ஒரிசா கந்தமால் பகுதியில் 2007 டிசம்பரில் தொடங்கி 2008 இறுதி வரை கிருத்தவர்கள் மீது இந்துவெறியர்கள் நடத்திய பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிக் கிருத்துவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்; பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர்; வீடுகள் கிராமங்கள் சூறையாடப்பட்டன் ஆயிரக்கணக்கானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சடைந்தனர்.

இந்த வழக்குகளை விசாரிக்க இரு விரைவு நீதிமன்றங்கள் 2008இல் அமைக்கப்பட்டன. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 123 வழக்குகளில் 63இல் தீர்ப்பு அளிக்கப்பட்டு 89 பேருக்கு தண்டனையும் 303 பேருக்கு விடுதலையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புகளின் இலட்சணத்தை சிறிது சுரண்டிப் பார்த்தால் நீதிமன்றங்களின் இந்துத்துவ பா(சி)சம் அப்பட்டமாகத் தெரிகிறது. விடுவிக்கப்பட்டவர்கள் கொலை வன்புணர்வு தீயிட்டுக் கொளுத்துதல் போன்ற பயங்கரகுற்றங்களில் ஈடுபட்டவர்கள். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பிரதான் அவர்களில் முக்கியமானவன். இவன் மீதுள்ள 8 வழக்குகளிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டுள்ளான்.

 

அந்த வழக்குகளில் ஒன்று பிரா என்ற பெண்ணின் கணவனைக் கொன்றது ஆகும். கட்டிய கணவனை பிரதானும் அவனது ஆட்களும் பிடித்து இழுத்துச் சென்றதைத் தடுக்க வழியின்றிக் கதறிய இந்த அபலைப் பெண் நீதி கிடைத்து விடுமென்றே கடைசிவரை நம்பியிருந்தார். ஆனால் சம்பவம் நடந்த அன்றுதான் பிரதானை முதல்முறையாக அந்தப் பெண் சந்திக்கிறாள் என்றும் எனவே அத்தனை பெரிய கும்பலில் அவள் சரியாக அவனை அடையாளம் கண்டுகொண்டாள் என்பது நம்பக்கூடியதாக இல்லை என்றும் கூறி விரைவு நீதிமன்ற நீதிபதி தாஸ் அவனை விடுதலை செய்துவிட்டார். இதன் நேரடிப்பொருள் எம்.எல்.ஏ.வின் முகம்கூட அந்தப் பெண்ணுக்குத் தெரியாது என்பதுதான். ""இன்னார்தான் ராகுல் காந்தி என அடையாளம் காட்டுவதற்கு நான் ராகுல் காந்தியை முன்பே சந்தித்திருக்க வேண்டுமா என்ன?'' என்று மனமுடைந்து போய் பிரா கேட்கிறார்.

 

வீடுகளைக் கொளுத்திய இன்னொரு வழக்கில் பிரதான்தான் வீட்டை எரித்தான் என்ற வீட்டு உரிமையாளர்களின் சாட்சிகளை நீதிபதி தாஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்பவம் இரவிலே நடந்துள்ளதால் குற்றவாளிகளின் முகத்தை சாட்சிகளால் சரியாகப் பார்த்திருக்க முடியாது என்கிறார் நீதிபதி. எரியும் நெருப்பு வெளிச்சத்தில் முகங்கள் பளிச்சென்று தெரியுமென்பதைக்கூட நீதிமன்றங்களின் இந்துத்துவக் கொழுப்பு ஏற்க மறுத்துவிட்டது. ஒரு சாட்சியின் வயதை விசாரணை அதிகாரி தவறாகப் பதிவு செய்திருப்பது சாட்சிகள் எந்தப்புதருக்குப் பின்னே மறைந்திருந்தனர் என்ற விவரமின்மை போன்ற மிகவும் அற்பமான பிழைகளைக் காட்டியும் விடுதலை செய்துள்ளார் நீதிபதி.

 

போலீசுத் துறையானது வழக்குகளை பலவீனமாக்கும் சதிகளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போதிலிருந்தே தொடங்கியுள்ளது. பிராவின் கணவன் இழுத்துச் செல்லப்பட்டதை "காணாமல் போய் விட்டார்' என்றே பதிவு செய்துள்ளனர். மேலும் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என்று முறையிடப்பட்டதை நீதிமன்றம் கண்டுகொள்ளவேயில்லை. பொடிமுண்டா கிராமத்தில் வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுத்த கிருத்துவர்களைத் தாக்கி அகதிகளாக அவலத்தில் உழன்ற அவர்களின் பிளாஸ்டிக் குடில்களை ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்கள் கிழித்தெறிந்துள்ளனர். அந்த ஊர் போலீசு ஆய்வாளரோ ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் மீது எந்த வழக்கு போட்டாலும் அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள் என்று கூறி கையை விரிக்கிறார். இந்து வெறியர்கள் எதிர்பார்த்தபடியே பொடிமுண்டா கிராம வழக்குகள் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டன.

 

கந்தமால் இந்துவெறி பாசிசப் படுகொலை வழக்குகளின் நிலை இதுவென்றால் 1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸ{ம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.

 

இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது உச்சநீதி மன்றத்தில் பிணை கேட்டுள்ள தாராசிங்கிற்கு மேற்சொன்ன உயர்நீதி மன்றத்தின் கூற்று உதவக்கூடும்.

 

இந்திய நீதிமன்றங்கள் இந்துத்துவத்திற்குப் பக்கமேளம் வாசிப்பவையாகவே உள்ளன என்பதை இந்த வழக்குகள் அப்பட்டமாகக் காட்டுகின்றன. நீதிமன்றங்களின் பாசிசத்தை வீதிகளில் இறங்கி முறியடிக்க வேண்டும்; மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு பாசிச பயங்கரவாதிகளைத் தண்டிக்க வேண்டும்; இல்லையேல் அநீதி மன்றங்களின் ஆசியோடு இந்துவெறி பாசிசம் வெளிப்படையாகவே கொட்டமடிக்கும் என்பதையே இவை எச்சரிக்கையாக உணர்த்துகின்றன.

 

• கந்தசாமி