எமது மண் கறைபடிந்த ஒரு வரலாறூடாகவே, நாம் புதையுண்ட படி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. நாளாந்த படுகொலைகள் எமது விடியலை அதிரவைத்திக்கின்றது. அரசியல் அதிகாரம், அரசியல் படுகொலைகளால் தான் தன்னைத்தான் அலங்கரித்தது.

 

மனிதன் சந்தித்த துயரத்தை வார்த்தைகளால் நாம் பதிவு செய்யமுடியாது. அந்தளவுக்கு மிகவும் இழிவான கொடூரமான வழிகளில் நடந்தன. இந்த நிலையில் மனித துயரத்தின் முழு வரலாறே இன்று இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. அதிகாரத்தினால் போற்றப்பட்டது மட்டும் தான், எமது வரலாறாக காட்டப்பட்டு இருக்கின்றது. கண்ணீரும் கம்பலையுமாக வாய் பேசா ஊமைகளாக மக்கள் விழிபிதுங்கி, நம்பிக்கையின் ஒரு ஒளிக் கீற்றுக்காக ஏங்கி நின்றனர்.

 

இந்த நிலையில் வரலாற்றின் இருட்டை வெளிச்சமாக்க, கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படையாக வைப்பது அவசியமாக உள்ளது. உள்ளதை உள்ளபடி கொண்டு வருவது கூட, ஒரு வரலாற்று தேவையாக உள்ளது. இருண்ட சமூகக் கட்டமைப்பில் தன் வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய ஆவணத்தின் முக்கியத்துவம் கருதி, இந்த முயற்சியில் உங்கள் பங்களிப்பை தொடர்ந்து கோருகின்றோம். இப்பங்களிப்பு என்பது பலவகையானதாக அமையலாம்.

 

தேசிய விடுதலைப் போராட்டம் விட்டு வந்துள்ள மனித அவலங்களின் மொத்த உள்ளடகத்தையும், அடிப்படையாக கொண்டு தொகுத்தளிக்கவே இது முனைகின்றது. இதில் அரசியல் ரீதியாக எந்த விதமான புறக்கணிப்புமற்ற நிலையில், கடந்து வந்த வரலாற்றின் அனைத்துச் சம்பவங்களையும் விதிவிலக்கின்றி நேர்மையாக பதிவு செய்யமுனைகின்றோம்.

 

சிங்களப் பேரினவாத இராணுவம் முதல் இயக்கங்கள் வரை, மனிதனின் தலையில் ஏறி நின்று நடத்திய அனைத்தையும் விதிவிலக்கின்றி பதிவு செய்ய முனைகின்றது. ஒரு வரலாற்றின் முழுமையை முழுமையாக பதிவு செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்;. இருந்த போதும் அனைத்துத் தகவலையும் உள்ளடக்கிய வகையிலான எமது முயற்சியை, இது எந்த விதத்திலும் பாதிக்காது. முழுமையை அடையும் பணியில் உங்கள் பங்களிப்பு, பூரணத்துவத்தை நோக்கி உந்தித்தள்ளும்.

 

இந்த வரலாற்று தகவல்கள் அனைத்தும் சமூகத்தின் பொது நலன் கருதி பகிரங்கமாக வைக்கப்படுவதன் மூலம், பரந்தளவில் தகவல்கள் பாதுகாப்பதை உறுதி செய்ய இந்த இணையம் மூலம் முனைகின்றோம்;. எமது இந்த முயற்சி ஒரு தகவல் களஞ்சியமாக, ஒரு கம்யூட்டரில் பார்க்க கூடிய, ஒரு குறுந்தகட்டு வடிவில் கொண்டு வருவதே எமது முதல் பணி. இதை மையமாக வைத்து எமது ஆரம்ப முயற்சியை உங்களுடன் சேர்ந்து தொடங்கியுள்ளோம். சிலர் தங்களிடம் உள்ள ஆவணங்களை தந்து உதவி வருகின்றனர்.

 

இந்த முயற்சியில் ஆவணங்களை இணைத்து வருகின்றோம். குறைந்தது ஆயிரம் ஆவணங்களை நாம் மேலும் தொகுத்துள்ளோம்;. விரைவில் அவை மேலும் பல மடங்காக படிப்படியாக இணைக்கப்படும்;. இந்த தகவல்கள் மேலும் நுட்பமாகவும், சரிபார்க்கப்பட வேண்டியவையாகவும் உள்ளள. அத்துடன் பல தகவல்கள் இணைக்கப்பட வேண்டியவையாக உள்ளது. பல திருத்தப்பட வேண்டியவை கூட. இதை நீங்கள் தாராளமாக செய்யமுடியும்;. இந்த அடிப்படையில் நீங்;கள் இந்த பணியில் எம்முடன் இணைந்து கொள்ளமுடியும்.

 

அவை பல்துறை சார்ந்தாக இருக்கலாம்;. இதை நீங்கள் ஆர்வப்படும் துறை சார்ந்து எம்முடன் தொடர்பு கொள்ளவும். இந்த ஆவணப்பகுதி உள்ளடக்கம் விரிவானது கட்டுப்பாடு அற்றவை. குறிப்பாக

 

1.இராணுவ ரீதியான சகலதரப்புத் தாக்குதல்கள்
2.கூட்டுப் படுகொலைகள்
3.தனிமனித படுகொலைகள்
4.கைதுகள்
5.சித்திரவதைகள்
6.முக்கிய நிகழ்ச்சிகள்
7.இனம் தெரியாக் கடத்தல்கள்
8.காணாமல் போனோர் விபரம்
9.சமூக போக்குகள் (உதாரணமாக விதவையாக்கப்பட்ட பெண்கள் விபரங்கள் ---- போன்றன)
10.முக்கிய சந்திப்புகள்
11.முக்கிய பேச்சுக்கள்
12.முக்கியமான மோசடியான கருத்துரைகள்
13.மக்களுக்கு எதிரான நடத்தைகள், கருத்துக்கள்
14.தமிழ் மக்கள் மேலான இனவாத நடவடிக்கைகள்
15.முஸ்லீம் மக்கள் மேலான ஒடுக்குமுறைகள்
16.செயற்கையாக இறந்தவர்களின் பெயர் மற்றும் திகதி உள்ளடங்கிய விபரங்கள்
17.இறுதியுத்தம்
18.வன்னிமுகாம்

 

என்று விரிவான பரந்த தளத்தில் எல்லைகளற்ற வகையில் இந்த தகவல் களஞ்சியம் தனது துறையை விரிவாக்க உள்ளது. இவை திகதி வாரியாக முதலில் ஒழுங்குபடுத்த முனைகின்றது. ஆனால் இவை துறைசார்ந்து பின்னால் வகைப்படுத்தப்படும். வரலாற்று ஆதாரங்கள் முதல் அனைத்தையம் உறுதி செய்யும் தகவல்களையும், உங்களிடமிருந்து எதிர்பார்கின்றோம்.

 

உங்கள் பங்களிப்புடன், உங்கள் ஆலோசனைகள், திருத்தங்கள் உடன், இதை பலப்படுத்த முனையும் அனைவரையும் நாம் வரவேற்கின்றோம்;


தகவல் களஞ்சியத்தின் உள்செல்ல இங்கே அழுத்தவும்