ஓசூர் சிப்காட்டில் இயங்கிவரும் கமாஸ் வெக்ட்ரா எனும் ரசிய பன்னாட்டு நிறுவனம் தனது ஆலையில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்துவந்த 47 நிரந்தரத்தொழிலாளர்களைப் போலி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றம் செய்துள்ளதாகக் கூறி அனைவரையும் வீதியில் வீசியெறிந்தது. வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். உழைக்கும் வர்க்கத்தின் பேராதரவுடன் கடந்த ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதிவரை 69 நாட்கள் நடந்த இப்போராட்டம் ஓசூர் தொழிலாளர் இயக்க வரலாற்றில் முதன்முறையாக மகத்தான வெற்றியைச் சாதித்துள்ளது. தொழிலாளர்கள் இன்று வெற்றிப் பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். முதலாளித்துவப் பயங்கரவாதத் திமிரையும் கொட்டத்தையும் தமது உறுதியான ஒற்றுமையான போராட்டத்தால் முறியடித்த பெருமையில் அவர்களது நெஞ்சங்கள் விம்மித் தணிகின்றன.

கடந்த 6.4.2010 அன்று ஆலை நிர்வாகத்துக்கும் தொழிற்சங்கத்துக்குமிடையே மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் நல அலுவலர் தொழிலக ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. போராடிய தொழிலாளர் அனைவருக்கும் அதே கமாஸ் நிறுவனத்தில் வேலை சர்வீஸ் மற்றும் சேமநலநிதி தொடர்ச்சி சங்க அங்கீகாரம் முதலான அனைத்தும் ஏற்கப்பட்டன. மறுநாள் 7.4.2010 அன்று காலை 8 மணியளவில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடியதோடு வழியெங்கும் வெற்றியைப் பறைசாற்றி முழக்கத் தட்டிகளுடன் செங்கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இப்போராட்டத்துக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

 

இப்போராட்ட வெற்றி எளிதில் நடந்துவிடவில்லை. துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் ஆலைவாயிற் கூட்டங்கள் தெருமுனைக் கூட்டங்கள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட வேலையிழந்த தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்க்குடியிருப்புகளில் வீடுவீடாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு வரமறுத்து அலட்சியப்படுத்திய ஆலை அதிகாரிகளின் வீடுகளை தொழிலாளர் குடும்பத்தின் பெண்கள் துடப்பக்கட்டையுடன் அன்றாடம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து தொடர்ந்து அம்பலப்படுத்தினர். துணைமுதல்வர் ஸ்டாலினையும் மாவட்ட ஆட்சியரையும் முற்றுகையிட்டுப் போராடினர். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் அனைத்து ஆலைத் தொழிலாளர்களின் ஒற்றுமையும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையும் அவசியம் என்பதை உணர்ந்து ஆலை நிர்வாகத்தையும் அரசையும் பணியவைக்கும் போர்க்குணமிக்கப் போராட்டங்களை பு.ஜ.தொ.மு. வின் வழிகாட்டுதலில் அவர்கள் முன்னெடுத்துச் சென்றனர். உழைக்கும் மக்களின் பேராதரவுடன் போராட்டம் பற்றிப் படர்ந்தது. அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஆதரவுக்கரம் நீட்டின. பொதுக் கருத்தும் பொதுமக்களின் நிர்ப்பந்தமும் அதிகரித்ததாலேயே கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கத்திடம் அரசும் ஆலை நிர்வாகமும் பணிந்தன.

 

இப்போராட்ட வெற்றியைப் பறைசாற்றியும் தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைத்து முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிக்க அறைகூவியும் கடந்த ஏப்ரல் 11ஆம் நாளன்று பு.ஜ.தொ.மு. சார்பில் பட்டாசுகள் வெடிக்க பறைகள் முழங்க செங்கொடிகள் விண்ணில் பெருமிதத்துடன் ஒளிர பேரணி புறப்பட்டது. தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் இப்பேரணிக்குத் திரண்டு வந்து தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றினர். அதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஓசூரிலுள்ள பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்க முன்னோடிகளும் தமது போராட்ட அனுபவங்களை விளக்கி கமாஸ் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு முதலாளித்துவ அடக்குமுறைகளை முறியடிப்போம் என்று சூளுரைத்தனர். ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய புரட்சிக கலைநிகழ்ச்சி போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது.

 

புரட்சிகரத் தலைமையின் கீழ் போராடும் தொழிலாளி வர்க்கம் தோற்றதாக வரலாறில்லை.

 

- பு.ஜ.செய்தியாளர்