Language Selection

புதிய ஜனநாயகம் 2010

தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்படும் காலமிது. பன்னாட்டு இந்நாட்டு (தரகு) முதலாளிகளின் இலாபவெறிக்காக மக்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து வருகிறது காங்கிரசு அரசு. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் மறுகாலனியாதிக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர் தினமான மே நாளில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக புதுச்சேரியில் பேரணி பொதுக்கூட்டம் நடத்த ம.க.இ.க. பு.மா.இ.மு. வி.வி.மு. பு.ஜ. தொ.மு. பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் திட்டமிடப்பட்டது.

புதுச்சேரி காவல்துறையிடமிருந்து அதற்காக எழுத்துப்பூர்வமான அனுமதியும் பெறப்பட்டது. சுமார் ஒருமாத காலம் தமிழ்நாடு புதுச்சேரி முழுவதும் பல்லாயிரம் பிரசுரங்கள் பல நூறு சுவரெழுத்துக்கள், எண்ணற்ற தெருமுனைக் கூட்டங்கள், ஆலைவாயிற்க் கூட்டங்கள் என விரிவான அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரம் செய்த இடங்களிலெல்லாம் மக்கள் திரளாக நின்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

 

தமிழகத்தைப் போல புதுச்சேரியில் நக்சல்பாரி அமைப்புகள் காலூன்றி விடக்கூடும் என அஞ்சிய மத்திய உளவுத் துறை, ""இவர்களின் பேரணியில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவி, புதுச்சேரியில் சட்டம்ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்; சத்தீஸ்கர் போல் புதுச்சேரியையும் மாற்றத் திட்டமிட்டுள்ளார்கள்'' என்று பீதி கிளப்பியது. அதனடிப்படையில், ""பேரணிபொதுக்கூட்டம் உள்ளிட்ட எல்லா நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகிறது'' என புதுச்சேரி காவல்துறை (வடக்கு) கண்காணிப்பாளரான சிவதாசன் உத்தரவிட்டார்.

 

இந்தத் தடையை எதிர்த்தும் மீண்டும் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், உயர்நீதி மன்றமோ உளவுத்துறை (ஐஆ) யின் உளறலை ஏற்று, ""மறுபடியும் போலீசிடமே இணக்கமாகப் பேசி அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று ஒரு மொன்னையான வழிகாட்டுதலை வழங்கியது.

 

தொழிலாளர் தினத்தில் பேரணியாய்ச் செல்லவும், கூட்டம் நடத்தவும், கோரிக்கைகளுக்காகப் போராடுவதும் தொழிலாளர்களின் பிறப்புரிமை. இது உலகம் முழுவதும் ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டு விட்டது. ஆனால், அத்தகைய உரிமையை மறுத்து, மே தின வாழ்த்துக் கூறி கொண்டே தனது நயவஞ்சக பாசிச குணத்தை அப்பட்டமாகக் காட்டியுள்ளது, காங்கிரசு.

 

தொழிலாளர்களின் போராடுகின்ற உரிமையை எந்த கொம்பனாலும் பறிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் பேரணி பொதுக்கூட்டத்தைத் தடை செய்ததையே வாய்ப்பாகப் பயன்படுத்தி மாபெரும் மறியல் போராட்டத்தை மே 1 அன்றே நடத்துவதென இப்புரட்சிகர அமைப்புகள் திட்டமிட்டன.

 

மே நாளன்று காலை முதலே தமிழகம், புதுச்சேரியிலிருந்து அலை அலையாக அணிதிரண்டு வந்தார்கள், இவ்வமைப்புகளின் தோழர்கள். அனுமதி மறுத்திருப்பதால் இவர்கள் அமைதியாகத் திரும்பிச் சென்று விடுவார்கள் என்று எண்ணிக் கிடந்த புதுச்சேரி போலீசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எமது மே நாள் மறியல் போராட்டம்.

 

செஞ்சட்டை, செம்பதாகை, செங்கொடிகளுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் பறை முழக்கத்தோடு புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை மறித்து நின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் விண்ணதிர முழக்கமிட்டு செங்கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை கண்டு அதிர்ந்து போன போலீசு செய்வதறியாது திகைத்துப் பின் தனது அதிகாரத் திமிரைக் காட்டி மிரட்டி மறியலைக் கலைத்துவிட முயற்சித்தது. ஆனால் தோழர்களின் ஆவேசமான பதிலடியால் அம்முயற்சி பலிக்காது என உணர்ந்த போலீசு வேறு வழியின்றி அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தது.

 

போலீசு கைது செய்யப்பட்டவர்களை புதுச்சேரி கோரிமேடு போலீசு பயிற்சி மைதானத்தில் அடைத்தது.ஆனால் இப்புரட்சிகர அமைப்பின் தோழர்களோ அவ்விடத்தையே பொதுக்கூட்ட மேடையாக மாற்றினர். தலைவர்களின் எழுச்சிமிகு உரைகளும் மைய கலைக்குழுவின் புரட்சிகரப் பாடல்களும் தோழர்களின் போராட்ட உணர்வை மேலும் தட்டியெழுப்புவதாய் அமைந்தன.

 

மொத்தத்தில் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு உரிய முறையில் பதிலடி கொடுப்பவர்கள் நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது மே நாளில் நடந்த மறியல் போராட்டம்!

- பு.ஜ. செய்தியாளர் புதுச்சேரி.