நடைபெற்ற தென்மாகாண சபை தேர்தலில் ஜ.தே.கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிகாரத்தினை கைப்பற்றியது மக்களுக்கு கிடைத்த வெற்றியா? அண்மைக்காலங்களில் வடக்கு கிழக்கு யுத்தத்தில் அரசிற்கு கிடைத்த பின்னடைவுகளும் வடபகுதி மேலான பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க இருக்கும் நேரத்தில் தென்மாகாண மக்கள் ஆளும் கட்சியை நிராகரித்தது  விசனத்துக்குரிய விடயமுமாகும். அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதியும் பிரதமரும் இனப்பிரச்சனை பற்றி சிங்கள மக்களை வெறியூட்டக்கூடிய கருத்துக்களை வெளியிட்டும் தேர்தலில் தோல்வி அடைந்தனர். ஜ.தே.கட்சி அம்பலப்படுத்தப்பட்டதை இது வெளிப்படுத்துகிறது.

எப்படி  இருப்பினும் விசேடமாக தேர்தல் மோசடி செய்து வெற்றியடையச் செய்யும் பிரேமதாசா கும்பலை ஓரங்கட்டி விட்டு வடக்கு கிழக்கு முஸ்லிம் மலையக தமிழர்களுக்கு எதிராக இனவாத ரீதியில் இனத்துவேச பிரச்சாரத்தை மேற் கொண்டனர். ஜ.தே.கட்சியின் திறந்த பொருளாதார கொள்கையாலும் மக்களை ஏமாற்றும் கவர்ச்சிகர திட்டங்களாலும் ஓட்டாண்டியான மக்கள் வேலையில்லாப் பிரச்சனை, பசி, பட்டினி யுத்த அழிவுகளாலும் இளைஞர்களை நரவேட்டையாடுவது என்றும் தாங்காத துன்பத்தால் மக்கள் கொதித்துப் போயுள்ளனர். இதை சு.கட்சியினர்  தமது வெற்றிக்கு சாதகமாக பயன்படுததினர். அவர்கட்கு இது துரதிஸ்டமான வெற்றியே. ஆனால் ஜ.தேகட்சியினர் தேர்தலில் தோற்றுப்போகாத வரம் பெற்றவர்கள் அல்லவா? வழமைபோல மக்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காடையர்கள், பெருச்சாளிகள் உதவியுடன் தேர்தலில் வெற்றிபெற விருப்பப்பட்டனர். பதிலுக்கு சுதந்திரகட்சியினரும் ஆயுதங்களுடன் அடிதடிகாரர்களை களத்தில் இறக்கினார்கள். பெயரளவில் செயற்படும் மனிதஉரிமை அமைப்புக்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுத்தினர். படுகொலைக் கலவரத்தின் பின் ஜ.தே.கட்சியினர் படுதோல்வி அடைந்தனர். தோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதாக அரசு கொழும்பில் கூச்சல் போடுகிறது. பிரேமதாசா குடும்பத்தினர் தம்மைக் கட்சியிலிருந்து ஓரம்கட்டியதே தேர்தலில் படுதோல்வி அடைவதற்கு காரணம் என்று கொக்கரிக்கிறது. 17வருட ஏமாற்று அரசியல் மறைந்துபோக ஆரம்பிக்கிறது. புதிதாக உருவாகும் சிறிமா, சந்திரிகா குடும்ப அரசியல் அடிப்படை ஜனநாயகத்தை மதிப்பவையா? தேசத்தை புத்துயிர் ஊட்ட இவர்களிடம் என்ன பொருளாதாரக் கொள்கை உள்ளது. 70களின் பின் (சு.க - இடதுசாரி கூட்டமைப்பில் கசப்படைந்துபோன மக்கள் 17வருடத்தின் பின் மீண்டும் சு.கட்சியின் ஏமாற்று வித்தைக்குப் பலியாகப் போகிறார்கள். ஈழவாதிகள் அற்ற நிலையை உருவாக்குவேன் என்று கூறுகிறார் புதிய தலைவி சந்திரிகா.

 

இதன் உள் அர்த்தம் தான் என்ன?  யுத்தத்தை தொடர்வதா? இவரை தலைமையாக கொண்ட பொதுசன முன்னணியினர் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பார்களா? மலையகமக்களின் அடிப்படைக் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? பன்னாட்டு நிறுவனங்களும் தரகுமுதலாளிகளும் தொழிலாளர்களை உறிஞ்சியே வாழ்கிறார்கள். இதற்கு எதிரான நடவடிக்கையை இவர்களால் எடுக்கமுடியுமா? இவர்களின் பௌத்த இனவாத அமைப்பான சிங்கள உறுமய அமைப்பின் ஆதிக்கம் பொதுசன முன்னணி மேல் இருக்கமாட்டாதா? ஏன் இவர்கள் இனப்பிரச்சனை தீர்வுக்கு உருவாக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவிக்குழுவில் எந்த தீர்வும் வைக்காமல் நடந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். நடைபெற இருக்கும் அதிகார மாற்றத்தில் எதிர்பார்ப்புகளுடன் இருப்பின்  நாம் அனைவரும் ஏமாற்றப்படுவோம். ஏமாற்றி ஓட்டுப் பொறுக்கும் அரசியலை நிராகரிப்போம். இச்சமூக அமைப்புக்குள்  தொடர்ந்து மக்கள் தேர்தல் என்ற மோசடிக்கு ஊடாக ஏமாற்றப்படுவர். இச்சமூக அமைப்பை நிராகரித்து புதிய சமூக அமைப்பை உருவாக்க நாம் குரல் கொடுத்து போராடுவோம்.