நாம் மறந்து விட்டால் நாம் தமிழீழத்துக்கு மட்டுமல்ல இலங்கைப் புரட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களாவோம். இந்த வகையில் தேசியவிடுதலை போராட்டத்தை அங்கீகரித்து ஆதரிக்கத் தவறின், அவர்கள் ஒரு தேசிய வெறியரே. இது ரொக்சிகளுக்கும் பொருந்தும். இதை லெனின் ஏதாவது ஒரு தேசத்தை சேர்ந்த ஒரு சோசலிட் ஒடுக்கப்படும் தேசங்களுக்கு சுயநிர்ணய உரிமையை (அதாவது பிரிந்து போவதற்கான உரிமையை) அங்கீகரிக்காவிட்டால் அதற்காக போராடாமல் விட்டால், உண்மையில் அவர் ஒரு தேசிய வெறியரே தவிர சோசலிஸ்ட் அல்ல. (லெனின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதம்.)

 

நாம் மேலே விளக்கியபடி ஒரு தேசிய இன பிரச்சனைகளில் பாட்டாளிகள் என்ன நிலையெடுக்க வேண்டும் என்பதை லெனின் தெளிவாக வரையறுத்துள்ளார். ஆனால் ரொக்சிகள் லெனினை ரொக்சிக்கு சமனாக நிறுத்தியபடி லெனினுக்கு மாறாக அன்று ரொக்சி சொன்ன அதே கருத்தை முன்வைத்துள்ளனர். அதுவே தங்களை ரொக்சியவாதிகள் என பெருமையாக அழைத்து லெனினை புறங்காலினால் குழிக்குள்  தள்ளி மூடிவிட முனைகின்றனர். ரொக்சியின் மார்க்சிய விரோதக்கருத்துக்களை லெனின் அன்றே அம்பலப்படுத்தியிருந்தார். ரொக்சியம் போல்சிவிக் புரட்சியில் தத்துவார்த்த துறையில் எதையும் சாதிக்கவில்லை ஆனால் ரொக்சி போல்சிவிக் தத்துவத்தை ஏற்றதாக பிரகடனப்படுத்தியபடி கட்சிக்குள் குழுவாக இணைந்தவர். உண்மையில் போல்சிவிக் தத்துவத்தை ஏற்றாரா என்பதை இக்கட்டுரையில் நாம் தவிர்க்கிறோம்.

 

இன்று ரொக்சியவாதிகள் ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளுக்கும்,  ஜனநாயகப்புரட்சி நடைபெற்ற நாடுகளுக்கும் இடையில் என்ன யுத்த தந்திர வேறுபாட்டை கொண்டுள்ளனர். ஜக்கிய முன்னணி தொடர்பான கோட்பாட்டை எப்படி வரையறுக்கின்றனர். ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர் எந்த வர்க்க பிரதிநிதிகள் ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளின் ஆயுதப்போராட்டத்திற்க்கான வடிவங்கள் என்ன? சீனா மாதிரி கொரில்லா போராட்டமா? அல்லது தேசிய சுயநிர்ணய உரிமையென்பது அடிப்படையில் (லெனின் குறிப்பிட்டது போல்) பிரிவினைதான் என்பதை ஏற்கின்றீர்களா? இவைகளுக்கே ரொக்சிகள் பதிலளிக்க வேண்டும் அதைவிடுத்து குட்டிபூர்சுவா, ஸ்டானிஸ்ட்டுக்கள், முதலாளித்துவவாதிகள் என வெற்றுக் கூச்சல் இடுவதால் புரட்சி வந்துவிடாது. உங்கள் கருத்தும் வெற்றி பெற்று விடமுடியாது.