08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

உயிர் மூலக்கூற்றுப் பொறியியல் - வல்லரசுக்களின் புதிய ஆயுதம்!

உலகின் முதலாவது உயிர் மூலக்கூறு பொறியியல் முறைப்படி தக்காளிப்பழம் தை மாத இறுதியில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. சற்றே இனிப்பு சுவை கூடுதலாக உள்ள இந்தத் தக்காளி பன்னாட்டு நிறுவனத்தின் காப்புரிமை பெற்றதாகும். விரைவில் இதன் விதைகள் டங்கல் ஒப்பந்தப்படி மற்ற ஏழைநாடுகளுக்கும் இறக்குமதியாகும்.

இந்த தக்காளியில் சந்தை உயிர்மம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் எந்தவொரு விதையிலும் இந்த உயிர்மம் ஊடுருவி பல்கிப் பெருகும். இந்த உயிர்மம் சாதாரண நாட்டுத் தக்காளிப் பயிரின் நோய் எதிர்ப்புச் சக்தியை படிப்படியாக அழிக்க கூடிய வல்லமை கொண்டது. பன்னாட்டு நிறுவனத்தின் புதிய ரக தக்காளி பயிரிடப்பட்ட நிலத்தை அடுத்து நாட்டுத் தக்காளியைப் பயிரிட்டிருந்தால் நாளடைவில் நாட்டுத் தக்காளிப் பயிர் அழிந்து போகும். உயிர் மூலக்கூற்றுப் பொறியியல்..... இதே போல பருத்தி, சோளம், சோயா, கோதுமை ஆகிய பயிர்களுக்கும் சந்தை உயிர்மம் கொண்ட புதியரக விதைகளை ஏகாதிபத்திய நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. இத்தகைய விதைகள், பயிர்கள் இறக்குமதி செய்யப்பட்டால், ஓராண்டுக்குள் ஏழைநாடுகளின் பாரம்பரிய விவசாயம் திவலாகிவிடும். இதிலே இன்னொரு கொடுமை என்னவென்றால் பன்னாட்டு நிறுவனத்தின் புதியரக விதைகளிலுள்ள சந்தை உயிர்மத்தை அதன் விதையிலிருந்து ஒரு போதும் நீக்கவே முடியாது. எனவே ஒவ்வொரு முறையும் புதிய ரக விதையைக் கொண்டு பயிரிடும் போது சந்தை உயிர்மம் பல்கிப் பெருகி பாரம்பரிய விவசாயத்துக்குப் பேரழிவை ஏற்படுத்திகொண்டேயிருக்கும். ஏழைநாடுகளை ஓட்டாண்டிகளாக்கி நிரந்தரமாக மேலைநாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளுவதே ஏகாதிபத்தியங்களின் நோக்கம். அதை ஈடேற்றுவதற்கு புதிய வகை ஆயுதமாகவே அவை உயிர் மூலக்கூற்று பொறியியலை ஏந்திச் சுழற்றுகின்றன.

 

பயிர்கள் பழங்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அரிய காட்டு விலங்குகள், பறவைகள், பூச்சிகளின் உயிர் மூலக்கூறுகளை இந்தியாவிலிருந்து ரகசியமாக ஏகாதிபத்தியங்கள் கடத்திச் சென்றுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் சிங்கம் சாம்பல் நிற முதலை, மனித குரங்குகளுக்கு அடுத்த கீழ்நிலை பரிணாம நிலையிலுள்ள நீண்ட வால் குரங்குகளின் இரத்தம், இந்திரியம், ஆகியவற்றின் மாதிரிகள் டெல்லி விலங்கியல் பூங்காவிலிருந்தும், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியிலிருந்தும் அமெரிக்காவுக்கு ரகசியமாக கடத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலக்கூறுகளை ஆராய்ச்சி செய்து புதிய வகை உயிர்மத்தை அதில் சேர்த்து விலங்குகளின் உடலில் செலுத்திவிட்டால், பின்னர் நமது நாட்டு அரிய விலங்கினங்கள் படிப்படியாக அழிந்து போகும். சுற்றுச்சூழல் நிலைகுலைந்து போகும். புதிய வகை சிங்கங்களும், குரங்குகளும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும். இந்த உண்மைகளை அமெரிக்க உயிரியல் துறை விஞ்ஞானிகளே பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

 

நன்றி: புதிய ஜனநாயகம்.


பி.இரயாகரன் - சமர்