தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் மின்கட்டண உயர்வு பற்றி பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை மதுரைஇ கோவைஇ திருச்சி ஆகிய தமிழகத்தின் 4 பெரிய நகரங்களில் நடைபெற்றது. திருச்சியில் 15.4.10 அன்று கூட்டம் நடைபெற்றபோது மின்திருட்டு மின் பற்றாக்குறை மின்சார சிக்கனம் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளும் நுகர்வோர் அமைப்புகளும் பொதுமக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர். ஆணையத்தின் தலைவர் கபிலன் இது அரசியல் கூட்டமல்ல என்றும் கூச்சல் குழப்பம் கலகம் செய்தால் போலீசார் அவர்களை வெளியேற்றுவார்கள் என்றும் எச்சரித்தார். அதற்கேற்ப அரங்கத்தினுள் எல்லா பக்கமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் 200 பேர் வீதம் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஒவ்வொருவரின் முகவரி பெற்று வீடியோ படம் எடுத்துப் பீதியூட்டினர். ஏற்கெனவே ஏற்பாடு செய்து அழைத்து வரப்பட்டவர்கள் பிரச்சினைகளைப் பேசாமல் திசைதிருப்பினர்.

தமிழ்நாடு மின்உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் விவசாயிகளுக்குத் தரப்படும் இலவச மின்சாரத்தில் விதிமுறைகள் மீறப்படுவதாகவும் விவசாயிகள் மின்திருட்டில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். இதை எதிர்த்து விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்ற ம.க.இ.க வி.வி.மு பு.மா.இ.மு பு.ஜ தொ.மு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கண்டனம் தெரிவித்து அவரை மேடையை விட்டு இறங்கச்சொல்லி முழக்கமிட்டனர். ஆணையத் தலைவரோ அபாண்டமாக குற்றம்சாட்டியவரைக் கண்டிக்காமல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்களை மிரட்டியதோடு போலீசாரை வைத்துக் கட்டாயமாக வெளியேற்றினார்.

 

அரங்கத்தின் வெளியே தள்ளப்பட்ட தோழர்கள் அங்கே பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடக்கும் இந்தக் கேலிக்கூத்தை விளக்கி அவர்களையும் அணிதிரட்டி திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ""தரகு முதலாளித்துவ பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை நிறுத்து! விவசாயிகளுக்குத் தடையின்றி மின்சாரம் இலவசமாக வழங்கு! கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நாடகமாடாதே! மின் கட்டண உயர்வைத் திணிக்காதே!'' என்ற முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அதிகார வர்க்கமும் போலீசும் அரண்டுபோனது. மறுபுறம் கருத்துக் கணிப்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த இதர தோழர்கள் மின் பற்றாக்குறைக்கான உண்மையான காரணத்தை விளக்கியும் மாற்று கருத்து கூறுபவர்களை கட்டாயமாக வெளியேற்றதைக் கண்டித்தும் கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு இல்லை என்பதையும் விளக்கிக் கருத்துரைத்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களும் விவசாயிகளும் இதை உற்சாகத்துடன் வரவேற்று ஆதரித்தனர். இறுதியாகப் பேசிய தலைவர் தமக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதோடு இக்கருத்துக்களை அரசுக்குத் தெரிவிப்பதாகப் பம்மினார்.

 

- பு.ஜ.செய்தியாளர் திருச்சி.