01-05-1994 மேதினத்தன்று முன்னால் இளைஞர் பேரவை உறுப்பினரும், தமிழ் மாணவர் போரவை ஸ்தாபகரும், நாலாம் மாடியிலிருந்து தப்பியவருமான சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

 

சபாலிங்கத்தின் கருத்துகளுடன் நாம் நேர் எதிரான கருத்துகள் கொண்டவர்கள். அதுபோல் சபாலிங்கமும் எம்மை ஏற்றது கிடையாது. இக்கொலையை ஒட்டி பலவிதமான வதந்திகள் பரப்பப்பட்ட போதும் இக்கொலை ஒரு அரசியல் படுகொலையே. எம்மண்ணில் தொடங்கிய மாற்றுக்கருத்துக்களுக்கு கொலை என்ற தீர்வு இந்தியாவுடன் நிற்காது மேற்;கு நாடுகளிலும் தொடரத் தொடங்கியுள்ளது.

 

பாரிசில் 31-12-1993 இல் நடந்த துப்பாக்கி பிரயோகம் பின் ஈழநாடு எரிப்பு, இன்று சபாலிங்கம் கொலை என ஒரு தொடர் கதையாகவே மாறி உள்ளது. இது போன்று கனடாவிலும் பல தரம் நடந்துள்ளது.

 

நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம். மாற்றுச் சிந்தனைகள் மறுக்கப்பட்ட ஒரு தமிழ் சமுதாயத்தை படைக்கவா எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனினும் சிந்தனையும் சமுதாய நலன்களை பேணவேண்டும். இல்லாது சமுதாய நலன் பேணமறுப்பின் அதை அம்பலப்படுத்த வேண்டும். இது அனைத்துத் தரப்பினரினும் கடமை. இன்று இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவபவர்கள் மேற்குநாட்டு மக்களுக்கு எம்மை பயங்கரவாதிகளாக வன்முறையாளர்களாக காட்டுவதற்க்கு துணை போகிறார்கள். இது எம் ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்தும் அம்சம் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கின்றனர். தமிழீழப் போராட்ட வரலாற்றில் தொடரும் இது போன்ற கொலைகள் முடிவற்றதாகவே உள்ளன. தமிழ் சமுதாயத்தை சிந்திக்க மறுக்கும் ஒரு சமுதாயமாக மாற்றி விடமுடியுமா என்ன? எம் மண்ணில் மாற்றுக்கருத்து மீதான தாக்குதல்கள் பெரும்பாலான மக்களை ஒதுங்க வைத்துள்ளதுடன் ஓடவும் வைத்துள்ளது. இந்தியாவில் இது போன்ற தாக்குதல்கள் மூலம் பின்தளத்தை தமிழீழப் போராட்டம் இழக்க காரணமாகியது. இது மேற்குநாடுகளில் தொடரின் நாம் எதை சாதிக்கப்போகிறோம். மேற்குநாட்டு மக்கள் முன் நாம் ஒரு பயங்கரவாதிகளாக மட்டுமே உயிர்வாழமுடியும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் இது போன்ற தாக்குதல்களை நிறுத்தக் கோருகிறோம். மாற்றுக்கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முனைப்பு பெறுவதே ஒரே வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஜரோப்பிய பாராளுமன்றம் அண்மையில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை தடைசெய்யக் கோரியுள்ளனர். சபாலிங்கம் படுகொலையுடன் மீண்டும் அக்கோரிக்கை ஜரோப்பிய பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டுள்ளது. இது விடுதலைப்புலிகள் மீதான தடையல்ல. மாறாக இது தேசிய விடுதலைப் போராட்டம் மீது தான் இத்தடை. வன்முறைகளும் மிரட்டல்களும் இதுபோன்ற தடைகளை ஊக்குவித்து தேசியவிடுதலைப்போராட்டத்தைப் பலவீனப்படுத்துகின்றன. வன்முறையில் ஈடுபடுவோர் இந்தியமக்களின் ஆதரவை இழந்தது போல் ஜரோப்பிய மக்களின் ஆதரவை இழக்கத் துணைபோகின்றனர். இது கனடா என எல்லா புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடரலாம். உண்மையில் விடுதலையில் விருப்பம் உள்ள ஒவ்வொருவரும் வன்முறையைக் கைவிட்டு பதிலாக கருத்துக்கு கருத்தியல் ரீதியில் பதில் அளிக்க கோருகிறோம். இதன் ஊடாக தமிழீழப் போராட்டத்துக்கு எமது பங்களிப்பை செய்ய முடியும்.