எம்மை நோக்கி  கேள்விகளாகவும், குற்றச்சாட்டுகளாகவும் இது முன்வைக்கப்படுகின்றது. நீங்கள் அவர்களை விட்டுவிட்டு, தனியாக அரசியலை செய்யுங்கள் என்கின்றனர். அவர்களை விமர்சிப்பதை கைவிடுங்கள்; என்கின்றனர். விமர்சனம் செய்யாதீர்கள் என்கின்றனர். விமர்சிப்பதால் அவதியுறுவோரும், இப்படி இப்படி செய்வதால் என்ன இலாபம் என்று கேட்போரும் அடங்குவர்.

இதே வடிவத்தில் தான் மே 18 இயக்கமும், புதிய ஜனநாயக கட்சியும், இனியொரு கும்பலும், தலித் கோஸ்டியும், லும்பினிஸ்டுகளும் கூட, தங்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்கின்றனர். இவர்கள் இதைச் சொல்லும் போது, முற்போக்கு முகாம் என்று தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தி, அதனூடாக இதைச் சொல்லுகின்றனர்.

 

நாம் செய்யும் விமர்சனத்தை நிறுத்த வேண்டும் என்பதே இதன் சாரம். தங்களுக்கு எதிராக விமர்சிப்பதை நிறுத்து என்பதே, இவர்கள் அனைவரதும் குரலாக உள்ளது. தேசியத்தின் பெயரில், முற்போக்கின் பெயரில் இது கோரப்படுகின்றது. ஏன் அதிகாரத்தில் உள்ள பாசிச அரசும், இதைத்தான் கோருகின்றது. அதேநேரம் விமர்சனம் செய்தவர்களையே அது இல்லாதாக்குகின்றது. இதைத்தான் புலிகள் தங்கள் அதிகாரத்தில் இருந்த வரை செய்தனர். மற்றைய இயக்கங்களும் கூட (புலிகள் அவர்களை தடை செய்ய முன்பிருந்தே) இதையே செய்தன. பொதுவாக ஏன் உள்ளியக்க விமர்சனத்தைக் கூட, அனுமதிக்காது அவர்களைக் கொன்றனர்.

 

இப்படி விமர்சனம் மீதான எதிர்வினை, கடந்த காலத்தில் படுகொலை அரசியலாகவே இருந்துள்ளது. இவர்கள் ஏன் இதை மறுக்கின்றனர்? ஏன் படுகொலை செய்கின்றனர்? உண்மையில் தங்கள் மக்கள் விரோத அரசியல் முதல் அதன் செயல்கள் மக்கள் முன்  அம்பலமாவதைத் தடுக்கும் எதிர்வினைதான் இவை. இது விமர்சனத்தை மறுக்கும் அபிப்பிராயங்கள் முதல் படுகொலைகள் வரை அரங்கேறுகின்றது.

 

நீங்கள் செய்கின்ற விடையங்கள் மக்கள் வாழ்வை தீர்மானிக்கின்ற போது, அதை விமர்சனம் செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு. இப்படி நீங்களும், நாங்களும் பேசுகின்ற விடையங்கள், மக்கள் சார்ந்தது. மக்கள் வாழ்வுடன் சம்மந்தப்பட்டது. மக்கள் வாழ்வை குழிபறிக்கின்ற அரசியல் முதல் அதன் நடத்தைகள் வரை விமர்சிப்பது, மக்களுக்கான சரியான அரசியலையும் நடத்தையையும் கோரித்தான்.

 

மக்கள் விரோத அரசியலையும் அதன் நடத்தைகளையும் விமர்சனம் செய்கின்ற போது,  விமர்சனங்களுக்கு இவர்கள் பதிலளிப்பதில்லை. இதன் பிரதிபலனாகவே இது படுகொலையாக வெளிப்படுகின்றது அல்லது முதுகுக்கு பின் இதைக் கையாளுகின்றனர். இதுதான் இன்று எம்மைச் சுற்றிய நிலைமை.

 

மே 16 இல் புலிகள் சரணடைந்த பின், புலியை ஏன் கடுமையாக தொடர்ச்சியாக விமர்சிக்கின்றீர்கள் என்று கேட்கின்றனர். புலியை விமர்சிக்காது அமைப்பை தனியாக கட்டுங்கள் என்கின்றனர்! இப்படி புலியை பாதுகாக்கும் குரல்கள். மறுதளத்தில் புலியை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்ற அலட்சிய போக்கு.

 

இது

1.புலியை மீள உருவாக்கம் செயகின்ற வலதுசாரிய அரசியல் தளத்தை குறைத்து மதிப்பிடுவதாகும்.

 

2.புலி அரசியல் மீள் உருவாக்கம் பெறுவதற்கு அமைய, விமர்சனத்தை தடுப்பது

இப்படி இருதளத்தில் இது வெளிப்படுகின்றது.

 

உண்மையில் இன்றைய நிலைமை என்ன? புலிகள் அரசியல் ரீதியாக அம்பலமாக்கப்படவில்லை. அதாவது வலதுசாரி மக்கள் விரோத அரசியல், அரசியல் ரீதியாக அம்பலமாகப்படவில்லை. இதனடிப்படையில் புலிகளின் மக்கள் விரோத துரோக அரசியல் நடத்தைகள், மக்கள் மத்தியில் முழுமையாக அம்பலமாகவில்லை. இன்னமும் அது தன் வலதுசாரிய தேசியக் கூறு மூலம், தன்னை தக்கவைத்திருக்கின்றது. சமூகம் மீதான பேரினவாத  ஒடுக்குமுறைக்கு எதிரான இனவாதக் கூறை, தொடர்ந்தும் வலதுசாரிகள் தன் இனவாதம் மூலம் தன் கையில் தக்க வைத்திருக்கின்றனர். இதன் மூலம் மக்கள் நலன் அரசியலை, மிக இலகுவாக அது மறுத்து வருகின்றது. வலதுசாரிய இனவாதக் கூறுக்கும், தேசியக் கூறுக்கும் உள்ள இடைவெளியை, வலதுசாரிய அரசியல் இல்லாததாக்குவதன் மூலம் தான், இடதுசாரியத்தின் மீது கூட அது செல்வாக்கு வகிக்கின்றது. வலது இடது என்ற, அரசியல் வேறுபாட்டைக் கூட, அது இல்லாததாக்குகின்றது.

 

கடந்த 30 வருட காலத்தில் இடதுசாரி கூறுகளை அழித்த வலதுசாரியம், அதன் முன்னணியாளர்களை கொன்றது. இதன் மூலம் இடதுசாரிய கருத்துக் போக்குகளையும் கூட இல்லாதாக்கியது. வலதுசாரிய சிந்தனை முறைதான் எல்லாமாகியது. வலதுசாரிய இனவாத சமூக பண்பாட்டையும், வலது தேசிய கலாச்சார சிந்தனைகளே சமூகத்தில் புரையோடியது. அது இன்னமும் கேள்விக்குள்ளாகவில்லை. அதன் கோட்பாடுகள் தான், இன்றும் செல்வாக்கு வகிக்கின்றது. பேரினவாதம் முன்தள்ளும் இனவாதம், இதை உயிர்ப்புடன் தொடர்சியாக தக்க வைக்கின்றது.

 

இதற்கு எதிரான வலதுசாரிய தமிழ் இனவாதமே, தமிழ் தேசிய அரசியலாக தொடருகின்றது. இதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திப் போராடுவது என்பது, எம்மைச் சுற்றிய சூழலில் அறவே கிடையாது. இதை நாங்கள் மட்டும் தொடர்ந்து செய்வதால், இது அசாதாரணமான பொது அரசியலுக்கு புறம்பான ஒரு விதிவிலக்கான நிகழ்ச்சியாக இன்று காட்டப்படுகின்றது. அது வெறுப்புக்குரிய ஒன்றாக, முத்திரை குத்தப்படுகின்றது. இதன் மூலம், தங்களைப் பற்றிய அரசியல் விமர்சனத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் மக்களுக்கான அரசியலை முன்னிறுத்துவதை, தொடர்ச்சியாக தொடர்ந்து மறுத்து நிற்கின்றனர்.

 

இன்று எம்மைச் சுற்றிய இனவாத வலதுசாரிய நிகழ்ச்சிநிரல்கள், மக்களை விழிப்புணர்வு பெறாது தடுத்து வருகின்றது. புலிகளின் கடந்தகால அரசியல் நடத்தைகள் சரியானது, அதனடிப்படையில் நிகழ்கால அரசியல் நடத்தைகள் சரியானது என்று தொடர்ந்து நிறுவ முனைகின்றனர். இதன் கடந்தகால அரசியலும், தொடர்ந்த முன்னனெடுப்புகளும் தவறானது என்பதை, விமர்சனத்துக்கும் அம்பலப்படுத்தலுக்கும் உள்ளாக்காமல், தொடரும் வலதுசாரி அரசியலை யாரும் முறியடிக்க முடியாது. அதுதான் செல்வாக்கு வகிக்கும்.

 

வலதுசாரியத்தை முறியடிக்காமல், மக்கள் எதையும் தனித்துவமாக தங்கள் தலைமையில்  முன்னெடுக்க முடியாது. வலதுசாரியம் முறியடிக்கப்பட்டால் தான், இடதுசாரியம் மேலெழும். மக்கள் கொண்டிருக்கக் கூடிய வலதுசாரிய சித்தாந்தம் கேள்விக்குள்ளாகவேண்டும். ஒவ்வொரு விடையத்தையும், பகுத்தாய்வு முறை ஊடாக, அம்பலப்படுத்தப்பட்ட வேண்டும். இந்த வகையில் வலதுசாரியத்தை அம்பலப்படுத்துவதும், மக்களை அணிதிரட்டுவதும் தொடர்ச்சியான அரசியலாக உள்ளது. இதுவே எம்முன்னுள்ள அரசியல் பணியாக உள்ளது.      

   
 
பி.இரயாகரன்
19.05.2010