1970 ஆம் ஆண்டு சிறீமாவின் கூட்டுமுன்னணி அரசில் அங்கம் வகித்த 'இடதுசாரிகள்' என்று தம்மைக் கூறிக் கொண்ட தொழிற்துறைத் தரகுகள் உட்பட அனைவரும்: '' இதோ, சோசலிசம் பிறந்துவிட்டது! என்று பீற்றத் தொடங்கினர்....
தொழிற்துறைத் தரகுக்கும், வணிகத்தரகுக்கும் இடையிலான முரண்பாட்டில்: தொழிற்துறைத் தரகு முதலாளித்துவம் 'புதிய அரசியல் நிர்ணய சபையை' , அதன் புதிய அரசியல் அமைப்பை, பன்முக அபிவிருத்தித் திட்டத்தை 'சோசலிசமாகக்' காட்ட முற்பட்டது...
1951ம் ஆண்டு முதல் சிறுகைத்தொழிலிலேயே கவனம் செலுத்துவதாகவும், பாரிய ஏகாதிபத்திய நிதிநிறுவன உதவிகளைப் பெற முடியாது, அதன் கட்டளைக்கு வணிகக் தரகுகள் பணிந்தன. இதனால் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சி, முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி உறவுக்குள்ளேயே சிக்கிச் தவித்தன.
இதன் மொத்த விளைவு, நாட்டின் 78 சதவீதமான சனத்தொகையினர் விவசாயத்திலே தங்கியிருக்க நிர்பந்திக்கப்பட்டனர். ஆயினும் இவ் விவசாயத்துறை மரபுரீதியான பின்தங்கிய உற்பத்திமுறையையும், சிற்றுடமை விவசாயத்தையுமே கொண்டு இருந்தது.
பெருகிவந்த சமூதாய தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாத, இப் பின்தங்கிய உற்பத்திமுறையின் காரணமாகஇ 1963 இல் (அரச தகவல்களின் படி) 4 இலட்சம் உபரிச் சனத்தொகை, இத் தொழிலில் இருந்து தூக்கி வீசப்பட்டது!
இது 70 களில் 7 இலட்சத்து 92 ஆயிரமாக இது பெருகி இருந்தது...
இச்சிக்கலான காலகட்டத்தில் தான்...
இலங்கை முழுவதும் குட்டிபூர்சுவா மாணவ, இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் முனைப்புப் பெற்றது. 1971 ஏப்பிரலில் சிங்கள குட்டிபூர்சுவா இளைஞர் கிளர்ச்சி தெற்கிலே வெடித்திருந்தது. வடக்குக் கிழக்கிலே தரப்படுத்தலுக்கு எதிரான 'தமிழீழக் கோரிக்கை' குட்டிபூர்சுவா மாணவ, இளைஞர் கிளர்ச்சியும் வெடித்தது.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிங்களத்தரகு முதலாளித்துவப் பிரிவினரான யூஎன்பியினரும், எஸ்எல்எவ்பி யினரும் முறையே வணிகத்துறை, தொழிற்துறைப் பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்து வந்தனர்.
இத்தரகுமுதலாளித்துவ எடுபிடி சேவக ஆட்சியால் நாட்டின் முழு உழைக்கும் பிரிவினரும் ஒடுக்கப்பட்டனர். சிங்கள தேசிய இனம் உட்பட அனைத்து தேசிய (இன) பிரிவினரும் ஒடுக்கப்பட்டதோடு, அவர்களின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுவது இவர்களது பிரச்சனையாக ஒருபோதும் இருந்ததுமில்லை இருக்கப்போவதுமில்லை. இவர்கள் தங்களின் மானம்கெட்ட தரகுக்காக சுயநிர்ணய உரிமையை (மறைமுகமாகத் தமிழ் தரகுகள்) மறுத்துக் கொண்டே தமது பிரிவின் அதிகார பங்குப் போட்டிப் பிரச்சனைக்காகவே ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடினர்.
(செல்வா செவ்வாய் மலர்ந்து சொல்கிறார்!)
இங்கே ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் தோற்றம், தமிழ் மக்களின் உரிமைக்கான உதயமா? என்பதே அது!
தமிழரசுக் கட்சி ஏதோ ''மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக தமிழ்க் காங்கிரசில் இருந்து செல்வநாயகம் போன்றவர்கள் பிரிந்து உருவாக்கினார்கள்'' என்று, இன்றும் வரலாற்றைத் திரித்துப் புரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையில் 1949ம் ஆண்டு, தமிழ் - சிங்கள வணிகத்தரகினருக்கு இடையிலான உறவைப் பேணிக்கொள்ளும் கொள்கை தொடர்பான முரண்பாடே தமிழரசுக் கட்சியின் தோற்றமாகும்.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்கள் சிங்கள வணிகத் தரகுமுதலாளித்துவத்தின் ஏகபோகத்துடன் கூடிப்போய் தமது வர்க்கநலன்களை பெறுவது என்று ''இணைப்பாட்சி'' யை முன்வைத்தனர். முரண்பட்ட செல்வா தரப்பினர், சிங்கள வணிகத்தரகுடன் உறவுகளைப் பேணிக் கொள்வதோடு, தமிழ் மக்களை தன் சமூக அடிப்படையாக மாற்றி அவர்களின் பின்புலத்தில் தங்கியிருந்து அதிகளவு அதிகாரங்களைப் போராடிப் பெறுவது என்ற ''சமஸ்டி'' போக்கை முன்வைத்தனர். அதாவது 'மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும்.'
இவர்களுடைய இந்தப் பிரச்சனையும் சரி, இதற்கான தீர்வாக உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியும் சரி தமிழ் வணிகத்தரகு வர்க்கத்தின் நலன்கள் சம்பந்தப்பட்டவையே ஒழிய, சிறுபான்மை மக்களாகிய வடக்கு -கிழக்கு வாழ் தமிழ் மக்களதோ அல்லது மலையக மக்களது உரிமைக்கானதோ அல்ல! சிங்கள வணிகத் தரகுமுதலாளித்துவத்தின் அதிகாரத்தை ஏகபோகமாக மாற்றிக் கொள்வதற்கும், தமிழ் வணிகத்தரகு முதலாளித்துவத்தின் நலனை எவ்வாறு காத்துக்கொள்வது என்ற கொள்கை முரண்பாடே 'தமிழரசுக் கட்சி'யின் தோற்றம்.
தமிழரசுக்கட்சி உருவாகிய காலத்தில் (1949) இருந்து 1955ம் ஆண்டு வரையான யூஎன்பியின் ஆட்சிக் காலத்தில் இக்கட்சியானது மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக ஒரு துரும்புப் போராட்டத்தைத் தன்னும் நடத்தியிருக்கவில்லை. தொழிற்துறைத் தரகுடனான பண்டா -செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தமக்கு ஏதாவது அற்ப சலுகைகள் கிடைக்கும் என்ற ஆசையில், பண்டாவின் வேண்டுகோளுக்கு இணங்க மலையக மக்களின் வாக்குரிமைக் கோரிக்கையை கைவிட்டனர். இதன் பின்னர் வரலாறு முழுவதும் இக்கோரிக்கையை அவர்கள் எழுப்பவே இல்லை.
குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் மீதான ஒடுக்குமுறையைப் பொறுத்த வரையில்....
இவ்விரு தரகுப்பிரிவினரும் ஒரு தொடரான அஞ்சல் ஓட்ட முறைப்படி இனரீதியான ஒடுக்குமுறையைத் தொடர்ந்தனர். ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட தலைமைகள், அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் உண்மையில் சிறுபான்மை மக்களின் நலன்களை அடைவதற்காக நடத்தப்பட்டவை அல்ல!
'பண்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கை' மற்றும் 'பெரும் தோட்டங்கள் தேசிய மயமாக்கல்', புதிய அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் போன்றவை தொழிற்துறை தரகுமுதலாளித்துவ வர்க்க நலன்களுக்காகக் கொண்டுவரப்பட்டன. இதனால் வணிகக் கட்டுப்பாட்டுக் கொள்கையால் பாதிப்படைந்த சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்துவந்த வணிகத்தரகுமுதலாளித்துவம் தமது வணிகநலன்களைப் பாதுகாத்துக் கொள்ள நடத்தப்பட்ட போராட்டங்களே இவைகளாகும்.
தமிழ் வணிகத்தலைமைகள் தமது வர்க்க நண்பர்களான யூஎன்பி வணிகத்தரகு அ+ட்சிக்கு வரும்போது எந்தப் போராட்டத்தையும் நடத்தாது ஓய்வெடுத்து வந்ததை நீங்கள் காணலாம். யூஎன்பியின் பொருளாதாரக் கொள்கைகள் வணிகத் தரகுமுதலாளித்துவ நலன்களுக்கு வாய்ப்பான சூழலாக அமைந்ததால், தமது வர்க்கநலன்களை பெற்றுக் கொள்ளவும், சிங்கள வணிகத்தரகு முதலாளிகளுடனான வர்க்க ஜக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும் இவர்கள் தமிழ் மக்களையும் அவர்களது உரிமைக்கான போராட்டத்தையும் கைவிட்டே வந்தனர்.
இவ்வாறு தமிழரசுக் கட்சியால் உருவாக்கப்பட்ட 'புலிப்படை' பின்னர் யூஎன்பி ஆட்சிக்காலத்தில் உதிர்ந்து போனது. 70களில் கூட்டுமுன்னணி ஆட்சியில்...
'புதிய தமிழ் புலிகளாக' இது புதிப்பிக்கப்பட்டன....
தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தமிழரசுக் கட்சி வடக்கு ஆசிரியர்களினதும், அதிபர்களினதும் மனுக்களை அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்தது. இச்சந்தர்ப்பத்தில் சத்தியசீலனின் தலைமையில் சுயாதீனமான மாணவர் போராட்டம் வீதிக்கு வந்ததும், அது பெரும் இளைஞர் ஆதரவாக மாறியபோது, அதிகாரத்தில் இருந்த தமிழ் வணிகத் தரகு முதலாளித்துவம், 'தமிழ் மக்களை தன் சமூக அடிப்படையாக மாற்றி அவர்களின் பின்புலத்தில் தங்கியிருந்து அதிகளவு அதிகாரங்களைப் போராடிப் பெறுவது என்ற' தமது சமூக அதிகார வர்க்க அடிப்படையை மேலும் தக்கவைத்துக் கொள்ள, இப்போராட்டத்தை பத்தியம் போட நினைத்தது.
உண்மையில் தரப்படுத்தல் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பிரச்சனையாக, தமது வர்க்க நலன் பிரச்சனையாக இருக்கவில்லை! புதிய அரசியல் அமைப்பே இவர்களின் வர்க்கம் சார்ந்த பெரும் பிரச்சனையாக இருந்தது. இது நடைமுறைக்கு வந்தபோதே 'புதிய தமிழ் புலிகளும்' உருவாக்கப்பட்டது என்பதே கால வரலாற்றின் செய்தியாகும்.
புதிய நிர்ணயசபை!
இனி புதிய அரசியல் அமைப்பின் பின்னான 'புதிய புலிகளின்' தோற்றமும் அதன்பின்னான அரசியலும், ஜயாவுடனான முரண்களும்...
தொடரும்..
- ரூபன் -
-180410-