Language Selection

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி பல்வேறு நாடுகளின் வங்கிகள் காப்பீடு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு வருவதோடு மட்டுமின்றி தேசிய அரசுகளை மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கும் தள்ளிவருகிறது. துபாய் அரசு நான்கு மாதங்களுக்கு முன்பாக தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவணை கேட்டபொழுதுதான் இந்த அபாயம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. துபாயில் வேலை செய்துவந்த அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைப் பலியிட்டும் பக்கத்து அரபு நாடுகளிடமிருந்து "உதவி' பெற்றும் மஞ்சள் கடுதாசி கொடுப்பதில் இருந்து தப்பித்தது துபாய் அரசு.

நிதியை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியாத ஏழை நாடுகள்தான் இப்படிபட்ட அபாயத்தில் சிக்கிக் கொள்ளும் என இதற்கு முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் விளக்கம் அளித்தார்கள். அவர்கள் இந்த சால்ஜாப்பைச் சொல்லி வாயை மூடும் முன்பே ஐரோப்பாவைச் சேர்ந்த பணக்கார நாடான கிரீஸ் போண்டியாகும் நிலையில் இருப்பது அம்பலமானது.

 

யாரும் மலைத்துப் போய்விடாதீர்கள். இன்றைய நிலையில் கிரீஸ் அரசின் மொத்தக் கடன் 17,70,000 கோடி ரூபாய். இதில் 70 சதவீதக் கடன் அந்நிய நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அந்நாடு மே 2010க்குள் 1,18,000 கோடி ரூபாயை அந்நிய முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

 

அன்றாட நிர்வாகச் செலவுகளைச் சமாளிப்பதற்கே விமான நிலையங்களையும் நெடுஞ்சாலைகளையும் தனியாரிடம் அடமானம் வைத்துவிட்ட கிரீஸ் அரசு அவ்வளவு பணத்திற்கு எங்கே போகும்? புதிய கடன் பத்திரங்களை வெளியிட்டு இந்தக் கடனை அடைத்துவிடலாம் என்றால் கிரீஸ் அரசு வெளியிடும் கடன் பத்திரங்களைக் குப்பைகள் என அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் அறிவித்துவிட்டன. எனவே இந்தக் கடனைத் திருப்பி அடைக்க ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பிற நாடுகள் தனக்கு உதவ வேண்டுமென என கிரீஸ் அரசு கடந்த ஆறேழு மாதங்களாகவே கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரீஸின் பொருளாதார "வளர்ச்சி'க்கு அடிப்படையாக இருந்ததே இந்தக் கடன்தான். உள்நாட்டு முதலாளிகள் நடத்திய வரி ஏய்ப்பும் அரசியல்வாதிகள் நடத்திய வீட்டுமனை ஊழலும் அரசின் கஜானாவைக் காலி செய்து வந்ததால் கிரீஸ் தனது "வளர்ச்சி'யைத் தக்க வைத்துக்கொள்ள சர்வதேச நிதிச்சந்தையில் இருந்து பெறும் கடனைத்தான் நம்பியிருந்தது.

 

கிரீஸ் வெளியிட்டு வந்த கடன் பத்திரங்களைச் சர்வதேசநிதிச் சந்தையில் காசாக்கிக் கொடுக்கும் தரகனாக அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் என்ற வங்கி செயல்பட்டு வந்தது. கடன் பத்திரங்களைத் தடையின்றிக் காசாக்க வேண்டும் என்பதற்காக கிரீஸ் அரசும் கோல்டுமேன் சாக்ஸ் வங்கியும் இணைந்து ஒரு மோசடியில் ஈடுபட்டன. கிரீஸ் அரசின் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைத்துக் காட்டி அந்நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக வெளியுலகுக்குக் காட்டப்பட்டது. மேலும் கோல்டுமேன் சாக்ஸ் வங்கி கிரீஸ் அரசு வாங்கும் கடனுக்குக் காப்பீடு செய்வதை வைத்து ஒரு பந்தயச் சூதாட்டத்தையும் (Derivatives) நடத்தி வந்தது. இதனால் சர்வதேச நிதி முதலீட்டு நிறுவனங்கள் கிரீஸ்சுக்குக் கடனை வாரி வழங்கி வந்தன. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி அதனையடுத்து சர்வதேசச் சந்தையில் கடன் கிடைப்பது வற்றிப் போனது கடன் பெறுவதற்கு கிரீஸ் நடத்திவந்த தில்லு முல்லுகள் அம்பலமானது இவை அனைத்தும் சேர்ந்து தற்பொழுது கிரீஸைக் குப்புறத் தள்ளிவிட்டுவிட்டன.

 

ஆனால் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களோ இந்த உண்மையை மூடி மறைக்கிறார்கள். கிரீஸ் அரசு தனது மக்களின் "நலனுக்காக' மானியங்களை வாரிவாரி வழங்கியதால்தான் கிரீஸ் போண்டியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் கூசாமல் புளுகி வருகிறார்கள். உணவிற்கும் உரத்திற்கும் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் மானியங்கள் வழங்குவதால்தான் இந்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறி வருவதில் எவ்வளவு உண்மையுண்டோ அந்த அளவிற்குத்தான் கிரீஸ் பற்றி நிபுணர்கள் கூறுவதிலும் உண்மையுண்டு.

 

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பிற நாடுகள் கிரீஸசுக்குஉதவ வேண்டுமென்றால் கிரீஸ் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜெர்மனியும் பிரான்சும் சர்வதேச நாணய நிதியமும் நிர்பந்தித்து வருகின்றன. இதனடிப்படையில் ஓராண்டுக்கு முன்பே ஓய்வூதியம் குறைப்பு கல்வி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கான மானிய வெட்டு பணி நிரந்தரச் சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை அந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது தொடுத்தது கிரீஸ் அரசு. தற்பொழுது ஐரோப்பிய யூனியனும் ஐ.எம்.எஃப்ம் சேர்ந்து கிரீஸசுக்கு 2,65,500 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து அந்நாட்டில் 38,350 கோடி ரூபாய் பெறுமான மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன. எரிபொருள் உள்ளிட்டுப் பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியத்தைத் தனியார்மயமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நிதிச் சூதாட்டத்தை நடத்துவதில் கைதேர்ந்த பேர்வழிகளான வேலியிடப்பட்ட நிதியங்கள் (Hedge Funds) கிரீஸின் நெருக்கடியை இரண்டுவிதமாகப் பயன்படுத்தி வருகின்றன. கிரீஸ் அரசின் கடன்பத்திரங்களைக் குப்பைகள் எனத் தன்னிச்சை யாக அறிவித்ததன் மூலம் கிரீஸ் சர்வதேச நிதிச் சந்தையில் இருந்து அதிக வட்டிக்கொடுத்துதான் கடன் வாங்க முடியும் என்ற சூழலை உருவாக்கிவிட்டன. இரண்டாவதாக அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோவின் செல்வாக்கைத் தட்டிவைப்பதற்காக தேவைக்கு அதிகமாக யூரோவைச் சந்தையில் கொட்டுவது கிரீஸை ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறச் சொல்லி ஆசை காட்டுவது ஆகிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

 

அமெரிக்காவைச் சேர்ந்த வேலியிடப்பட்ட நிதியங்கள் கிரீஸைக் குறிவைத்து இறக்கிவிடும் புதுப்புது நிதிச் சூதாட்டக் கருவிகள் பற்றி விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்க நீதிமன்றமே அறிவிக்கும் அளவிற்கு அவற்றின் நடவடிக்கைகள் இரக்கமற்று உள்ளன. அமெரிக்காவில் சப்பிரைம் கடன் நெருக்கடி வெடித்தபொழுது நிதிச் சூதாட்டத்தைச் சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தப் போவதாக ஏகாதிபத்தியவாதிகள் அறிவித்தனர். அவையெல்லாம் ஏமாற்று வார்த்தைகள் என்பது கிரீஸில் ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது.

 

யூரோவின் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் கிரீஸைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவாக மீட்டுவிட வேண்டும் என ஜெர்மனியும் பிரான்சும் துடியாய்த் துடிக்கின்றன. இதற்காக அந்நாடுகள் சிக்கன நடவடிக்கைகளை விரைவாகவும் தீவிரமாகவும் எடுக்கும்படி கிரீஸ்சுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. மேலும் கிரீஸ்சுக்கு அடுத்து ஸ்பெயினிலும் போர்த்துக்கல்லிலும் இத்தாலியிலும் அயர்லாந்திலும் எப்போது வேண்டுமானாலும் நெருக்கடி வெடிக்கலாம் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர். சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடும் கிரீஸ் நாட்டு உழைக்கும் மக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அது பிற நாட்டு உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரும் உத்வேகத்தை அளித்துவிடும் என இவர்கள் அஞ்சி நடுங்குகின்றனர். எனவே பிரான்சு மற்றும் ஜெர்மனி ஏகாதிபத்தியங்கள் கிரீஸைத் தங்களின் மேலாதிக்கத் திட்டங்களுக்கான பரிசோதனைச்சாலை மிருகம் போன்றே பயன்படுத்தி வருகின்றன.

 

கிரீஸசும் துபாயும் விதிவிலக்கானவை அல்ல. ஏன் இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அரசு 2010ஆம் ஆண்டுக்குள் 3383000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஐச் சேர்ந்த எஸ்.குருமூர்த்தி குறிப்பிடுகிறார். பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைவாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடன் தொகை பட்ஜெட்டில் காட்டப்படவில்லை. அதே சமயம் பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிப்பது என்ற பெயரில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதிதான் வெட்டப்படுகிறதேயொழிய தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் வரிச்சலுகைகள் வெட்டப்படுவதில்லை. இவர்களுக்கு ஆண்டுதோறும் 5 இலட்சம் கோடி ரூபாய் வரை வரிச்சலுகைகளை வாரியிறைப்பதனால்தான்ஷ இந்திய அரசின் மீதான கடன் சுமை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துகொண்டே போகிறது.

 

இன்றோ அல்லது நாளையோ இந்திய அரசு தனது கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போண்டியாகி நிற்குமானால் அந்த நிலையை ஏகாதிபத்திய கும்பல் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதற்கு கிரீஸ் உயிரோட்டமான உதாரணமாக உள்ளது; அதனை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதற்கும் கிரீஸ்தான் வழிகாட்டியாக விளங்குகிறது.

-

திப்பு