Language Selection

புதிய ஜனநாயகம் 2010

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 1960களில் தோழர் சீனிவாச ராவ் தலைமையில் தோழர்கள் வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு, பூழந்தாங்குடி பக்கிரி, ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், மனோன்மணியம்மை என்று சாதிய எல்லைகளைக் கடந்து கம்யூனிசப் போராளிகள் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடினர். அவர்களின் அளப்பரியத் தியாகத்தால் தஞ்சை மாவட்டம் சிவந்து, கூலி விவசாயிகளின் வாழ்வில் புதிய விடியலை உருவாக்கியது. சவுக்கடியும் சாணிப்பால் கொடுமையும் ஒழிந்தது.

அன்று பண்ணையார்களின் காங்கிரசு கட்சியும் அரசும் இப்போராளிகளின் தலைக்கு விலை வைத்து உயிருடனோ பிணமாகவோ ஒப்படைத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசும் அறிவித்தது. சொந்த சாதிக்காரர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு இரணியனும் சிவராமனும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரணியனைத் தாங்கிப்பிடித்த ஆறுமுகமும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்களின் பிணத்தைக்கூட உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்து பட்டுக்கோட்டை சுடுகாட்டில் எரித்தது போலீசு.

 

அத்தியாகத் தோழர்கள் எரிக்கப்பட்ட இடத்தில் இந்தியக்கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டு, கம்யூனிசப் பேராசான் தோழர் கார்ல் மார்க்ஸ் பிறந்தநாளும் தியாகிகளின் நினைவுநாளுமான மே 5ஆம் தேதியன்று பட்டுக்கோட்டை வட்டார மக்கள் அங்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்தச் சுடுகாட்டில் மின்சார மயானம் அமைப்பதற்காக அத்தியாகிகளின் நினைவுச் சின்னத்தை நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மூலம் அண்மையில் இடித்துத் தள்ளியது. இக்கொடுஞ்செயலை எதிர்த்துப் பொதுவுடமை இயக்கங்களும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் போராட்டங்களைத் தொடர்ந்தன.

 

இப்பகுதியில் இயங்கிவரும் வி.வி.மு. இக்கொடுமைக்கு எதிராகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்ட ம.க.இ.க பு.மா.இ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து 29.3.10 அன்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்தது. இதற்கு அனுமதி மறுத்த போலீசு, வேறு இடத்தில் நடத்தக் கோரியது. திட்டமிட்ட நாளில் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்துக்குத் தோழர்கள் அணிதிரண்ட போது இது எம்.எல்.ஏ. ரங்கராஜனுக்குச் சொந்தமான இடம் என்று அவரின் அடியாட்கள் தகராறு செய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் திட்டமிட்டு தடுக்க முயற்சிக்கும் போலீசின் நயவஞ்சகத்தை எதிர்த்து தோழர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரண்டுபோன போலீசு அதன் பின்னரே ஆர்ப்பாட்டத்தை அதே இடத்தில் நடத்த அனுமதித்தது. ""கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? ஓட்டுப்பொறுக்கி பிழைப்புவாதிகளுக்குத் தெரியுமா கம்யூனிஸ்டுகளின் தியாகம்?'' என்ற முழக்கங்களுடன் தோழர் மாரிமுத்து தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிசத் தியாகிகளின் நினைவுச் சின்னத்தை இடித்த கொடுஞ்செயலைக் கண்டித்து முன்னணியாளர்கள் உரையாற்றியதோடு மீண்டும் புதுப்பொலிவுடன் நினைவுச் சின்னத்தைக் கட்டியமைக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தனர்.

 

தியாகிகளின் நினைவுச் சின்னத்தை இடித்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து தொடரும் போராட்டங்களால் ஆட்சியாளர்கள் அம்பலப்பட்டு தனிமைப்பட்ட நிலையில் தி.மு.க.வின் மைய அமைச்சரான பழநி மாணிக்கம் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து விரைவில் தியாகிகள் நினைவுச்சின்னத்தைக் கட்டியமைக்க உறுதியளித்துள்ளார். வாக்குறுதி பொய்த்தால் மீண்டும் போராட்டம் தொடரும் என்பதையே மக்களின் குமுறல்கள் எச்சரிக்கையாக உணர்த்துகின்றன.

 

- பு.ஜ.செய்தியாளர் பட்டுக்கோட்டை.