தேவனுடைய ராச்சியம் குழந்தைகளுடையது என்றும் குழந்தைகளைப் போல கள்ளம் கபடமற்றவர்களுக்கே சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் என்றும் இயேசு சொல்லி இருக்கிறாராம். ஆனால் தேவனின் ராச்சியத்தை அறிவிக்கக் கிளம்பிய பாதிரிகள் சிலர் குழந்தைகளிடம் அத்துமீறிய பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்டு அம்பலப்பட்டு நிற்கிறார்கள். இவர்களைத் தண்டிக்க வேண்டிய உயர்பீடங்களில் இருக்கும் பிஷப்புகளே இவர்களைத் தப்புவிக்க உடந்தையாக இருந்துள்ளதும் மேற்கத்திய ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.

அயர்லாந்தில் கிருத்துவ சபையால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் சிறுவர்சிறுமியர் மீது பல ஆண்டுகளாகப் பாலியல் வன்முறையைக் கையாண்டு வந்துள்ளனர் பாதிரிகள். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த எட்மண்டாஸ் எனும் பாதிரி அங்குள்ள சிறுமிகளை நிர்வாணமாகப் படம் பிடித்து ரசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். டப்ளின் நகரில் மக்னாமி எனும் பாதிரி நூற்றுக்கணக்கான சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கைக்கு ஆட்படுத்தி வந்துள்ளான்.

 

பாலியல் முறைகேடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஈடுபட்டு வந்த பல பாதிரிகள் இன்றைக்குத் திருச்சபையில் உயர்பதவி வகிப்பதால் இப்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்க திருச்சபை முயல்வதும் அம்பலமாகியுள்ளது. 70 வயதாகும் அயர்லாந்து கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் சீன் பிராடி 35 ஆண்டுகளுக்கு முன் ஒரு பாதிரியைத் தப்புவிக்க பாலியல் சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டிய இரண்டு சிறுவர்களிடம் ""வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது'' என எழுதி வாங்கிக் கொண்டான். இதற்கு 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அயர்லாந்தின் மிக வக்கிரமான பாலியல் வெறியனாக அதே பாதிரி அம்பலமானான்.

 

அடுக்கடுக்காக இம்மாதிரிக் குற்றங்களை திருச்சபை மூடி மறைப்பது தொடரவே உலகெங்கிலும் கத்தோலிக்கர்கள் கொதித்துப் போயுள்ளனர். மவுனமாக இருந்து இந்த விவகாரத்தை அமுக்கிவிடலாம் என முதலில் எண்ணிய போப் பெனடிக்ட் கத்தோலிக்கர்களின் போராட்டங்கள் பெருகுவதைக் கண்டவுடன் உருக்கமான மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதமோ அனைத்துத் தரப்பினரையும் சாந்தப்படுத்தியும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எதனையும் அறிவிக்காமலும் விசயத்தைப் பூசிமெழுகும் வேலையைச் செய்துள்ளது.

 

போப் பெனடிக்ட் 1977-82 காலகட்டத்தில் ஜெர்மனியின் ம்யூனிச் நகரின் பேராயராக இருந்தார். அப்போது சிறுவர்களைத் தனது வக்கிரத்துக்குப் பயன்படுத்திய பாதிரியார் பீட்டர் ஹல்லர்மேனை ம்யூனிச்சிற்கே இடம் மாற்றம் செய்து சிறிது காலத்திலேயே மீண்டும் அவருக்குப் பழைய பொறுப்பையும் பெனடிக்ட் தான் கொடுத்தார். மீண்டும் தனது வக்கிரங்களைத் தொடர்ந்த அந்தப் பாதிரி பின்னர் மாட்டிக்கொண்டான். வின்ஸ்கான்சினைச் சேர்ந்த புனிதர் லாரன்ஸ் மர்பி 1996 இல் 200க்கும் மேற்பட்ட காதுகேளாத சிறுவர்களிடம் அத்துமீறல் செய்து மாட்டிக்கொண்டான். மர்பிக்கு வயதாகிவிட்டதையும் சம்பவங்கள் நடந்து பத்தாண்டுகளாகிவிட்டதையும் காரணம் காட்டி அப்போது வாத்திகனில் சித்தாந்தத் துறை உயர்பதவியில் இருந்த இந்நாளைய போப் பெனடிக்டால் மன்னிக்கப்பட்டான்.

 

பாதிரிகளால் பாதிக்கப்பட்டு தப்பியோருக்கான அமைப்பினை நடத்திவரும் ஜான் பில்மையர் வக்கிரபாதிரி மர்பியின் படத்துடன் ரோமிலுள்ள பீட்டர் சதுக்கத்தில் திடீர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். உடனே பாய்ந்து வந்த ரோம் நகர போலீசு அவரைக் கைது செய்து 2 மணி நேரத்துக்கும் மேலாகச் சிறையில் வைத்தது. ""குற்றவாளி பாதிரியை விட அதிகநேரம் நாங்கள்தான் சிறையில் இருந்துள்ளோம்'' என்று கூறிய பில்மையர் போலீசுவாத்திகன்அதிகார மையங்களின் வலைப்பின்னலைத் தோலுரித்துள்ளார்.

 

பெனடிக்ட் எழுதிய மன்னிப்புக் கடிதத்தால் சாந்தமடையாத அயர்லாந்து மக்கள் அந்நாட்டு தலைமை பிஷப் பதவி விலகக்கோரி அங்கே போராட்டங்களை நடத்தினர். இலண்டன் தலைமைத் தேவாலயம் முன்பாக போப் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு கத்தோலிக்கர்களின் ஆத்திரம் முற்றியுள்ளது.

 

பிற்போக்குப் பழைமையிலும் அதிதீவிர மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்போன கத்தோலிக்க சபையின் ஒழுக்கக் கேடுகளுக்கு நீண்ட பாரம்பரியமே உள்ளது. பல பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்த ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த போப்புகளின் பட்டியல் நீளமானது.

 

கிறித்துவ கன்னியாஸ்திரிகளிடம் நிலவும் ஓரினச்சேர்க்கையை வெளியுலகிற்கு தன் சுயசரிதை மூலம் வெளிப்படுத்திய கேரளாவைச் சேர்ந்த சகோதரி ஜெஸ்மிக்கு திருச்சபை "மன நோயாளி' பட்டம் கட்டியது.

 

அண்மையில் அமெரிக்காவில் சிறுமிகளிடம் வக்கிரம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பாதிரி ஜோசப் ஜெயபால் ஊட்டியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறான். பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விவகாரம் ஊடகங்களில் நாறத் தொடங்கியதும் பாதிரியை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி "கிறித்துவின்' ஆசிபெற்ற சபை கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

கடும் தண்டனைக்குரிய குற்றம் செய்திருக்கும் இந்த "அருட் தந்தைகளை' போலீசு நீதிமன்றம் விசாரிக்க வாத்திகன் அனுமதிக்கவில்லை. வெகு தெளிவாக சர்ச் விவகாரங்களை சிவில் நிர்வாக அமைப்புகளிடம் தெரிவிக்கக் கூடாது என்கிறார் போப். அயர்லாந்து சர்ச்சுகளின் தலைவரோ இந்த "விவகாரத்தை' சிவில் நிர்வாக அமைப்புகளிடம் வெளியிடக் கூடாதென சிறுவர்களிடம் எழுதி வாங்கியும் வைத்துள்ளார். இந்தப் புனிதர்களின் அதிகார மையமும் ஆளும் வர்க்கமும் வைத்திருக்கும் நெருக்கமே இந்தத் திமிரை அவர்களுக்கு வழங்குகின்றன.

 

இப்போது போப்பிற்கு எதிராகக் கிளர்ந்திருக்கும் மக்களின் கோபம் மேலும் உயர்ந்து மக்களால் திருச்சபை தண்டிக்கப்படாத வரை மதமும் அரசியலும் பிரிக்கப்படாதவரை கத்தோலிக்க மதமும் பல ஜெயேந்திரன்களையும் சாயிபாபாக்களையும் நித்யானந்தன்களையும் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும். வாத்திகனும் இதனைப் பூசி மெழுகிக் கொண்டுதான் இருக்கும்.

• அன்பு