கடந்த 9.4.10 அன்று முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலுவின் குண்டர் படையும் போலீசு கும்பலும்சேர்ந்து கொண்டு தஞ்சை மாவட்டம் வடசேரி வட்டார மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றின. காரணம் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க வரும் டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடியதுதான். பாலுவின் சாராய ஆலை ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சினால் நிலத்தடி நீரையே நம்பியுள்ள இப்பகுதியில் விவசாயமே நாசமாகிப் போகும் என்பதாலேயே இப்பகுதிவாழ் மக்கள் இந்த ஆலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இச்சாராய ஆலைக்கு ஊராட்சி மன்றம் அனுமதியளித்து பின்னர் மக்களின் எதிர்ப்பால் அதை இரத்து செய்தது. இருப்பினும் ஆலைக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் போலீசு அதிகாரிகள் மற்றும் பாலுவின் அடியாட்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு முப்பது பேர் மீது பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைத்துள்ளது.
வடசேரி மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும் காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்திய எஸ்.பி.செந்தில் வேலன் உள்ளிட்ட போலீசு கும்பலையும் பாலுவின் குண்டர்படையையும் கைது செய்து தண்டிக்கக் கோரியும் தஞ்சை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேருந்துகளிலும் கடைவீதிகளிலும் துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்ததோடு டி.ஆர்.பாலுவின் உண்மை முகத்தைத் திரைகிழித்து ம.க.இ.க வி.வி.மு பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.
அதன் தொடர்ச்சியாக இவ்வமைப்புகளின் சார்பில் டி.ஆர்.பாலுவின் அடியாட்களும் போலீசும் அப்பாவி மக்களைத் தாக்கியதைக் கண்டித்தும் சிறையிடப்பட்டுள்ள மக்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து அவர்கள் மீதான பொய்வழக்குகளை இரத்து செய்யக் கோரியும் வடசேரி மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகில் 15.4.10 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசு அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் நடுவே நடந்த இந்த ஆர்ப்பாட்டம் விவசாயிகளிடம் புதிய நம்பிக்கையை விதைத்து தொடர்ந்து போராட அறைகூவியழைப்பதாக அமைந்தது
.- பு.ஜ.செய்தியாளர் தஞ்சை.