தொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி! போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு! கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!

கடந்த மார்ச் 17ஆம் தேதியன்று, குடிபோதையில் வந்த போலீசு, சுதாகர் என்ற சங்க நிர்வாகியைப் பிடித்து அடித்து இழுத்துச் சென்றது. இதற்கு ஆள்காட்டியாக ஆலை முதலாளியின் அடியாள் செயல்பட்டான். சங்கநிர்வாகிகளும் தொழிலாளர்களும் இதற்கெதிராக போலீசுநிலையத்தில் திரண்டு வந்து முறையிட்டபோது, அவர்களில்13 பேர் போலீசாரைத் தாக்கியதாக பொய்வழக்கு சோடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். போலீசுக்காரனும் அடியாளும் மாவுக்கட்டு போட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர். சங்க நிர்வாகிகளுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய, பின்னிரவில் ஷிப்ட் முடிந்து போலீசுநிலையம் முன்பாக, போக்குவரத்து இல்லாத இடத்தில் திரண்ட தொழிலாளர்கள் 300 பேரை, சாலை மறியல் செய்ததாகப் பொய்வழக்குப் போட்டு கைது செய்தது, துடியலூர்போலீசு. இத்தொழிலாளர்களைச் சிறையிலடைத்தது நீதிமன்றம்.

 

போர்க்குணமிக்க பு.ஜ.தொ.மு. கூடாது என்பதற்காகவே சங்கத்தை முடக்கவும், தொழிலாளர்களைப் பழிவாங்கவும் திட்டமிட்டு போலீசும் முதலாளியும் நீதித்துறையும் கூட்டுச்சேர்ந்து இந்தச் சதியை நடத்தியுள்ளன. போலீசு கொடுத்த பொய்ச் செய்தியை முதலாளித்துவ நாளேடுகள் வாந்தியெடுத்தன. சங்கத்தைவிட்டு வெளியேறிவிடு, இல்லையேல் வேலைபறிக்கப்படும், இது தீவிரவாத சங்கம் என்று மிரட்டி முதலாளியின் அடியாட்கள் தொழிலாளர் குடும்பத்தாரிடம் பயபீதியூட்டி வருகின்றனர். நாடெங்கும் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் வகைமாதிரிக்கு ஒரு உதாரணம் தான், இந்த எஸ்.ஆர்.ஐ.நிறுவனம்.

 

ஆலைமுதலாளி போலீசின் கூட்டுச் சதிகளுக்கு எதிராகவும் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டுள்ள தொழிலாளர்கள், இதர ஆலைத்தொழிலாளர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு. தலைமையில் உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

பு.ஜ.செய்தியாளர்கள்.