கர்நாடக மாநிலக் கடலோர மாவட்டப் பகுதியைச்சேர்ந்த வனிதா என்ற இளம் பெண்ணுக்கு ஒரு நல்லவேலை கிடைப்பதற்கு அவரது முசுலீம் தோழியின் குடும்பம் உதவி செய்தது. இந்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தனது தோழியின் வீட்டுக்குச் சென்ற வனிதாவை, பஜ்ரங் தள் என்ற சங்கப் பரிவார் அமைப்பைச் சேர்ந்த இந்து மதவெறிக் குண்டர்கள் வழிமறித்துத்தாக்கினர். இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத வனிதா தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனார். இச்சம்பவம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்ட போதிலும், வனிதாவைத் தாக்கிய, அவரைத் தற்கொலைக்குத்தூண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர்களுள் ஒருவர் மீதுகூட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பஜ்ரங் தள் விதித்துள்ள சமூகக் கட்டுப்பாட்டின்படி, "இந்து'வான வனிதா முசுலீம் குடும்பத்தோடு பழகியதும், அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கப் போனதும் மன்னிக்க முடியாத குற்றம். அண்டை அயலாரோடு பழகுவதும், அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதும் மனிதப் பண்பாடு என நாகரீகச் சமூகம் கருதலாம். ஆனால், இப்படிபட்ட பண்பாடுமிக்க செயல்கள் பலவற்றைக் குற்றமாக வரையறுத்துள்ளன, சங்கப் பரிவார அமைப்புகள்.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தக்ஷின் கன்னடா மற்றும் உடுப்பிப் பகுதிகளில் இந்து மதவெறி அமைப்புகளின் செயல்பாடுகள் எந்தளவிற்குப் பயங்கரமாக வளர்ந்துள்ளன என்பதற்கு வனிதாவின் தற்கொலை ஒரு சிறு எடுத்துக்காட்டு. அக்கடலோர மாவட்டங்களில் ஊருக்கு ஊர் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் இந்து மதவெறி அமைப்புகள் இந்துகலாச்சாரத்தைப் பாதுகாப்பது என்ற போர்வையில், முசுலீம் மக்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களும்; இந்து முசுலீம்களுக்களுக்கிடையே உறவு எப்படி இருக்க வேண்டும் எனக் கட்டளையிடுவதும், அக்கட்டளையை மீறுபவர்களைத் தாக்குவதும், அவமானப்படுத்துவதும்; தமது இப்பெரியண்ணன்தனத்திற்கு அரசு இயந்திரத்தை, குறிப்பாக போலீசைப் பயன்படுத்திக் கொள்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லுகின்றன.
இந்து மதவெறிக் கும்பல் திணித்துவரும் சமூகக் கட்டுப்பாடுகளால், எழில் நிறைந்த அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வில் பயம் தாண்டவமாடுவதாகக் குறிப்பிடுகிறார், முன்னாள் ஜ.ஏ.எஸ். அதிகாரியும் சமூக ஆர்வலருமான ஹர்ஷ் மந்தர். கர்நாடகாவின் கடலோரமாவட்டங்களில் வாழும் முசுலீம் மக்கள் மீது சட்டவிரோதமான முறையில் சமூகப் புறக்கணிப்பை இந்துமதவெறி அமைப்புகள் திணித்து வருவதாகக் குடியுரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் குற்றஞ்சுமத்தியுள்ளது. முசுலீம் மக்கள் மீதும்,அவர்கள் வழிபாட்டுத் தலங்கள்மீதும் தாக்குதல்கள் நடத்துவது ஒருபுறமிருக்க, இந்து முசுலீம் மக்களிடையே சுமூகமான சமூக உறவுகள் நிலவுவதைத் தடை செய்வதன் மூலமும், அவர்கள் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெற முடியாமல் தடுப்பதன் மூலமும் இச்சமூகப் புறக்கணிப்பு திணிக்கப்படுகிறது.
முசுலீம் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காகவே, உணவு விடுதிகள், பூங்காக்கள், பேருந்துநிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் "இந்து' உளவாளிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் நடத்துனர்கள், திரையரங்குகளில் டிக்கெட் கிழிப்பவர்கள், உணவுவிடுதிகளில் சப்ளையர்கள் என இந்த உளவாளிகள் எங்கும் நிறைந்துள்ளனர். இந்த உளவாளிகளின் வலையை, இந்துமுசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கூடிப் பழகுவதைக் கண்காணித்து ஆர்.எஸ்.எஸ். குண்டர்களுக்குப் போட்டுக் கொடுப்பதுதான். அம்மதங்களைச் சேர்ந்த எதிர் பாலினர் பழகுவதை மட்டுமல்ல அம்மதங்களைச் சேர்ந்த ஆண்களோ, பெண்களோ சேர்ந்து திரைப்படத்திற்குச் சென்றாலோ, உணவு விடுதிக்குவந்தாலோ, பேருந்தில் பயணம் செய்தாலோ உளவாளிகளின் கைபேசிக்கு வேலை வந்துவிடும்.
மங்களூரில் உள்ள சிறீமாதா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த கல்லூரி, தமது மாணவர்களின் கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தது. இச்சுற்றுலாவில் முசுலீம் மாணவர்களோடு, இந்துமாணவிகளும் ஒன்றாகப் பயணம் செய்வதை உளவாளிகளின் மூலம் அறிந்து கொண்ட பஜ்ரங்தள் குண்டர்கள் இச்சுற்றுலாவை அனுமதிக்கமுடியாது என மிரட்டியதால், கல்லூரி நிர்வாகம் அக்கல்விச் சுற்றுலாவை ரத்து செய்வதாக அறிவித்தது.·
யு.பி.எம்.எஸ். மேனிலைப்பள்ளி நிர்வாகம், தமது பள்ளியின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக, இயேசு கிறிஸ்து பற்றிய நாடகமொன்றைத் தயாரித்து நடத்தவிருந்தது. இந்நாடகத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் நடிக்க இருந்ததால், அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஆண்டு விழா நடத்துவதையே ரத்து செய்தது, பள்ளிநிர்வாகம்.·
உடுப்பியைச் சேர்ந்த இந்து மாணவன் ஒருவன் பொழுதுபோக்கிற்காகத் தனது முசுலீம் மற்றும் கிறிஸ்தவ நண்பர்களோடு பனம்பூர் கடற்கரைக்குச் சென்றான். இதனை மோப்பம் பிடித்துவிட்ட பஜ்ரங் தள்குண்டர்கள், போலீசாரோடு கடற்கரைக்குப் போய் அம்மாணவர்களை மிரட்டித் துரத்தியடித்தனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் இவை போன்று 45 தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பதாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பி.யு.சி.எல். அமைப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. இக்கண்காணிப்பின் காரணமாக இந்து முசுலீம் மதத்தைச் சேர்ந்தோர் சேர்ந்து தேநீர் அருந்தப்போவது தொடங்கி, இந்துக்கள் குடும்பத்தோடு ரம்ஜான் விருந்துக்குச் செல்வது வரையிலான சமூகப் பிணைப்புகள் அனைத்தும் சிறுகச் சிறுகக் குறைந்துவருகின்றன் அல்லது, யாராவது பார்த்துப் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடுதான் நடந்து வருகின்றன. இரு மதத்தினரும் சேர்ந்து தேநீர் குடிப்பதே குற்றமெனும்பொழுது, அம்மதங்களைச் சேர்ந்த எதிர் பாலினர் காதலிப்பதும்,திருமணம் செய்து கொள்ள முயலுவதும் முசுலீம் பயங்கரவாதிகளின் சதியாகச் சித்தரிக்கப்பட்டுத்தடுக்கப்படுகின்றன.""இந்துப் பண்பாட்டுக்கு ஒவ்வாத இது போன்ற 200க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளைக் கையும் களவுமாகப் பிடித்துப் பிரித்து வைத்துவிட்டதாக ''மார்தட்டிக் கொள்கிறான், பஜ்ரங் தள்ளின் மாவட்டத் தலைவன் ”தர்சன் மூதாபித்ரி.
இந்து மதவெறிக் கும்பல் திணித்து வரும் இத் ""தாலிபான்மயமாக்கத்திற்கு'' உள்ளூர் பத்திரிகைகளும், போலீசும் கைத்தடிகளாகச் செயல்படுகின்றன. இந்து மதவெறிக்குண்டர்கள் சட்டவிரோதமான முறையில் நடத்திவரும் இத்தாக்குதல்களை, ""அவர்கள் இவ்விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமை இருக்கிறது'' என்றும்,"" அவர்கள் சட்டபூர்வமாகவே நடந்து கொள்வதாகவும்'',""அவர்கள் சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன்கள்'' என்றெல்லாம் கூறி கர்நாடகா போலீசு உயர்அதிகாரிகளே நியாயப்படுத்தி வருகின்றனர்.
அரசு இயந்திரத்தின் உதவியோடு திணிக்கப்படும் இச்சமூகப் புறக்கணிப்பின் காரணமாக, தக்ஷின் கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் உள்ள கல்விநிலையங்களில் இந்து மாணவர்கள் தனியாகவும், முசுலீம் மாணவர்கள் தனியாகவும் அமரும் புதிய தீண்டாமை உருவாகி வருகிறது. குறிப்பாக, அரசு கல்லூரிகளில் சேரும் முசுலீம் மாணவர்களைத் தீவிரவாதிகள் எனக் கிண்டல் செய்து அவமானப்படுத்துவதன் மூலமும், முசுலீம் மாணவிகள் பர்கா அணிவதைத் தடைசெய்வதன் மூலமும் முசுலீம்கள் அரசு கல்லூரிகளில் சேருவதை மறைமுகமாகத் தடுக்க முயற்சி செய்கிறது, ஏ.பி.வி.பி. என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு மாணவர்அமைப்பு. அம்மாவட்டங்களில் மீன்பிடித் தொழிலிலும் பசுமாட்டுத் தோல் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ள முசுலீம் வியாபாரிகள் இந்து மதவெறிக் குண்டர்களுக்கும் போலீசுக்கும் கையூட்டுக் கொடுத்தால்தான் தொழில் செய்யமுடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.
இதுவொருபுறமிருக்க, இந்து வழக்குரைஞர்கள் முசுலீம்களுக்காக வாதாடினால், பத்திரிகையாளர்கள் இந்துமதவெறிக் குண்டர்களின் தாக்குதல்களை அம்பலப்படுத்தி எழுதினால், அவர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும், கிறிஸ்தவமத பீடங்கள், தங்கள் மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிற மதத்து இளைஞர்களோடு, குறிப்பாக முசுலீம்களோடு பழகுவதைக் கண்காணிக்க சமூக செயல்மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறது. இவற்றின் எதிர்விளைவாக முசுலீம்களும் தங்கள் மதத்தைச்சேர்ந்த இளைஞர்களைக் கண்காணிக்க கே.எஃப்.டி. என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். பல்லாண்டுகளாக மத நல்லிணக்கம் நிலவி வந்ததாகக் கூறப்படும் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில், இன்று மதவெறியும், மத அடிப்படைவாதமும் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தி மோதவிடுகின்றன.
குஜராத்தில் முசுலீம்களைத் தனிமைப்படுத்துவதற்கும், அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவதற்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு ஒருமிகப் பெரும் இனப் படுகொலையை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் கர்நாடகாவை, அத்தகைய கலவரங்கள் ஏதுமின்றியே, தங்களின் பரிசோதனைச் சாலையாக மாற்றி வருகின்றன சங்கப்பரிவார அமைப்புகள். கர்நாடகாவில் இந்த இந்துத்துவப் பரிசோதனைகளுக்கு எதிரான எதிர்ப்புகள் வெகுஜன இயக்கமாக,போராட்டமாக இல்லாமல், குட்டி முதலாளித்துவ ஜனநாயகசக்திகள் நடத்தும் அறைக்கூட்டங்களாகவே இருப்பதால், இந்துமதவெறிக் குண்டர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை கடந்த பத்தாண்டுகளுக்குள் அம்மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் உருவாகிவிட்டது.·
செல்வம்