ஒரத்தநாடு காரியாலயத்தில் அரசியல் வகுப்பு ஆரம்பித்தது. அப்போது என்னுடன் பலர் இணைந்து கொண்டனர். இக்காலத்தில் நோயுற்றவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும், அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். இவர்களில் பலர் அரசியல் வகுப்புகளில் அதிக நாட்டமும் காட்டினார்கள்.
இக்காலத்தில் தான் ஒரத்தநாட்டு காரியாலயத்தின் மலக்குழி நிரம்பி, அங்கு மலம் கழிக் முடியாது போனது. அக்குழியை துப்பரவாக்க வேண்டிய கட்டாயத்தில், கரியாலயப் பொறுப்பாளர்கள் தள்ளப்பட்டனர். அக்குழியை துப்பரவு செய்ய அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளரான வாசு (வாசுதேவன்)வும், மற்றைய பலவிவகாரங்களை கவனிந்து வந்த பெரிய மென்டிஸ்சும் (பாலமோட்டை சிவம்) இதை தீர்வு காண வேண்டியிருந்தது. அவர்கள் தலித் இனத்தவர் ஒருவரை அழைத்து வந்தனர். அவர் அதைப் பார்த்து அதற்கான விலையைப் பேசிக் கொண்டிருந்தனர். அரசியல் வகுப்பு எடுத்து கொண்டிருந்த தோழர் தங்கராஜ எம்மிடம், ஏன் இதை நாமே செய்யக்கூடாது என்று கேட்டார். அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்தால் என்ன? இது போன்ற பல கேள்விகளை எம்மை நோக்கி எழுப்பினார் அப்போது எம்முடன் இருந்த ஆனந்தன் என்பவர், நாம் இதைச் செய்வோம் என்றார். இதுவும் ஒருவித பயிற்சி தான் என்றார். பின்னர் என்ன, நாம் எல்லோருமே அதை துப்பரவு செய்தோம். நான் இச்சம்பவத்தை இங்கு குறிப்பிடக் காரணம், சாதிகள் இல்லை அவற்றை ஒழிக்க நாம் பாடுபடவேண்டும் என்று கூறிய தலைமை உறுப்பினர்கள், என்ன செய்கின்றனர் என்பதை விளக்கத்தான். அவர்கள் தமக்கு இவ்வாறன பிரச்சனைகள் எழுந்தவுடன், அவர்களின் சிந்தனை எங்கு சென்றது. அது சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடியது.
ஒருசில நாட்களில் காரியாலயத்தில் தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்கு என்று தனி ஒரு முகாம் அமைப்பது என்று எண்ணம் இருந்ததால், தனி முகாமை அமைக்கப்பட்டது. அவ்முகாமிற்கு முதலில்; அரசியல் வகுப்பு எடுத்தவர்களே, முதலில் அனுப்பப்பட்டனர். அவ்முகாமில் பலரும் தங்கக் கூடிய வகையில், பக்கத்துக் கிராம மக்களின் உதவியுடன் வடிவமைத்தோம். அந்த முகாமிற்கு அன்ரனி என்பவர், முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவ்முகாமிற்கு ஏச் முகாம் என பெயர் வைக்கப்பட்டது. பிற்காலத்தில் அதை சிக் காம் என்றும் அழைத்தார்கள். அங்கே நாம் அனைவருமாக, கிட்டத்தட்ட 70 தோழர்கள் வரை அப்போது இருந்தோம். அத்துடன் நீண்ட நாட்கள் சுகயீனப்பட்டோர், வேறு முகாம்களில் இருந்து வருபவர்களையும், இந்த முகாமிற்கு மாற்றினார்கள். இவர்களை விட பொக்கழிப்பான், சின்னமுத்து போன்ற தொற்று நோயுள்ளவர்களையும் எமது முகாமிற்கு அழைத்து வருவார்கள். அவ்வாறு வருபவர்களில் பலர் திரும்பிச் செல்ல மறுத்தனர். அதனால் எமது முகாமின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது எனது நினைவுக்கு எட்டியவரை 112 பேர் வரையில் இறுதியாக இருந்தோம்.
இந்திய இராணுவத்தின் யுப்பியில் பயிற்சி பெற்ற உதயன், ஜிம்மி இருவருமே எமக்கான வெளி வேலைகளைச் செய்தனர். ஓரத்தநாட்டு முகாமுக்கு ஒவ்வொரு நாளும் சென்று வருவது அவர்களின் வழக்கம். இவர்களை எவரும் எதுவும் கேட்க முடியாது. காரணம் தாம் நேரடியாக அனைத்து முகாம் பொறுப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கூறி நிற்பார்கள். அப்போது எமது முகாம் பொறுப்பாளராக அன்ரனி இருந்த போதும், எமது முகாமை வழிநடத்துவது தோழர் தங்கராஜாவே. அவர் எமது முகாமை சுய கட்டுப்பாட்டு முகாமாக மாற்றினார். அதாவது சமைத்த சாப்பாட்டை மற்றவர் பரிமாறாது, ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான உணவை தாமே எடுத்து சாப்பிடுவது. இறுதியாக சாப்பிடாத தோழருக்கும் தேவையான உணவு இருக்க வேண்டும் என்றும், உணவுகள் தேவையற்ற முறையில் விரையம் செய்யாத வகையில் பக்குவப்படுத்தை ஏற்படுத்தினார். சிலர் தேவையற்று உணவை விரையம் செய்தால், அவர் தாமாகவே அதற்கான சுயவிமர்சனத்தை முன்வைத்து அதற்கான தண்டனையையும் இரவுநேர ஒன்றுகூடலில் செயற்படுத்துவார்கள். இவ்வாறு பல பிரச்சனைகளை விமர்சனம், சுயவிமர்சனம் என்ற வகையில் புதிய முரண்பாடுகள் எழாதவாறு தீர்த்து வைத்து, எங்களுக்கு அரசியல் போதிப்பதையும் அவர் தொடர்ந்தார்.
இப்படித்தான் ஒருமுறை தோழர் சோசலிசம் சிறி, எமது முகாமிற்கு அருகாமையில் வசித்த இந்தியப் பெண்ணைக் காதலித்தார். இது முகாமில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது, அது தொடர்பான விமர்சனத்தை எமது தோழர்கள் அவரிடம் முன்வைத்ததுடன், அவரின் சுய விமர்சனத்தை கோரினர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு சுயவிமர்சனம் செய்த வேளையில் விம்மிவிம்மி அழுதார். இவரின் சுயவிமர்சனத்தை ஏற்றுக்கொண்ட நாம், இவ்விடையம் அனைத்து முகாம்களின் பொறுப்பாளருக்கோ அல்லது ஒரத்தநாட்டுக்கோ தெரிய வந்தால் இவர் வதைமுகாமிற்கு அனுப்பப்படலாம் என்ற ஐபயம் ஏற்பட்டது. இவ் விடயத்தை நாம் அனைத்து முகாம் பொறுப்பாளருக்கு உடனடியாகத் தெரிவிக்கக் கூடாதென முடிவெடுத்தோம். மாறாக எமது முகாமில் நடக்கின்ற அனைத்து விடயங்களும், நாளுக்கு நாள் ஓரத்தநாட்டு முகாமுக்கு தெரிந்தவண்ணமே இருந்தது.
எமது முகாமிற்கு வரும் தோழர்கள் முகாம்களில் நடக்கு கொடுமைகளை பற்றி கூறுவதுடன், சிலரன் தன்னிச்சையான செயற்பாடுகளையும் எம்மிடம் கூறினர். இது தொடர்பாக நாம் என்ன செய்வது என்ற கேள்வியை, இரவு நேர ஒன்று கூடலில் எழுப்பினர். அக்காலத்தில் வல்வெட்டித்துறையில் இலங்கை விமானப் படையால் குண்டுகள் வீசப்பட்டு வருவதை செய்திகள் மூலம் அறிந்து கொண்ட நாம், இதற்கும் நாம் என்ன செய்வது என்று கேட்டோம். ஏன் பயிற்சி முடிந்து லெபனானில் இருந்து திரும்பியவர்களும், யுபியில் இருந்து திரும்பியவர்கள் உட்பட பலரும் இங்கு தரித்து நிற்பதை விடுத்து, தளத்தில் இறங்கி போராடினால் என்ன என்ற கேள்வியும் எழுப்பட்டது? இதன் போது பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். அதன் முடிவாக நாம் இதனை எதிர்த்து போராட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் நடக்கும் விடையங்களை தாங்கிய வண்ணம் ஒரு மகஜர் ஒன்று எழுதி அனுப்பப்டவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு நாம் இங்கு விவாதங்களை நடத்தும் வேளையில், எமது முகாமைத் தவிர்ந்த பல இடங்களில் ஒரு விடுதலைப் போராட்டத்தில் அரசியலா இராணுவத்தை கட்டுப்படுத்துவது அல்லது இராணுவமா அரசியலைக் கட்டுப்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்து நின்றது. இது தொடர்பாக எமது முகாமில் ஒரு விவாதம் நடத்தினோம்.
இதில் என்ன வேடிக்கை என்றால் ஒரு சமூக விடுதலையை பேச்சு ரீதியாக அங்கீகரித்த விடுதலை இயக்கத்தில், இவ்வாறான பிரச்சனை எழும்பியது என்பதே வெட்கத்துக்குரிய விடயம். பின்தளத்தில் இருந்த பல அரசியல் ஆசான்களோ அல்லது தத்துவார்த்த விஞ்ஞானிகளோ, இவைகளைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக சுத்த இராணுவக் கண்ணோட்த்தில் மற்றைய முகாம்களில் இருந்த சிவப்பு புத்தகங்களை அகற்றி, அரசியல் பேசுவதையே தடைசெய்தனர். (தீப்பொறியினர் தப்பிச்சென்ற பின்பு, அவர்கள் வெளியிடப்பட்ட அரசியலா இராணுவமா என்ற புத்தகம் இதன் அடிப்படையிலேயே வெளியாகி இருக்க வேண்டும் என எண்ணுகின்றேன்)
6.நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)
5.தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)
4.தண்டனை முகாமை எல்லோரும் "நாலாம் மாடி" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)
3.மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)
2.1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)
1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)