தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியத்தின் பெருந்தலைவர் பதவி, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற அரசியல் பிரதிநிதித்துவ அடிப்படையில் தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. பசுவந்தனை அருகிலுள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எ.பெருமாள் என்ற தலித் பெண் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பெருந்தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனத்தைப் பயன்படுத்துவது, தீர்மானங்கள் ஒப்பந்தங்களை தன்னிச்சையாக முடிவு செய்து நிறைவேற்றுவது என துணைப் பெருந்தலைவராக இருக்கும் ஆதிக்க சாதிவெறியரான மாணிக்கராஜா என்பவர் தான் உண்மையில் பெருந்தலைவராகச் செயல்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, கயத்தாறு ஒன்றியத்தில் நடைபெறும் அரசு விழா அழைப்பிதழ்கள், அரசு கல்வெட்டுகள், தனியார் விழா அழைப்பிதழ்கள் என அனைத்திலும் மாணிக்கராஜா பெயரே பெருந்தலைவராகப் போடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாரவளர்ச்சி அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளும் இச்சட்டவிரோதத் தீண்டாமைக்கு உடந்தையாக நிற்கின்றனர்.

ஏற்கெனவே இருமுறை கயத்தாறு ஒன்றியப் பெருந்தலைவராக இருந்துள்ள மாணிக்கராஜா, இம்முறை தலித் பெண்ணுக்கு இப்பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதால்,தனக்கு விசுவாசமாக உள்ள எ.பெருமாளைப் பெருந்தலைவராக்கியுள்ளார். சாதி ஆதிக்க வெறியோடு, அரசு பதவியையும் அரசுசன்மானங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுவரும் மாணிக்கராஜா, கடந்த மூன்றாண்டுகளாக இச்சட்டவிரோதத் தீண்டாமையை நிலைநாட்டி கொட்டமடித்து வருகிறார். கடம்பூர் இளைய ஜமீன் எனக் கூறிக் கொள்ளும் இவரும் இவரது குடும்பத்தினரும் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்கள்மீதும் ஆதிக்கம் செய்து வருவதோடு,நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து, ஊழல், மணல் கொள்ளை எனப் பல்வேறு சட்டவிரோத  சமூக விரோத நடவடிக்கைகளிலும் இறங்கி கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளனர்.

 

இதே ஒன்றியத்தைச் சேர்ந்த இராமர் என்பவரின் முன்முயற்சியால், மாணிக்கராஜாவின் ஆதிக்கமும் சட்டவிரோத நடவடிக்கைகளும் அம்பலப்படுத்தப்பட்டு , அவரை ஒருங்கிணைப்பாளராகக்கொண்ட பல்வேறு அமைப்புகள்  கட்சிகளின் சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மாணிக்கராஜாவின் சாதி ஆதிக்கத் திமிருக்கும் தீண்டாமைக்கும் எதிராகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட இக்கூட்டமைப்பு ,கடந்த 12.12.09 அன்று நூற்றுக்கணக்கான மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

 

அதன் பிறகு, ஒரு சில நாட்கள் எ.பெருமாளை அரசுவாகனத்தில் அழைத்துச் செல்லும் நாடகம் நடத்தப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளாக "சுதந்திர' தினம் மற்றும் "குடியரசு' தினத்தில் கயத்தாறு ஒன்றிய அலுவகத்தில் மாணிக்கராசாதான் "தேசிய'க் கொடியேற்றி வருகிறார். இவ்வாண்டு "குடியரசு' தினத்தில் கொடியேற்றப் போவது யார் என்று கேள்வி கேட்டு இக்கூட்டமைப்பின் சார்பில் சுவரொட்டிப் பிரச்சாரமும் "குடியரசு' நாளில் கண்காணிப்பும் நடந்ததால், தலித் பெண் தலைவரால் கொடியேற்றப்பட்டது.

 

தனக்கு மாணிக்கராஜா எவ்விதப் பிரச்சினையும் தரவில்லை என்று எ.பெருமாள் கூறுவதால் முடிந்து போகும் பிரச்சினை அல்ல, இது. மாணிக்கராஜாவின் அதிகார மீறல் என்பது, ஒருதலித் பெண்ணுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் பிரதிநிதித்துவத்தை மறுத்து, ஒடுக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் பிரச்சினை. இதற்கு மேலும் மாணிக்கராஜாவை துணைப்பெருந்தலைவர் பதவியில் நீடிக்க அனுமதித்தால், அவரது ஆதிக்கச் சாதிக் கொட்டமும் சுரண்டலும் கேள்விமுறையின்றி தொடரும் என்பதால், ""அவரது பதவியைப் பறித்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து தண்டிக்கப்பட வேண்டும்; அவருக்குத் துணை நின்ற மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பதவி பறிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்!'' என்ற கோரிக்கையுடன் துண்டுப்பிரசுரம் வெளியிட்டு தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்ட இக்கூட்டமைப்பினர், கடந்த 12.3.10 அன்று தூத்துக்குடி ராஜாஜிபூங்கா அருகே உழைக்கும் மக்களின் பேராதரவுடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

 

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தூத்துக்குடி மாவட்டம்.