பேரினவாத அரசு எப்படி பிரபாகரனைக் கொல்ல முடிந்தது? இப்படி ஒரு அவல நிலைக்கு யார் வழிகாட்டினர்? யாருமில்லையா? பிரபாகரன் தன்னம் தனியாகத்தானா, தன் வாழ்வின் முடிவுக்குரிய இந்த வழியை தேர்ந்தெடுத்தான்? சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை. புலத்துப் புலிமாபியாக்கள் தங்கள் திட்டத்தின் அடிப்படையில் மக்களைப் போட்டுத்தள்ள வழி காட்டியவர்கள், பிரபாகரனையும் போட வைத்தனர்.  

இப்படி அரசின் கூலிப்படையாக இயங்கியே, புலத்துப் புலிமாபியாக்கள் இவை அனைத்தையும் செய்து முடிந்தனர். பேரினவாதம் எதையும் வெல்லவில்லை, வெல்ல வைக்கப்பட்டனர். புலிக்குள் இருந்த புல்லுருவிகளும் துரோகிகளும் சேர்ந்து மக்களை பலிக்களத்தில் நிறுத்தி பலியிட்டவர்கள் தான், இறுதியில் பூசாரியையும் சேர்த்து பலியிட்டனர். இதுதான் புலிகளின் இறுதியான வரலாறு.

 

புலியின் பொது அரசியல் வரலாறு என்ன? அது வரலாற்று ரீதியாக எதை முன்னிறுத்தி அரசியல் செய்தது? மக்கள் பிணத்தைக் காட்டி பிழைப்பது தான், புலி அரசியல். இந்த புலி அரசியல் என்பது, தேசியத்தின் பெயரில் மக்கள் பிணத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது தான். புலி பிணமாக, புலிப்பணம் சிலரின் தனிச் சொத்தாகியது. அதாவது புலி அழிந்தால் புலிச்சொத்து தனக்குத்தான் என்று தெரிந்த ஒவ்வொருவரும், புலியை அழிக்க சதி செய்தனர். இப்படி அவர்கள் தங்கள் தலைவரை சதிகள் மூலம் கொன்றவர்கள், புலிச் சொத்தை எல்லாம் தமது தனிப்பட்ட சொத்தாக்கி விட்டனர். இந்த துரோகிகள் தான் தொடர்ந்து தம்மை புலத்து புலியாக முன்னிறுத்தி, தொடர்ந்து பிழைக்கின்றனர். 

 

இப்படி இவர்கள் முன்னின்று வழிநடத்திய யுத்ததந்திரத்தின் மூலம் தான், தங்கள் தலைவரையே போட்டுத் தள்ளினர். இறுதி யுத்தத்தின் போது, இவர்கள் செய்தது என்ன? யுத்தம் கூர்மையாக எதிரியை தனிமைப்படுத்தும் யுத்ததந்திரங்கள் மூலம் எதிர்கொள்வதற்கு பதில், மக்களை பலியிடுவதன் மூலம் யுத்தத்தை வெல்ல முடியும் என்றனர். இப்படி மக்களை பலிகொடுக்கும் யுத்ததந்திரத்துக்கு அமைவாக மக்களை பலியிட்டனர். இதற்கு மாறாக  மாற்று வழிகள் மூலம் இதை எதிர்கொள்வதை மறுத்தனர். இப்படி மக்களை பலியிடுவதன் மூலம் விடுதலை என்பதே, புலிகள் இறுதி யுத்தத்தில் கையாண்ட பிண அரசியலாகும்.

 

புலியின் யுத்ததந்திரம், மக்களை பெரும் தொகையில் பலியிடக் கோரியது. அதைக் காட்டியே, நாங்கள் யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினர். இதை முன்வைத்த அந்த துரோகிகள் யார்? இதை உருவாக்கி, அதை வைத்து பிரச்சாரம் செய்தவர்கள்தான் அந்தத் துரோகிகள். இதற்கு மாறாக போராட எந்த மாற்றுவழியும் கிடையாது என்றனர். மக்களை பலியிடல் மூலம், சர்வதேச தலையீட்டை ஏற்படுத்தி தமிழீழம் பெறமுடியும் என்றனர். இப்படித்தான் இறுதி யுத்தத்தை புலிகள் வழி நடத்தினர்.

 

இறுதியில் புலிகளையே பலி கொண்ட இந்த யுத்தத்தில், இதுதான் புலிகள் கையாண்ட ஒரேயொரு யுத்த தந்திரம். இதற்கு மக்களை பலிகொடுக்கவும், பலி கொடுக்கும் காலத்தை நீட்டிக்கவும், மனிதப் பிணங்களைக் காட்டி புலத்து மாபியாக்கள் விரிந்த பிரச்சாரம் செய்யவும், சண்டையில் பலாத்காரமாக ஈடுபடும்படி அப்பாவி மக்களை நிறுத்தி அவர்களையும் பலியிட்டனர்.

 

இவர்கள் ஏற்பாடு செய்து உருவாக்கி பலிக்கும், பலி காட்சிகளுக்கு எந்தக் குறைவும் இருக்கவில்லை. இப்படி மக்களை பலியிடுவதன் மூலம், அதைக் காட்டி பிரச்சாரம் செய்வதன் மூலம், தீர்வு காணமுடியும் என்றனர். இதை மற்றவர்களையும் நம்பவைத்தனர். தங்கள் ஏற்படுத்திய பலியை (பிணத்தை) உலகுக்கு காட்டும் வண்ணம், விரிந்த பிரச்சார வசதிகளையும் செய்து கொண்டனர். அதை முன்னிறுத்துவதில் கூட வெற்றி பெற்றனர். இப்படி  பிண அரசியல் முதன்மை பெற, அதைக்காட்டி புலத்து மக்கள் திரட்டப்பட்டனர். இதன் பின்னணியில்தான் மக்கள் கொல்லப்பட்டனர். புலத்து மக்களை உண்மையாக அழ வைத்து, உணர்வை கொப்பளிக்க வைத்த கொலைகார புலத்து மாபியாக்கள், தமது பங்குக்கு  நடித்தபடி இன்னும் அதிகமாக மக்களைக் கொல்வதன் மூலம் தான் அன்னிய தலையீடு என்பது சாத்தியம் என்றனர். இப்படித்தான் மக்களை தொடர்ந்து கொன்றனர். மக்களை பேரினவாத கொலைகாரனிடம் இருந்து காப்பாற்றும் மாற்று வழியை நிராகரித்தனர். புலத்து மக்களை அணி திரட்ட இந்தப் பிணங்கள் தேவைப்பட்டது. இப்படி திரட்டப்பட்ட மக்களை கொண்டு தான், அன்னியத் தலையீட்டைக் கோரினர். இப்படித்தான் பிரபாகரனை கொல்லும் வரை, பிண அரசியலைத்தான் புலத்து மாபியாக்கள் முன்னிறுத்தினர். 

 

இப்படி மக்களை பலி கொடுத்து, அதை முன்னிறுத்திய பிரச்சார அரசியல் தான், இறுதி யுத்தகால புலி மாபியாக்களின் ராஜதந்திர அரசியலாக இருந்தது.

 

இதற்கு வெளியில் மக்கள் பலியாவைதைத் தடுக்க, புலிகளும் புலத்து மாபியாக்களும் எதையும் முன்வைக்கவில்லை. மக்களை கொல்லக் கொடுத்த, அந்த பலியை முன்னிறுத்தினர். இதற்கு வெளியில் புலிகளின் யுத்தமுனையை வேறுவடிவில் மாற்றவும், மாற்றுவழி எதையும் இவர்கள் முன்வைக்கவுமில்லை முன்னெடுக்கவுமில்லை. அதை நிராகரித்தனர்.

 

மக்களை வகைதொகையின்றி கொல்லும் பலி அரசியல் மூலம், தமக்கு தீர்வு கிடைக்கும் என்று புலிகள் நம்பினர். நம்ப வைக்கப்பட்டனர். இது போல்தான் தலைமை சரணடைவதன் மூலம் தப்பிவிட முடியும் என்று கூறி, அவர்களைக் கூட சரணடைய வைக்கப்பட்டு பலியிடப்பட்டனர்.

 

மக்களின் இழப்புகள் தான், புலியின் அரசியலாகியது. மக்கள் இழப்பை உருவாக்குவது தான், புலியின் யுத்ததந்திரமாகியது. இதற்குள் தான் புலிகள் கூட பலியிடப்பட்டனர். ஓரே குட்டையில், ஒரு புள்ளியில் இவை எல்லாம் அரங்கேறியது.

 

இவை அனைத்தையும் புலத்து மாபியாக்கள் தான் வழிகாட்டினர். இதை நம்பித்தான், புலிகளின் மோட்டுத் தலைமை, மக்களை பிணமாக்கினர். இந்த பிணத்தைக் காட்டும் புலத்து பிரச்சாரம் முதல் அன்னிய தலையீடு பற்றிய புலத்து மாபியாக்கள் கொடுத்த நம்பிக்கைகள் மூலம் மக்களை கொன்றது என்பது, கொலைகார மாபியா அரசியலாகும். இப்படி மக்களைப் பலியிட்டது முதல் தங்களை சரணடைய வைத்து பலியிட்டது வரை ஒரே நேர்கோட்டில்தான் அரங்கேறியது. இப்படி புலத்து மாபியாக்களின் சதிதான், வன்னியில் பலி கொடுப்பாக நடந்தேறியது. வேறுவழியில் வன்னித் தலைமை சிந்திப்பதையும், மாற்றுவழியை தேர்ந்தெடுப்பதையும், புலத்து மாபியாக்கள் தங்கள் சொந்த தெரிவுகள் மூலம் தடுத்தனர்.

 

சுனாமி பிணங்கள் மூலம், பிணத்தைக் காட்டி புலி அரசியல் செய்து கோடி கோடியாக திரட்டிக் கொழுத்த கூட்டம், அதே உத்தியை அப்படியே இறுதி யுத்தத்துக்கும் பயன்படுத்தியது.

 

புலத்து புலி மாபியாக் கூட்டம் தேசியத்தை வைத்து தொடர்ச்சியாக கொழுத்ததன் விளைவு, மக்களை பலியிட்டதுடன் புலித்தலைமையையும் பலி கொடுத்தது. இதை மூடிமறைத்து மக்களை தொடர்ந்து ஏய்த்துப் பிழைக்கவே மே17, மே18, மே 19 என்று தத்தம் துரோகத்துக்கு ஏற்ப, கதை சொல்லி தொடர்ந்து பிழைக்க முனைகின்றனர். மே 16 அன்றே புலிகள் சரணடைந்த அந்த துரோகம் மூலம், அவர்கள் தங்கள் கதையை முடித்திருந்தனர். தாங்கள் வழிநடத்திய இந்த துரோகத்தை மூடிமறைக்க,  மே17, மே18, மே 19  என வரலாற்றை திரிக்கின்றனர்.  

 

பி.இரயாகரன
16.05.2010