08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

மக்கள் யுத்த அரங்கில்.........

நாசகார காட் ஒப்பந்தந்தத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம் ஏப்ரல்-6 இந்தியாவை வல்லாதிக்க அரசுகளினதும் பன்னாட்டு பகாசுரக் கம்பனிகளினதும் காலனியாக மாற்ற வழி வகுக்கும் காட் மற்றும் டங்கல் ஒப்பந்தங்களில் நரசிம்மராவ் அரசு கையெழுத்திட வேண்டாமென இவ் ஒப்பந்தங்களுக்கெதிராக இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தன.

இவ் ஊர்வலத்தில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திரண்டு இந்திய பொருளாதாரத்தை அந்நியமாக்குவதற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்ற ஊர்வலத்தை கலைக்க பொலிஸார் கண்ணீhப்; புகைக்குண்டுகளையும் இரும்புக் குண்டாந்தடிகளையும் பயன்படுத்தியும் விசைநீரைப் பீச்சி அடித்தும் தாக்குதலை நிகழ்த்தினர். ஆயிரக்கணக்கான கண்ணீர்ப் புகைக்குண்டுகள் கூட்டத்தில் வீசப்பட்டது. மக்கள் கற்களாலும், இரும்பு சலாகைகளாலும் பொலிஸ்சாரை தாக்கினர். மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் இற்கு அண்மையில் மக்கள் பொலிஸ்சாருடன் மோதலில் ஈடுபட்டனர். 200 க்கும் அதிகமான மக்களும் பொலிஸ்சாரும் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு இடதுசாரி அமைப்புகள் விவசாயிகள், பெண்கள், இளைஞர் அமைப்புகள், இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. இவ் ஒப்பந்தங்கள் பன்னாட்டு பகாசுரக் கம்பனிகள் இந்தியாவை தாராளமாக சுரண்ட வழிவகுப்பதாகவும் இந்தியாவின் சுயசார்பை ஒழித்துவிடுவதாகவும் விவசாயத்தில் விதைகளுக்கும், உரத்துக்கும், பூச்சிக்கொல்லிக்கும் அந்நிய நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலையை உருவாக்கி விவசாயத்தை அந்நியர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வழியேற்படுவதாகவும் தெரிவித்தனர்

 

பல்லாயிரக்கணக்கான மக்கள் சாபடிஸ்டா கொரில்லாக்களுக்கு ஆதரவு தெரிவித்து மெச்சிக்கோவின் தலைநகரில் ஊர்வலம்.

 

1910 களில் மெச்சிக்கோவின் நிலவுடமையாளருக்கெதிரான விவசாயிகளின் நில உரிமைக்குப் போராடிய விவசாயப்புரட்சி நாயகன் எமிலியானோ சபாட்டா இன் 75வது நினைவு நாளான ஏப்ரல் 10ம் திகதி மெச்சிக்கோவின் பூர்வீக இந்தியர்களும் விவசாயிகளுமாக குறைந்தது 50 ஆயிரத்துக்கு அதிகமாக மக்கள் மெச்சிக்கோவின் தலைநகரத் தெருக்களில் சாபடிஸ்டா கொரில்லாக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடாத்தியுள்ளனர். சாபடிஸ்டா தேசிய விடுதலைச் சேனை இவ் ஆண்டு முதல் தினத்தில் வட அமெரிக்க சுதந்திரவர்த்தக ஒப்பந்தத்தில் (நெப்டா) என்ற பேரில் மெச்சிக்கோவின் வறிய விவசாயிகளது நிலங்களைப் பறித்து அவர்களது வாழ்வைப் பறிக்கும் அமெரிக்க, கனடிய, மெச்சிக்கோ பெருமுதலாளிகளுக்கெதிராக அவர்களது நலன்சார்ந்த மெச்சிக்கோ அரசுக்கெதிராக ஆயுதந்தாங்கிய எழுச்சியை ஆரம்பித்த ஸ்தாபனமாகும். மெச்சிக்கோவின் தலைநகரை அண்மித்த புயூப்ளா எனுமிடத்தில் இவ் ஊர்வலத்தில் இணைவதற்காக திரண்ட பொதுமக்களுக்கும் பொலிஸ்சாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பல பொதுமக்கள் காயமடைந்தனர். ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் கறுப்பு சிவப்பு நிறங்களில் அரசாங்க கட்டடங்களிலும், ஆடம்பரக்கட்டிடங்களிலும் சாபடிஸ்டா தேசியவிடுதலைச் சேனை நீடுழி வாழ்க! மார்க்கோஸ் நீடுழி வாழ்க! ஆயுதப் போராட்டம் வெல்க! என்னும் கோசங்களைப் பொறித்து சென்றனர். அந்நியநாட்டின் பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கும் அவர்களது நலன்சார்ந்த மெச்சிக்கோ அரசுக்கும் எதிராக பாதிப்புறும் அந்நாட்டு மக்களது எதிர்ப்பு எழுச்சி உணர்வையே இந்நிகழ்வுகள் பிரதிபலித்து நிற்கின்றன.

 

இஸ்ரேல் பிரதேசத்தில் வேலைபுரிந்த பாலஸ்தீன தொழிலாளர்கள் விரட்டியடிப்பு.

 

சித்திரை முதல்வாரத்தில் இஸ்ரேல் அரசு 18250 வேலையாட்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து, இஸ்ரேலின் கட்டிடவேலைகளிலும் விவசாயப்பண்ணைகளிலும் இதுநாள் வரையில் வேலை புரிந்து வந்த பாலஸ்தீன தொழிலாளருக்கு பதிலாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து காஸா மேற்குக் கரையில் வசித்துவரும் 20 இலட்சம் பாலஸ்தீன மக்கள் பலத்த பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர். அண்மையில் ஹெப்ரான் மசூதியில் யூதவெறியனால் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டத்ற்கு பழிதீர்க்கும் முகமாக இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர் 3 தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தி 15 இஸ்ரேலிய பொதுமக்களைக் கொன்று பலரை காயப்படுத்தினர். இதையடுத்து காஸா மேற்குக்கரை எல்லை மூடப்பட்டு பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய பிரதேசத்துக்குள் நுழைவது தடை செய்யப்பட்டது. தற்போது பாலஸ்தீன தொழிலாளர்களை நிரந்தரமாகவே இஸ்ரேலிய பிரதேசத்தில் வேலைபுரிவதிலிருந்து விரட்டியடித்து விட்டு வெளிநாட்டு தொழிலாளர்களை அதற்குப் பதிலாக வேலைக்கமர்த்த இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.

 

உழைக்கும் மக்கள் மேதின செய்திகள்

 

மொஸ்க்கோ: இவ்வாண்டின் மே நாள் மொஸ்கோவில் பலத்த பொலிஸ் பந்தோபஸ்துக்கு நடுவே உழைப்பாளி மக்களால் கொண்டாடப்பட்டது. கலவரத் தடுப்பு பொலிஸ், சிறப்பு பொலிஸ் படைகள் கலவரத்தை எதிர்பார்த்து குவிக்கப்பட்டிருந்தன. மொஸ்கோ நகரப் பகுதியில் 5000 பேர்வரையில் லெனின், ஸ்டாலின் படங்களைத் தாங்கியும் செங்கொடிகளை ஏந்தியும் சோவியத் கீதங்களை இசைத்தபடி ஊர்வலமாக சென்றனர்.

 

இஸ்தான்புல் துருக்கி: துருக்கியின் இஸ்தாம்புல் நகரில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள் மே நாளில் ஊர்வலமாகத் திரண்டு துருக்கி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கெதிரான தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர். குர்தீஸ் மக்களினது போராட்டத்தை முன் எடுத்துச் செல்லும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே)யின் ஆதரவாளர்களும் இவ் ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் சில பொதுமக்கள் காயமடைந்ததாக செய்திகள் தெரிவித்தன.

 

போலந்து: கம்யூனிஸ்டுகளாலும் தொழிற்சங்கங்களாலும் ஒழுங்கு செய்யப்பட்ட மே நாள் அணிவகுப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட மாணவர்கள் சோசலிசம் அல்லது மரணம் லெனின் வாழ்கிறார் போன்ற கோசங்களை ஒலித்துச் சென்றனர்.


பி.இரயாகரன் - சமர்