Language Selection

புதிய ஜனநாயகம் 2010

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துகொண்டே போவதைக் கட்டுப்படுத்துவதற்கு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போட விரும்பாத மன்மோகன் சிங் அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதற்காகத் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள நகல் சட்டத்தை ஆராந்த மைய அரசின் அமைச்சரவைக் குழு இந்த நகலில் சில திருத்தங்களைச் செய்யச் சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறது. மைய அரசின் இந்தக் கரிசனத்தைக் கேள்விப்படும்பொழுது ரொட்டி வாங்கமுடியாமல் திண்டாடிய பிரஞ்சு மக்களிடம் கேக் வாங்கிச் சாப்பிடச் சொல்லி பிரஞ்சு பேரரசி கிண்டலடித்த வரலாற்று வக்கிரம்தான் நினைவுக்கு வருகிறது.

இந்த நகல் சட்டம் அதன் முன்னுரையில் இந்திய மக்கள் அனைவருக்கும் உணவு அளிப்பதை உரிமையாக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டாலும் உட்பிரிவுகளிலோ வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் என மைய அரசின் திட்டக் கமிசனால் அடையாளம் காணப்படுபவர்களுக்கு மட்டும்தான் இந்தப் "பாதுகாப்பை' அளிக்கப் போவதாக வரம்பிட்டுக் கொண்டுள்ளது. மேலும் தீவிரவாதம் பாதித்துள்ள பகுதிகளிலும் மைய அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காலங்களிலும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

2001ஆம் ஆண்டில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் பட்டினியால் இறந்து போவது மீண்டும் அம்பலமானபொழுது அப்பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நியாய விலைக் கடைகளின் மூலம் மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. தற்பொழுது விவாதத்தில் உள்ள உணவு உரிமை நகல் சட்டமோ இதனை 25 கிலோவாகக் குறைத்துவிட்டது. இந்த நகல் சட்டம் விவாதத்திற்கு வந்தபொழுது வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு இப்படி அநியாயமாகக் குறைக்கப்பட்டுள்ளதைத் திருத்த வேண்டும் என எந்தவொரு அமைச்சரும் கோரவில்லை.

 

இந்தியாவில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 6.5 கோடியா 8.5 கோடியா அல்லது அதற்கும் மேலா என்பதைச் சுற்றித்தான் அமைச்சரவையில் விவாதம் நடந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் பொறுப்பை திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் ஒப்படைத்திருக்கிறது மைய அமைச்சரவை. நாளொன்றுக்கு 11 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இந்திய மக்கள் அனைவரையும் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்பவர்களாக வகைப்படுத்த வேண்டும் என்ற ""கறாரானான'' கொள்கையைக் கொண்டவர் அலுவாலியா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

கிராமப்புறங்களில் இருந்து வேலை தேடி நகரத்திற்கு வந்து நடைபாதையில் வசித்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியில்லை என்ற காரணத்தைக் கூறி குடும்ப அட்டைகள் வழங்க மறுத்து வருகிறது அரசு.

 

தற்பொழுது இந்தியாவெங்கும் 10.5 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களாக வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு அதற்குரிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் 60 வீத குடும்ப அட்டைகள் போலியானவை என்பது திட்டக்கமிசனின் மதிப்பீடு. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 7.5 கோடியைத் தாண்டக் கூடாது என்பதுதான் அலுவாலியாவின் தனிப்பட்ட கணக்கு. இந்த நகல் சட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையை முன்பு போல மாநில அரசுகள் தீர்மானிக்க முடியாது. திட்டக் கமிசனுக்கு மட்டுமே அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதால் இனி இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும் என உறுதியாக நம்பலாம்.

 

நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை ஆராய்வதற்காக உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட வாத்வா கமிட்டி நாளொன்றுக்கு 100 ரூபாய்க்குக் குறைவாகக் கூலி பெறும் குடும்பங்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகக் கணக்கிட வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. இதோடு ஒப்பிட்டால் திட்டக் கமிசனின் வறுமை பற்றிய கணக்கீடு எவ்வளவு அபாயகரமானது மக்கள் விரோதத் தன்மை வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

அனைவருக்குமான உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறி வரும் "இடது' சாரிக் கட்சிகளும் அரசுசாரா அமைப்புகளும் சில பொருளாதார நிபுணர்களும் இச்சட்டத்தின் கீழ் அரிசியும் கோதுமையும் மட்டும் வழங்கினால் போதாது எண்ணெய் பருப்பு வகைகள் சர்க்கரை உள்ளிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை உணவு உரிமை நகல் சட்டம் மட்டுமல்ல மைய அமைச்சரவைக் குழுவும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

 

மேலும் ஏழைகள் என்பதை வருமான அடிப்படையில் மட்டும் தீர்மானிக்கக் கூடாது ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்கும் சத்தான சரிவிகித உணவு என்பதையும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும்; நாளொன்றுக்கு 2200 கலோரிகளுக்கும் குறைவான உணவை உட்கொள்பவர்களையும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் இவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் மைய அரசோ இக்கலோரியின் அளவை 1700 எனத் தீர்மானித்திருப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை இச்சட்டத்தின் கீழ் வருவதில் இருந்து அப்புறப்படுத்திவிட்டது.

 

அந்தோதயா திட்டம் அன்னபூர்னா திட்டம் ஆகியவை மூலம் தற்பொழுது 35 கிலோ அரிசியோ கோதுமையோ பெற்றுவருபவர்களுக்கும் இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை மட்டுமே கிடைக்கும். அதாவது இச்சட்டம் நடைமுறைக்கு வரும்பொழுது அத்திட்டங்கள் தானாகவே காலாவதியாகிவிடும். எனவே இத்திட்டங்களின் கீழ் வரும் ஏழை மக்கள் அரசால் நிறுத்தப்படும் 10 கிலோ அரிசியையோ கோதுமையையோ வெளிச்சந்தையில்தான் வாங்க நேரிடும். இதனால் இந்த ஏழைமக்கள் தங்களின் உணவுத் தேவைக்குத் தற்பொழுது செலவழிப்பதைவிடக் கூடுதலாக ரூ.200 செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர். இன்னொரு புறமோ ரேசனில் வழங்கப்படும் அரிசி கோதுமையின் அளவை இச்சட்டம் தடாலடியாகக் குறைப்பதனால் மைய அரசுக்கு உணவு மானியத்தில் ரூ.4000 கோடி ரூபாய் மிச்சமாகும்.

 

தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் ரேசன் கடைகளின் மூலம் ஏழைகளுக்கு நேரடியாக உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக உணவுக் கூப்பன்களை வழங்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்து வருகிறார்கள். உணவுக் கூப்பன்களை வழங்கும் முறைக்கு மாறினால் அரசிற்கு விவசாயிகளிடமிருந்து அரிசி கோதுமையைக் கொள்முதல் செய்து சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இருக்காது நியாய விலைக் கடைகளை நடத்த வேண்டிய தேவையும் எழாது. இந்த நகல் சட்டம் ""உணவுப் பொருட்களை வழங்க முடியாத காலக்கட்டங்களில் பயனாளிகளுக்கு பண இழப்பீடு வழங்கப்படும்'' எனக் கூறியிருப்பதன் மூலம் அவர்களின் ஆலோசனையைக் கொல்லைப்புற வழியாக நடைமுறைப்படுத்த முயலுகிறது. ஏழை மக்களைச் சூதாட்டம் நிறைந்த வெளிச் சந்தையில் தள்ளிவிட முயலுகிறது.

 

நக்சலைட்டு தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் இச்சட்டம் நடைமுறைக்கு வராது என்பதன் உண்மையான பொருள் அரசுக்கு எதிராக யாராவது போராடினால் அந்த மக்கட் பிரிவினருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்க மாட்டோம் என மிரட்டல் விடுவதுதான். காட்டு வேட்டை நடக்கும் பழங்குடியினப் பகுதிகளில் பெயரளவில் இருக்கும் நியாய விலைக் கடைகளைச் சட்டபூர்வமாகவே இழுத்து மூடிவிடும் சதித்தனத்தைக் கொண்டுள்ளது இந்த நகல் சட்டம். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் பழங்குடியின மக்களை மேலும் மேலும் பட்டினிக்குள் தள்ளிவிடும் குரூரப் புத்தியைத்தான் இந்த நகல் சட்டம் எடுத்துக் காட்டுகிறது.

 

பொருளாதார நெருக்கடியில்கூடத் தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை வரிச் சலுகையாக அளிக்கத் தயங்காத அரசு அப்படிபட்ட சமயங்களில் தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்துது விடுவோம் எனக் கூறுகிறது. பொருளாதார நெருக்கடி மிகுந்த சமயத்தில் மக்கள் பட்டினி கிடக்கலாம்; ஆனால் தரகு முதலாளிகளின் இலாபத்திற்கு எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அரசின் "உயர்ந்த' குறிக்கோள். இந்திய அரசின் வர்க்கத் தன்மையைப் புரிந்துகொள்ள இதற்கு மேல் வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் நியாய விலைக் கடைகளில் நடந்துவரும் ஊழல் முறைகேடுகளைக் களைய வேண்டும்; அதற்கு சண்டிகர் மாதிரியை நாடெங்கும் அமல்படுத்த வேண்டும் என மெத்தப்படித்த மேதாவிகள் ஆலோசனை கூறி வருகிறார்கள். சண்டிகர் மாதிரி என்பது பொது விநியோக முறையை உலக வங்கியின் கட்டுப்பாடு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் திட்டமாகும்.

 

இதோ பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அனைவருக்குமான பொது விநியோக முறையை (Universal Public Distribution System) இந்தியாவெங்கும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்; அதே சமயம் ரேசன் கடைகளின் மூலம் "பயன்' பெறும் ஏழை மக்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும்; அதன் வழியாக உணவு மானியத்தை வெட்ட வேண்டும்; பொதுவிநியோக முறையில் உலக வங்கியின் கட்டளைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மறுகாலனிய நோக்கங்களை நிறைவேற்றுவதுதான் இச்சட்டத்தின் உண்மையான நோக்கம். அந்த நோக்கத்தை மறைத்திருக்கும் சல்லாத் துணிதான் உணவுப் பாதுகாப்பு என்ற வார்த்தை!

 

• உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி வாழும் ஜந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 19.5 கோடி. இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 6.1 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி உள்ளனர்.

 

• உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஜந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 7.1 கோடி. இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 2.5 கோடி குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.

 

• உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஜந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 12.9 கோடி. இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 5.4 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.

 

ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த பல ஏழை நாடுகளை விட ""வல்லரசு" இந்தியா பட்டினி இந்தியாவாக இருக்கிறது என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

 

ஒருபுறம் நிரம்பி வழியும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள்; இன்னொரு புறமோ பல கோடி இந்தியக் குழந்தைகள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள அவலக் காட்சி. ஏழைக்குழந்தைகளின் பட்டினியைப் போக்கப் பயன்படாத இந்த உணவு தானியக்கையிருப்பு யாருக்குப் பயன்படப் போகிறது? அதோ உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து அமெரிக்க டாலரைச் சம்பாதிக்கும் ""பசியோடு'' காத்துக் கிடக்கிறார்கள் முதலாளிகள்; மன்மோகன் சிங்கின் கண்ணசைவிற்காக!

 

இந்நகல் சட்டம் ரேசனில் வழங்கப்படும் அரிசி கோதுமையின் அளவைக் குறைக்குமாறு கூறியுள்ள ஆலோசனையால் மைய அரசுக்கு உணவுமானியத்தில் ரூ.4000 கோடி ரூபாய் மிச்சமாகும். இந்த குழந்தைக்குச் சத்தான உணவு கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்?

• குப்பன்