09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மே 2 ஆம் தேதி:நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்.

புலம் பெயர் புலித்தலைமை:

வன்னியில் புலியின் இராணுவக் கட்டமைப்பைச் சிதறடித்தவர்கள்,அதற்கு இசைவாக இயங்கியவர்கள் புலம்பெயர்வுப் புலிக்கூட்டத்தின் மேல்மட்டப் பேச்சாளர்கள்-தலைவர்கள்.இவர்கள் பிரபாகரனுக்குக் காடாத்துப் பண்ணினார்களோ இல்லையோ தமிழ்பேசும் இலங்கைவாழ் மக்களுக்குத் தொடர்ந்து காடாத்தி வருகிறார்கள்.இது,கவலைக்குரிய விடையமல்ல-கண்டிக்கப்படவேண்டியது.

இன்றைய புலம்பெயர்வு மக்களது வாழ்சூழலில் தேசத்தைச் சொல்லி-தமிழைச்சொல்லித் தட்டிப்பறிப்பதற்குத் தோதான புலியினது இராணுவவாதப் போராட்டம் இல்லையென்பதால், அதன் மாற்றாகவும், அந்த மாற்றின் தேவையை உணர்த்துவதாகவும், “தேசம் கடந்த தமிழீழ அரசுக்கான”தேர்தல் அதி உச்சமான கோணங்கித்தனமான விளம்பரத்தின்வழி புலம் பெயர் மக்களது புலன்களைப் பேர்த்தெடுப்பதில் சந்தர்ப்பவாதப் புலிகள் உருத்திரகுமாரனின் குரலின்வழி இயங்குகிறார்கள்.

அடிமட்டத்துத் தமிழனுக்கும்,உலகத்தின் எந்த மூலையில் அவன் வாழ்ந்தாலும் அவனது பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் ஒரே அரசு”நாடுகடந்த தமிழீழ அரசு”எனப் பொய்ப்பரப்புரைகளைச் செய்யும் இந்த விசமத்தனமான புலம்பெயர் புலிப்பணப் பேய்கள், புலித் தளபதிகளையும் உள்ளடக்கி, வரும் மே 18 இல் பிரபாகரனுக்கும் அவரது போராளிகளுக்கும் ஞாபகார்த்தம் வேறு செய்வதற்கான முன் நிபந்தனைகளிலொன்று “நாடுகடந்த அரசு”நிர்மாணிப்பது.அங்கே, அதன் அமைச்சர்கள்,பிரதமர் எனப் பொல்லாத பித்தலாட்டம் மக்களது குரல்வளைகளைத் தறித்துப் பணம் பண்ணும் முக்கிய நோக்கில், மே 18 நாடகம் அரங்குக்வர ஒரு அரசினது முன்னெடுப்பாக இந்த செயற்பாடு களமிறங்குகிறது.

தட்டிக் கேட்பார் யாருமில்லை:

யாரும் பொதுப்படையான இவர்களது அதிகாரங்களை,ஆதிக்கத்தை,இதன் வாயிலாக எழ முனையும் அந்நியத் தேசங்களுக்கு ஆதரவான கருத்தியல் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை.புலிப் பினாமிகள் தமது கைகளிலுள்ள மக்களது சொத்தைக் காப்பதற்கெடுக்கும் முயற்சியில்”நாடு கடந்த தமிழீழ அரசு”வெனப் பரப்புரை செய்யும் பம்மாத்தையும்,அதற்கான தேர்தல் நாடகத்தையும் குறித்து எந்தப் பெரிய மார்க்சியனும் வாயே திறக்கவில்லை.மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற “தேர்வுகளோடு” கருத்தாடுகிறார்கள்.ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள்.இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைகின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்ள முனையும்.இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்படும்தேர்தல்மோசடி-கட்சிசார் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது.இங்கே, இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை! இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய புலம் பெயர்வு மக்களை மிக வேகமாக வேட்டையாடுகிறது.ஜீ.ரீவீ இதற்காகப் புலம்பெயர்வுப் புலிகளது பணத்தில்(இப்பணம் மக்கள் சொத்து) கணிசமான மக்களை முட்டாளாக்க இயக்கப்படுகிறது.இந்த இடருக்குள் உள்வாங்கப்படும் எமது மக்களது சுய தெரிவு என்ன?

மீளவும்,”மேற்குலக நாடுகளின் தயவில் நமது மக்களுக்குச்  சுயநிர்ணயவுரிமை கிடைக்கப்பெறும்.அது,நாடுகடந்த அரசினது மூலம் மேற்குலக நாடுகளை வளைத்துப்போடமுடியும்”எனப் பொய்யுரைக்கும் இந்தப் பணப் புலிகள், தமது இருப்பை நிலைப்படுத்தவும்-பதுக்கிய செல்வத்தைக் காப்பதற்கும்,தொடர்ந்த புலம் பெயர்வுத் தமிழரிடம் பணம் கறக்கவுமாக இந்தச் சோடினையில்”நாடுகடந்த தமிழீழ அரசின்”தேவையை வற்புறுத்திக்கொண்டு கருத்தாடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்பார் யாருமில்லை!

நாடு கடந்த தமிழீழ அரசு:

புலிகளது இராணுவலிமை செய்யாததை இந்த “நாடுகடந்த அரசு”ஜனநாயகவழியில் செய்துமுடிக்குமெனவும் சொல்லப்படுகிறது.இத்தகைய பரப்புரைகளின்பின்னே அணிதிரளும் சக்திகள் பழைய புலிப்பினமிகள்தாம்.குறிப்பாகச் சொல்லத் தேவையில்லை.அதே முகங்கள்-அதே சேட்டைகள்.இப்போது நடைபெறும் வானொலி-தொலைக்காட்சி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம்,அரசியல்,சுயநிர்ணயவுரிமை,தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை,தமிழ்ப் பண்பாட்டை,வரலாற்றை அனைத்தையும்”நாடுகடந்த தமிழீழ அரசு”காக்கும்-வென்றெடுக்கும்,அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது.இந்தத் தமிழ்ஊடகங்கள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது.இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும் ,திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது.திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகளும் அவர்கள் பின்னால் வீணியூற்றியபடி அலையும் மேற்குலக அரசுகளது ஏஜென்டுகளும்(சேரன்-உருத்திரகுமார் போன்ற சந்தர்ப்பவாதிகளும் இன்னபிற புலிப் பினாமிகளும்)முடங்கியுள்ளார்கள்.

இதுவரைகாலமும், ஏகத் தலைவரும் அவரது போராளிகளும்-ஆயுதமும் தமிழீழம் பெற்றுத் தந்துவிடுவார்கள்-தந்துவிடுமெனப் பசப்பியவர்கள் இப்போது உருத்திரகுமாரனின் உடும்புப்பிடியான ஜனநாயக வழி”நாடுகடந்த அரசு”தனித் தமிழீழத்தை இலங்கையில் மேற்குலக அரசுகளின் தயவோடு பிரித்துவிடுமெனப் பரப்புரைகள் எங்கும் ஒலிக்க விடுகிறார்கள்.இந்தப் பெரிய சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்பதற்கோ அல்லது இவர்களது பொய்யான சுரண்டலை அம்பலப்படுத்தவோ எந்தப் பெரிய “புரட்சிக்காரர்கள்”தம் போராட்ட இலக்கும் தீர்மானஞ் செய்வதாகவும் இல்லை!எல்லாம் வல்ல பிரபாகரன் எப்படியும்-எப்போதாவதும் வெளியே வந்துவிடுவாரெனப் புலம்பும் இந்தக் கள்வர் கூட்டத்தை நம்பிக்கிடக்கும் புலன் பெயர்ந்த தமிழர்களும் மே 2 ஆம் தேதி தமது பொன்னான வாக்குகளை அளித்துத் தேசம் கடந்த தமிழீழத் தேசிய அரசை நிர்மாணிக்கப் போகிறார்கள்.

இதன்சூத்திரதாரிகளான மேற்குலக நலன்சார் குழுக்கள்-நபர்கள் அதன் ஜீவனகாலத் தலைவர்களாகவும்-பேச்சாளர்களாகவும் வலம்வந்து, நமது மக்களது குருதியைக் குடித்தே உயிர் வாழ்வார்கள்.காலகாலத்துக்கும் தமிழ் பேசும் மக்களை மடையர்களாக்கி அந்நியத் தேசங்களுக்கு அடிமையாக்கிப் பிழைக்கும் தமிழ் மேட்டுக்குடிக் கல்வியாளர்கள், தம்மைத் தேசியத்தின் தொட்டிலில் கிடத்தியும் அழகு பார்க்கிறார்கள்.

அவர்களது ஏஜென்டுகள் புரட்சி-தேசியம்,புண்ணாக்கு என எல்லவகைப் புரட்டல்களையும் மக்களைச்சொல்லிச் செய்துவரும்போது”நாடுகடந்த அரசினது”குத்தகைக் காரர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை!எனவே,அவர்கள் தொலைக்காட்சியில்-வானொலியில் சொல்வதே மந்திரமாகும்.அங்கே,உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை வந்துவிடப் போகிறது.முப்பது வருடமாகப் பிரபாகரனுக்குத் தெரியாத மந்திரமெல்லாம் சேரனுக்கும்,உருத்திரகுமாருக்கும் தெரிந்தே இருக்கு.இவர்கள் அப்படியே பிரபாகரனது சாதகத்தையும் சொல்லிவிடலாம்.ஆனால்,அதைமட்டும் சொல்வதற்கு அவர்கள் தயாரில்லை.அங்கேதாம் அவர்களது இருப்பே தங்கியுள்ளது.

தெரிந்துகொள்ள வேண்டி உண்மைகள்:

இந்த மோசமான பேர்வழிகள் இட்டுக்கட்டும் நரித்தனமான நாடகங்கள் பொய்யானவை-புலிகளின் பினாமிகள் மக்களை மேலுஞ் சுரண்ட அனுமதிக்கும் நடவடிக்கை இது.இவர்கள் சொல்வதுபோன்று “நாடு கடந்த தமிழீழ அரசு”என்பது தமிழ்பேசும் மக்களது உரிமையை இலங்கையில் குழிதோண்டிப் புதைப்பதில் மேற்குலகத் தோடிணைந்து மிடுக்காக இயங்கும்.ஏனெனில்,நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென.இன்றைய காலங்கள் “அரசுகள்”என்ற அமைப்பின் காலமாகும்.நம்மைப் படாதபாடு படுத்தும் “அரசியல்” தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை.அஃது, தேசங்களின் தேர்வுகள்,தெரிவுகள்,திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.இங்கே, நடக்கின்ற “அரசியலானது”தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது.புலம் பெயர் தேசங்களில் நடக்கும் எந்த அரசியல் வினையும் இலங்கையில் வாழும் தமிழருக்கு எப்பவும் உதவப் போவது கிடையாது.இதுவரை அது உதவியதாகவும் வரலாறு இல்லை என்ற உண்மையும் நாம் உணர்ந்ததே!அத்தோடு,புலம்பெயர் புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் மேற்குலகத் தமிழ் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணிய+றும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல பொய்யுரைப்பின்வழி சேரனும்,உருத்திரகுமாரும் அவர்களது எஜமானப் புலிப்பினாமிகளும் “நாடுகடந்த தமிழீழ அரசு”க்கான தேர்தலில் அதிகப்படியான நேரமெடுத்து விளம்பரஞ் செய்கிறார்கள்-விளக்வுரை செய்கிறார்கள்.இவர்களது இந்த நடாத்தையானது இலங்கையிலுள்ள  தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் உதவவே முடியாது. சேரன்போன்றவர்கள் கடைந்தெடுத்த சமூக விரோதிகள் என்பது நாம் கண்ட வரலாறு.

வன்னியில் மக்களை வேரோடு புரட்டிய புலியின் இராணுவ ஜந்திரம்வன்னியில் சிதற, இப்போது, அதன் அரசியல் தலைமையின்வழி இலங்கைவாழ்தமிழர்களை நடாற்றில் தள்ளிவிடுகிறது.ஒவ்வொரு முறையும் மக்களுக்கு யுத்த அழுத்ததையும் குண்டுகளையும் பரிசாக்கியவர்கள் இன்று அந்த மக்களுக்காக எந்த உதவிகளையுஞ் செய்யவே இல்லை.எனினும்,தமது புலி அரசியலின்வழி மேற்குலக அரசுகளது எடுபிடிகளாக இயங்க முனையும் இன்றைய சந்தர்ப்பத்தில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு நடிவடிக்கையும் இலங்கைத் தமிழர்களது பொதுவாழ்விலும்-தனிப்பட்டவாழ்விலும் பாரிய தாக்கஞ் செய்யவே செய்யும்.

இலங்கைப் பாசிச அரசினது கெடுபிடிகள், பொருளாதார மற்றும் இராணுவவாதச் சிக்கல்களது கிடுக்குப்பிடியாக அந்த மக்களைப் பதம் பார்க்க இவர்களே காரணமானவர்கள்.இதை மறைப்பதற்கான முறைமைகளில்”தமிழ்-தேசியம்-நாடுகடந்த அரசு”எனும் மாய மான்கள் முன்மையான காரணிகளாக இருக்கும்.இதுவே,இதுவரை சேர்த்த மக்களது நிதிகளைச் சுற்றவும் உதவிக்கொள்ளும். இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இது தனது மகளைத் தானே  புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.

புலிகளது பொய்யுரைக்கு மயங்கிய புலம்பெயர் மக்களில் பலர், தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களின்(நாடுகடந்த அரசு,தேர்தல்-சேரன்,உருத்திரகுமார்) “நன்மை தீமை” என்பவற்றை நோக்குகிறார்கள்.

இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.இந்த இழி நிலையில் மக்கள்தம் உயிரைத்தினம்இராணுவாத இலங்கை அரசபாசிசவொடுக்குமுறைக்கு- அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான தேர்தல்களால்-நாடுகடந்த தமிழீழ அரசு நிர்மாணிப்புகளால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த “மக்கள் விரோத அரசியலை” எங்ஙனம் முறியடிப்பது?

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.04.2010

http://srirangan62.wordpress.com/2010/04/26/மே-2-ஆம்-தேதிநாடுகடந்த-தமி/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்