மே 16 மாலை எல்லாம் முடிந்து விட்டது. மே 17 அதிகாலைக்கு முன்னமே சரணடைந்த புலிகளில் ஒருபகுதி கொல்லப்பட்டு விட்டனர். இதை கேபி என்ற பத்மநாதன் தெரிந்து கொண்டவுடன், யுத்தம் தொடர்வதாக புலத்து தமிழ்மக்களின் காதுகளில் 18ம் திகதி வரை பூ வைத்தனர். 16ம் திகதி சரணடையும் துரோக ஏற்பாட்டைச் செய்து சரணடைய வைத்தவர்கள், அன்று அவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும், தொடர்பு கொள்ளவுமில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொண்டனர். அத்துடன் 17ம் திகதி காலையே நடேசனின் உடலை அரசு தன் செய்திகளில் வெளியிட்டு இருந்தது.

புலத்துப் புலிகளின் சதித்திட்டம் அம்பலமாவதைக் கண்டு, திகைத்துப்போனார்கள்.  எல்லாவற்றையும் தம் பங்குக்கு அவசரமாக புதைக்கும் நிலைக்கு, புலத்து புலி மாபியாக்கள் சென்றனர். அங்கு நடந்தது என்ன? யாரிடம் எப்படி ஏன் சரணடைந்தனர் என்ற விபரங்கள்  அனைத்தையும் மூடிமறைத்தனர். அரசுடனான ஒரு கூட்டுச்சதிக்கு, உடந்தையாக மாறினர். இன்று இவர்கள் தான், நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம் என்று சொத்துக்களை அபகரித்தபடி, புதுப் புலுடா விடுகின்றனர்.

 

அன்று ஓட்டுமொத்தமாக புலித்தலைமை சரணடைந்த போதும், தங்கள் துரோகத்தையும் காட்டிக்கொடுப்பையும் திருத்திக் காட்டமுனைந்தனர். அரசியற் பிரிவுதான் சரணடைந்தது என்றனர். இதன்பின்னான சண்டையில் தான் பிரபாகரன் வீரமரணமடைந்தாகவும், இல்லை அவர் இன்னும் உயிருடன் உள்ளார் என்றும்  திரித்துப் புரட்டிக் கூறுகின்றனர். 16ம் திகதியே  சரணடைய வைத்துக் கொன்ற சதிகாரர்கள் தான், இதைச் சொல்லுகின்றனர். 

 

தாங்கள் சரணடைய வைத்துக் கொன்றதை அவசரமாக மூடிமறைக்க, யுத்தத்தை 18 ம் திகதி வரை புலத்து மாபியாக்கள், புலத்து மக்களைக் கொண்டு கற்பனையில் நடத்தினர். இந்தச் சரணடைவு நாடகத்தில் சம்பந்தபட்டவர்களான பாதிரியார் ஜெகத் கஸ்பர் முதல் மேரி கொல்வின் கூற்றுக்களில், குறித்த திகதியைக் கூட சுத்துமாத்து செய்துள்ளனர். இதில் நடேசனுடன் 17ம் திகதி மாலையும், 18ம் திகதி காலையும் தாம் பேசியதாக கூறுவது தான் வேடிக்கை. 17ம் திகதி மதியமே நடேசனின் இறந்த உடலை அரசு தன் செய்திகளில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த சுத்துமாத்து? போர்க்குற்ற விசாரணை நடந்தால் அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம், தாங்கள் திட்டமிட்டு சதி செய்த போர்க்குற்றத்தை மூடிமறைக்க, திகதியிலும் கூட சதி செய்கின்றனர். புலத்து புலி மாபியாக்கள் மற்றும் அரசுடன் சேர்ந்து, இந்த கூட்டுச்  சதியைச் செய்துள்ளனர். 

 

கேபி என்ற பத்மநாதன் 16ம் திகதி மாலை சரணடைவை ஆயுத கைவிடுதலாக அறிவித்தார். 17ம் திகதி காலை இது அறிக்கையாக வெளிவந்திருந்தது. அன்று காலை சனல் 4 இல், வெளிவந்த பேட்டியில் (இது எத்தனை மணிக்கு எடுத்தது என்று தெரியாது) பிரபாகரனை 4 மணி நேரத்துக்கு முன்பு தொடர்பு கொண்டதாக கூறுகின்றார். அதன் பின், அவருக்கு என்ன  நடந்தது என்பது கேபிக்கு தெரியாது. நடேசன் கொல்லப்பட்டது தொடர்பாக, சரணடைய முன் 24 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சரணடைவு பேரத்தை தாம் செய்திருந்ததாக கூறுகின்றார். இப்படி இந்தத் துரோக சதிநாடகத்தின் பல பக்கங்கள் உண்டு. 

 

இதனுடன் தொடர்புடைய மற்றொரு சம்பவம் இதை உறுதி செய்கின்றது. 16ம் திகதி ஜோர்தானில் ஜீ -11 மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மகிந்தா, பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த தன் நாட்டுக்கு உடனடியாக தான் திரும்பி செல்;வதாக உரையாற்றினார். 17ம் திகதி காலை 7.30 மணிக்கு இலங்கை மண்ணில் இறங்கியவுடன்  முத்தமிட்டார். புலிகள் முற்றாகச் சரணடைந்த செய்தியையே, இந்த நிகழ்வு மிகத் தெளிவாக சொல்லுகின்றது.  

   

இந்த உண்மைகளை மக்களுக்கு மூடிமறைக்க முனைந்த வெளிப்பாடுதான், நாடுகடந்த தமிழீழக்காரர் முதல் மே 18 இயக்கம் வரை செய்கின்ற சதி அரசியலாகும். தங்கள் சதியை, போர்க்குற்றத்தை மூடிமறைக்க, புலியும் அரசும் செய்த பித்தலாட்டம் நிகழ்ச்சிநிரல் அடிப்படையில் தான், மே 18 இயக்கம் தன் பெயரைக் கூட பிரகடனம் செய்திருக்கின்றது.

 

இல்லை மே 18 தான் எல்லாம் நடந்தது என்று சொல்லுகின்ற பித்தலாட்டமே, இன்று அரசியலாக தொடருகின்றது. மே 18 ஜ முன்னிலைப்படுத்தி புலிகள் நடத்துகின்ற அனைத்து பம்மாத்து நிகழ்ச்சிகள் முதல் புலிப் புற்றில் இருந்து மீண்டும் வெளிவந்த தமிழீழக்கட்சிக்காரர்கள் வரை இதில் அடங்கும். தம்மை மே 18 இயக்கமாக பிரகடனம் செய்த தமிழீழக்கட்சிகாரர்கள் வரை நடத்துவது அரசியல் பித்தலாட்டமாகும். இது பொதுவில் அனைத்து துரோக வரலாற்றையும் திரித்தலாகும்.  

 

மே16 அன்று ஐரோப்பிய நேரம் இரவு 8.30 மணியளவில் புலிகள் ஆயுதத்தை கீழே வைத்ததை அறிவித்தனர். புலிகளின் இந்த உத்தியோகபூர்வமான இந்தச் செய்தியும், அதன் உள்ளடக்கமும் இன்று பொதுவாக காணாமல் போய்விட்டது. இதைத் தொடர்ந்து புலிக்குள் இருந்து வெளியான முக்கிய செய்திகள் அனைத்தையும், புலிகள் திட்டமிட்டு இல்லாதாக்கியுள்ளனர். இதில் சிலவற்றை நாம் உருவாக்கிவரும் எமது ஆவணப்பகுதிக்குள் காணமுடியும். மே 16, 17, 18, …(http://www.tamilarangam.net/index.php?option=com_content&view=category&id=166:may-16-17-18-&Itemid=112&layout=default&limitstart=20

 

புலிகள் இறுதியாக மே 16 மாலை அறிவித்து 17ம் திகதி அறிக்கையாக வெளியிட்ட செய்திதான் என்ன?

 

".. நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம்… விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்படமுடியாது. ……. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல் மரணத்துக்கு பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலமையில், இந்த யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்….. மிகத் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக்கொள்வதை விட வேறு தெரிவு எங்களுக்கு இல்லை"

 

இதுதான் அந்த செய்தி. "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்ற இந்த செய்தி, இன்று இணையங்களின் இருந்து பொதுவாக அழிக்கப்பட்டு விட்டது. தாங்கள் முடிவெடுத்து நடத்திய சரணடைவு நாடகத்தையும், சர்வதேச சதியுடன் கூடி நடத்திய சூழ்ச்சியையும் மூடிமறைக்க, இன்று இவை வரலாற்றில் இருந்து காணாமல் போகின்றது. இதில்தான் ".. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல் மரணத்துக்கு பயமற்று எடுத்துள்ளார்கள்." என்று, புலிகளின் புலத்துச் சதிகாரர்களின் சதித் திட்டத்தை ஏற்று, அன்று அவர்கள் சரணடைந்தனர். இதைத்தான் இவர்கள் "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்றனர்.

 

இந்தச் சதியையும், சரணடைவையும் நியாயப்படுத்த வைத்த வாதம் "இந்த யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என்பதுதான். மக்களை பணயமாக வைத்து பலியிட்டவர்கள், இதற்கு உடன்பட மறுத்தவர்களை சுட்டுக்கொன்றவர்கள் தான் இந்தப் பாசிசப் புலிகள். 20000 முதல் 50000 மக்களை கொல்ல உதவியவர்கள், 50000 பேரை அங்கவீனமாக்க உதவியர்கள், "சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என்று கூறி, இந்தக் கொலைகாரர்கள் சரணடைந்தது கேலிக்குரியது. "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று தெரிந்தவுடன், "எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என்று கூறி, மக்களை கேனயனாக்கியவர்கள் இந்த புலிகள். புலத்து மந்தைகளை ஏய்த்துப் பிழைக்கின்றனர்.  

 

இவர்கள் மக்களைப் பலியிட்டு தமிழீழத்தை பெறவும், புலியைப் பாதுகாக்கவும் முடியும் என்று வழிகாட்டி, தமிழ்மக்களை பத்தாயிரக்கணக்கில் கொன்றனர். புலத்து புலி மாபியாக்கள் புலத்தில் நடத்திய போராட்டத்தில், மக்களை கொன்று குவிப்பதை ஆதரித்தனரே ஓழிய, அதை தடுத்து நிறுத்த புலிகளிடம் எதையும் கோரவில்லை. இங்கு புலிகள் மக்கள் எனப் பேசியது எல்லாம் புலியைத்தான். புலியைப் பாதுகாக்கவும், அவர்களைக் காட்டிக் கொடுத்து பிழைக்கவும், சொத்தை அபகரிக்கவும்… பலர் தத்தம் வழியில் இந்த சரணடைவையும் கொலை அரசியலையும் முன்வைத்தனர். இப்படி ஆயுதத்தை கீழே வைத்து, சதிகாரர்களின் பின் கோழையாக சரணடைந்தனர்.  

   

இப்படி செத்துப் போன தலைவரை வரலாற்றில் இல்லாதாக்கி, தங்கள் தலைமையை நிறுவும் முயற்சியில், தலைவரே இன்று காணாமல் போகின்றார். புலிகளின் பித்தலாட்டமும், சதியும்  தன் சொந்த வரலாற்றையே திரித்து அதை மூடிமறைப்பதில் தான் தொடருகின்றது.

 

பி.இரயாகரன்
11.05.2010