Language Selection

சீலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிகளை சிங்களப் பேரினவாதம் வெற்றிகண்டு ஒருவருட காலமாகின்றது. இன்றைய நிலையில் எம்முன் உள்ள கடமைகள் என்ன என்பதை நாம் வகுத்து, அதன் அடிப்படையில் நாம் வேலைகளை செய்ய ஆரம்பிப்பது மிகவும் முக்கியமான வரலாற்றுக் கடமையாகின்றது.


முன்பு தமது சுய திருப்திக்காகவும், மக்கள் முன் தம்மை எழுத்தாளர்கள் என்று அடையாளப்     படுத்துவதற்காகவும் நடத்தப்பட்ட சஞ்சிகைகளால் சாதிக்க முடிந்தது, என்ன என்பது இன்று கவனிக்கப்பட வேண்டியுள்ளது. தம்மை தலித்தியவாதிகள் என்றும், பெண்ணிலைவாதிகள் என்றும், புத்திஜீவிகள் என்றும், கவிஞர்கள் என்றும், கலை இலக்கியவாதிகள் என்றும் சமூகத்தின் முன் அடையாளம் காட்டியவர்கள், அதற்குள் மட்டும் முடங்கிக் கிடக்கும் பலரை நிராகரித்து முன் செல்ல வேண்டியுள்ளது. சமூக அக்கறையுடன், தமிழ் சமூகத்தைச் சார்ந்து முழு ஆய்வினை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இன்று நாம் உள்ளோம்.


அதனடிப்படையில் முதலில் நாம் யார்? நாம் எங்கு நிற்கின்றோம்? இதைப் பற்றிய விரிவான ஆய்வு அவசியமாகின்றது. இதை எந்த நிலையில் இருந்து செய்ய வேண்டும் என்பதற்காக, இதை முன் வரைவாக இதை முன்மொழிகின்றேன்.


முன்பு தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி இயங்கிய ஒவ்வொரு இயக்கங்கள் தொடர்பான ஆய்வு அவசியமாகின்றது. ஒவ்வொரு இயக்கமும் தமிழீழக் கொள்கையை முன்னிறுத்தி போராடிய போதிலும,; அவற்றில் என்ன முரண்பாடுகள் இருந்தன என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும்;. அத்துடன் இவை ஒவ்வொன்றும் எவ்வாறு உருப்பெற்று, எந்த அரசியலின் அடிப்படையில் இயங்கின என்னதையும் துல்லியமாக ஆய்வு செய்யவேண்டும் இதில் குறிப்பாய் இடது அமைப்புக்கள் பற்றிய ஆய்வு மிக முக்கியமானது.


முன்னைய அமைப்புக்களில் இருந்து பிரிந்து, மீண்டும் அமைப்புக்களை உருவாக்கி போராடப் புறப்பட்ட தீப்பொறி போன்ற இயக்கங்கள் பற்றிய ஆய்வுகள் மிகவும் முக்கியமானது. இவர்கள் எதற்காக ஒரு அமைப்பில் இருந்து பிரிந்தார்களோ, அந்த பிரிவின் ஊடாக எந்தளவில் இவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


இன்றும் தமிழ் சமூகத்தில் தொடர்ந்தும் தலைவிரித்தாடும் சாதி மற்றும் பிரதேசவாதம் பற்றிய ஆய்வு மீண்டும் அவசியமாகின்றது. புலிகளால் பலாத்காரமாக சாதி மற்றும் பிரதேசவாதம் ஒரு காலகட்டத்தில் வெளித்தெரியாத வண்ணம் வைக்கப்பட்டு இருந்தாலும், இன்று அது மீண்டும் தலைதூக்கி உள்ளது. ஏன் முன்புகூட கிராமங்களில் இயக்கங்களின் ஆதரவு என்பது, சாதி அடிப்படையிலேயே இருந்தது. எனவே இது தொடர்பான ஆய்வுகளும் முக்கியமாகின்றது.


ஒரு சாதிக்குள் கூட நான் பணக்காரன் படித்தவன் என்ற பார்வையும், படிக்காதவர்கள் கூலி வேலை செய்பவர்கள் என்ற பார்வையும் உள்ளது. இதை பற்றிய ஆய்வும் அவசியமாகின்றது.


கடந்த 30 வருட காலத்தில் எமது போராட்டத்தில் நடந்தது என்ன? எத்தனை பேர் இதன் காரணமாக உயிரிழந்தார்கள்? அதில் எத்தனை குழந்தைகள் அனாதையாக்கப்பட்டனர்? எத்தனை பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இதில் 30 வயதுக்குட்பட்டவர்கள் எத்தனை பேர்? இவர்களின் இன்றைய நிலையென்ன? வன்னிக்குள் இறுதிக் காலகட்டத்தில் புலிகளால் தமது பிள்ளைகள் கடத்தப்படுவார்கள் என்ற பயத்தில் சிறு வயதிலேயே பல திருமணங்கள் நடந்தேறின. இவற்றால் எற்பட்ட பாதிப்புகள் என்ன? இப்படி பலவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.


தமது அவயவங்களை இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கானோர், இன்று இலங்கையில் வாழ்கின்றனர். இவர்கள் பற்றிய ஆய்வும் இன்று அவசியமாகின்றது
பலர் இன்றும் அகதிகளாகவே வாழ்கின்றனர் இவர்களின் வாழ்க்கை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக உள்ளது எனவே இவர்கள் பற்றிய பார்வையும் அவசியமாகின்றது.


துரோக இயக்கங்களாக மாறிப்போன பழைய இயக்கங்கள் இன்று என்ன செய்கின்றன?  இவர்கள் எந்தளவில் தமிழ் சமூகத்துக்கு துரோகம் இழைக்கின்றனர் என்பதைப் பற்றிய பார்வையும் அவசியமானது. இவர்கள் எந்தளவு நல்ல காரியங்களை செய்துள்ளார்கள் என்றும் பார்க்க வேண்டும்.


இவ்வாறு எமது சமூகத்தில் உள்ள அத்தனை விடயங்களையும் முழுமையான ஆய்விற்கு உட்படுத்துவதன் ஊடாகவே, எமது மக்களுக்கான பரந்துபட்ட வர்க்க அடிப்படையிலான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.


இவற்றை விட பழைய இயக்கங்களில் இருந்து வெளிநாடுகளில் குடியேறி அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள், எவ்வாறு காலாவதியாகின என்பதையும் நாம் ஆராயவேண்டியுள்ளது.

இன்று இணையத் தளங்களை நடத்தும் பலர், தாம் சமூகத்தின் முற்போக்கு சக்திகள் என்ற பெயரை தக்க வைப்பதற்காகவும், தாம் எழுத்தாளர்கள் என்று தம்பட்டம் அடிப்பதற்காகவும் நடத்தப்படும் இணையங்களை ஆய்வு செய்து, அவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்தல் என்பது அவசியமாகின்றது.


இதை நானோ அல்லது என் சார்ந்தவர்களோ தனிமையில் நடத்த முடியாது. மாறாக ஒரு பொது அமைப்பு வேலைய+டாகவே சாத்தியமாகும் என்பதையும் நாம் உணர்ந்து நிற்கின்றோம். இதுவே உடனடியாக எம்முன் உள்ள வேலைகளும் கடமைகளுமாகும்.