Language Selection

புதிய ஜனநாயகம் 2010

தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய ஜனநாயகத்தில் ஒரு மைல் கல்லாக முதலாளிய செய்தி ஊடகத்தால் சித்தரிக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகத்தை மேலும் வலுவுள்ளதாக்கும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மிக முக்கியமானது என்று காட்டப்பட்டது. ""உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசாக அமைந்த பிறகு பல ஆண்டுகளாக இப்படி ஒருஉரிமை இல்லாதிருந்தது ஒரு பெரிய குறைதான். அந்தக்குறை இப்போது நீங்கி விட்டது'' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பீற்றிக் கொண்டார்கள்.

சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே எத்தனை ஆயிரம் தகவலறியும் விண்ணப்பங்கள் போடப்பட்டன என்பதையும், அதனால் நடுத்தர வர்க்கத்தினர் ஆதாயம் அடைந்த எடுத்துக்காட்டுக்களையும், தகவல் தர மறுத்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளையும் சுட்டிக் காட்டி முதலாளியச் செய்திஊடகம் பெருமைப்பட்டுக் கொண்டது. அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் போடும் கோப்புக் குறிப்புகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்கோருவதைத் தடுப்பதுதான் ஒரே குறை மற்றபடி உளவுத்துறை, இராணுவம் போன்ற துறைகள் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெறமுடியாதவாறு விதிவிலக்களிப்பது ""தேசிய'' நலன்களுக்கு அவசியம்தான் என்று ஜனநாயக வேடதாரிகள் பசப்பினார்கள்.

 

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இந்தநாட்டின் மற்ற பிற ஜனநாயக உரிமைகளைப் போல போலியானதுதான் என்பது இச்சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே அம்பலமாகிவிட்டது. அது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மக்கள் புரிந்து கொள்வதற்கு எதிர்மறையில் இச்சட்டம் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அரசு நிர்வாகத்தின் எந்தப் பச்சை நரம்பைத் தொட்டால் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் பதறிப்போகிறார்கள், ஆத்திரத்துடன் பொங்கி எழுகிறார்கள் என்பதும் இந்தச் சட்டம் தரும் உரிமையைப்பயன்படுத்த எத்தணிக்கும்போது அப்பட்டமாகத் தெரிந்து விடுகிறது.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அறிவிப்பதற்கு வேண்டி விண்ணப்பம் பெற்றவுடன் அதிகாரிகள் காட்டும் முதல் எதிர்வினை வெறுப்புதான். ஏதோ அவர்களின் தனிப்பட்ட சொத்தை பகிர்ந்துகொள்ள வந்துவிட்டதாக ஆத்திரப்படுகிறார்கள். வேலை செய்யாமல் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு ஊதியம் பெற்று வரும் அதிகாரிகள் முதல் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளில் மூழ்கித் திளைப்பவர்கள் வரை அத்தனை பேருக்கும், அரசு செயல்பாடுகளை இரகசியம் என்ற பெயரில், தகவல்களை சொல்ல மறுப்பதுதான் வசதியானதாக இருக்கிறது. அரசு அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் எந்த கோரிக்கையும் நிராகரிக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் என்ன விளக்கம் கேட்டாலும்  ""அதெல்லாம் சொல்ல முடியாது'' என்று தடாலடியாக மறுப்பது முதல் ""என்னையே கேள்வி கேட்கிறாயா?'' என்று மிரட்டி அதிகாரம் செய்வதுவரை நடக்கிறது. மொத்தத்தில் அரசு நிர்வாக செயல்பாடுகளை, ""சிதம்பர இரகசிய''மாக வைத்திருப்பதே ஒரு சட்டவிரோத, சர்வாதிகாரமாக இருக்கிறது.

 

இப்போது தகவலறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு, அந்த உரிமை தனது துறைக்குப் பொருந்தாது, அச்சட்டம் தனது துறைக்கு விதிவிலக்களிக்கிறது என்று மறுப்பதே அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்கள் இதற்கு உறுதுணையாக நிற்கின்றன. அதையும் மீறிப் போனால், தகவல்களைத் திரட்டித் தருவதற்குப் போதிய பணியாளர்கள் இல்லை என்று கையை போலீசு அதிகாரிகள் விரித்து விடுகிறார்கள். இத்தகைய மழுப்பல்களுக்கு உச்சநீதி மன்றமே உடந்தையாக இருக்கிறது. ""தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் போடப்படும் எல்லா வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்க முடியாது'' என்று பகிரங்கமாகவே உச்சநீதி மன்றம் பொறுப்பின்றிக் கூறிவிட்டது.

 

தகவல் அறியும் உரிமையை அரசுநிர்வாகம் ஏன் இவ்வளவு தூரம் வெறுப்பாகவும் ஆத்திரமாகவும் பார்க்கிறது என்பதற்கு சில விவகாரங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துவிடும். ""200304 முதல் 200708 வரையிலான ஜந்தாண்டுகளில் தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத்துறை எத்தனை போலீசு அதிகாரிகளுக்கு எதிராக சோதனைகள் நடத்தியிருக்கிறது? அவர்களுடைய பெயர் பட்டியல், துறைவாரியாக அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவர்களுக்கு எதிராகப்போடப்பட்ட வழக்குகள், புலன் விசாரணைகள் முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் ஆகியவைபற்றிய விவரங்களைக் கேட்டு இரண்டு பேர் தகவலறியும் சட்டத்தின் கீழ் மனுப் போட்டார்கள். ஆனால், இந்த விவரங்களைத் தரமுடியாது என்று இலஞ்ச ஒழிப்புத் துறை மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தனிநீதிபதி தீர்ப்புசொன்னார். அதற்கும் எதிராக அமர்வு நீதிபதிகளிடம் மேல் முறையீடு செய்துள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசு உத்தரவுப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனது துறைக்குப் பொருந்தாது என்று வாதிடுகிறது.

 

ஏன் இத்தகைய தகவல்கள் மறைக்கப்படுகின்றன, இரகசியமாக வைக்கப்படுகின்றன? இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுச் சிக்கி, தண்டனைபெற்ற போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டால் தானே, இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவதற்கு போலீசு அதிகாரிகள் அஞ்சுவார்கள், நீதியும் ஒழுங்கும் பராமரிக்கப்படும் என்று அரசு ஏன் கருதவில்லை? குறிப்பாக, சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய போலீசு அதிகாரிகளே சட்டவிரோத கிரிமினல் குற்றங்கள் புரிவது அதிகரித்து வரும் இந்தச் சமயத்தில், அவர்களின் யோக்கியதை பற்றி மக்களுக்குத் தெரியவருவது அவசியமில்லையா? அப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக அரசு தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுப்பதாக அல்லவா காட்டிக்கொள்ளவேண்டும்?

 

இல்லை, குற்றம் புரியும் போலீசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் அரசு அவர்களிடம் ""மென்மையாக'' நடந்துகொள்கிறது. தக்க நடவடிக்கை எடுப்பதற்கோ, நாடகமாடுவதற்கோ, வேண்டிய, வேண்டாத அதிகாரிகள் என்று ஒருதலையாக நடப்பதற்கோ, அல்லது அவர்களை வெறுமனே உருட்டிமிரட்டி வைத்துத் தனக்குச் சாதகமான காரியங்களைச் சாதித்துக் கொள்ளவோதான் இலஞ்ச ஒழிப்புத்துறையைப் பயன்படுத்திக் கொள்கிறது. எனவேதான், தகவல் அறியும் உரிமைச்சட்டத்திலிருந்து அத்துறைக்கு விலக்கு அளித்து, அத்துறையின் நடவடிக்கைகளை இரகசியமாக வைத்துகொண்டிருக்கிறது.

 

கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்மீது போலீசு நடத்திய கொலைவெறியாட்டத்திற்கு எதிராக வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. சில கீழ் நிலை அதிகாரிகள் மீது பழிபோட்டு அரசும் உயர் அதிகாரிகளும் நழுவிக் கொள்ள எத்தணிக்கிறார்கள். இந்த வழக்கில் வகையாக மாட்டிக் கொண்ட ஒரு கீழ்நிலை போலீசு அதிகாரி அத்தாக்குதலுக்கு மாநகர போலீசு ஆணையாளர்தான் பொறுப்பு என்றும், தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் நீதிமன்றத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போட்டார்; அதேநாளில் வருமானத்துக்கு மீறிய சொத்துச் சேர்த்துவிட்டதாக அந்த அதிகாரி மீது இலஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்குபதிவு செய்தது. மந்தையிலிருந்து பிரிந்து போகும் இத்தகைய கருப்பு ஆடுகளைத்தான் இலஞ்ச ஒழிப்புத்துறை குறி வைக்கிறது. இதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று ஏன் கருதக் கூடாது.

 

வழக்கறிஞர்கள் மீதான தமது தாக்குதலை நியாயப்படுத்தி வாதிட்டு வந்த போலீசு, ஆறுமாதங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்ட ""குற்ற'' செயல்களைப் பட்டியல் போட்டது. வழக்கறிஞர்கள் மீதான போலீசு நிலையப் பதிவேடுகளில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி அவர்கள் மீதான தமது தாக்குதலை போலீசு அதிகாரிகள் நியாயப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், போலீசு அதிகாரிகளின் குற்றச் செயல்கள் பற்றி இலஞ்ச ஒழிப்புத் துறையிடம் உள்ள தகவல்களை மக்கள் அறியக் கூடாதா?

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இவ்வாறு காயடிக்கப்படுவதற்கு எங்கு சென்று பரிகாரம் காணமுடியும்? உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எங்குமே நீதி கிடைக்காது! பெரிய யோக்கியர்களைப் போல காட்டிக் கொள்வதற்காக இந்த மன்றங்களின் நீதிபதிகள் தங்கள் விவரங்களை அறிவிக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தமது சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தார்கள். அந்த விவரங்களைத் தமக்குத் தெரிவிக்கும்படி ஒரு வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுப்போட்டார். அதை ஏற்றுக் கொண்டு டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததும் ஆடிப் போய்விட்டது, உச்சநீதி மன்றம். இதன் விளைவாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களை அறியும் உரிமைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் அமர்வுப் பிரிவே விசாரிக்கும்படி உச்சநீதி மன்றமே ஒரு உத்தரவுபோடும் வினோதம் வேடிக்கை அரங்கேறியுள்ளது.

 

2005 ஆண்டுதான் இந்த நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்தது. அரசு நிர்வாகத்தில் ஜந்தாண்டுகளிலேயே, புரையோடிப்போகும் அளவு முள்ளாக அது தைத்துவிட்டது. இப்போது ஏராளமான விதிவிலக்குகள் போட்டு அந்த உரிமையை முழுக்க முழுக்கக் காட்சிப் பொருளாக்கும் வகையில் அச்சட்டத்துக்குத் திருத்தம்கொண்டு வரும் முயற்சியில் மையஅரசு ஈடுபட்டுள்ளது.

 

தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி, மராட்டிய மாநிலம் பூனேயில் சத்தீஷ் ரெட்டி என்ற ஆர்வலர் போலீசு அதிகாரிகள், வீடுவீட்டுமனைத் தொழில் முதலைகளின் குற்றச் செயல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடென்று பீற்றிக் கொள்ளும் இந்த நாட்டில் அவருக்குக் கிடைத்த வெகுமதி என்ன தெரியுமா? கூலிப்படையால் கோரமான முறையில் கொல்லப்பட்டார். காந்திய, தன்னார்வத்தொண்டு சேவகர்கள் கண்டனமும் அஞ்சலியும் செலுத்தினார்கள். இப்படிப்பட்ட நெருடல்களைத் தவிர்த்து, தடங்கலின்றி இந்தநாட்டின் ஜனநாயகம் பீடு நடைபோட தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அஞ்சலி செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை!·

ஆர்.கே.