காந்தியின் ராட்டையில் நூலாகிப்போவது
எங்கள் இரத்தமும் தசையும்
ஆசிய வேந்தர்கள் முடியினில் சூடிக்கிடப்பது
அயலுறவுக் கொள்ளையும் திமிரும்

 

மனிதம் கண்மூடி குருதியில் கழித்து ஆண்டொன்று
பதவியே குறியாகிய பாதகர் நடிப்பினில்
இறுதிக் கணம் வரை ஏமாந்துபோன இனம்
நோயுற்ற தாயின் வேதனையில்
கோலோச்சும் வாக்குப் பொறுக்கிகளிடம்
காருண்யம் காண்பது முட்டாள்தனம்

போரினில் தர்மமும் நீதியும் உணவுப் பொட்டலமாய்
எங்கள் கனவினைச் சிதைத்தது

 

வெற்றுவேட்டுக் கூச்சலிடும் முதலமைச்சர் வேடம்
கடிதத் தூதுகளாய் கடந்து போனது
சொந்த இனத்தின் அவலம் நந்திக்கடல்வரை
செம்மொழித் தலைவர்–உறவுகள்
மந்திரிப் பதவிக்காய் டில்லியில் அழுதது


மைந்தரின் பின்னராய் அன்னையின் நோயிலும்
வாக்கு அரசியல் போட்டி நிகழ்கிறது

தொப்புள்கொடி உறவெலாம் பொய்யடா-தமிழா
தோழமை உணர்வொன்றே அகிலமெலாம் மெய்யடா


http://www.psminaiyam.com/?p=4731