தேடகம் தீக்கிரை

அராஜகத்துக்கு மூளையே இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலங்களில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அரசியல் வன்முறையின் தீவிரம் பரவிவருவதை கண்டுவருகிறோம். பாரிஸ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீவைப்பு,  திரு சபாலிங்கம் படுகொலை, தேடகம் நூல் நிலையம் எரிப்பு என சம்பவங்கள் தொடர்கின்றன.

23.05.1994 அன்று கனடாவிலுள்ள தமிழர் வகைதுறைவள நிலையத்தினரால் நடாத்தப்பட்டு வரும் தேடகம் நூல் நிலையம் சில நாசகாரர்களால் தீ வைத்து எரியூட்டப்பட்டதில் ஆயிரக்கணக்கான நூல்கள் எரிந்து நாசமாகியது. சம்பவத்தின் பின் நூலகத்தின் முன் நடாத்தப்பட்ட அராஜக எதிர்ப்புக் கூட்டத்தில் குறிப்பிட்டளவு மக்கள் கலந்து கொண்டதுடன் தமது கண்டனங்களையும் தெரிவித்தனர்.  1981 இல் ஸ்ரீலங்கா இனவெறி அரசு யாழ் நூல்நிலையத்தை தீயிட்டு தமிழ்சமுதாயத்தின் சிந்தனையை மழுங்கடிக்க முனைந்தது. இன்று தமிழ்சமூகத்தின் விடிவுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் நவீன பாசிஸ்ட்டுக்களால் ஆயிரக்கணக்கான அறிவியல் நூல்கள் தீயிடப்பட்டுள்ளன.

 

மாற்றுக் கருத்துக்களின் மீதான வன்முறையில் ஈடுபடுபவர்களே! உங்கள் செயல்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உந்தித்தள்ளுவதற்கான வழிமுறைகள் என நம்புகின்றீர்களா? தயவு செய்து நூல்களை எரிப்பதை நிறுத்திவிட்டு, அவற்றை கொஞ்சம் புரட்டிப்பாருங்கள். அப்போதாவது சிலவேளை புரியும் விடுதலைப்போராட்டம் என்றால் என்னவென்று. செய்வீர்களா?
நிறுத்து படுகொலைகளை!! நிறுத்து தீ வைப்புக்ளை!!