திடீர் என சந்திரசேகர் விடுதலை செய்யப்பட்டது உண்மையை அறியாதவர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். கூட்டுப்படை தலைமையக குண்டுவெடிப்பில் சந்தேக நபரான வரதனுக்கு பாதுகாப்பு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த சந்திரசேகரம், தருமலிங்கம், காதர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மலையகத்தில் தொண்டமானின் தலைமைக்கு மாற்றுத் தலைமையாக வளர்ந்து வந்த மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களின் கைது தொண்டைமானின் விருப்புடன் நிகழ்த்தப்பட்டது.

 

மாகாண சபை உறுப்பினராக சிறையில் உள்ளபோது தெரிவு செய்யப்பட்ட சந்திரசேகரை சத்தியப்பிரமாணம் செய்யவிடாமல் தடுத்து வைத்திருந்து அரசு விடாப்பிடியாக அதற்கு கூறிய காரணம் பாதுகாப்பு இல்லை என்பதே. நீதிபதியால் குற்றவாளிகள் அல்ல என அறிவிக்கப்பட்ட பின்பும் இவர்களின் விடுதலையை இழுத்தடிக்கவும் வழக்கை புதிய சாட்சிகளுடன் தொடர்வதிலும் அரசு விடாப்பிடியாக நின்று வந்தது. நீதிபதி இதன் பின்னணியில் அரசியல் காரணம் உண்டு என சொல்லுமளவுக்கு நீதிமன்றத்தின் நீதிகளையே கேலி செய்துள்ளது அரசு. ஆனால் திடீரென சந்திரசேகர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். அதற்கு நீதிமன்றத்தின் அநுமதி எதுமில்லாது தங்கையின் திருமணம் என்ற ஒரு காரணத்தைக் கூறி அரசு விடுதலை செய்துள்ளது.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய மாகாணசபை சத்தியப்பிரமாணம் செய்ய நீதிமன்றம் அனுமதித்த போது அதை நிராகரித்த அரசு திடீரென்று தங்கை திருமணத்துக்கு என விடுதலை செய்துள்ளது. இது நிகழக் காரணம் தொண்டா- செல்லச்சாமி மோதலே அடிப்படை காரணம். செல்லச்சாமி யூ.என்.பியுடன் ஒட்டிக்கொள்ள தொண்டைமானுக்கு எதிரான அணிகளை அரவணைக்கும் முயற்சியில் ஒன்றே சந்திரசேகரின் விடுதலை. சந்திரசேகரின் விடுதலைக்கு முன்பு எதிராக இருந்தவர்கள் தொண்டைமானும் செல்லச்சாமியுமே. மலையகத்தில் மாற்றுத் தலைமை ஒன்று உருவாகுவதை தடுக்கும் நோக்கே இவர்களின் சட்டவிரோத கைதும், தொடர்ந்தும் சிறையில் வைத்தும் இருக்கக் காரணமாகும்.

 

தொண்டா யூ.என்.பி உறவில் விரிசல் ஏற்பட்டு செல்லச்சாமி அரசுடன் கூடிக்குலாவியபடி தொண்டமானை எதிர்க்க சந்திரசேகரை துணைக்கு அழைக்க விடுதலை செய்யப்பட்டார். செல்லச்சாமி 3-4 முறை சந்திரசேகரை சிறையில் சந்தித்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் யூ.என்.பிக்கு விலை போயுள்ளார். இவர் இரகசியமாக தனது கட்சிக்கு தெரியாமலே விடுதலை செய்யப்பட்டார். அம்பலப்பட்டுப் போகாத வகையில் தனது கட்சி ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில் இன்று அறிக்கை விட்டபடி சிறையில் என்ன நடந்தது என்பதை மர்மமாக வைத்துள்ளார்.

 

மற்றும் ஒரே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தருமலிங்கம், காதர் தொடர்ந்து சிறையில் யூ.என். பிக்கு விலை போகாது உள்ளனர். ஆனால் சந்திரசேகர் அவர்கள் பற்றி அக்கறையின்றி வெளிவந்தது மட்டுமின்றி அறிக்கைகளை விட்டு தனது தலைமையை தக்க வைத்து கொள்ள முனைகிறார். மீண்டும் யூ.என்.பி- தொண்டா காதல் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் செல்லச்சாமி, சந்திரசேகரின் அரசியல் வாழ்வு சூனியத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தொண்டமான் சிலவேளை சந்திரசேகரை சிறையில் அடைக்க கோரலாம். ஆனால் சந்திரசேகர் ஒருமுறை யூ.என்.பிக்கு விலைபோய் தனது அரசியல் பிழைப்பு அரசியல் என்பதை நிறுவியதுடன் மலையக மக்களின் மாற்றுத் தலைமை என்பதை பொய்யாக்கி உள்ளனர்.