07062022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி!

மக்களின் விருப்பு இன்றி சட்டவிரோத முறையில் இந்தியா தயவில் 1989 களில் பாராளுமன்றக் கதிரைகளை பெற்று சுகம் கண்டவர்கள் மீண்டும் அதைப் பெற புதிய தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்தவகையில் கூட்டணி 1977க்கு பின் மீண்டும் தேர்தலில் தனியாக நிற்கவும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

அப்புகாத்துமார்களை கொண்ட கூட்டணி 25 வருடமாக தமிழ்மக்களை ஏமாற்றி, தமிழ் தேசிய இனவெறியை ஊட்டி அதில் குளிர் காய்வதுடன், துரோகிகள் எனக் குறிப்பிட்டு சிலருக்கு மரண தண்டனை கொடுத்து தமது பாராளுமன்ற கதிரைகளை பாதுகாத்து அதில் சுகம் கண்ட கூட்டணி மீண்டும் அதற்காக ஏங்குகின்றனர். அதனால் தனித்து போட்டியிடுவது என அண்மையில் நடந்த கிழக்கு மாகாண தேர்தலை தொடர்ந்து துள்ளித் திரிகின்றனர். மீண்டும் மக்களை ஏமாற்ற கூட்டணி பழையபடி மேடைப் பேச்சுக்களையும், பாராளுமன்ற வீரவசனங்களை பேசுவதையும் நாம் காது குளிர மீண்டும் இத் தேர்தல் ஆண்டுகளில் கேட்கப் போகிறோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குமார் பொன்னம்பலம் கிழக்கு தேர்தல் வாக்குகளை பழுதாக்க கோரியவர் பாராளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கு தயாராக உள்ளார். கொழும்பில் ஒரு குழுவை நிறுத்த ஒரு கூட்டத்தை கூட்டி வேட்பாளர்களை பிடிக்க முடியாது போகவே வடக்கு கிழக்கிலும் தேர்தலில் நிற்க முயன்று உள்ளனர். அவர் கூறும் போது வாக்குகளை அளிக்கவும் பழுதுபடுத்தவும் மக்களை ஏமாளிகள் என நினைக்கும் அப்புகாத்து குமார் பொன்னம்பலம் பாராளுமன்ற சுகத்தை பெற எதுவும் செய்வார் என்பதையே மீண்டும் ஒருமுறை பறைசாற்றி உள்ளார். இதை விட புத்திஜீவிகள் சிலர் சுயேட்சையாக போட்டியிட முனைப்பு கொண்டுள்ள இன்றைய நிலையில் எல்லாத் துரோகக் குழுக்களும் நான் முந்தி நீ முந்தி என அலைகின்றனர். அப்பாவி மக்களின் உயிர்களும், அவர்களின் சொத்துக்களும் அழியப் போவதே ஒழிய மக்கள் என்றென்றைக்கும் இச் சமூக அமைப்புக்குள் அடிமைகளாக இருக்கவே இவர்கள் விரும்புகிறார்கள்.

 

அடிமை நிலைக்கு நிவாரணம் அடிமை விலங்கை உடைத்தெறிவது தான். இருக்கின்ற விலங்குகளுக்குப் பதிலாக இன்னொரு விலங்கை மாட்டிக் கொள்வதல்ல.

 


பி.இரயாகரன் - சமர்