08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

வடகிழக்கத்தைய மாநிலங்கள்

1970களில் பலரால் வரவேற்ப்பட்ட வடகிழக்கத்தைய தேசிய இனங்களின் சுயநிர்ணய, சுயாட்சி உரிமைக்கான போராட்டங்கள் இன்று புரட்சிகர அரசியல் தலைமை இல்லாமல் சீரழிந்து குட்டிபூர்சுவா தலைமையிலான குறுந்தேசிய இனவெறிக்குள் மூழ்கி விட்டது. அன்று மணிப்பூர், நாகலாந்து, மீசோராம், அசாம், திரிபுரா என்று கொழுந்து விட்டெரிந்த தேசிய விடுதலைப்போராட்டங்கள் இன்று இனவெறி வன்முறையாளர்களாக சீரழிந்து போயுள்ளன. 

இன்று மணிப்பூரில் நாகா-குக்கி இனங்களுக்கு இடையிலான இனவெறி மோதலின் உச்சக்கட்டமாக சில்தான் என்ற கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.  தாக்குதலுக்கு பயந்து கிராமமக்கள் பயந்து ஓடியதும் நாகர்களினால் அக்கிராமமே கொழுத்தப்பட்டுள்ளது. பிறிதொரு சம்பவத்தில் லாசன் என்ற கிராமத்தில் 10 குக்கி இனத்தவர் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான திடீர் தாக்குதல்களில் அப்பாவியான கிராம மக்கள் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.  இதனால் இன்று மணிப்பூர் இநதிய இராணுவத்தின் தலையீட்டிற்கும் வெறியாட்டத்திற்கும் களமமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் அசாமில் போடோ இனத்தவர்கள் ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை நடாத்தி வருகின்றனர். இவர்களின் தாக்குதல்களாhல் 2 இலட்சம் சிறுபான்மை இனத்தவர் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தமது விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட தேசிய இனங்கள் தமது குட்டிபூர்சுவா குட்டி முதலாளித்துவ தலைமையின் காரணமாக திசைதவறி சீரழிந்து குறுந்தேசியவாதிகளாக இனவெறிக்கு பலியாகி தமது இனத்தின் விடுதலைக்கும் எதிராக மாறி விடுகின்றனர். இங்கு புலிகள் இன்னுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களை நரவோட்டையாடுவது ஒப்புநோக்கதக்கதாகும். இது ஸ்ரீலங்கா இனவெறி பாசிச அரசின் சூழ்ச்சிகளை முஸ்லீம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி அவர்களை வென்றெடுப்பதற்கு பதிலாக எதிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகி அவர்களை எதிரியின் பக்கம் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.

 

ஒரு சரியான புரட்சிகரமான பாட்டாளிவர்க்க கட்சியின் தலைமையில்லாமல் எந்த ஒரு போராட்டமும் சரியான திசைவழி செல்ல முடியாதென்பதை இவ்வனுபவங்கள் எமக்கு காட்டி நிற்கின்றன.


பி.இரயாகரன் - சமர்