"வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று கூறி, மக்களுக்கு தெரியாது சரணடைந்ததை புலிகள் அறிவித்தது ஏன்?

மக்களுக்கு தெரியாமல் தான், புலிகள் முன்கூட்டியே தாங்கள் தப்பிச்செல்லும் சதிக்குள் சரணடைந்திருந்தனர். இந்தச் சதி அவர்களின் இறுதி முடிவானவுடன், "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று கூறி, இந்தச் சரணடைவை வெளிக்கொண்டுவந்தனர். இதை புலிகளின் அன்றைய சர்வதேச பொறுப்பாளராக இருந்த கேபி என்னும் பத்மநாதன் அறிவித்தார். அன்று சரணடைந்தவர்கள், இதை உலகறிய சொல்லிவிட்டு செய்திருந்தால்,

Soosai.jpg

 

 அவர்கள் இன்று உயிர் வாழ்ந்திருப்பார்கள். இதை மீறிக் கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்தது என்ற தெளிவு, மக்களுக்கு இருந்திருக்கும். இதன் பின் இருந்த துரோகிகள் யார் என்ற விபரம் தெரிந்திருக்கும். இப்படியிருக்க அன்று இதை உலகறிய ஏன் சொல்லவில்லை? செய்யவில்லை?

குறைந்தபட்சம் இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

 

1.தாங்கள் சரணடைவதை மூடிமறைப்பதன் மூலம் தான், தமிழ்மக்களை தாம் தொடர்ந்து ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்க முடியும் என்று புலிகள் நம்பினர். இன்றும் சரணடையவில்லை என்று கூறித்தான், மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றனர்.

 

2.தாம் சரணடைவது மூன்றாம் தரப்பினரிடம் என்பதால், அதை தங்கள் அரசியல் ராஜதந்திரமாக பீற்றிக்கொண்டு, தங்கள் புதைகுழியை தாங்களே மிக ஆழமாக அதில் இறங்கி நின்று வெட்டினர். அனைத்து பாசிச மாபியாத்தனத்தையும் ராஜதந்திரமாக பீற்றிக் கொள்வதுதான், புலி அரசியல்.    

 Soosai.jpg

 Banu.jpg

இப்படிப் புலிகள், தாங்களே வீசிய வலையில் சிக்கி தங்கள் மரணத்தைச் சந்தித்தனர். சரணடைவதை உலகறிய சொந்த மக்களுக்கு சொல்லிவிட்டு செய்திருந்தால், இப்படி அனாதையாக யாரும் கேட்பாரின்றி மரணித்து இருக்கமாட்டார்கள். செத்தவனை சாகவில்லை என்று சொல்லி, மக்களை ஏயத்து நக்கிப் பிழைக்கும் புலிக் கூட்டமும் இருந்திருக்காது. சரணடைந்ததை மூடிமறைத்து, செத்தவனைச் சொல்லிப் பிழைக்கும் புலி அரசியலும் இருந்திருக்காது. 

 

புலிகள் என்றும் மக்களை நம்பவில்லை. சதி, சூழ்ச்சி, ஆயுதங்களை எப்போதும் நேசித்தனர்.  மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற, தங்கள் சரணடைவை மறைத்தனர். ஏகாதிபத்தியம் மற்றும்  இந்திய ஆட்சியாளர்களின் எடுபிடிகளையும், பிழைப்புவாதிகளையும் நம்பியவர்கள், என்றும் சொந்த மக்களை நம்பியது கிடையாது.

 

ஜெகத் கஸ்பர் முதல் மேரி கொல்வின் போன்றவர்களுடன் இரகசிய சதிகளிலும், சூழ்ச்சிகளிலும் புலிகள் கூட்டாக ஈடுபட்ட போது, போராடிய மக்களின் முதுகில் குத்தினர். இப்படி மண்ணில் இருந்து மக்களின் முதுகில் குத்தியவர்கள், தங்கள் இந்தச் சூழ்ச்சியில் சிக்கி மரணித்தார்கள், புலத்தில் இருந்து இந்த சதியை வழிநடத்தியவர்கள், தொடர்ந்து அதையே இன்றும் செய்கின்றனர்.

 

இதில் உள்ள ஒரு உண்மை என்னவென்றால், 16 ம் திகதி தங்கள் சரணடைவைப் பற்றி, கேபி "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று அறிவித்ததுதான். நடந்து முடிந்த தங்கள் சரணடைவை, அவசரமாக மக்களுக்கு சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. ஏன் என்பது தான், இந்த புதிரை விடுவிகின்றது. ஆம் இதை மக்களுக்கு சொல்லாமல், தாங்கள் தப்பி வெளியேறிவிட்டதாக வீரம் பேசி, அதை தலைவரின் ராஜதந்திரமாக சொல்லத்தான் காத்திருந்தனர்.

 

மக்களுக்கு எதிராக புலிகள் செய்த இந்தச் சதியும், சூழ்ச்சியும், தமக்கு எதிரான சூழ்ச்சியாகப் போன பின்தான் மக்களுக்கு இதை மென்று விழுங்கிச் சொன்னார்கள். புலித்தலைமையின் கதை முடிந்துவிட்டது என்று தெரிந்தவுடன், விழித்துக்கொண்ட புலத்து மாபியாப் புலிகள் அவரசமாக "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்ற செய்தியை முதலில் வெளியிட்டனர். 16ம் திகதி மாலை இந்த செய்தியை கேபி பகிரங்;கமாக அவசரமாக வெளியிட்டார். இந்தச் செய்தியை அவர் வெளியிடுவதற்கு முன்னம், புலிகள் சரணடைந்து விட்டனர் என்பதும், அவர்களுக்கு நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்று தெரிந்தவுடன் இதை மக்கள் முன் கூறினர். அதற்கு முன்னமே, மகிந்த ஜோர்டானில் நடந்த ஜி-11 மாநாட்டில் இதை அறிவித்து விட்டார். அம்பலமான போதுதான், "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று, நடந்ததை  மூடிமறைத்து சடைந்து வெளியிட்டனர். "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்பது, புலிக்கு வழியாக, ராஜதந்திரமாக இருந்தது.

 

எப்போதும் இரகசியமான சதிகளையும், சூழச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிய புலிகள், மக்களை என்றும் நம்பியது கிடையாது. அவர்கள் எதிரியாகப் பார்த்து, அனைத்தையும் மூடிமறைத்தனர். பொய் பித்தலாட்டங்கள் மூலம் காரியமாற்றியவர்கள், இதைப் பாதுகாக்க பாசிசம் மற்றும் மாபியாத்தனத்தை ஆதாரமாக கொண்டே இயங்கியவர்கள். அப்படித்தான் இன்றும் தொடர்ந்தும் இயங்குகின்றனர்.

 

இப்படி இந்த சூழ்ச்சியையும், சதியையும் அடிப்படையாகக் கொண்ட புலி அரசியலை பயன்படுத்தியே, புலிக்கு குழிபறித்தனர். ஏகாதிபத்தியங்கள் முதல் இந்தியாவும், பேரினவாத அரசு முதல் புலத்து புலி மாபியாக்கள் வரையும், தத்தம் சொந்த வர்க்க அரசியல் நலனுக்கு ஏற்றவகையில் இந்த சூழ்ச்சியைச் செய்தனர்.

 

இதில் புலிகளை சரணடைய வைத்து கொல்வது என்ற நிகழ்ச்சி நிரல், முன்கூட்டியே மிகத் திட்டமிடப்பட்டு கையாளப்பட்டது. இந்த நிகழ்ச்சிநிரல் என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள் முதல், இது எப்படி எங்கே நகர்கின்றது என்பது தெரியாது இதை முன்னின்று செய்தவர்கள் வரை பலர் அடங்குவர். இந்த வகையில் புலத்து புலிகளுக்குள்ளும், சரணடைய வைத்து கொல்லும் திட்டத்தை தெரிந்து, அதை முன்னெடுத்தவர்கள் உள்ளனர்.

 

அன்று புலிகள் தப்பிக்க கூடிய பல மாற்றுவழிகள் இருந்தது. அது என்னவென்று, நாம் தனியாக ஆராய்ந்து பார்க்கவுள்ளோம். ஆனால் புலிகளைத் தப்பிக்கவிடாது, தப்பிக்கும் வழியை அடைத்து வழிகாட்டி கொன்றவர்கள் புலத்து புலி மாபியாக்கள் தான். தளத்தில் மரணித்துப் போன, புலி மாபியாத் தலைவர்கள் அல்ல.

 

தாங்கள் மரணத்துக்குத்தான் அழைத்துச் செல்லப்படுகின்றோம் என்பது அவர்களுக்கு  தெரிந்திருந்தால், அவர்கள் பல வழிகளில் தப்பியிருக்க முடியும். அப்படி தெரிந்திருந்தால், புலத்து புலி மாபியாக்களை துரோகிகளாக அறிவித்து இருப்பார்கள். அவர்களைத் தப்பவிடாது வழிகாட்டிக் கொன்ற துரோகிகள் தான், இன்று புலத்து புலிகளாக தொடர்ந்து மக்களை ஏய்த்து சதி செய்கின்றனர். 

 

மண்ணில் இருந்த புலித்தலைமை தங்களுக்கு மரணக் குழிதான் வெட்டப்படுகின்றது என்பதை, சதிகாரர்களிடம் சரணடைந்த பின்தான், தங்கள் மரணத்தை முத்தமிடும் போது தான் தெரிந்து கொண்டனர். இதுவொரு உண்மை. அதுவரை, இந்த சதியையும் சூழ்ச்சியையும் அவர்கள் தெரிந்து இருக்கவில்லை. புலத்து மாபியாக்களின் ஒரு பகுதி இதை நன்கு தெரிந்து, திட்டமிட்டு  வழிகாட்டியது. அவர்கள் தான் இன்று, புலத்து புலிக்கு தலைமை தாங்குகின்றனர். ஆம் தங்கள் தலைமையை படுகுழியில் தள்ளி கொன்ற துரோகிகள் தான், அன்றும் இன்றும் புலத்து புலிக்கு தலைமை தாங்குகின்றனர். இதை இன்றும் இனம் காண முடியாத அறிவற்ற மந்தைச் சமூகமாகத்தான், புலத்து தமிழ்ச்சமூகம்; தொடர்ந்து மலடாக்கப்பட்டு இருக்கின்றது.

 

பி.இரயாகரன்
12.05.2010