இன்று புலம்பெயர் தமிழ் அரசியலில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக தம்மை சமூக அரங்கில் கட்டமைக்கின்றனர் சிலர். இவர்கள் தமிழ் அரசியல் அரங்கில் புனிதர்களாகவும், இலக்கிய அரசியல்; முகமூடிகள் அணிந்து ஊடகவியலாளர்களாகவும், ஊடக இயக்குனர்களாகவும் வலம் வருகின்றனர்.
இவர்கள் யாரைப் பற்றியும் எழுதலாம், கேள்வி கேட்கலாம், ஆனால் இவர்களைப் பற்றி ஒருவரும் எழுத முடியாது. அப்படி எழுதினால் ஆதாரம், ஆய்வு, பின்குறிப்பு என்று அனைத்தும் முன்வைக்க வேண்டும். அத்துடன் பிற்போக்காளனாய், பெண்ணிய விரோதியாய், புலியின் வீழ்ச்சியின் பின் இவர்கள் கட்டப்போகும் இயக்கத்தை காட்டிகொடுப்பவர்களாய், இவர்களை விமர்சிப்போர் சித்தரிக்கப்படுவார்கள். இவர்கள் நேரடியாக தம்மை விமர்சிப்போரை தாக்குவதுடன் நின்று விடுவதில்லை. இவர்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் உள்ளது. "ஏன் படம் வெளியிட்டாய்", "விளக்குப் பிடித்து பார்த்தாயா", "எனக்கு அவரை நன்றாக தெரியும்;, அவர் அப்படி செய்திருக்க மாட்டார்", ”இதற்கு ஆதாரம் என்ன?" என்றெல்லாம் இந்த ரசிகர் கூட்டம் கேட்கும்..... இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதல்ல இந்த பதிவு. இவர்கள் யார் என்று விளங்கிக்கொள்ள ஒரு முயற்சி....
ஈழத்தமிழ் ஊடகங்களைப் பொறுத்தளவில்; இன்று தாயகத்திற்கு வெளியில் புலம்பெயர்ந்தோரால் இணையத் தளங்களும், தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, சஞ்சிகைகள், தாயகத்தை விட கூடுதலான அளவில் நடாத்தப்படுகிறது. இவைகளில் பெரும்பாலானவை புலிகள் சார்பாகவோ, அல்லது இலங்கை அரசு சார்பானதாகவோ தான் இயங்குகின்றன. இவ் இரு அணிகளுக்கு வெளியில்; விரல் விட்டு எண்ணக்கூடிய வெகுசில ஊடகங்களே உள்ளன.
இன்றுள்ள வாழ்வியலில்; எல்லா மனிதநடவடிக்கைகளும் ஏதோவொரு வகையில் ஏதாவதொரு அரசியல் கண்ணோட்டத்தை அல்லது சித்தாந்தத்தைச் சார்ந்ததாகவே இருக்கிறது. இதன்பால் ஊடகங்களின் இச்சார்புநிலை என்பது, அவ் ஊடகங்களின் அரசியல் அடிப்படையுடன் அல்லது அது வரிந்து கொண்ட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்த வகையில்; புலி, அரசு, மூன்றாவது நிலை என்ற பாகுபாட்டிற்கப்பால் வர்க்கம் சார்ந்த சித்தாந்த அடிப்படையில் புலம்பெயர் ஊடகங்களை ஆய்வு செய்தோமானால், 99.9 விழுக்காடு ஊடகங்கள்; உழைக்கும் வர்க்கத்தின் நலம் சார்ந்தவை அல்ல. அதாவது, புலி, அரசு, மூன்றாவது நிலை என்ற பிரிவுக்குள் இயங்கும் புலம்பெயர் ஊடகங்களில் பெரும்பான்மையானவை, முதலாளித்துவத்தின் அனைத்துச் சீரழிந்த வடிவங்களான தரகு, உலகமயமாக்கல், நுகர்வியல் மனப்பான்மை, மேற்கத்தைய கலாச்சார சார்பு, போன்ற கருத்தியல்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதிபலிப்பனவாக அல்லது பிரச்சாரம் செய்வனவாக இயங்குகின்றன.
நீங்கள் பலர் கேட்கலாம் இந்த மூன்றாவதுதளம் சார்ந்த ஊடகங்களும் முதலாளித்துவ சீரழிவை முன் நிறுத்துபவையா? யார் இந்த மூன்றாவது தரப்பினர்?
இவற்றை இயக்குபவர்கள் மற்றும் எழுதுபவர்கள் பலர் முன்பு சிறு பத்திரிகைகள், சஞ்சிகைகள் நடத்தியவர்கள். இத்தரப்பில் வெளியிடப்படுவைகளில் பெரும்பான்மையானவை இணையதளச் சஞ்சிகைகளாகும். இவர்களையும் இரண்டாகப் பிரிக்கலாம். முதல்வகையினர்; பொதுவான இடதுசாரித்துவம், பெண்ணியம், இலக்கியம், "முற்போக்கு தேசியம்", தலித்தியம், "பின் நவீனத்துவம்" போன்ற குறியீட்டு அரசியல் கருத்தியல்களை தம் அரசியல் அடையாளங்களாக காட்டியபடி இயங்குபவர்கள்.
இதற்கு மாறாக குறிப்பாக மார்க்சிச-லெனினிய மாஒ சிந்தனையை அடிப்படையாக கொண்ட அல்லது சமூக மாற்றத்திற்கான அரசியலை நேரடியாக முன்வைத்து இயங்குபவர்கள். இவர்கள் இரண்டாவது வகையினர்.
இவர்களில் சிலர் தேசத்தில் புலிக்கும், மற்றும் ஏனைய தமிழ் பாசிச, குறுந்தேசிய சக்திகளுக்கு மாற்றாக புதிய மக்கள் இயக்கம் உருவாக்க முயன்றவர்கள்.
இந்த முதல் வகை மூன்றாவது தரப்பினர் பலர்; தங்களை புத்திஜீவிகளாகவும், ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாகவும், எல்லாவற்றிகும் பதில் வைத்திருக்கும் எல்லாம் தெரிந்த புரவலர்களாகவும், பெண்ணிய, மார்க்சிச, பொருளாதார தத்துவங்களை தமது நுனிவிரலில் வைத்திருக்கும் கல்விமான்களாகவும், தம்மை வெளியுலகுக்கு காட்டியபடி வலம் வருகின்றனர். ஆனால்; உண்மையில் இவர்களில் பலர் இலங்கை அரசுடன் சேர்ந்து "ஜனநாயகம்" கதைக்கும் புலம்பெயர் ”ஜனநாயகவாதிகளில்” (தேனீ இணையம், ரீ.பீ.சீ....) இருந்து பெரிதும் வித்தியாசப்பட்டவர்கள் அல்ல. அவர்களைப் போன்று இவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளட், ரெலொ, புலி போன்ற அமைப்புகளில் இருந்து வந்தவர்களே. அவ் இயக்கங்களில் நடந்த உட்படுகொலைகள், ஜனநாயக மறுப்புகள் போன்ற அனைத்திலும் இவர்களுக்கு பங்கு உண்டு. இவர்களில் பலர்; இச்செயல்களில் நேரடியாக பங்கு கொள்ளாவிட்டாலும் அதை தட்டிக்கேட்காதவர்கள். எந்த எதிர்வினை ஆற்றவே முயலாமல், சந்தர்ப்பவாதிகளாய் தமது பதவிகளை காக்க முயன்றவர்கள். தமது தனிமனித நடத்தைப் பிறழ்வை மூடிமறைக்கப் பெண்ணியம் என்ற பெயரில் வரையறையற்ற பாலியல் உறவை சமூக விழுமியமாக்கவும், விபச்சாரத்தை தொழிலாகவும் அங்கீகரிக்கக் கோருபவர்களும்; இவர்கள்தான். தலித்தியம் என்ற பெயரில்; இலங்கை அரசின் விமானபடையின் விமானங்களில் பயணம் செய்து, அரசியல் நடத்துபவர்களும், அதே அரசின் காசில் கேரளாவில் உல்லாசப் படகுகளில் அரசியல் நடாத்தியவர்களும் இவர்கள்தான். இன்று தேசத்தில் மக்களுக்காக தொடர்ந்தும் போராட புலத்திலிருந்து இயக்கம் கட்டி இறக்குவதாக பீலா விடுபவர்களும் இவர்கள்தான்.
நான் ஆரம்பத்தில் குறித்த அந்த ரசிகர்களை கொண்ட பிரமுகர்கள் தான் இந்த நபர்கள். அதாவது இன்று புலம்பெயர் தமிழ் அரசியல் அரங்கில் புனிதர்களாகவும், இலக்கிய அரசியல்; முகமூடிகள் அணிந்து ஊடகவியலாளர்களாகவும், ஊடக இயக்குனர்களாகவும், கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் வலம் வருபவர்கள். இவர்கள் யாரை பற்றியும் எழுதலாம், கேள்வி கேட்கலாம், ஆனால் இவர்களைப் பற்றி ஒருவரும் எழுத முடியாது. அப்படி எழுதினால் ஆதாரம், ஆய்வு, பின்குறிப்பு என்று அனைத்தும் முன்வைக்க வேண்டும் என்று கேட்பவர்கள். அத்துடன் பிற்போக்காளனாய், பெண்ணிய விரோதியாய், புலியின் வீட்சியின் பின் இவர்கள் கட்டப்போகும் இயக்கத்தை காட்டிகொடுப்பவர்களாய் இவர்களை விமர்சிப்போரை சித்தரிப்பவர்கள்.
நீங்கள் கேட்கலாம்; அவர்கள் ஆதாரம் கேட்பதில் என்ன தவறு என்றும், இந்த பிரமுகர்களைப் பற்றி எழுதும்போது ஊடகதர்மம் எங்கு போனதென்றும்.
ஊடகதர்மம் என்ற வகையில் எல்லா நாடுகளிலுள்ள, ஊடகங்களுக்கு பொதுவானதாகவும், அந்தந்த நாட்டின் கலாச்சாரம், சட்டதிட்டங்களுக்கு அமையவும், ஊடகங்கள் தமக்கு தாமே வகுத்துகொண்ட கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று ஒரு விடயத்தை பிரசுரிக்கும் போது, அது சம்பந்தமான போதுமான ஆதாரங்களை சமர்பிப்பதாகும். அதே போன்று எவர் பற்றி ஒரு விடயம் வெளிக் கொணரப்படுகிறதோ, அவ் விடயம் சம்பந்தமாக அந்நபரின் கருத்தையும் கேட்டு அதையும் வெளியிடுவது மற்றொரு ஊடகதர்மம் சார்ந்த சுய கட்டுப்பாட்டு விதி.
அந்த வகையில் ஊடகதர்ம விதிகளை இப்பிரமுகர்களைப் பற்றி எழுதும் போது கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும். ஆனால் இந்த ஊடகதர்மம் மேற்கூறிய இரண்டு தனிநபர் சார்ந்த விதிகளை மட்டும் கொண்டதல்ல. இவ்விதிகளுக்கு மேலான, ஊடகங்களின் சமூகம் சார்ந்த பொறுப்பு சம்பந்தமான விதிகள் உள்ளன. அதாவது அதிகாரம் சார்ந்த ஒரு மனிதனாலேயோ அல்லது ஒரு குழுவினாலேயோ சமூகச் சீரழிவோ அல்லது சமூகப் பாதிப்போ ஏற்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது அப்படியான சூழ்நிலை ஏற்படும் நிலை இருந்தாலோ, அதை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டியது ஒரு ஊடகத்தின் அதிமேலான பொறுப்பு என்பதாகும். இதன் அடிப்படையில் இப்பிரமுகர்களின் கடந்தகாலம் பற்றி, பெருச்சாளித்தனம் பற்றி, இவர்களின் அரசியல், எதிர்காலத்திட்டங்கள் பற்றி எழுதுவது தவறல்ல. முதலாளித்துவ ஜனநாயக சட்டத்தில் ஒரு தீர்ப்பு வழங்கும் முறை உண்டு. அதை சூழ்நிலைச் சான்றின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை என்று கூறுவார்கள். இதே முறை வரலாற்று ஆய்வுகளிலும், அதிகாரத்திற்கெதிரான ஊடகவியலிலும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையில் சூழ்நிலைச்சான்றை அடிப்படையாக கொண்டு எழுதுவது தவறல்ல. அதேவேளை சூழ்நிலைச் சான்றை அடிப்படையாக கொண்டு எவரைப்பற்றி எழுதுகிறோமோ அந்நபர் அல்லது அக்குழு அதற்கு பதில் அளிக்க அவ்ஊடகத்தில் இடம் தர வேண்டும்.
உதாரணமாக, பிரபல ஊடகவியலாளர் சிவராம் இரு கொலைகளில் ஈடுபட்டதாக பலரால் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கண்ணால் கண்ட சாட்சிகள் எவரும் பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அக்கொலைகளில் சிவராம் ஈடுபட்டதற்கான சூழ்நிலைச் சான்றுகள் பல உண்டு. அதன் அடிப்படையில்; அவர் கொலைகாரன் என அவர் உயிருடன் இருக்கும் போதே எழுதப்பட்டது. அதை அவர் மறுத்து எழுதுவதற்கு பல ஊடகங்கள் அவருக்கு வசதியாக இருந்தும், அவர் மறுத்து எழுதியதாக எந்தத் தடயமும் இல்லை. அதேபோல்; இத்தளத்தில் நான் எழுதிய பதிவு ஒன்றில், சரிநிகர் பத்திரிகையில் கடமை ஆற்றிய சிலர்; தமிழ் ஈழ மக்கள் கட்சியில் இருந்தனர் என்றும், அவர்கள் சிவராம் ஊடாக புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்தினர் என்றும் எழுதியிருந்தேன். அதற்கான சூழ்நிலைச் சான்றுகள் பல உண்டு. அது தவறென்றால்; அக்குழுவின் ரசிகர்கள் கூட்டமோ அல்லது பிரபல ஊடகவியலாளர்களான அவர்களோ இவ் இணையத்தில் மறுத்துரைக்கலாம்.