Language Selection

புதிய ஜனநாயகம் 2010

இனி திரும்பி வரவே முடியாத தங்கள் மகள் சரிதாவை எண்ணி எண்ணி அழுது கொண்டிருக்கின்றனர் அவளின் பெற்றோரான நாகேஸ்வராவெங்கட்டம்மா தம்பதியினர். ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்திலுள்ள லெச்சுமி நகரம் மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்து வந்த அந்த 13 வயது சிறுமி கடந்த ஜனவரி 21 அன்று காலையில் அசைவற்ற நிலையில் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்ட அப்பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். செல்லும் வழியில் கடுமையான வலிப்பு ஏற்பட்டு சரிதா இறந்துவிட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாளன்று பத்ராச்சலம் அருகே உள்ள யெர்ரகட்டு கிராமத்தில் சொடிசாயம்மா எனும் 13 வயது சிறுமியும் இதேபோல திடீரென வலிப்பு நோயால் இறந்துவிட்டார். கம்மம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக செயல்படுத்தப்பட்டு வரும் கருப்பைப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டமே இவர்களின் திடீர் மரணங்களுக்குக் காரணம். இருப்பினும் ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சரான நாகேந்தர் தடுப்பூசி மருந்தினால் சாவுகள் நடக்கவில்லை என்று கூசாமல் புளுகுகிறார்.

 

ஒவ்வோராண்டும் இந்தியாவில் 1.3 கோடி பெண்களுக்குக் கருப்பை நுழைவாயில் பகுதியில் புற்று நோய் கண்டறியப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்நோயால் 74 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர். பெண்களில் பலருக்கும் பரவலாக வரும் நோயான மார்பகப் புற்றுக்கு அடுத்ததாக அதிகளவில் தாக்கும் நோயாக இவ்வகைப் புற்றுநோய் உள்ளது.

 

இந்நோய் பாலுறவு மூலம் தொற்றக்கூடிய ஹெச்.பி.வி. (Human Papilloma Virus) எனும் வைரஸால் உருவாவதால் பெண்கள் பருவமடையும் முன்னரே இந்த வைரசுக்கான தடுப்பூசியைப் போடுவது என்று திட்டமிட்டு குஜராத்தின் வடோதரா மாவட்டத்தையும் ஆந்திரத்தின் கம்மம் மாவட்டத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். அங்கு 10 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கார்டாசில் எனும் தடுப்பு மருந்தைப் போட்டுள்ளனர்.

 

பாத் (PATH) எனப்படும் உலகில் மிகப்பெரிய சுகாதாரத் துறை சார்ந்த அமெரிக்கத் தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் சென்ற ஆண்டு ஜூலை முதல் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்திட இந்திய அரசும் குஜராத் ஆந்திர மாநில அரசுகளின் சுகாதாரத் துறைகளும் களத்தில் இறங்கின. கம்மம் மாவட்டத்தில் ஒரு தவணையில் ஏழை பழங்குடியினச் சிறுமிகள் 14 ஆயிரம் பேர் வீதம் மூன்று தவணைகளாக இதுவரை 42000 சிறுமிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

கம்மம் மாவட்டத்தில் பழங்குடி மாணவிகளுக்கான லெச்சுமிநகர் உறைவிடப் பள்ளி விடுதியில் தங்கிப்படித்து வந்த 278 மாணவிகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பழங்குடிச் சிறுமிகள் 3 பேர்கள் மருந்தின் பக்கவிளைவுக்குப் பலியாகியுள்ளனர். மிகவும் பின்தங்கிய மக்களிடையே இந்தச் "சோதனை'யை நடத்திவரும் பாத் நிறுவனம் இத்தடுப்பூசி குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தரத் தேவையில்லை என பள்ளித் தலைமையாசிரியரிடமும் விடுதிக் கண்காணிப்பாளரிடமும் கூறியிருந்தது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தார்மீக நெறிமுறைக்கு எதிரானதாகும். கம்மம் பகுதியில் தடுப்பூசி போட்ட பின்னர் 120 மாணவிகளுக்கு வலிப்பு ஒவ்வாமை வயிற்றுப் போக்கு மயக்கம் போன்றவை ஏற்பட்டிருக்கின்றன.

 

பாத் நிறுவனமா இம்மருந்தின் பக்கவிளைவு மிக மிகக் குறைவானது என்கிறது.ஆனால் அமெரிக்கா சார்ந்த ஜூடிசியல் வாட்ச்மற்றும் வேர்ஸ் எனும் அமெரிக்க அரசின் அமைப்புகள் கார்டாசில் மருந்தின் பக்கவிளைவுகளாக இரத்தம் உறைதல் நோய் எதிர்ப்பு சீர்குலைவு வலிப்பு மற்றும் ஒவ்வாiம ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளது. 

 

கார்டாசில் தடுப்பூசியினால் அமெரிக்காவில் மட்டும் 2006க்குப் பின்னர் 61பேர் இறந்துள்ளனர். இதனை அமெரிக்க அரசின் அமைப்பான வேர்ஸ் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. இங்கிலாந்திலும் இதுபோன்ற சாவு செப்டம்பர் 2009இல் பதிவாகியுள்ளது. ஜெர்மனி ஆஸ்திரியாவிலும் கார்டாசில் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு திடீர் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஐரோப்பிய மருந்து முகாமை குறிப்பிட்டுள்ளது. பேசுவது நடப்பது சுவாசிப்பது போன்ற செயல்களைப் புரியும் தசைகள் அனைத்தையும் இந்த மருந்து செயலிழக்க வைக்கும்; நோய் எதிர்ப்பு மண்டலத்தையே தலைகீழாக்கிவிடும்; கணையத்தில் எரிச்சலை உருவாக்கும் என்று நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் எச்சரித்துள்ளது.

 

•••

 

இந்தளவிற்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கார்டாசில் மருந்தை ஆந்திராவில் சோதிக்க முயற்சிக்கக் காரணம் என்ன? கம்மம் பகுதியில் இந்த வகைப் புற்றுநோய் பரவலாக இருந்ததுதான் இங்குள்ள பழங்குடியினர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் என்கிறது ஆந்திர அமைச்சரவை. ஆனால் ""இது அப்பட்டமான பொய்'' என்றும் ""இதனை நிரூபிக்க எவ்விதமான ஆவண ஆதாரங்களும் கிடையாது'' என்றும் பெண்கள் மற்றும் நல்வாழ்வுக்கான சாமா எனும் தன்னார்வக் குழுவும் 80க்கும் மேற்பட்ட நல்வாழ்வுக் குழுமங்களும் மருத்துவர்களும் அரசின் சுகாதாரத் துறைக்கு தங்களது அறிக்கையாகக் கொடுத்துள்ளனர்.

 

இத்திட்டத்தில் பணியாற்றும் மாவட்ட அலுவலரான டாக்டர் ஜெயகுமார் ""எதற்காக இப்பகுதி இம் மருந்தின் சோதனைக் களமாக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. இப்பகுதியில் பெருமளவில் புற்றுநோய் வந்ததாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை. இம்மருந்தின் விளைவுகளை அளவிட எவ்வித அளவுகோல்களும் இல்லை. பிறகு ஏன் இம்மருந்தினைச் சோதித்து நிர்வகிக்க வேண்டும் எனத் தெரியவில்லை'' என்கிறார். குடும்ப நலத்துறை ஆணையாளர் ""நாம் இதைச் செய்தாக வேண்டும்'' என்று வலியுறுத்தியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கம்மம் மாவட்டத்தை ஆய்வுக்காகத் தேர்வு செய்ததன் காரணம் அங்குதான் படிப்பறிவில்லாத பின்தங்கிய ஏழை மக்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளனர். அவர்களிடம் இந்த மருந்தைப் பரிசோதித்தால் எதிர்ப்பு ஏதும் வராது என்ற காரணத்தால்தான் கம்மம் மாவட்டத்தை இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்கிறது சி.பி.எம்.இன் மகளிர் அமைப்பு.

 

""இவ்வகைப் புற்றுநோயே நடுத்தர வயதுப் பெண்மணிகளின் கருப்பையைத்தான் தாக்குகிறது; அவ்வாறிருக்க பாலுறுப்புகள் வளர்ச்சியுற்றிராத சிறுமிகளிடம் ஏன் சோதிக்கிறார்கள்?'' என வினவுகிறார் பத்ராச்சலம் பழங்குடியினர் மத்தியில் மருத்துவம் செய்துவரும் டாக்டர் பிரபாகர். ""இம்மருந்து ஹெச்.பி.வி. வைரசின் வகைகளில் இரண்டை மட்டுமே கட்டுப்படுத்தும். ஆனால் புற்றுநோய்க்கு வேறு பல காரணிகள் இருப்பதால் அவற்றை எல்லாம் இம்மருந்தால் தடுக்க இயலாது. இம்மருந்தை எப்படியாவது சந்தைப்படுத்தும் நோக்கத்தில் கார்டிசாலின் திறன் குறித்த பல விசயங்களை வெளிப்படையாகப் பேச மறுக்கின்றனர்'' என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

கார்டாசில்: புற்றுநோய் மருந்தா? உயிர்க்கொல்லி மருந்தா?""இந்தியாவிலுள்ள ஏழெட்டு வகை கருப்பைப் புற்றுநோய்கள் குறித்துப் போதுமான தகவல்கள் நம்மிடம் ஏதும் இல்லை. எனவே எவ்வளவு தூரத்திற்கு இந்தத் தடுப்பு மருந்து ஒவ்வொரு தனிப்பட்ட நோயாளிகளுக்கும் பலனளிக்கும் என்பதையும் சொல்ல இயலாது'' என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது சோதிக்கப்பட்டிருக்கும் மருந்து ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே வேலை செய்யும். அதன் பின்னர் அதற்கு பின்னூட்டமருந்து எடுக்க வேண்டியிருக்குமா? எவ்வளவு இடைவெளியில் இதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்? பின்னூட்ட மருந்து தடுப்பூசி மருந்தின் மீது எவ்வகையான விளைவுகளை உருவாக்கும்? இந்தத் தொடர் மருந்தூட்டத்திற்கு யார் செலவு செய்யப் போகிறார்கள்? முதலான கேள்விகளுக்கெல்லாம் விடையில்லை. ஏற்கெனவே திருவனந்தபுரம் பகுதியில் புற்றுநோயாளிகளுக்குத் தெரியாமல் சில புது மருந்துகளைச் செலுத்தி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இப்போது கருப்பைப் புற்றுநோய்க்கும் ஆராய்ச்சி நடத்த இந்தியப் பழங்குடியினச் சிறுமிகள் சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

 

உலகளவில் கருப்பைப் புற்றுநோய்த் தடுப்புமருந்துச் சந்தை 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது. அதில் 25 சதவீதத்துக்கும் மேல் இந்தியாவில் உள்ளதென்பதால் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் வாயில் எச்சில் ஒழுக இந்தியா மீது படையெடுக்கும் ஆசையில் உள்ளன.

 

 • கதிர்