350வருட பல வீரம் செறிந்த கறுப்பின மக்களின் போராட்டத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வெள்ளை நிறவெறியர்களின் அடக்குமுறைக்கு உள்ளான தென்னாபிரிக்க மக்கள் நீண்ட பல வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். நிறப்பாகுபாட்டுக்கு ஊடாக தமது சொந்த மண்ணை இழந்த கறுப்பின மக்கள் இன்று பெயரளவில் ஒரு  சுதந்திரத்தை கறுப்பு தலைவர் ஊடாக பெற்று உள்ளனர். இலங்கை, இந்தியாவில் 1948இல் வெள்ளை ஆட்சியாளருக்கு பதில் கறுப்பு ஆட்சியாளர்கள் நிரப்பப்பட்டனர். ஆனால் வெள்ளையன் இருந்தபோதும், கறுப்பன் இருந்தபோதும் மக்கள் பெற்றது என்னவோ ஒன்று தான். அதே பொலிஸ் அதே அடக்குமுறை அதே சுரண்டல் எல்லாம் அப்படியே இருந்தது. ஒன்று மட்டும் மாறியிருந்தது.

தென்னாபிரிக்காவில் இன்று கிளார்க்குக்குப் பதில் மண்டேலா. தோலின் நிறம் மாறியுள்ளது அவ்வளவே. முன்பு கிளார்க் செய்து வந்த சுரண்டல் பாதுகாப்பு வேலையை மணN;டலா தான் செய்ய ஒப்புக்கொண்டார். இருக்கும் இடத்தில் நபர்கள், தோல்நிறம் மாறுவதால் அங்கு எல்லாம் மாறிவிடாது ஒரு சமூகத்தில் சொத்து உள்ள பிரிவே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. அவர்களின் பிரதிநிதிகளே மணடேலா, கிளார்க் என யார் வரினும். தொடர்ந்தும் இச்சொத்துடைய மக்களே ஆளப் போகிறார்கள்.  மக்கள் தொடர்ந்தும் பட்டினி வாழ்வுதான். தென் ஆபிரிக்க தங்கம் மேற்கு நாடுகளுக்கு தான் வரவுள்ளது. சொந்தநாட்டு மக்கள் அதை அநுபவிக்க முடியாது. இச்சமூக அமைப்பில்  எந்த மாற்றமும் நிகழாது. மண்டேலா என்ற கறுப்பு தோல் கொண்ட மனிதன்  தொடர்ந்து சுரண்டலை அங்கீகரித்து அதைப் பாதுகாப்பார்.  ஏகாதிபத்திய விசுவாச நாயாக ஒரு தரகு முதலாளித்துவ பாதுகாப்பாளராக விளங்குவார்.  தேசிய இன முரண்பாடுகளை வளர்த்து எடுத்து அதன் ஊடாக மக்களின் பட்டினி வாழ்வை திசைதிருப்புவார். மக்கள் மந்தைகளாக இருக்க சபிக்கப்பட்டவர்கள் எனக் கூறி நாம் சுதந்திரம் பெற்ற கறுப்பு இனம் எனப் பீற்றி ஒரு சகாப்தம் ஏமாற்றி வாழமுடியும்.  மக்கள் பட்டினியாலும் சுரண்டலாலும் இருந்த வாழ்வையும் இழந்து வீதிக்கு துரத்தப்பட்டுக் கொண்டே இருப்பர். இதை நமக்கு இந்தியா இலங்கை சிறப்பாக உணர்த்தியே உள்ளது. வெள்ளைத் தோலுக்குப் பதில் கறுப்புத் தோல் ஆள்வதையே நாம் அங்கு இன்று காண்கின்றோம். ஆனால் எதுவும் மாறவில்லை. இதுவே தான் தென்னாபிரிக்காவில் மண்டேலா ஆட்சியிலும் நாம் காணப்போவது.