08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

புரட்சிகரத் தலைமை அற்று சீரழியும் தேச விடுதலைப் போராட்டங்களும். ஏகாதிபத்திய தலையீட்டு அபாயமும்

ஆசியாவில் பல தசாப்தங்களாக பல தேசவிடுதலைப் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்று தென் கிழக்கு ஆசியாவே தேசவிடுதலைப் போராட்டங்களின்  முக்கிய களமாக திகழ்கிறது. உண்மையில் இப் போராட்டங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பை நேரடியாகவோ,  முறைமுகமாகவோ கொண்டவையே. ஆனாலும் கூட இம் மக்கள் போராட்டங்களை தலைமை தாங்குபவை யாவும் புரட்சிகர சக்திகள் அல்ல என்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயம். பரந்துபட்ட மக்களின் தியாகங்களை அர்ப்பணிப்புக்களை, ஒரு சிறுபகுதி அற்ப சலுகைக்காக காட்டிக்கொடுப்பதைக் காணமுடியும்.

ஒரு சரியான புரட்சிகர சக்தியின் தலைமை, வழிகாட்டல் இல்லாமல் போனால் இப் போராட்டங்கள் பின்னடைவது தவிர்க்க முடியாதது.  பர்மா மக்களின், தேசிய சிறுபான்மை இனங்களின் மனிதஉரிமை, ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்து சர்வாதிகார பாசிச ஆட்சியை நடத்திவரும் இராணுவக் கும்பலின் ஆட்சிதான் இன்றைய பர்மாவின் தலைவிதி. ஆனால் இவர்களின் பாசிச ஆட்சிக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய ஜனநாயகப் போராட்டங்களை, மாணவர் போராட்டங்களை நசுக்கியதுடன், 1990 இல் நடைபெற்ற முடிவுகளை உதாசீனம் செய்தது. இதனால் நகரங்களை விட்டு எல்லைப்பகுதிகளுக்கு வெளியேறிய மாணவர்கள், ஜனநாயக சார்பு சக்திகளுடன் ஒரு பொது அடிப்படையில் அனைத்து இன விடுதலை இயக்கங்களும் ஜக்கியபபட்டு இராணுவத்துக்கு எதிராக போராட முடிந்தது. ஆனால் நிலமை இன்று தலைகீழாக மாறிவிட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிரான ஜக்கியப்பட்ட முன்னணியில் அங்கம் வகித்த மிகப்பலமான இராணுவ அமைப்பைக் கொண்ட காசின் விடுதலை இயக்கம் இராணுவத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இத் தேசிய விடுதலை இயக்கம் 1961 இல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து போராடி வந்துள்ளது. 1940 முதல் போராடிவருகின்ற இன்னொரு தேசிய இன விடுதலை இயக்கமான காரின் தேசிய யூனியன் மேற்படி போர்நிறுத்த உடன்படிக்கையை விமர்சித்த போதிலும் தாய்லாந்தின் அழுத்தத்தால் அதுவும் இராணுவ யுந்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு முயலுகிறது. இவற்றை விட ஏனைய சிறிய ஜந்து தேசிய இன விடுதலை இயக்கங்கள் யுந்தாவுடன் சமாதான ஒப்பந்தத்தைச் செய்துள்ளன. பாசிச இராணுவக் கும்பலின் பிரித்தாளும் தந்திரம் ஜக்கிய முன்னணியினைச் சிதைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

 

இவ்வாறான பின்னடைவுக்கு முக்கியமான பிரதான காரணம் புரட்சிகரமான அரசியல் தலைமை இல்லாததென்பதே. அடுத்த மறைமுக காரணம் ஏகாதிபத்தியத்தின் தலையீடு என நாம் ஊகித்துக் கொள்ள முடியும். முன்னைநாள் இராணுவச் சர்வாதிகாரி நொறிக்காவை காவிச் சென்ற புதியவர்களுக்கு வழி சமைத்தும் கழுகுகள் என்பதை நாம் மறக்க முடியாது.


பி.இரயாகரன் - சமர்