09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

அவ்ரோ விமானக் குண்டுவெடிப்பு, அதுவும் இலங்கையில் தமிழர்களின் அடிமைச் சாசனம் அங்குராட்பனம் செய்யப்ப்பட்ட நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் எமது தன்னம்பிக்கையை இரட்டிப்பக்கியிருந்தது. எதையும் சாதித்துவிடலாம் என்ற மனோபாவம் எம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. இனிமேல் இயக்க நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டிக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம்.

1978 ஆம் ஆண்டு தனது இறுதியை எட்டிக்கொண்டிருந்தது. மார்கழி மாதம் ஆரம்பித்திருந்தது. கிழக்கில் சூறாவழியின் கோரத்தில் பெருந்திரளாக மக்கள் உயிரிழந்த சம்பவமும் அப்போது தான் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. அரச உதவிகள் எதிர்பார்த்த அளவில் கிழக்கிற்குப் போய்ச் சேரவில்லை என்பது தமிழ் மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகப்படுத்டியிருந்தது.

இப்போது திருநெல்வேலி பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள மக்கள் வங்கியைக் கொள்ளையிடுவதற்கான திட்டம் தீட்டப்பட்டாயிற்று. வங்கியின் உள்தொடர்புகள் ஊடாக பணம் பரிமாறப்படும் நேரம் என்பன துல்லியமாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இக்கொள்ளையை மேற்கொள்வதற்காக பிரபாகரனும் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. தவிர, எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வல்லமையுடைய ரவி, துணிச்சல் மிக்க போராளியான செல்லக்கிளி, ஜோன், உரும்பிராய் பெற்றோல் நிலையக் உரிமையாளரைக் கொலைசெய்தபின்னர் எம்மோடு இணைந்துகொண்ட பாலா, ராகவன் ஆகியோர் செல்வதாகவும் தீர்மானிக்கப்படுகிறது.

வெளியே இருந்து பெருந்தொகையான பணம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும் நாள் குறித்த தகவல்களும் எமக்கு வந்து சேர்கின்றன. இந்தப் பணத்தை வங்கிக்குள் கொண்டு செல்வதற்கு முன்னதாகவே வாசலில் வைத்து கொள்ளையிடுவதாகவே திட்டமிடப்பட்டது. மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட பின்னர் வங்கியை நோக்கி இவர்கள் அனைவரும் செல்கிறார்கள். முன்னரே நிலைமைகளை அவதானித்த பின்னர், ஒவ்வொருவரும் எந்தெந்த நிலைகளில் தம்மை நிறுத்திக் கொள்வது என்பதைத் தீர்மானிக்கிறார்கள்.

உள்ளே வங்கிக்குப் பாதுகாவலராக ஒரு பொலீஸ்காரர் காவல் காத்துக் கொண்டிருந்தார், அவரைக் கையாள்வதற்காக அவருக்குப் அருகில் ரவியும் ஜோனும் தமது நிலைகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள் செல்லக்கிளி பணத்தைக் கொண்டுவரும் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான தயார் நிலையில் இருக்கிறார். பிரபாகரன் நிலைமைகளை அவதானித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அருகிலிருந்த கடையொன்றில் காத்துக் கொண்டிருக்கிறார்.இடையில் பாதுகாப்புப் படையினர் தகவல் கிடைத்து வந்தால் அவர்களைச் எதிர்கொள்வதற்காகவே பிரபாகரன் கடையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

எல்லோரிடமும் துப்பாக்கிகள் இருக்கின்றன. செல்லக்கிளி துப்பாக்கியோடு காத்திருக்கிறார். பாலா காருக்குள் காத்துக்கொண்டிருக்கிறார்.

எதிர்பார்த்தபடி பணத்தை ஏற்றிக்கொண்டு பொலீஸ் காவலுடன் ஜீப் ஒன்று வங்கியை நோக்கி வருகிறது. வழமைபோல ஜீப் வங்கியின் முன்னால் நிறுத்தப்படுகிறது. அதிலிருந்துபொலீஸ்காரர் இறங்குகிறார். அவர் இறங்கியதும் செல்லக்கிளியின் துப்பாகியிலிருந்து தோட்டாக்கள் அவரை நோக்கிப் பாய்கின்றன. அதேவேளை வங்கியில் காவலுக்கு நின்ற பொலீஸ்காரரை ரவி சுட்டுச் சாய்க்கிறார். எல்லாமே திட்டமிட்டபடி மின்னல் வேகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறுகிறது.

திகில் நிறைந்த அந்தப் பொழுதில் மக்கள் அங்குமிங்குமாகச் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிரபாகரன் மறைந்திருந்த கடைக்குள் இருந்து வெளியே வந்து ஒடிக்கொண்டிருந்தவர்களையும், பயப்பீதியில் அங்கேயே நின்றவர்களையும் நோக்கி நாம் தனிப்பட்ட கொள்ளையர்கள் அல்ல. விடுதலைப் புலிகளின் இயக்க நடவடிக்கைகளுக்காகவே இந்த்ப் பணம் கொள்ளையிடப்படுகிறது என்கிறார்.

செல்லக்கிளி சுட்டுக்கொன்ற பொலீசாரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு இன்னொரு இயந்திரத் துப்பாக்கி வந்து சேர்கிறது. பஸ்தியாம்பிள்ளை குழுவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட முதலாவது துப்பாக்கியோடு இப்போது இரண்டு துப்பாக்கிகளை நாம் உடமையாக்கிக் கொள்கிறோம். பணப்பெட்டியைக் காரில் ஏற்றிக்கொண்டவர்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடத்தை நோக்கி அதனைக் கொண்டு செல்கின்றனர்.

இடையில் பொன்னம்மான் குமணன் ஆகியோர் சைக்கிள் ஒன்றில் காத்து நிற்கின்றனர். கைப்பற்றப்பட்ட இரண்டு ரிப்பீட்டர், குறிசுடும் துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு, பிரபாகரனும் பாலாவும் காரில் தொடர்கிறார்கள். ஏற்கனவே எமது ஆதரவாளர் வீடு ஒன்று பணத்தைப் பாதுகாப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பாலாவும் பிரபாகரனும் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டு வேறு இடங்களை நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

இயந்திரத் துப்பாகியோடு வந்திறங்கிய கிங்ஸ்லி பெரேரா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் வழியில் உயிரிழந்து போகிறார். மற்றவர் ஜெயரத்தினம். அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு தினங்களில் மரணமடைந்து விடுகிறார். குடாநாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. முக்கிய சந்திகளில், சாலைத் திருப்பங்களில் எல்லாம் பொலீசாரும் இராணுவத்தினரும் வாகனங்களையும் சோதனையிடுகின்றனர். தமிழ் மக்களுக்கு வங்கிப்பணம் தனி நபர்களால் திருடப்படவில்லை என்ற உணர்வு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்தவர்கள் பணத்தின் ஒருபகுதியைக் கையாடி தமது சொந்தத் தேவைக்காக உழவு இயந்திரம் ஒன்றை வாங்கியது எமக்குத் தெரியவருகிறது. பிரபாகரனையோ எம்மையோ பொறுத்தவரை மக்கள் பணத்தின் ஒவ்வொரு சல்லிக்காசும் இயக்கத்தின் தேவைகளுக்காக மட்டுமேபயன்படுத்தப்படும் என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தோம். இதை அறிந்துகொண்டதும் பணத்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு உடனடியாகவே மாற்றிவிட்டோம். உழவு இயந்திரத்தை விற்று எமக்குப் பணத்தைக் கையளிக்குமாறு கையாடியவர்களிடம் கேட்கிறோம். பின்னதாக இதன் ஒருபகுதிப் பணம்மட்டும் எம்மால் பெற்றுக்கொள்ளபட்டது.

பத்துலட்சம் ரூபா என்பது 1978 ஆண்டில் கணிக்கக்த்தக்க பெரிய தொகைப்பணம். 5.12.1977 இல் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் ஜே.ஆர்.ஜெயவர்தன அரசை மேலும் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. தமிழீழம் கோருகின்ற போராளிகளின் பலம் அதிகரித்திருப்பதை அரசு உணர்ந்து கொண்டது. இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றன. வடகிழக்கின் பாதுகாப்பு சிறிது சிறிதாக பொலீசாரிடமிருந்து இராணுவத்தின் பிடியில் மாற ஆரம்பித்தது. பொலீஸ் நிலையங்கள் பலப்படுத்தப்பட்டன. சோதனைச் சாவடிகள் ஆங்காங்கே முளைத்து மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தொல்லைதர ஆரம்பித்தன.

எம்மைப் பொறுத்தவரை பத்து லட்சம் பணம் கொள்ளையிடப்பட்டது நாம் எண்ணியிருந்த இராணுவத்தைக் கட்டமைப்பதற்கான மிகப்பெரும் திறவுகோலாக அமைந்தது. மக்கள் பணத்தில், மக்களோடு வாழும் கெரில்லாப் படையினராக நாங்கள் இருந்திருக்கவில்லை.

தேனீர் அருந்துவதற்குக்கூட எமக்கு எங்கிருந்தாவது பணம் வந்தாகவேண்டும். போராளிகளைப் பராமரிக்கவேண்டும். பண்ணைகளை ஒழுங்கமைக்கவேண்டும். பயிற்சி முகாம்களை உருவாக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் பணம் என்பது அடைப்படையானதும் அத்தியாவசியமானதாகவும் அமைந்திருந்தது.

போராட்டம் வெற்றியடைந்த நாடுகளின் வரலாற்றில் எழுதப்படாத வேறுபட்ட உதாரணங்களை நாம் கொண்டிருக்கிறோம். இவை மறுபடி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மக்கள் மத்தியில் வாழ்கின்ற போராளிகள் மக்கள் போராட்டங்களை ஊக்கப்படுத்துவதற்காக, மக்கள் அமைப்புக்களைப் பாதுகாப்பதற்காக தற்காப்பு யுத்தங்களை நிகழ்த்தவே ஆயுதங்களைச் சேகரித்துக்கொண்டார்கள்.அவர்கள் மக்களோடு வாழந்தவர்கள். மக்கள் பணத்தில் தம்மைத் தகவமைத்துக் கொண்டவர்கள்.

நாமோ மக்களிலிருந்து அன்னியமாகி காடுகளில் வாழ்ந்தவர்கள். இராணுவம் ஒன்றைக் கட்டியமைத்து, தாக்குதல் நடத்தி தனித் தமிழீழத்தைப் பெற்றுவிடலாம் என்று மிக உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம்.

மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்களின் பாதுகாப்பு அமைப்பாக நாம் எம்மைக் கருதியிருக்கவில்லை. இறுதியில் பெரும்பான்மை மக்கள் அதிகாரத்தைக் கைபற்றிக் கொள்வதற்குப் பதிலாக, புலிகள் என்ற அமைப்பின் அதிகாரத்தையே எமது வழிமுறை முதன்மைப்ப்படுத்தியது.

ஒரு விடுதலை இயக்கம் தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் பெருந்தொகையான பணம் தேவை என்ற கருத்தை, மக்கள் பலத்தைத் துச்சமாக மதித்த கோட்பட்டை மக்கள் பலத்தில் தங்கியிராத அனைத்து அமைப்புக்களும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தனர். சிறிது சிறிதாக முளைவிட்ட இயக்கங்கள் கூட வங்கிகள் மீதும், சில சமயங்களில் தனியார் வியாபார நிலையங்கள், அரச பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவற்றின் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகளாகவும் எப்போதும் ஒரு பார்வையை வைத்திருந்தனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைக் கொள்ளயிட்டே தமது உறுப்பினர்களைப் பரமரிப்பது, ஆயுதங்களை வாங்குவது போன்ற தமது பிரதான தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டனர்.

மக்கள் சாராத,வெகுஜன அமைப்புக்கள் குறித்துச் சிந்திக்க மறுத்த அமைப்புக்கள் உருவாவதற்கான அடிப்படைகளாக வங்கிப் பணம் ஆரம்பத்தில் அமைந்திருந்தது. குழு நிலை அமைப்பாக இருந்த சிறிய இயக்கங்கள் கூட இந்த வழிமுறையின் தாக்கத்திற்கூ உள்ளாகியிருந்தனர்.

பணத்தின் வலிமை புதிய நடவடிக்கைகளுக்கு உரமிடுகின்றது. சில உறுப்பினர்களை எமது பின் தளமாகக் கருதப்பட்ட இந்தியாவிற்கு அனுப்பவும், புதிய இராணுவ ஒழுங்குகளோடு கூடிய பயிற்சி முகாம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் உடனடியாகவே எம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம்.

 

01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

 

06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

 

08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)

 

09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

 

10. நிசப்தம் கிழித்த கொலைகள்  ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

 

12. அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்