10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நித்தியானந்தாவும் லிங்க வழிபாடும் - அம்மன் கோயில் அய்யாமுத்து – பகுதி 2

அய்யாமுத்து ஒரு நாள் அறுவைதாசனைப் பார்த்து சைவசமயத்தைப் பற்றி தனக்கு விளங்கப்படுத்தச் சொன்னான். அறுவைதாசனிற்கு மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் வீட்டுச் சாப்பாட்டை விருப்பமாக சாப்பிடுவதைப் போன்ற மகிழ்ச்சி உண்டானது. தான் சொல்வதைக் கேட்பதற்கும் ஒருவன் இருக்கின்றானே இவன் ரொம்ப நல்லவன் என்று அய்யாமுத்து மேல் இரக்கமும் உண்டாகி, சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பின்பு தனது வரலாற்றுக் கடமையை உணர்ந்து பேசத் தொடங்கினான்.

அறுவைதாசன்: இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மதப்பெயர் கூட மற்ற நாட்டவர்களால் கொடுக்கப்பட்டது தான். சிந்து நதிக்கரையோரம் வசித்தவர்களை சிந்துக்கள் என அழைக்காமல் எழத்துப் பிழையாக இந்துக்கள் என்று கூப்பிட்டார்கள். அதுவே பின்பு மதத்தினது பெயராகவும் வந்தது. இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்த ஆரியர்கள் ஏற்கனவே இங்கு வசித்து வந்த திராவிடர்கள் மற்றும் பழங்குடி மக்களினது நம்பிக்கைகளுக்கு கீழ்படிந்து கலந்து கட்டித் தான் இந்த மதத்தை உண்டாக்கினார்கள்.

 

அய்யாமுத்து: சிவன் தான் முழுமுதல் கடவுள். அவர் தான் உலகத்தினை படைத்தார். பின்பு எப்படி மற்றவர்களின் நம்பிக்கைகளை வழிபாடுகளை கலக்க முடியும?

அறுவைதாசன்: தொண்ணுறுகளிற்கு பிறகு பிறந்த பல ஈழத்தமிழ் இளைஞர்களிற்கு பல இயக்கங்கள் ஈழ விடுதலைக்காக போராடின என்று தெரியாது. அவர்கள் தேசியத் தலைவரால் படைக்கப்பட்ட தேசிய விடுதலை இயக்கம் தான் ஈழமக்களின் ஒரேயொரு இயக்கம் என நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இதுவும் அது போலத்தான். திராவிடர்கள் பழங்குடி மக்கள் போன்றவர்களின் சமய நம்பிக்கைகளிற்குள் போகாமல் ஆரியர்களின் கதைகளை எடுத்துப் பார்த்தாலே முற்பட்ட ரிக் வேதக் கதைகளிற்கும் பின் வந்த வேதங்களில் உள்ள கதைகளிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.


இந்து சமயத்தில் சிவனே முழுமுதற் கடவுள் என்றும் உலகத்தினை படைத்தவன் என்றும் இன்று கூறப்படுகின்றது. ஆனால் முதலாவது வேதமாகிய ரிக் வேதத்தில் சிவன் என்ற கடவுளே இல்லை. கிருத்சமதன் என்ற ரிக் வேத கவிஞன் அபாம்நபாத் என்ற தேவதை தான் உலகத்தினை படைத்ததாக பாடியிருக்கின்றான். ஏற்கனவே இந்தியாவில் வசித்து வந்த மக்களின் கடவுள் தான் சிவன். சிவனை லிங்க வழிபாட்டுக்காரர்களின் கடவுள் என்று இழிவாகத் தான் முற்பட்ட வேதப் பாடல்கள் கூறுகின்றன.

லிங்க வழிபாட்டைப் பற்றி சொல்லியவுடன் அறுவைதாசனுக்கு தற்போது லிங்க வழிபாட்டை பிரபலமாக்கிய நித்தியானந்தாவின் ஞாபகம் வந்தது. முற்றும் துறந்த முனிவர் என்பதை உடுப்பை முழுவதுமாக திறந்த முனிவர் என்று மாறி விளங்கி விட்டார் என்று யோசித்தான். சிலர் லிங்கத்தை கும்பிடுகிறார்கள். நித்தியானந்தா லிங்கத்தையே  பக்தைகளிற்கு கொடுத்து வழிபடுகிறார். ஏல்லாம் தெரிந்த சாமியார் என்று பின் நவீனத்துவ எழுத்தாளர்களே வணங்கும் இவரிற்கு கமெரா இருந்தது எப்படி தெரியாமல் போனது. காரிற்கு பூட்டுகின்ற ஒரு Navigation System ஒன்றை வைத்திருந்தாலாவது கமெரா இருந்ததை சொல்லியிருக்கும் என்று கவலைப்பட்டான்.

அய்யாமுத்து: பிறகு எப்படி சிவன் கடவுளாக வந்தார்?

அறுவைதாசன்: தேசியத் தலைவரும் தேசிய விடுதலை இயக்கமும் மற்றைய இயக்கங்களை துரோகிகள் கள்ளர்கள் என்று அழித்த பிறகு ஈரோஸ் மிஞ்சி இருந்தது. ஈரோசை எப்படி மடக்குவது என்பது இயக்கத்திற்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. ஏனென்றால் ஈரோஸ் ஒன்றுமே செய்யாமல் இருந்தது. ஓன்றுமே செய்யாமல் இயக்கம் என்று இயங்கிக்  கொண்டிருந்தது உலகத்திலேயே ஈரோசாகத் தான் இருக்கும். ஓன்றுமே செய்யாமல் இருப்பவர்கள் மீது எப்படி பழி சுமத்த முடியும்? எனவே இயக்கம் தீவிரமாக யோசித்து விட்டு ஈரோஸ்காரர்கள் தமது அமைப்பை கலைத்து விட்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச்  செல்லுகின்ற இயக்கத்துடன் மகிழ்ச்சியுடன் சேர்ந்து கொண்டதாக அறிவித்தது. இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு உள்ளே இருந்த ஈரோஸ்காரர்கள் மகிழ்ச்சியுடன் அடுத்த நிமிடமே சேர்ந்தனர். இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு வெளியே இருந்த ஈரோஸ்காரர்களிற்கு மகிழ்ச்சி வரவில்லை. எனவே அவர்கள் இயக்கத்துடன் சேரவில்லை.


ஈரோசினர் தம்மை புத்திஜீவிகள் என்று நினைத்துக் கொண்டவர்கள் நாங்கள் எப்படி இயக்கத்துடன் சேர முடியும் நாங்கள் ஈரோசாகவே தொடர்ந்து இருப்போம் என்று சொல்லி விட்டார்கள். கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்ளே இருந்திருந்தால் அவர்களிற்கும் அடுத்த நிமிடமே மகிழ்ச்சி வந்திருக்கும் என்பதனை தனியே குறிப்பிட்டு சொல்லத் தேவையில்லை.

அய்யாமுத்து: அவர்கள் இயக்கத்துடன் சேர்வதற்கு எது தடையாக இருந்தது?

அறுவைதாசன்: ஒரு முறை யேசுவின் கதையை படமாக்க விரும்பிய ஒரு இயக்குனர் யேசுவாக எம்ஜிஆரை நடிக்க வைக்க முயற்சித்தார். அதற்காக எம்ஜிஆரிடம் கதை சொல்ல போயிருந்தார். யேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்வது வரை உணர்ச்சிவசமாக சொல்லிக் கொண்டிருக்கும் போது வாத்தியார் குறுக்கிட்டு சொன்னாராம் கதை பரவாயில்லை ஆனால் சிலுவையில் உயிர் விடுவது மாதிரி இல்லாமல் நான் முன்பொரு படத்தில் ஒரு பெரிய மரம் சரிந்து விழும் போது  எனது வெறும் முதுகைக் கொடுத்து எல்லோரையும் காப்பாற்றியது போல சிலுவையை தூக்கிக் கொண்டு எல்லோரையும் அடித்து விழுத்துவது போல முடிவை மாற்றலாம். மேலும் யேசுவிற்கு காதலியோ மனைவியோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை படத்தில் ஜெயலலிதா யேசுவாகிய என்னை நினைத்து கனவு காண்பது போல ஒரு பாடல் காட்சியையும் வைக்கலாம் என்றாராம்.


தலையிலே துண்டைப் போட்டுக் கொண்டு போன அந்த இயக்கனர் பிறகு கோடம்பாக்கம் பக்கமே தலை காட்டவில்லையாம். அது மாதிரி தான் ஈரோஸ் மக்கள் போராட்டம் மத்திய குழு என்று பேச இயக்கம் தலைவர் சூரிய பகவானின் புதல்வர் அனுராதபுரத்திலே எள்ளாளனின் சமாதிக்கு பக்கத்திலே பிறந்ததினால் பிறப்பிலேயே மர்மமானவர் என்று புராணம் படிப்பவர்கள் பிறகு எப்படி இரண்டு பக்கமும் சேர முடியும்.

அய்யாமுத்து: சரி சிவனின் கதைக்கே திரும்பி வா.

அறுவைதாசன்: ஈரோசின் தலைமைப் பொறுப்பிலே இருந்த பாலக்குமார் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்ளேயே இருந்தார். கொஞ்ச நாளில் அவர் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் கா. வே. பாலக்குமாரன் என்று அழைக்கப்பட்டார். இன்றைய இளம் வயதினரிற்கு அவரின் நதிமூலம் தெரியவே தெரியாது. கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வெளியே இருந்திருந்தால் பாலக்குமார் துரோகிப் பட்டம் வாங்கியிருப்பார்.

அது மாதிரித் தான் சிவனையும் தமது நலன்களிற்கமைய ஆரியர்கள் தமது சமயத்திற்குள் கொண்டு வந்தனர். இதன் மூலம் சிவனை வழிபட்டு வந்த மக்கள் ஆரிய மதத்திற்குள் உள்வாங்கப்பட்டனர். ர்pக் வேதத்தில் இருந்த உருத்திரன் என்ற பசுக்களை அழிக்கின்ற தேவன் பின்பு நான்காவது வேதமாகிய அதர்வத்தில் பசுக்களின் தலைவனாகி விடுகின்றான். அதனால் பசுபதி என்ற பெயரும் பெறுகின்றான். அந்த உருத்திரனையும் சிவனையும் ஒரே கடவுளாக்கி விடுகிறார்கள்.


அய்யாமுத்து: ஒரு காலத்திலே பசுக்களை அழிப்பவனாக இருந்தவன் பிறகு எப்படி பசுக்களின் தலைவனாக முடியும?

அறுவைதாசன்: ஈழமக்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளில் ஒருவன் சரத் பொன்சேகா. ஈழத் தமிழ மக்களை அரசியல் ரீதியாக பிரதிநிதிப்படுத்துகிறோம் என்று கூறிக் கொள்கின்ற தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலின் போது அந்த போர்க்குற்றவாளியை ஆதரித்து ஈழத்தமிழ் மக்களின் பாதுகாவலனாக காட்ட முயன்றது போலத் தான் இதுவும்.


இதற்கு எதிர்மாறாக நல்லவர்களாக இருந்த கடவுள்கள் கெட்டவர்களாக மாறியதும் நடந்திருக்கின்றது. சமீபத்தைய உதாரணம் கருணாநிதி. ஒரு காவத்தில் தமிழர் உரிமை பகுத்தறிவு சமய மறுப்பு என்று பேசிக் கொண்டிருந்த இவர் இன்று மஞ்சள் துண்டைப் போட்டுக் கொண்டு ஈழத் தமிழர்களின் கொலைக்கு துணை போயுள்ளார். வயது முதிர்ந்த நோயாளியான பார்வதி அம்மாவை பிரபாகரனின் தாயார் என்ற ஒரே காரணத்திற்காக  நாடு கடத்திய காங்கிரஸ் கயவாளி கும்பலிற்கு வக்காலத்து வாங்குகின்றார். அழகிரியின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக இவரை எங்கு வேண்டுமானாலும் கடத்தலாம். இந்த வயதிலும் முதுகெலும்பில் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார் என நான் யோசிப்பதுண்டு. இப்பத் தான் தெரிய வந்தது இவரிற்கு முதுகெலும்பு இருந்தால் தானே வியாதி அதிலே வரும்.

அய்யாமுத்து: இப்பவே கண்ணைக் கட்டுது. இன்றைக்கு இதோடு முடிக்கலாமே.
தொடரும்
(ஆதாரங்கட்கு – பிராமண மதம் – ஜோசப் இட மருது)


பிற்குறிப்பு: போன முறை ஏன் பிராமணர்கட்கு மட்டுமே பூசை செய்யும் உரிமை இருக்கின்றது. பிராமணர்களிற்கு ‘அது’ தங்கத்திலே செய்திருக்கின்றதா என அறுவைதாசன் கேட்டிருந்தான். உரிமை தங்கத்திலே செய்திருக்கின்றதா என பிழையாக வந்திருந்தது. அறுவைதாசன் வாழும் காலத்திலேயே அவனது கருத்துக்களை திரிக்க வேண்டாமென கேட்டுக் கொள்ளுகின்றேன்.


http://www.psminaiyam.com/?p=5275

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்