Language Selection

புதிய ஜனநாயகம் 2010

கடந்த எட்டாண்டுகளாக மதக் கலவரமின்றி அமைதியாக இருந்த ஆந்திர மாநிலத் தலைநகரான ஐதராபாத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் மீண்டும் மதவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 27ஆம் தேதி முதலாக நான்கு நாட்களுக்கு நடந்த இம்மதவெறித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்துமுஸ்லிம் மதவெறியர்கள் தமக்கிடையே கல்லெறிந்துநடத்திய கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். ஐந்து மசூதிகளும் ஒரு இந்துக் கோயிலும் சேதமடைந்தன. ஆண்களையும் வாகனங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்குவது பெண்களை அவமானப்படுத்துவது என்பதாக இரு தரப்பும் வெறியோடு தாக்குதலை நடத்தின. 8 போலீசு நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஊரடங்கும் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. 1800க்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகள் இப்பகுதியில் குவிக்கப்பட்டுஇ 272 பேர் கைது செய்யப்பட்டு இக்கலவரத் தீ மேலும் பரவாமல் தற்காலிகமாகத் தடுக்கப்பட்ட போதிலும் இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

ஐதராபாத் நகரில் மஜ்லிஸ் இட்டேஹாதுல் முஸ்லி மீன் (எம்.ஐ.எம்.) எனும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியும் இந்துவெறி பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு மதவெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் தேடுகின்றன. பலதலைமுறைகளாக பழைய ஐதராபாத் நகரத்தின் அரசியலைக் கட்டுப்படுத்துவது எம்.ஐ.எம். கட்சிதான். காங்கிரசும் இக்கட்சியும் நெருக்கமான கூட்டாளிகள். சட்டமன்றத்தில் ஏழு இடங்களை எம்.ஐ.எம். பெற்றுள்ளது. ஐதராபாத் மாநகராட்சியின் மேயர் பதவியை காங்கிரசு பெற்றுள்ளது. மாநகராட்சியில் பெரும்பான்மை பலத்துடன் இதர பசையான பதவிகளை எம்.ஐ.எம். சுருட்டியுள்ளது. பழைய ஐதராபாத் நகரத்தில் இக்கட்சி வைத்ததுதான் சட்டம் என்கிற நிலைதான் நீடிக்கிறது.

 

நடுத்தரமேட்டுக்குடி வர்க்கத்தினர் நிறைந்த புது ஐதராபாத் ஆடம்பரமாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அடித்தட்டு முஸ்லிம் உழைக்கும் மக்கள் நிறைந்த பழைய ஐதராபாத்தோ இன்னமும் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றிப் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கிறது. சேரிகள் நிறைந்த இப்பகுதியில் வாழும் உழைக்கும் மக்கள் அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடும் கூலித் தொழிலாளிகள். வேலையின்மையும் வறுமையும் இப்பகுதிய நீண்டகாலமாகப் பீடித்துள்ளது. இங்கு ஆதிக்கம் செலுத்தும் எம்.ஐ.எம். தலைவர்களோ வர்த்தகம் மற்றும் அரசாங்கப் பதவிகளில் கொடிகட்டிப் பறக்கும் ஊழலில் ஊறித் திளைக்கும் கோடீசுவரர்கள். தனித் தெலுங்கானாவை எதிர்ப்பதால் ஐதராபாத் முஸ்லிம்களிடமிருந்து இக்கட்சி அண்மைக் காலங்களில் தனிமைப்பட்டுள்ளது. ஜமாத் இஸ்லாமி ஹிந்த் என்ற முஸ்லிம் அடிப்படைவாதக் கட்சி தெலுங்கானாவை ஆதரித்து பிரச்சாரம் நடத்தி வருவதால் அக்கட்சியின் பின்னே முஸ்லிம்கள் அணிதிரண்டு வருகிறார்கள்.

 

இந்நிலையில் முஸ்லிம்களை தம் பின்னே மதரீதியாக அணிதிரட்டிக் கொள்ளவும் தனது ஓட்டு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவும் பொருத்தமான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தது எம்.ஐ.எம். கடந்த பிப்ரவரி இறுதியில் நடந்த மீலாடி நபி விழாவை இதற்குப் பயன்படுத்திக் கொண்டது. வரலாற்றில் இதுவரை மீலாடி நபி விழா இப்படி நடந்ததில்லை எனுமளவுக்கு எங்கு திரும்பினாலும் கொடிகள் பதாகைகள் அலங்காரங்கள் என அமர்க்களமாக ஐதராபாத் நகரம் பச்சை நிறமாகக் காட்சியளித்தது. விழா முடிந்த பின்னர் போலீசும் அவற்றை அகற்றக் கோரவில்லை. அத்துமீறி வைக்கப்பட்ட இவற்றுக்கு மாநகராட்சியும் அபராதம் விதிக்கவில்லை.

 

இதைத் தொடர்ந்து இந்துவெறி அமைப்புகளும் இதே பாணியில் மார்ச் 24இல் ராமநவமி விழாவை இதுவரை கண்டிராத வகையில் பெரும் கொடிகள் பதாகைகள் பேரணிகள் என போட்டிபோட்டுக் கொண்டு அமர்க்களப்படுத்தின. ஐதராபாத் மாநகராட்சியில் ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியுள்ள பா.ஜ.கட்சி மதக்கலவரத்தின் மூலம் எம்.ஐ.எம். கட்சியை முடக்கவும் முஸ்லிம்களை அச்சுறுத்தி தனது ஓட்டு வங்கியை விரிவுபடுத்திக் கொள்ளவும் திட்டமிட்டே இத்தகைய எதிர்நடவடிக்கைகளில் இறங்கியது. பச்சைக் கொடிகள் பதாகைகளை கிழித்தெறிந்துவிட்டு காவிக் கொடிகளை இந்து வெறியர்கள் ஏற்றத் தொடங்கியதும் மதன்னா பேட்டையில் தகராறு மூண்டு பின்னர் இரு மதங்களின் பெரியோர்களும் போலீசும் சமரசம் பேசி பிரச்சினையைத் தீர்த்தனர். பின்னர் அனுமார் ஜெயந்தியை ஒட்டி இந்து வெறியர்கள் மீண்டும் பச்சைக் கொடிகளைக் கிழித்து காவிக் கொடியேற்றியதையொட்டி மார்ச் 27 அன்று மூசா பௌவ்லி பகுதியில் தகராறு மூண்டு அதிலிருந்து கலவரத் தாக்குதல் பரவத் தொடங்கியது.

 

ராமநவமி விழாவுக்கு முன்னதாக விசுவ இந்து பரிசத்தின் தலைவர்களுள் ஒருவரான ஆச்சார்ய தர்மேந்திரா ஐதராபாத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தி ஆத்திரமூட்டும் வகையில் பேசினார். சில மாதங்களுக்கு முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சுயம்சேவக்குகளை வைத்து மிகப்பெரிய ஊர்வலம் நடத்தினார். சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இவை திட்டமிட்டு நடத்தப்பட்டன. மார்ச் 30 அன்று அனுமான் ஜெயந்தி விழாவைச் சாக்கிட்டு பஜ்ரங்தளமும் இந்து வாகினியும் 5000 குண்டர்களைத் திரட்டி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தின. பழைய ஐதராபாத் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புது நகரில் இப்படி ஊர்வலம் நடத்த இந்து வெறியர்களுக்குச் சாதகமாக போலீசு அனுமதி அளித்தது. முஸ்லிம்கள் மாட்டுக்கறி உண்பதை அவமதிக்கும் வகையில் இந்த ஊர்வலத்தில் ஒரு பசுவையும் கன்றையும் வாகனத்தில் ஏற்றிப் ""பசுவைப் பாதுகாப்போம்!'' என்ற முழக்கத்துடன் இந்து வெறியர்கள் ஊர்வலம் நடத்தினர்.

 

ஊர்வலம் முஷீராபாத்தை நெருங்கியதும் ஊர்வலத்தில் வந்த இந்துவெறிக் குண்டர்கள் மையமான ஊர்வலப் பாதையிலிருந்து விலகி முஸ்லிம்கள் நிறைந்த குறுகலான சந்துகளில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். வழியெங்கும் கண்ணில்பட்ட முஸ்லிம்களையும் முஸ்லிம் கடைகளையும் தாக்கினர். அதற்கெதிராக முஸ்லிம்கள் கல்லெறிந்து எதிர்தாக்குதலை நடத்தினர். அதைத் தொடர்ந்து செகந்திராபாத்தில் வன்முறைத் தாக்குதல்களில் இருதரப்பும் இறங்கின.

 

ஐதராபாத்தில் முஸ்லிம்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத எம்.ஐ.எம்.கட்சி அதற்கு ஆதரவாக நிற்கும் காங்கிரசு கட்சி ஆந்திர காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டை தெலுங்கானா விவகாரம் ஆகியவற்றின் நடுவே மதவெறிக் கலவரத்தைத் தூண்டி குளிர்காயத் துடிக்கும் இந்துவெறி அமைப் புகள் புறக்கணிக்கப்பட்ட பழைய நகரத்தின் முஸ்லிம் உழைக்கும் மக்களின் குமுறல் மதவெறி சக்திகள் மீதுநடவடிக்கை எடுக்காமல் கைகட்டி நிற்கும் அதிகாரவர்க்கமும் போலீசும் மதச்சார்பின்மை பேசும் இடதுசாரி கட்சிகளின் கையாலாகாத்தனம் ஆகிய அனைத்தும் சேர்ந்து கலவரத் தீ பற்றி எரிவதற்கான சாதகமான நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன. மதவெறி சக்திகளை தனிமைப்படுத்தி முறியடிக்காவிட்டால் தற்போதைக்கு ஓய்ந்துள்ள கலவரத் தீ மீண்டும் காட்டுத்தீயாகப் பரவும் அபாயகரமான நிலைமையே ஐதராபாத் நகரைக் கவ்வியுள்ளது.

 

• குமார்