பா.ம.க. நிறுவனரான ராமதாசு, ""சாராயக் கடைகளை ஏலம் விடுவதுபோல் இனி தொகுதிகளையும் ஏலம்விட்டு விடலாம். அந்த அளவுக்கு ஆளும் கட்சி இங்கே வாக்காளர்களை விலை பேசுகிறது'' என்று புலம்பும் அளவுக்கு ஓட்டுச் சீட்டு ஜனநாயகம் சந்தி சிரித்தது. சீமைச் சாராயம், வேட்டி, துண்டு, புடவை, வளையல், மூக்குத்தி, புத்தகப் பை, ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கோடிகளை வாரியிறைத்து வாக்காளர்களைக் குளிப்பாட்டின. பென்னாகரம் இடைத் தேர்தல் திருவிழாவை ஓட்டுப் பொறுக்கிகள் கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்த சூழலில், இப்போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களை அறைகூவி, இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக, மார்ச் 7ஆம் தேதியன்று பொதுக்கூட்டம் நடத்த, கடந்த பிப்ரவரி இறுதியில் அனுமதி கோரி விண்ணப்பித்த போதிலும், அதிகார வர்க்கமும் போலீசும் அனுமதி தரமறுத்து "ஜனநாயகக் கடமை'யாற்றின. வாக்குச்சாவடியில் யாருக்கும் ஓட்டுப் போடவில்லை என்று பதிவு செய்வதற்கு சட்டபூர்வ உரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கும் ஓட்டுப் போடவேண்டாம் என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில், வி.வி.மு.வின் பென்னாகரம் வட்டக்குழு உறுப்பினரான தோழர் கோபிநாத் மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில், மார்ச் 23ஆம் தேதியன்று பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அழுகிநாறும் இப்பணநாயகத் தேர்தலை அம்பலப்படுத்தியும், இன்றைய மறுகாலனியத் தாக்குதலை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஆதரித்து நிற்பதை திரைகிழித்துக் காட்டியும், வாக்குச் சீட்டைப்புறக்கணித்து புரட்சிப் போராட்டங்களுக்கு அணிதிரளுமாறு அறைகூவியும், ஏகாபத்திய எதிர்ப்புப் போராளிகளின் நினைவு நாளான மார்ச் 23ஆம் தேதியன்று பென்னாகரத்தில் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பென்னாகரம் வி.வி.மு. வட்டக்குழு உறுப்பினர் தோழர் கோபிநாத் தலைமையில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில், தோழர் பழனியம்மாள், ம.க.இ.க. தோழர் காளியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ""ஓட்டுப் போடாதே!புரட்சி செய்!'' என்ற முழக்கமே பாடலாக ஒலிக்க, போராட்ட உணர்வைத் தட்டியெழுப்பிய ம.க.இ.க. மையக்கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி, தேர்தல் பாதையைப் புறக்கணித்து நக்சல்பாரி பாதையில் அணிவகுக்க அறைகூவியது. ஓட்டுப்பொறுக்கி பிழைப்புவாதிகளின் ஆரவாரத்துக்கு நடுவே நடந்த இப்பிரச்சாரம், உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.