கடந்தகால யுத்தம் தொடர்பாக அனைத்தையும் மூடிமறைத்து வடிகட்டித்தான், அரசு யுத்தக் காட்சிகளை வெளியிட்டது. இருந்தபோதும் அவர்கள் கடந்தகாலத்தில் வெளியிட்ட காட்சிகள் பலவற்றை, முழுமையாகவே இன்று அகற்றிவிட்டனர். குறிப்பாக எங்கள் தேசம் என்ற ஈ.பி.டி.பி பினாமி இணையம், போர் தொடர்பான வீடியோக் காட்சிகளை, அரசின் துணையுடன் அன்று அன்றாடம் வெளிக்கொண்டு வந்தது.

இன்று போர்க்குற்றம் பற்றிய விவாதம் முதன்மை பெற்றவுடன், குறித்த எங்கள்தேசம் இணைத்தில் வீடியோ பகுதியை முற்றாகவே அழித்துவிட்டனர். இப்படி அரசுசார்பு குழுக்களும், இந்த போர்க்குற்றத்தில் பங்குபற்றியிருந்தனர். இன்று அதை அழிப்பதில் அவர்களும் முதன்மையான போர்க்குற்ற பாத்திரத்தை வகித்து வருகின்றனர்.

 

யுத்தகாலத்தில் ஊடகவியல் முதல் தாமல்லாத அனைவரையும் யுத்தப் பிரதேசத்தில் இருந்து முற்றாக அரசு அகற்றியிருந்தனர். தான் கொலைசெய்வது வெளி உலகுக்கு தெரியக்கூடாது என்பதே, அதன் மைய நோக்கம். எந்த வழியிலும், யாரையும் புலிகளை கொல்லுகின்றோம் என்பது முதல் மக்களை கொல்வதை எல்லாம் மூடிமறைக்க விரும்பியது. இந்த வகையில், அரசு வெளியிட்ட யுத்தக்காட்சிகள் என்பது, உண்மைகளைத் குழிதோண்டிப் புதைப்பதாக இருந்தது. இப்படி அரசு – புலி வெளியிட்ட யுத்தக் காட்சிகள், மற்றும் அவர்களின் யுத்த ஆவணங்கள், தங்கள் தரப்பு உண்மைகளை குழிதோண்டி புதைப்பதை அடிப்படையாக கொண்டு தங்கள் சொந்தப் பிரச்;சாரத்துக்காக அதை வெளியிட்டனர். 

 

உண்மைகளோ இதற்கு வெளியில் இருந்தது. அந்தக் காட்சிகள் வெளிவரவில்லை. சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட நபர்கள் மூலம், அவை சிறியளவில் கசிந்து வெளிவருகின்றது. 

 

தனிப்பட்ட இராணுவ வீரனின் ஆர்வக்கோளாறு, பெண்களை நிர்வாணமாக்கி ரசிக்கின்ற ஆணாதிக்க வக்கிரங்கள், இது போன்ற காட்சிகளை தம் மன வக்கிரங்களுக்கு அமைய தங்கள் கைத்தொலைபேசிகளில் எடுத்துவிடுகின்றனர். அதை தமது ஆணாதிக்க வக்கிர வட்டத்துக்குள் சுற்றுக்கும் விடுகின்றனர்.

 

இந்த வகையில் வெளியாகிய காட்சி தான் இதுவும். இவை அரசின் அனுமதியுடன் வெளிவருவதில்லை. இதை வெளியிட்;டால் அல்லது வைத்திருந்தால் மகிந்த குடும்பம் படுகொலை செய்யும். எதை மூடிமறைக்க "ஜனநாயக" அரசு விரும்புகின்றதோ, அதில் ஒன்றுதான் இந்தக் காட்சியும். இந்தக் காட்சியை இனியொரு இணையத்தில் முதலில் எம்மால் பார்க்க முடிந்தது.

 

 

பல நூற்றுக்கணக்கான காட்சிகள், இது போல் வெளிவரும் என்பது திண்ணம். அரசு இவற்றை மறுப்பதும், இது தமது நாட்டின் இறைமைக்குள் தலையிடுவதாக கூறி, தனது கொலைகார கும்பல் ஆட்சியை தக்கவைக்கவே முனைகின்றது. தங்கள் குற்றத்தை மூடிமறைத்து, நாட்டின் செல்வத்தை திருடும் கூட்டம் தான், நாட்டின் இறைமை பற்றி பேசுகின்றது. புலிகள் வைத்திருந்த பணம், தங்கம் அனைத்தையும் இந்த மகிந்த குற்றக் கும்பல் கொள்ளயடித்துள்ளது. பிரபாகரன் மகன் கொண்டு செல்லவிருந்த பார்சல்கள் சில, தனி 1000 ரூபா தாள்களாலானது. இந்தக் காட்சி அன்று வெளியாகி, இன்று அவை காணாமல் மறைந்துவிட்டது. புலிகள் யுத்தத்தின் முதல்நாள் கூட, மக்களிடம் இருந்த தங்க நகையை, பவுன் ஒன்றுக்கு 250 ரூபாவுக்கு வாங்கிக் குவித்தனர். மக்கள் ஒரு நேர கஞ்சிக்கு இது உதவும் என்று நம்பி புலியிடம் விற்றனர். அதை எல்லாம் சரணடைந்த புலிக் கூட்டம் தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்றது. சரணடைந்தவர்களைக் கொன்ற மகிந்த குடும்பம், அந்த பணத்தை நகைகளையும் கொள்ளையிட்டுள்ளது. இதுபோல் புலியின் ஆயுதங்களை கூட, மகிந்த குடும்பம் தனிப்பட விற்றுவிட்டது. ஆயுதக் கண்காட்சியை வைப்பதை தடுத்து நிறுத்தியதும் இந்த வகையில்தான்.

 

இந்த அரசு தான் குற்றவாளியல்ல என்றால், போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்றால், சுதந்திரமான விசாரணைக்கு அனுமதிக்கும். மக்களைச் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும். புலிக் கைதிகள் பற்றிய விபரத்தையும் வெளியிடுவதுடன் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கும்.

 

கொலைகார அரசின் கொடூரங்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களும், புலிகளும், தமக்குள் கொண்டுள்ள உண்மைகளை பகிரங்கமாக்கி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகத்தான், கொலைகார அரசு அவர்களை ஏதோ வகையில் சிறை வைத்திருக்கின்றது. 

 

குறிப்பாக இறுதியுத்தம் வரை பங்குபற்றிய புலி உறுப்பினர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் தான் இதை கண்கண்ட சாட்சிகளாக இருப்பதாலும், குறிப்பாக மே 16 சரணடைந்தது உட்பட அனைத்தையும் மூடிமறைக்க விரும்பும் அரசு அவர்களைக் கொல்லும்.

 

இந்தவகையில் தான் கைதான புலி உறுப்பினர்கள் விபரத்தைக் கூட வெளியிடவில்லை. இறுதியில் நடந்ததை தெரிந்து கொண்டவர்களை இனம் காணவும், அவர்களைத் தெரிவு செய்து கொல்வதும் என்பது, இன்று வெளிப்படையான உண்மை.   

 

அரசு தன்னைப் பாதுகாக்க சாட்சியங்களை அழிக்கின்றது. தாம் கொள்ளை அடித்ததை மூடிமறைக்க, நாட்டின் இறையாண்மை பற்றி பேசுகின்றது. ஒரு நீதி விசாரணைக்கு உள்ளாக மறுக்கும், குற்றக்கும்பலின் ஆட்சி தான் இன்று நடக்கின்றது. இதைத்தான் இந்தக் காட்சி, மீள உறுதி செய்கின்றது.

பி.இரயாகரன்
25.05.2010